Friday, 13 July 2012

ஒரு மாலை, ஒரு முன்னிரவு.இதற்கு முன்பு, மதுரை இறையியல் கல்லூரி வளாகத்தில், ஒலிப்பதிவுக்
கருவிக்கு முன்பு இருந்தேன். ஆழி பதிப்பகம் , என்னுடைய தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதைகள் சிலவற்றை, தொகுப்பாகவும் , குறுந்தகடாகவும் வெளியிட்டது. அதற்கான பதிவு அது.  சற்றும் இடைவெளி இல்லாமல், ஒரே இருப்பில், அதிலிருந்த மொத்தக் கவிதைகளையும்  வாசித்தேன்.   அந்தக் குறுந்தகடைக் கேட்டிருப்பவர்களுக்கு , என் கவிதைகளையும் மீறி, அல்லது அவற்றின் அடிக்கோடு போல் என் ஆஸ்த்மா குரலின் பிசிறும்  வாசிக்கக் கிடைத்திருக்கும்.

விகடன் ஒலிப்பதிவு அறையிலும், அந்தப் பிசிற்றுக் குரலிலேயே பதிவு செய்தேன். எனக்கு என் குரலின் விரிசல் தெரியவில்லை. ஆனால் பதிவு
செய்த நண்பர் நியூட்டன் அதை உடனடியாகச் சொன்னார். அதை அவர் என்னுடைய ஒலிப்பதிவு பயமாக நினைத்திருப்பார். பேசுகிற போது எனக்கு இன்னும் இருக்கிற மேடைப் பதற்றம், ஒலிப்பதிவுகளில் கொஞ்சம் கூட இருப்பதில்லை.  அகில இந்திய வானொலியில் முப்பத்தைந்து வருடங்கள்
முன்பு நான் வாசித்த கவிதைகளின் குரலை, இப்போதும் நான் மிகவும்  விரும்புகிறேன். ஒரு கவிதை வாசிப்பை இப்போதும் மிக உயிர்ப்போடு நிர்வகிக்கமுடியும் என்றே தோன்றுகிறது.

விகடன் ஒலிப்பதிவு கவிதைகளுக்கானது அல்ல.
இந்த வாரம் தமிழ்ச்செல்வன் குரலில் ஒலிபரப்பாகிற, ‘இன்று, ஒன்று,நன்று,’
சார்ந்தது.  வழக்கமான என் தயக்கத்துடன், கூச்சத்துடன், ஒத்திப்போடலுடன், கதிர்வேலன் மூலம்  விகடன் தந்த இடைவிடாத தூண்டுதலை முறையாக கௌரவிக்கும் விதத்தில், அங்கே இருந்தேன். விகடனின் அலுவலகத்தை இதற்கு முன் எட்டிக் கூடப் பார்த்ததில்லை.  நான் தனியாக அப்படிப் போகமுடியும் என்பது எனக்கே தெரியாத ஆச்சரியம்.  ஒருகொத்துப் பூவில் நானும் ஒரு பூவாக, என்னைப் பூக்கச் சொன்னால், ரொம்பசந்தோஷத்துடன் பூத்துவிடுவேன். ஒற்றைப் பூவாக எனில், வாய்ப்பில்லை.

அன்றைய என் மலர்ச்சிக்குக் காரணம் இருந்தது. பாவை சந்திரனின்  புதிய பார்வை காலத்தில், அதற்கும் முன்பே எனக்கும்  நா.கதிர்வேலனுக்கும் பழக்கமும் நெருக்கமும். வரவேற்பறையிலிருந்து அவர் என்னை தத்து எடுத்துக் கொண்டார்.  கதவைத் திறந்து உள்ளே நுழையக் கூட இல்லை. ராஜு முருகன் எனும் முருகன் எதிரே வந்துகொண்டிருந்தார்.  நான் பற்றிக் கொள்ள நினைத்த கைகள், அணைத்துக் கொள்ள விரும்பிய தோள்கள் அவருடையது. அவருடைய, ‘வட்டியும் முதலும்’மனிதர்களால் என்னுடைய சமீபத்திய ஒரு வருட வாழ்வு நிரம்பியபடியே இருக்கிறது. எனக்கு வாழ்வு எனில் மனிதர்கள். உயர்ந்தோர், தாழ்ந்தோர் எல்லாம் அல்ல. வென்றோர் வீழ்ந்தோர் அல்ல. சிரிப்போர் அழுவோர் அல்ல. எந்தப் பிரிவும் அற்று, மனிதர் எனும் சொல்லின் கீழ் வரும் அத்தனை மனிதர்களும். ராஜு முருகன் எனக்கு அப்படியான  நிறைய மனிதர்களின் அண்மையைத்  தந்திருக்கிறார்.

ராஜு முருகனின் கையைப் பிடித்துக் கொண்டதன் பின் என் குரலில் எந்த
நடுக்கத்திற்கும் இடமில்லை.  அதிக பட்சம் மூன்று நிமிடங்கள். அதற்குள்
அவரை என்னால் உணர முடிந்தது. அவர் எழுதியவற்றை மேலும் உணர்த்தும் படியாகவே அவரும் இருந்தார். அவர் உணரும்படியாகவே நானும் இருந்திருப்பேன்.

நான் ஏற்கனவே எழுதித் தயாரித்து வாசிப்பதற்கு வைத்திருந்தவை, அந்தப்
பதிவின் நேர அளவுகளுக்கு மேல் நிரம்பி வழிந்தன.  அதே தண்டவாளங்களில் பாஸஞ்சர் ரயிலும் எக்ஸ்ப்ரெஸ் ரயிலும் ஓடுகின்றன தானே.  நான் என் வரிகளைக் குறைத்துக் கொள்ளாமல், என் வாசிப்பின் வேகத்தைக் கூட்டிக்கொண்டேன்.  அந்தக் கூடுதல் வேகத்தின் தடதடப்பு நிச்சயம் அந்தக் குரலில் இருக்கும் என்று எனக்கே தோன்றுகிறது.

அப்புறம் புகைப்படம் எடுத்தார்கள்.   அவர்களுடைய நூலக,   ஆவண வரிசைகளின் இடையில். நான் தேனி ஈஸ்வரையும்,  வின்சென்ட்பாலையும்
தளவாய் சுந்தரத்தையும் நினைத்துக் கொண்டேன். ‘மீண்டும் அந்தக் கனவு
வந்தது’ க்காகவும், அகம் புறம் தொடருக்காகவும் எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் அல்ல, அவை எடுக்கப்பட்ட பொழுதுகள் நினைவுக்கு வந்தன. அந்தக் கல் மண்டபத்தில் இருந்து இத்தனை வருடங்கள் கழித்தும் யாரும் என்னை இன்னும் எழுந்திருக்க விடவில்லை. அந்த வெள்ளைச் சட்டையும் வேட்டியும் கூட இன்னும் இருக்கின்றன. அந்தச் சிரிப்பு அனேகமாகத் தொலைந்துபோய் விட்டது என்றே சொல்லவேண்டும்.  ஒரு  சிரிப்பைத் தொலையாமல் பாதுகாக்க அப்படியெல்லாம் பெரிய உத்தரவாதம் இந்த வாழ்வில் இல்லை.
வரவேற்பறைக்கு வரும்போது, எனக்காக சாம்ராஜும், ஆகாச முத்துவும், சீனி என்கிற சீனிவாசன் என்கிற திருமால் அழகனும் காத்திருக்கிறார்கள். சிறு காத்திருத்தலுக்குப் பின் கவின் மலர் வந்து சேர்கிறார். போதும். என் இத்தனை வருட எழுத்தில், இந்த ஐந்து பேரை அடைந்ததே போதும்.  ஒரே ஒருவரை அடைவதற்கு என் எழுத்து என்னை நகர்த்தி இருக்குமெனில் கூட அது போதுமானதே. இந்த வாழ்வில், இறுதிவரை, ஒருவரைக் கூட அடைய முடியாதவர்கள் பலர், மிகப் பலர் இருக்கிறார்கள்.

சீனியை அப்போதுதான் அறிமுகம் செய்துவிக்கிறார் சாம்ராஜ். திருவிழாக் காலத்தில் புல்லாங்குழல் விற்பார்கள்.   ஒரு சிவப்புத் தாள்,   அல்லது தங்கத்தாள்  சுற்றப்பட்ட அந்தப் புல்லாங்குழலை, அவர் கையிலிருந்து நம் கைக்கு மாற்றி, வாங்கிக்கொள்ளும் முதல் நொடியில் நம்மை  அந்த மூங்கிலின் தொடு உணர்வு என்னவோ செய்யும். அந்த முதல் முதல்
நொடியின் தொடு உணர்வைத்தான் கடைசி வரை அந்தக் குழலில் நாம் வாசிக்க முயல்கிறோம்.  அந்த மூங்கில் குழல் போல இருந்தது சீனியின்
கைகள். அது மெலிவு அல்ல மென்மை. மென்மையும் அல்ல, திண்மை.

நான் அவரை வரைய விரும்புகிறேன். நான் இப்படி வரைய விரும்புகிற முகங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அப் பட்டியலின்  முதல் முகத்தையே வரைந்துவிடாத போது, இன்னும் அதிகம் மிச்சமில்லாத வாழ்வின் திரைச்சீலையின் அகல நீளம்  குறித்த கவலையும் எனக்கு இல்லாமல் இல்லை.
சீனிக்கு சுருட்டை சுருட்டையான முடி. அப்படியொரு கூர்மையான மூக்கு.
சிரிப்பு ஒரு அம்பு மாதிரி, அல்லது நம்மைத் தாண்டிச் சிறகடித்து விரைந்து விடுகிற பறவை மாதிரி இருக்கிறது.  சொற்களை விரயம் செய்யத் தயாராக இல்லை.   அவர் தன்னுடைய கைபேசியில் இருந்து, சமீபத்தில் அவர் செய்து இருந்த ஒரு களிமண் சிலையை மட்டும் காட்டினார்.  இப்படிச் சிலை செய்யும் விரல்களும் மனமும் வாய்த்து உள்ளவர்களுக்கு வாய்ச் சொற்களில் நிச்சயம் நம்பிக்கை இருக்க முகாந்திரமில்லை. அவசியமுமில்லை.

கீழிறங்கி ஒரு தே நீர் குடித்தோம். விகடன் வளாகத்தின் வெளி வாசலுக்கு வரும்போது , விஜியின் முரட்டு பைக் வந்து நின்றது. அவர் வாகனத்தின் பின்னிருக்கையில் ஏறி உட்காரும்போது எனக்குத் தெரியாது, ரஷ்யன் கலாச்சார மையத்தில் நான் அப்படியொரு மனதை உலுக்கும். ” 13 ரோஜாக்கள்”  என்ற அயல்படத்தைப் பார்க்கப் போகிறேன் என்று.
ஒரு மாலைக்கும் முன்னிரவுக்கும் இடையில், இப்படி நான்கைந்து மனிதரை, ஒரு களிமண் சிலையை’ இப்படியொரு திரைப்படத்தைப் பார்க்கமுடியும் எனில், அன்றிரவில் மழை பெய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

%

2 comments:

 1. அருமை சார்

  ஆனால் உங்களின், வண்ண நிலவனின், கு அழகிரிசாமியின்
  எழுத்துக்களின் தரமே தனி சார்

  ReplyDelete
 2. Vanakkam. உங்கள் பெயரை முன்பே கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் உங்கள் எழுத்தை இப்ப தான் பார்க்கிறேன். அருமை சார்.

  பூக்கொத்தில் ஒரு பூவாக, ஒற்றைப் பூவாக - அருமை.

  எனக்கும் ஒரு பறவையாக, சுத்தந்திரமாக இருக்க ஆசை, ஆனால் பறவைகளுக்கும் நம்மை போன்றே ஒரு வாழ்க்கை முறை. ம்ம்.

  ReplyDelete