Friday, 20 July 2012

காற்றாகவும்...







முகப்புத்தகப் பக்கங்கள் ஒன்றில், நீங்கள் கூட அந்தப் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள்.

கார்த்திகை அகல்களை ஏந்துவது போல ஜோடி ஜோடியாக ஏழெட்டுக் கைகள்.   அந்தந்த இரண்டு கைகளுக்குள்ளும் கன்னங்கரேர் என்று பிசுபிசுத்திருக்கிற மண்.      கி. ராஜநாராயணன் மாமா வீட்டுக் கணவதி அத்தை பார்த்தால், இரண்டு விரல்களால் நுள்ளி எடுத்து, வாயில் போட்டுக் கொள்வார்.  அப்படியொரு கரிசல் மண்.  மண்ணின் நடுவில் முதல்முதல் விட்ட நான்கைந்து இலைகளுடன் ஒரு சின்னஞ்சிறு செடி.  பச்சை விளக்குகள் ஏற்றின மாதிரி.

எனக்கு அந்தப் படத்தைப் பிடித்திருந்தது.  அந்தக் கைகள்  என்னுடையதாக  இருக்க விரும்பினேன்.   அர்ச்சனாவுடையதாக, ஆதித்யா உடையதாக இருக்க விரும்பினேன். சின்னஞ்சிறிய கைகள் குவித்து ஏந்துகிற போது, அந்த மண்ணும் செடியும் இதைவிடவும் ஈரமாக,    இதை விடவும் பசுமையாக இருக்கும்.    பசுமை என்பது எவ்வளவு நல்ல வார்த்தை.

ஒரு விதை முளைப்பதை, ஒரு செடி வளர்வதை இந்தக் கால, நகர்ப்புறக் குழந்தைகள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.  வீட்டுக்கு அருகில் முளைக்கிற புளியங் கன்றையோ, வேப்பங்கன்றையோ அடுக்ககக் குழந்தைகள் பார்த்திருக்க மாட்டார்கள்.  அவர்களுக்குப் பேரீச்சம் பழ விளம்பரங்களின், ‘சிங்கம் போன்ற’   வாசகங்கள் தெரியும்.  ஆனால் ஜன்னலோரத்தில் முளைக்கும் பேரீச்சங் கன்றைத் தெரியாது.  அவர்கள் கைகளில் வழியவழிய சாக்லேட்களை ஏந்தியிருப்பார்கள்.  நெல்லை, மக்காச் சோளத்தை, கேழ்வரகை ஏந்துவது என்ன,   அவர்கள்    ஒருவேளை, பார்த்திருக்கவே மாட்டார்கள்.

எல்லாக் குழந்தைகளும் ஒரே ஒரு தடவை, ஒரே ஒரு விதையையாவது
அவர்களுடைய கையில் வைத்திருக்க வேண்டும்.  ஒரு விதையை வைத்திருப்பது ஒரு முழு வாழ்வையே வைத்திருப்பது என்பதைப் பின்னர் ஒரு நாள் அக் குழந்தை உணரக் கூடும். அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என, எல்லோரும் ஒன்றாக நிற்பதற்குப் போதுமான நிழலை, அந்த ஒரே ஒரு சின்ன விதை தனக்குள் வைத்திருக்கிறது என்பதை அந்தக் குழந்தை அறியும் எனில், இப்போது நம்முடன் இருக்கும் மரங்கள், இன்னும் ஆனந்தத்துடன் காற்றின் பாடல்களைப் பாடும்.

என்னுடைய ‘நடுகை’ என்கிற சிறுகதை,    ‘’ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் இல்லையா?” என்ற ஒரு வரியுடன் முடியும். பிடுங்குவதை எல்லாம் தங்க நாற்கரச் சாலை அமைப்பவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.  நடுவதை, ஒன்றே ஒன்றையாவது நடுவதை, நீங்களும் நானும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பரவாயில்லை. ஜவுளிக்கடைகளில் இப்போது மரக்கன்றுகள் தருகிறார்கள். ஒன்றிரண்டு திருமண வீடுகளில் கூட, தாம்பூலப் பைகளுக்குப் பதிலாக இளம் நாற்றுகளைத் தரத் துவங்கி இருக்கிறார்கள்.  எனக்குக் கூட ஒரு கல்லூரிப் பயிலரங்கில், ஒரு மரக் கன்றைப் பரிசாகத் தந்தார்கள்.

இன்னும் சில வருடங்களில், நீங்கள் திருநெல்வேலிப் பக்கம்,  கல்லிடைக் குரிச்சி ஊரைத் தாண்டிப் போவீர்கள் என்றால், உங்கள் மேல் வீசுகிற காற்று, அனேகமாக எனக்குப் பரிசளிக்கப்பட்ட அந்த கன்று வளர்ந்து பெரிதாகிவிட்ட மரத்தில் இருந்துதான் இருக்கும்.

கதையாக மட்டும் அல்ல, காற்றாகவும் உங்களை நான் தொடலாம் அல்லவா?  இன்னும் சொல்லப் போனால், கதை என்பது கூட ஒரு விதை தானே.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
20-07-2012  -  ஒலிபரப்பப்பட்ட பதிவு,

1 comment:

  1. மாநகரங்கள் என்று இல்லை
    கிராமங்களில் கூட மரம் வளர்த்தல்
    முற்றிலும் நின்று விட்டது

    மன்மோகன் சிங் அவர்களிடம் சொல்லி
    சாலை ஓரங்களில்
    மரம் வளர்த்தலிலும்
    பன்னாட்டு நிறுவனங்களைப்
    பங்கு கொள்ளச் செய்யலாம்

    ReplyDelete