Tuesday, 3 July 2012

முன்னைக்கும் முன்னே.


நேற்று ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ பற்றி எழுதுவதாகவே இல்லை. அதை
முழுதாகப் படித்து முடிக்காத நிலையிலும், அது என்னையும் எழுதிய அந்தப்
பெண்ணையும் , அனேகமாக ஒவ்வொரு வரியின் கீழும் அருகருகே நிறுத்தி
வந்ததால், ஒரு தவிர்க்க முடியாமையில், சாம் ராஜுவுக்கு எழுதியிருக்க வேண்டிய ஒரு கடிதத்திற்குப் பதிலாக, எல்லோர்க்கும் அன்புடன் என எழுதப் பட்டுவிட்டது.

மீதி அத்தியாயங்களையும் வாசித்து முடித்து விட்டேன். நிச்சயம் அது நான்
எழுதிய நாவல்தான். என்னுடைய வாழ்வை பியரெத் ஃப்லுசியோ எப்படியோ இழை பிசகாமல் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார்.

யாருடைய வாழ்க்கையையோ வாழ்கிற நான், 28.06.2012ம் தேதி பிற்பகலில்
எழுதியது யாருடைய கவிதையை?  ஒரு சொல்  எப்போது' யாருடையது' எனும் தன் அடையாளங்களைத் துறந்து, எல்லோருடையதும் ஆகிறது?

இந்த வரிகள் என்னுடையதா, எல்லோரினுடையதா?

%

பெற்றதை வழங்கிவிட்டுப்
பிறவியை முடித்துக் கொள்வேன்.
கற்றதை அகற்றிக் கொள்ளும்
கல்வியைக் கற்றுச் செல்வேன்.
விற்றதே போதும் என்று
வியாபாரம் முடித்துக் கொள்வேன்.
நிற்றலே நன்று என்றால்
நடத்தலை நிறுத்திக் கொள்வேன்.
பற்றது அற்றுப் போகும்
பக்குவம் தேடிச் செல்வேன்.
முற்றினால் உதிரும் என்னும்
முழுமையைப் புரிந்து கொள்வேன்.
வெற்றியும் தோற்கும் என்றோர்
விதியேற்று யுத்தம் செய்வேன்.
மற்றுளோர்க் கெல்லாம் பெய்யும்
மழையினில் நனைந்து கொள்வேன்.
புற்றினுள் உறையும் நானே
பூவிலும் அமர்ந்து செல்வேன்.
சுற்றிலும் உம்மை வைத்து
என்னையே சுற்றிக் கொள்வேன்.
அற்றமே ஆதி என்னும்
அகரத்தை எழுதிச் செல்வேன்.
எற்றுக்கோ என்னும் கேள்வி
எழுமெனில் அன்றே எல்லாம்
முற்றிலும் முடித்துக் கொள்வேன்,
முன்னைக்கும் முன்னே செல்வேன்.

%

முற்றிலும் முடித்து, முன்னைக்கும் முன்னே செல்வது யார்? நானா, அல்லது
பியரெத் ஃப்லுசியோவா?

1 comment: