Sunday 1 July 2012


இன்றைய 'நிலை'
------------------------

கொஞ்ச நேரத்துக்கு முன் பரமனிடமிருந்து  போன்  வந்தது.
"எங்கே  இருக்கீங்க கல்யாணி, சென்னையா, பெங்களூரா?"
"ராஜு  வீட்டில, பெங்களூருல "
"இன்னைக்குத் தேரோட்டம் . ஒங்க  'நிலை' கதை ஞாபகம்  வந்துச்சு "

ஒரு நொடிக்குள் இந்த 'எலெக்ட்ரானிக்  சிட்டி' யின்  இந்த உள்ளடங்கிய
தொட்ட  தோகூருக்குள்  ஒரு கீழ ரதவீதியை உண்டாக்கி பெரிய தேரை
ஓடவிட்டிருந்தது  என்னுடைய ' ஆனித்  திருவிழா' வுக்கு  எப்போதும்
ஏங்கிக் கொண்டிருக்கும்  திருநெல்வேலி மனம்.
வெளியூர் புறப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு  தடவையும் அப்பாவிடம்
சொல்லிக் கொள்வேன். திரும்பி வருவதற்குள்  ஏதாவது 'ஆகிவிடக் கூடாது'
என்று மனதுக்குள் ஒரு அரிச்சல் இருக்கும்.    அப்பாவின்    முதுமையை உத்தேசித்தே  அப்படிக் கலவரப் படுகிற  நான், இந்த ஒரு வருடத்தில், அதுவும் அண்ணனின்  மின்னல் மறைவுக்குப் பிறகு,    யாரை யார் பார்த்துக் கொள்வதும்    கடைசி  முறையாக    இருக்கலாம்  என்ற வலி நிரம்பிய,  ஒரு
மெய்யான     இடத்தை  அடைந்திருந்தேன்.    அப்பாவை நானோ, அல்லது என்னை   அவரோ   இறுதியாகப்  பார்த்துக்கொள்ளும் ஒரு  நிச்சயமான  வாய்ப்பை  ஒவ்வொரு முறையும் உண்டாக்கி வந்தேன்  என்றே சொல்ல வேண்டும்.

இந்த சமீபத்திய தடவையில் வேறொரு இறுக்கமும் சேர்ந்துவிட்டது.  ஒரு உறவினர் இறந்த 'துஷ்டி'யையும் கேட்கவேண்டியதை இதனுடன் இணைத்துக் கொண்டு , அப்பாவைப் பார்க்கப் போய்க்கொண்டிருந்தேன். துக்கமும், துக்கம் சார்ந்த மன நிலையும்  நீல வானத்திற்குக் கூட சாம்பல் வர்ணம் பூசிவிடும். வெயில் அற்ற, இளம் காற்று வீசின, அந்தக் காலையில் ஒரு கல்லறைத் தோட்டத்தை நோக்கி,   வெள்ளை லில்லிப்  பூக்களுடனும்  மஞ்சள்  நிற      மெழுகுவர்த்தி ஒன்றோடும்  என் வாகனத்தைச் செலுத்துவது போல இருந்தது, அது போன்ற ஒரு இதத்துடன்  துவங்கும் ஒரு தினத்திற்கான எந்த உற்சாக விசிலடிப்பும் இன்றி.

நெல்லையப்பர் சன்னதியை நெருங்கும் போது ,  கோபுரம்  இன்று சற்றுக்
குட்டையாக இருப்பதும், என்னுடைய அந்த உறவினர் மறைவுக்குத் துக்கம் காக்க ஒரு   மர  பெஞ்சில் தலையைத் தொங்கப் போட்டு அமர்ந்திருப்பதும் ,
என்னைப் பார்த்ததும் லேசாக என்னை ஏறிட்டுப் பார்த்து, 'இப்பம் தான்   வாரியா?' எனக் கேட்டுவிட்டு  மறுபடி தலையைக் குனிந்துகொண்டதாகவும்
இருந்தது.

கோவில் வாசலைத் தாண்டி இடது புறம் திரும்பினால், எந்த முயற்சியும் இன்றி முதலில் மனதில் விழுவது பெரிய தேர் நிற்கிற இடமும் அதன்
கூரையும்தான்.  தகரக் கூரை எல்லாம் அப்புறப் படுத்தப் பட்டிருந்தது இன்றைக்கு. தேரின் அடித் தட்டும் சக்கரங்களுமாக , சமீபத்திய குடமுழுக்கை ஒட்டி, எண்ணைப்  பிசுக்கு எல்லாம்   அப்புறப் படுத்தப்பட்டு, ஒரு வித அழகான  பாக்கு நிறத்தில் , அழைப்பு மணிக்கு , குளித்துவிட்டுவந்த கையோடு அவசரத்தில்  கதவைத் திறந்த வெட்கத்துடன் இருந்தது, தேர்.

'ஆனித் திரு'ழா  வரப் போதுல்லா' என்று யாரோ சொல்கிற குரல் கேட்டது.
ஒரு வேளை  அது  பரமன் சற்று முன் எனக்கு ஞாபகப் படுத்திய  என்னுடைய
'நிலை' கதையில் வருகிற  கோமுவினுடையதாக இருக்கலாம், கோமுவை
தேர்ப் பார்க்கச் சொல்கிற அந்த ஆச்சியுடையதாக இருக்கலாம். அந்த சவ்வு மிட்டாய்க் காரருடையதாக இருக்கலாம். வடத்தின் மேல் அமர்ந்திருக்கிற
போலீஸ்காரருடையதாக  இருக்கலாம்.

ஏன், அந்தத் தேருடையதாகக் கூட இருந்திருக்கலாம்.
,1 comment:

 1. என்னுடைய
  'நிலை' கதையில் வருகிற கோமுவினுடையதாக இருக்கலாம், கோமுவை
  தேர்ப் பார்க்கச் சொல்கிற அந்த ஆச்சியுடையதாக இருக்கலாம். அந்த சவ்வு மிட்டாய்க் காரருடையதாக இருக்கலாம். வடத்தின் மேல் அமர்ந்திருக்கிற
  போலீஸ்காரருடையதாக இருக்கலாம்.

  'நிலை' கதையை வாசித்த ஒரு வாசகருடைய குரலாகக் கூட இருக்கலாம்.

  அல்லது கம்பா நதி அச்சில் வெளி வந்த நாள் தானே எங்களுக்கு ஆனித் திருவிழா என்ற உங்களின் வரியை வாசித்த வாசகரின் குரலாகவும் இருக்கும்

  ReplyDelete