Thursday, 5 July 2012

துறவின் அழுக்கு.






ஊதி ஊதி.
எந்தப் பனங்காட்டை ஊரானுக்கு
இரவல் கொடுத்துவிட்டு வந்த
மகராசியோ,
கட்டுமானக் காவலுக்குக்
கொட்டகை போட்டுக்
காத்துக் கிடக்கும் கிழவனுக்கு
கஞ்சி காய்ச்சுகிறாள்
கருக்கலில்.
ஊதி ஊதி எரிந்த தீயில்
உலை கொதிக்கிறது.
உலகு புரந்தூட்டி
ஓயாது சுரந்த முலை
தொய்ந்து கிடந்து தொட்டிலாட
திமிறித் திமிறி அழுகிற
தீ
தழல் வாய் திறந்து
தேடுகிறது காம்பை
திசை விலக்கி.

கடவுளுடையது.

பூனை கொண்டுவந்து
போட்டிருந்தது அதை, தலை மட்டும்.
அ-மாமிச உண்ணிகளான
எங்களுக்கு
அதன் அடையாளம் தெரியவில்லை.
பிளந்திருந்த வாய்.
மேலும் கீழும் ரம்பப் பற்கள்.
குட்டித் திமிங்கலம் என்றேன் நான்.
நீர்ப் பாம்பு என்றாள் அவள்.
ஒரே ஒரு முறை மட்டும்
அவசரமாகப் பார்த்த அவன்
‘அது கடவுளுடையது’  என்றான்
நிச்சயமான குரலில்.


இன்னொன்று.

பன்னீர்க் கொய்யா’  என்றார்கள்.
நிறத்தில்
அது மலரைப் போல இருந்தது.
ருசியில்
அரிநெல்லிக்காய் போல.
உண்டு முடித்ததும்
இன்னொன்று எதுவென அறியா
இன்னொன்றைப் போலவும்.

வானப்ரஸ்தம் 

ஆறு ஒழுகும்
கோவிலின் பின் விளிம்பு.
நானாகப் பெயரிட்டுக் கொண்ட
மகிழம் பூ மணத்தின்
உருவேற்றும் உச்சரிப்பில்
விம்மி வெடிக்கிறது மூச்சு.
அகன்ற கல் படிகளில்
துறவின் அழுக்கைத் துவைக்கும்
காவித் துணிக்காரர்.
வலக்கோடியின்
பூவற்ற பசுங்கொடியில் மொய்க்கும்
வெயில் நிற வண்ணத்துப் பூச்சிகள்.
காவி உடுத்திய வெயில் சிறகுடன்
ஆற்று நீராக, பெயரறு பூவாக
அலையத் துவங்கும் என்னை
அவதானித்தபடி
படகு வடிவ நீள் இலையில்
நீறும் குங்குமமும் நிறைசந்தனமும்.
சன்னிதிக்கு வெளிவந்து
உறுமித் திரியும்
ஒற்றைப் புலி மீது
ஏறித் துவங்கினேன் என்
வானப் பிரஸ்தம்.

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து - 2012














1 comment:

  1. எந்தப் பனங்காட்டை ஊரானுக்கு
    இரவல் கொடுத்துவிட்டு வந்த
    மகராசியோ,
    கட்டுமானக் காவலுக்குக்
    கொட்டகை போட்டுக்
    காத்துக் கிடக்கும் கிழவனுக்கு
    கஞ்சி காய்ச்சுகிறாள்
    கருக்கலில்.


    எதார்த்தமான உண்மை சார், வருத்தம் அளிக்கும் உண்மையும் கூட

    ReplyDelete