Saturday, 21 July 2012

மழை பார்த்தல்



ஞாபகம் இருக்கிறதா?
பத்து இருபது நாட்களுக்கு முன்பு சென்னையில் மழை பெய்தது.  மழைக்கு என்ன, அது எல்லா ஊரிலும் பெய்யும். எல்லோர்க்காகவும் பெய்யும். அன்று சென்னையில் பெய்தது. அவ்வளவுதான்.

மழை தான் பெய்கிற நேரத்தை அழகாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. சில சமயங்களில் இரவு முழுதும் விடிய விடிய.    சிலசமயம் விடியும் போது அதிகாலையில். நான் பார்த்த சென்னை மழை மாலையில் பெய்தது. இரவுக்கு முன்பு வருகிற மாலையில்.

ஒரு மோசமான கோடைகாலத்திற்குப் பின்பு பெய்த முதல் மழை அது.  தொடர்ந்து கனமாகப் பெய்துகொண்டிருந்தது. நான் வாசல் பக்கம் வந்து மழை பார்த்துக் கொண்டிருந்தேன். மழையைப் பார்க்கவும் செய்யலாம். கேட்கவும் செய்யலாம்.  உங்களுக்குப் பிடித்த நீர் வண்ண ஓவியத்தை அது பார்க்கத் தரும்.  உங்களுக்குப்  பிடித்த நீராலான பாடலை அது இசைத்துப் பெய்யும்.  உங்களை ஒரு ஈரநடனத்திற்கு மழை   இடைவிடாமல் அழைக்கும்.  மழையின் திருவிழாவில் குழந்தைகள் உடனடியாகவும், நாம் சற்றுத் தாமதமாகவும் தொலைந்து போவோம்.

ஆனால், அன்றைக்கு என்னைத் தவிர யாரும் தொலையக் காணோம்.  ஒரு வாடகைக் கார் ஓட்டுநர் புகைபிடித்தபடி நின்றார்.  ஒரு தையல்காரர் வாகை மரத்தின் கீழ், தன் தையல் இயந்திரத்தை மூடி, அவர் நனைந்து கொண்டு இருந்தார்.  வேறு யாரும் தெருவில் இல்லை. 
நான் எதிர்பார்த்தது மழையில் நனைகிற குழந்தைகளை.     வீட்டுக்குள்
இருந்து தெருவுக்கு ஓடிவந்து, கைகளை உயர்த்தி மழை நடனம் ஆடுகிற குழந்தைகளை.   அந்த நடனத்தில் மழை எப்போது உழந்தைகள் ஆகிறது என்றும்,   குழந்தைகள் எப்போது மழை ஆகிறார்கள் என்றும் நமக்குத் தெரியாது.  ஆனால் ஆகிவிடுவார்கள்.

அன்று மழை மட்டும் பெய்துகொண்டிருந்தது.  ஒரு தனித்த பூனைக்குட்டி போல மழை தன் வருத்தமான குரலில் குழந்தைகளைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது.   தானியங்கள் இல்லாத இடத்திற்குக் குருவிகள் வருவதில்லை.   குழந்தைகள் நனையாத தெருவிற்கு மழை வராமல் போகும் சாத்தியங்களும் உண்டு.  ஒரே ஒரு காகிதக் கப்பல் விடுவதற்காகவும், அது சற்று தூரம் போய் சாய்வதற்காகவும் மழைத் தண்ணீர் தெருவில் ஓடவேண்டும்.


குழந்தைகளை மழை பார்க்கச் சொல்லுங்கள்.
நீங்கள் அப்படிச் சொல்லவே வேண்டாம். எப்போதும் போல, மழைபெய்யும் போதும் நீங்கள் அசையாது அமர்ந்து பார்க்கிற தொலைக்காட்சியை அணைத்துவிட்டு,   உங்கள் வாசலுக்கு,    உங்கள் அடுக்ககங்களின் விளிம்புகளுக்கு எழுந்துவந்து நில்லுங்கள்.  குழந்தைகளும் உங்களோடு வந்து நின்று மழை பார்க்கத் துவங்கிவிடும்.

உங்கள் கைகளை நீட்டி, மழைத் தாரைகளை ஏந்துங்கள்.
 ஒரு தலைவாழையின் பக்கக் கன்றுகள் போல, உங்கள் குழந்தைகளும் தன்னுடைய கைகளை நீட்டி மழையை ஏந்தும்.  இதுவரையில்  வந்த பண்டிகைகளில் கொளுத்திய மத்தாப்பூக்களை விடவும் கூடுதலான அழகுடன், அந்தப் பிஞ்சு உள்ளங் கைகளில் மழைத்துளி விழுந்து தெறித்து பிஞ்சு வானவில்களை உண்டாக்கும்.

மழை பாருங்கள்.
மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது.

%

ஆனந்த விகடன் -  இன்று, ஒன்று, நன்று.
22-07-2012  ஒலிபரப்பப்பட்ட பதிவு.

3 comments:

  1. மழை பாருங்கள்.
    மழையும் உங்களைப் பார்க்க விரும்புகிறது
    நீங்கள் பார்க்காவிடின்
    மழையும்
    உங்களைப் பார்க்காது

    ReplyDelete
  2. எங்கே தொலைத்தோம் மென் , அழகியல் உணர்வுகளை . இன்றைய மனோபாவம் குறித்து என் சிறு கவிதை .
    பெய்யட்டும் மாமழை
    வேலை முடித்த பிறகும்
    வீடு வந்து சேர்ந்த பிறகும்
    பெய்யட்டும்
    சபிக்கபடாத மழை
    -ராஜு. சிவசுப்ரமணியம்

    ReplyDelete
  3. மழையை
    வரைந்து கொண்டிருந்தவனும்
    நனைந்து கொண்டிருந்தான்.

    ReplyDelete