Sunday, 15 July 2012

பின்னிக்கொள்ளும் விரல்கள்ன்றைக்கு அசோகமித்திரன் ஞாபகமாக இருக்கிறேன்.

கணையாழி, ஜூலை இதழில், ‘படிப்பதற்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்த
புத்தகம்’  என்ற அவருடைய கட்டுரை வந்திருக்கிறது.    கட்டுரையின்
துவக்கத்தில் இருக்கும் அவருடைய புகைப்படம் அவ்வளவு நேர்த்தி மிக்கது. சமீபத்திய ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.  அவர் உடையைப்
பார்க்கையில் வெளிநாட்டில் எடுத்ததோ என யோசிக்க வைக்கிறது.  இங்கு,
அத்தனை பெரிய பித்தான்கள் உள்ள ஒர் மேல் கோட்டை அணிய அவரை
நிர்ப்பந்திக்கிற பருவ நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு மெல்லிய ஏணியின் படியில் வலது கையையும், இடுப்பில் அவரது இன்னொரு கையையும் வைத்துக்கொண்டு நிற்கிறார். அவர் வாழ்வின்
மொத்தக் காலமும் அவரின் காலணிகளுக்குக் கீழ் இருப்பதை, கண்களும்
அவருடைய சற்றே ஒதுங்கிய இடது கன்னமும் சொல்கின்றன. எந்தக்
கலையின் கீழும் வரமுடிகிற ஒரு முதிர்ந்த கலைஞன் போல இருக்கிறார்.
அசோகமித்திரனாக மட்டும் அல்ல,    இப்போதுதான்  இசைக்கோர்வை ஒன்றிற்கான குறிப்புகளை எழுதிவிட்டு வந்த இசைமேதையாக,  அல்லது
சர்வதேசப் பரிசு ஒன்றைப் பெறுவதற்கு முன் அலுப்பாக,  நேர்காணல்
நிமித்தமான ஒரு புகைப்படத்திற்கு நிற்கும் அயல்திரைப்பட இயக்குநராக,
புகை பிடிப்பதற்கு அல்லது ஒரு மிடறு அருந்துவதற்காக ஸ்டுடியோவை
விட்டு விலகி வந்து, தன் சினேகிதியை எதிர்பார்த்து நிற்கும் ஓவியனாக
எல்லாம் உருவகித்துக் கொள்ள முடிகிறபடி அவருடைய புகைப்படம் ஒரு உலகீய அடையாளத்துடன்  இருக்கிறது.

அவருடைய முகத்தின் சம அளவுக்கு, அவருடைய இரு கைகளின் விரல்களை எனக்குப் பிடித்திருக்கிறது.  விரல்கணுக்களின் மேல்தோல்
சுருக்கங்கள் விடையற்ற கணிதங்கள் நிரம்பியவை. கூடுதலாகச் சற்று
நேரம் அவற்றை உற்றுப் பார்ப்போம் எனில்,  அழகு குறித்து நாம் எழுப்பி
இருக்கும் மாயக் கோபுரங்கள் தகர்ந்து போகக்கூடும்.

இரண்டு மோதிர விரல்களிலும் மோதிரங்கள். வலது கை விரல்கள், ஒரு
பெரு மரத்தின் அசையும் விழுதுகள் எனக் கீழ்நோக்கித் தொங்குகின்றன.
அந்தத் தொங்கும் விரல்களால்தான், அவர் இந்தக் கட்டுரை வரைக்கும்
எழுதியிருப்பார்.

நற்றிணை பதிப்பகம் சமீபத்தில், ’அப்பாவின் நண்பர்’ என்கிற அவருடைய
நவம்பர்-2011 வரைக்குமான படைப்புகளின் தொகுப்பை அழகான பதிப்பாக வெளியிட்டிருக்கிறது.  அதன் பின்னட்டை வரிகள் உண்டாக்கும் வலி, அசோகமித்திரனுடைய கதைகள் உண்டாக்கும் வலியை விடக் கூடுதல்
ஆனது.

“வயதான  காரணத்தால், இன்று என் கைவிரல்கள் பேனாவைப் பிடித்தாலே
பின்னிக்கொண்டு விடுகின்றன.    எழுதுவது அனேகமாக அசாத்தியமாகி
விட்டது. இக் கதைகள் மங்கலாக இருந்த என் கடந்தகால நினைவுகள்
சிலவற்றைத் தெளிவாக்கின”  என்று அசோகமித்திரனே எழுதியிருக்கிறார்.

’பேனாவைப் பிடித்தாலே பின்னிக்கொள்கிற கைவிரல்’களுடன், அசோக
மித்திரன் போன்ற ஒருவர், ஐம்பது ஆண்டுகள் பாதுகாத்த ‘இரு பெண்கள்’
எனும் அல்பெர்டோ மொராவியோ புத்தகத்தைப் பற்றி இரண்டு பக்கங்கள்
அளவில் ஒரு கட்டுரை எழுதுகிறார்.

நமக்கும் விரல்கள் இருக்கின்றன. நாம் அந்த விரல்களால் அனேகமாக
என்ன செய்கிறோம்?     ‘அப்புறம் படித்துக் கொள்ளலாம்’ என அந்தப் பக்கங்களை, எச்சில் தொட்டுப் புரட்டி, அடுத்த பக்கத்திற்குச் சென்று விடுகிறோம். அந்த ‘அப்புறம்’ வருவதே இல்லை என்பதுதான் துயரமானது.

ஒரு வேளை, அந்தத் துயரத்தையும் ஏற்கனவே புரிந்துவிட்ட ஒன்றுதான் அசோகமித்திரன் அவர்களின் அந்தப் புகைப்படச் சிரிப்பிலும் இருக்கிறதோ
என்னவோ.

#

2 comments:

  1. பின்னிக் கொண்ட விரல்களுக்குள் பின்னிக் கொண்டது மனம்.

    ReplyDelete
  2. உங்கள கைகளை பின்னிகொள்ள வேண்டும் போல் இருக்கிறது கல்யாண்ஜி அவர்களே..!!!

    ReplyDelete