Monday 23 July 2012

இன்னும் அழகான ஓவியங்கள்



இப்போதெல்லாம் வளரும் குழந்தைகளின் மேல் எல்லா ஊடகங்களுக்கும் ஒரு கவனம் இருக்கிறது. தவிர்க்கமுடியாத அக்கறை இருக்கிறது.

அனேகமாக எல்லாத் தினசரிகளும் சிறுவர்மலர் பகுதி வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். பெண்களுக்குரிய பகுதி என்றால், சமையல் குறிப்பு, கோலப் போட்டிகள். சிறுவர்களுக்கு என்றால், புகைப்படங்களுடன் பிறந்த நாள் வாழ்த்துகள்,  வயது மற்றும் பள்ளிக்கூட விபரங்களுடன் ஓவியங்கள்.

நான் சிறுவர் மலர்களில் வருகிற கதைகளையும் இந்த ஓவியங்கள் வெளியாகியிருக்கிற பக்கங்களையும்  தவறவிடுவதே இல்லை.  ஒரு களங்கமற்ற மாய உலகத்தின் மேல் ரத்தினக் கம்பளங்களில் நம்மைப் பறக்கவைக்க, அந்தக் கதைகளுக்கே முடியும்.  கதைகளாவது சிறுவர்களுக்காக, பெரியவர்களால் எழுதப்பட்டது. அது சிறுவர்களுக்காக உண்டாக்கப்பட்ட உலகமே தவிர, சிறுவர்களின் அசலான  உலகம் அல்ல.  ஆனால் அவர்கள்    வரைகிற ஓவியங்கள் முழுக்கமுழுக்க அவர்கள் உடையது.  ஒரு சிறு வயது மனம் இயங்கி, சிறு வயது விரல்களின் வழி வரையப்பட்ட ஓவியங்கள் அவை.    மெழுகு வண்ணங்களாக இருக்கட்டும். நீர் வண்ண ஓவியங்களாக இருக்கட்டும்.  சிறுவர்களின் ஓவிய உலகம் பறவைகளால் நிரம்பியிருக்கின்றன. முக்கியமாக கிளிகளாலும் மயில்களாலும்.

இன்றைக்கு வெளியாகியிருக்கும் ஏதாவது ஒரு சிறுவர்மலரில், நீங்கள்  இந்தப் படத்தை ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலோ பார்த்திருக்க முடியும்.

இரண்டு மலைகள். ஒரு வட்டச் சூரியன். சுற்றிலும் கோடு கோடாக கிரணங்கள். இடது பக்கம் துண்டுதுண்டாக மேகம்.  வலது பக்கம் நான்கைந்து பறவைகள்.  மூக்கும் கிடையாது. முழியும் கிடையாது. வெறுமனே புல் முளைத்தது போல நான்கைந்து.  அசல் பறவைகளையும் விட அழகாகப் பறக்கிறவை இவர்களின் இந்த ஓவியப் பறவைகள்தான்.

இடது ஓரத்தில், கீழ்ப் பக்கத்தில், இரண்டு தென்னை மரங்கள். மலையை விடவும் அவை உயரமாக இருக்கும். அப்புறம் ஒரு ஜன்னல் வைத்த வீடு.  மலைக்கும் தென்னை மரங்களுக்கும் இடையில் ஊதா நிறத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீர்.  தண்ணீரில் சில சமயம் தாமரை அல்லது வாத்து. ஒன்று அல்ல. இரண்டு.  சிறுவர்கள் உலகத்தில் எதுவும் தனி கிடையாது.   தனிமையும் கிடையாது.

இதில் அருமையானது என்னவென்றால், அவர்கள் அப்படி வரைந்திருக்கிற
மலைகளையோ மேகங்களையோ நதியையோ சூரியனையோ அவர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்.  தென்னை மரங்கள் தவிர, அந்தத் தாமரைப் பூவையோ, வாத்துக்களையோ கூட, அந்த வயதில் அவர்கள் நேரடியாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் அவர்களுக்குள், அவர்களின் மனதில் எல்லாமே இருக்கிறது.  இத்தனையும் பார்க்கிற, இவ்வளவையும் ஒன்றாகச் சேர்த்துவைத்துப் பத்திரப்படுத்துகிற ஒரு ஆதிமனம் சிறுவர்களிடம் இருக்கிறது.  நாம் இயற்கையில் இருந்து புறப்பட்டவர்கள் அல்லது ஒரு பேரியற்கை நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறது என்பதன் அடையாளம்தான் அந்த மலையும் சூரியனும் பறவையும் நிரம்பிய சிறுவர்களின் ஓவியங்கள். 

பெரியவர்களுக்கு அதைவிட அதிகமாக ஆறும் குளமும் பறவைகளும் வானமும் தெரியும்.  ஆனால் நாம் நம்முடைய ஆற்றை வற்றும்படியாக விட்டுவிடுகிறோம்.  உள்ளே இருக்க வேண்டிய பறவைகளை வெளியே விரட்டி விடுகிறோம். பொத்தல்கள் நிரம்பியவானத்தில்,  கைவிடப்பட்ட பட்டங்கள் போல அலைகின்றன மேகங்கள்.  உள்ளே நந்தவனமாக இருக்கவேண்டிய செடிகள், வெளியே பாலிதீன் பைகள் சிக்கிப் படபடக்க முள் நிறைந்த வெயிலில் வாடுகின்றன.

சிறுவர்களைப் போல, நாமும் இயற்கையை மனதுக்குள் பத்திரப்படுத்த வேண்டும். அப்படிப் பத்திரப்படுத்துகிறபோது,  நாம் வரைகிற ஓவியங்கள் நிச்சயம் இன்னும் அழகாக இருக்கும்.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
23-07-2012    ஒலிபரப்பப்பட்ட பதிவு.

No comments:

Post a Comment