’இன்றைக்கு யார் யாரையெல்லாம் பார்த்தீர்கள்? ’ என்று கேட்டால் சொல்லிவிடுவீர்கள். யார் யாரையெல்லாம் தொட்டீர்கள் என்றால் பதில் சொல்ல மாட்டீர்கள். சில பேருக்குக் கோபம் கூட வந்துவிடும், எத்தனை பேரைத் தொட்டீர்கள் என்று கேட்டதற்கு.
தொடுவது என்றாலே, நாம், ஒரு ஆண் பெண்ணைத் தொடுவதையும், பெண் ஆணைத் தொடுவதையும் மட்டுமே நினைத்துக் கொள்கிறோம்.
போகிற வழியில் இருக்கிற செடியைத் தொடுகிறோம். நண்பருடைய வீட்டுக்குச் சென்றிருக்கையில், நம்முடைய காலை முகர்ந்து பார்க்கிற பாமரேனியன் நாய்க்குட்டியைத் தொடுகிறோம். பஸ்ஸில் முன் சீட்டில் அம்மாவின் தோளில் தலையைச் சாய்த்து உறங்குகிற குழந்தையின் சிகையைத் தொடுகிறோம். குளிர்பானம் வழங்கப்பட்ட கண்ணாடிக் குவளையின் வெளிப்புறத்தில் வழிந்திறங்கும் துளிகளைத் தொடுகிறோம். ஆனால் பார்க்கிற மனிதர்களைத் தொடமாட்டோம். தொடக் கூடாது. இது என்ன அநியாயம்?
நான் இப்போதெல்லம் நிறையப் பேரைத் தொடுகிறேன். மேலும் நிறையப் பேரைத் தொட விரும்புகிறேன். தொட எனக்குப் பிடிக்கிறது. முக்கியமாக, உங்கள் தோளை நான் தொட்டுவிடுகிறேன். என்னுடன் நீங்கள் நெருக்கமாக உரையாடுபவர் என்றால், என்னை அறியாமலேயே உங்கள் கை விரல்களைப் பிடித்துக் கொள்கிறேன். சற்று நேரம் உங்கள் கைகளின் வெதுவெதுப்பை அல்லது குளிர்மையை ஏந்திக் கொள்கிறேன். சில கைகள் வெயிலில் கிடந்த கூழாங் கற்கள் போல இருக்கின்றன. சில அப்போது தான் இடப்பட்ட பறவை முட்டை போல. சில கீரைத் தண்டு போல. சிவப்புத் தாள் ஒட்டிய புல்லாங்குழலை, திருவிழாவில் வாங்கியவுடன் நாம் உணர்கிற மூங்கிலின் வழவழப்பான முதுகு போல. பிறந்த குழந்தைகளின் கைகள், நிஜமாகவே நிஜமாகவே பூப் போல.
எனக்கு தி. ஜானகிராமனின் ‘உயிர்த் தேன்’ நாவலில் வருகிற அனுசூயாவைப் பிடிக்கும். அனுசூயா எல்லோரையும் தொடுகிறவள். ஆண். பெண், அணில்குஞ்சு, கன்றுக் குட்டி, செங்கம்மா, பூவராகன் எல்லாம் அனுசூயாவுக்கு ஒன்றுதான். மனதைத் தொடுவதுதான் அவளுக்கு உடலைத் தொடுவது.
நான் அனுசூயாவைப் போல எல்லோரையும் தொடுகிறேன். முக்கியமாக
முதியவர்களை, நோய்ப் படுக்கையில் இருப்பவர்களை. ஒரு தனித்து ஒதுங்கிய அறையின் கட்டிலில், ஜன்னல்வழி கசியும் இறந்தகாலங்களின்
மங்கல் வெளிச்சத்தில், தேயும் ஞாபகங்களுடன் உரையாடுபவர்களைச் சந்திக்க நேரும்போது. அதிகம் தொடுகிறேன்.
அந்த அறை இருட்டில் இருந்தால், நான் மின் விளக்குகளை ஏற்றுவது இலலை. அவர்களை எழுந்து உட்கார விடுவதில்லை. தரையில் அல்லது ஒரு மர ஸ்டூலில், அவர்களுடைய முகத்தின் அண்மை கிடைக்கும்படி உட்கார்கிறேன். உட்கார்ந்த முதல் நொடியிலேயே, அவர்களுடைய கையை என்னுடைய கையில் எடுத்துக் கொள்கிறேன். அவர்களிடமிருந்து விடை
பெறும் வரை, அந்தக் கையை நான் விடுவதே இல்லை.
இன்னொருவரால், வெதுவெதுப்புடன் தொடப்படாத நிறைய முதியவர்கள் இருக்கிறார்கள். அதுவும், எதிர்பால் ஆண் பெண்களின் தொடுகை தொலைந்து போன, அந்தத் தொடுகைக்கு ஏங்குகிற முதியவர்களின் கைகள் நிறைய இருக்கின்றன.
தொடுவது நல்லது. தொடுங்கள்.
தினசரி சில தோள்களையாவது. சில கைகளையாவது.
%
ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
21 - 07 -2012 ஒலிபரப்பப்பட்ட பதிவு.
மனச தொட்டுடீங்க... :-)
ReplyDeleteஎப்போதும் தொடுகிறது உங்கள் எழுத்து.அதன் ஈரப்பதமான அன்பில் நிறைந்து போகிறது இதயம்.
ReplyDeleteநன்றியும் அன்பும் சார்!...
உணர்தலில் தான் எத்தனை ஆனந்தம்,,அதை அப்படியே மெய்ப்பிக்கிறது தொடுகை. இனி ஒவ்வொரு தொடுதலிலும் இடுகை நினைவை தொட்டுவிட்டு போகும்.
ReplyDelete