Tuesday, 24 July 2012

தேர், ரதவீதிகள், நாம்.சமீபத்தில்தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது.  ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் தேர் ஓடும்.  இந்த வருடம் ஆனித் திருவிழாவுக்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது.

வேறு என்றைக்கு இல்லாவிட்டாலும், தேரோட்டத்து அன்றைக்கு, எப்படியாவது ஊரில், அதுவும் பிறந்து வளர்ந்த வீட்டில் இருக்கமாட்டோமா என்று இன்றைக்கும் தோன்றத்தான் செய்கிறது.    யாருக்கும் அது இயற்கைதான்.  அந்தந்த ஊர்த் திருவிழாவை, அந்தந்த ஊரில், வீட்டில், அதே ஆட்களோடு பார்க்கவேண்டும் என்று தோன்றத்தானே செய்யும்.  அப்படித் தோன்றாவிட்டால், அப்புறம் நாம் என்ன மனிதன்?  அது என்ன சொந்த ஊர்?

இந்தத் தடவை, தற்செயலாக, தேரோட்டம் நடைபெறுகிற அன்றைக்கு நான் பெங்களூருவில் இருக்கிறேன்.     பரமனிடமிருந்து போன் வருகிறது, ‘கல்யாணி இன்றைக்கு நம்ம ஊரிலே தேரோட்டம்’.     அதைக் கேட்ட உடனே எனக்குள் ஒரு சத்தம் கேட்கிறது.  வடம் பிடிக்கிறவர்கள் சத்தம்.  நகரா அடிக்கிறவர்கள் சத்தம். வேட்டுப் போடுகிற சத்தம். இவையெலாம் மொத்தமாகச் சேர்ந்த ஆனித்திருவிழாச் சத்தம்.

எனக்குத் தேர் அசைந்து அசைந்து, வாகையடி முக்குத் திரும்பி, தெற்கு ரதவீதியில் வருகிறமாதிரித் தெரிந்தது. தேர் தேர்தான். நின்றாலும் அழகு. நகர்ந்தாலும் அழகு.  ‘தேர் அசைந்த மாதிரி இருக்கும்’ என்று சொல்வது எப்பேர்ப்பட்ட வார்த்தை.  தேர் அசைந்து வருவதுதான் அழகு. உச்சியில் கொடி பறக்கும். ஏழு தேர்த் தட்டும் லேசாக அசையும். நிஜமாகவே நான்கு மரக்குதிரைகளும் நமக்கு மேல் பாய்கிற மாதிரி இருக்கும். தூரத்தில் இருந்து பார்க்கிற போது,சாமியைக் கும்பிடத்  தோன்றுகிறதோ இல்லையோ, தேரைக் கண்டிப்பாகக் கும்பிடத் தோன்றிவிடும்.

நான் பரமனிடம் பதிலுக்குக் கேட்கிறேன், ‘தேர்ப் பார்க்கப் போயிருக்கியா?
தேர் எங்கே வருது?’

‘நான் எங்கே போக? மயூரியில, ஏ,எம்.என். டிவியில எல்லாம் லைவா காட்டுதான். பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்’  என்கிறான்.    இதைச் சொல்ல அவனுக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்திருக்க வேண்டும். சிரிப்பு அப்படித்தான், நேரே நம் முகத்தைப் பார்க்காமல் லேசாகக் குனிந்து கொண்டது மாதிரி இருந்தது.

இது முடிந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும்.    அதிகமாகப் போனால் பதினோரு மணி கூட இருக்காது. மூங்கில் மூச்சு சுகா, அவருடைய முகப் புத்தகத்தில், ’தேர் லாலா சத்திர முக்கு திரும்பீட்டுதாம்’  என்று ஒரு தகவலைப் போடுகிறார்.  லாலா சத்திர முக்குத் திரும்பியாகிவிட்டது என்றால், இனிமேல் ராயல் டாக்கீஸ் முக்கு. அதற்குப் பிறகு நேராக தேர் போய் நிலையில் நிற்க வேண்டியதுதான்.

எதற்கு இப்படி அவசரப் படவேண்டும்?    நெல்லையப்பரை இப்படி ஷேர் ஆட்டோவில் ஏற்றிகொண்டுபோய், ‘ஸ்பீடாக’  நிலையில் நிறுத்துவதற்கு, எதற்கு இந்த கொடியேற்று, ஒன்பது நாள் திருவிழா, சப்பரம், சாமிபுறப்பாடு எல்லாம்?

நான்கு ரதவீதிகளில், ஒவ்வொரு ரதவீதி முக்கிலும் ஒரு நாளாவது தேர் நின்று புறப்பட்டால் நன்றாகத்தானே இருக்கும். என்ன அவசரம் அப்படி? பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிவதற்குப் பெயர் தேரோட்டமா?  இப்படி வேக வேகமாக முடித்துவிட்டு, அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?  மிஞ்சிப் போனால், தொலைக்காட்சி, ஒரு திரைப்படம் அல்லது தூக்கம்.  அதுதான் என்றைக்கும் இருக்கிறதே. இன்றைக்குமா?

திருவிழாக்களை ஏன் ஆற, அமர நிதானமாக, சந்தோஷமாக நாம் கொண்டாடக் கூடாது?  பனி உருகுவது போல, பூ உதிர்வது போல, ஒரு தொட்டில் பிள்ளை தூக்கம் கலைந்து அழுவது போல, ஒரு திருவிழா ஏன் அதன் போக்கில் நிகழக் கூடாது?

இவ்வளவு கனத்த வடம் பிடித்து, இவ்வளவு பெரிய தேரை, இத்தனை பேர் இழுக்கிற காட்சி எவ்வளவு அருமையானது!
தேர் என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி, கூடி இழுக்கும் போது அசைந்தசைந்து நகர்வது நன்றாகத்தானே இருக்கும்.

அது திருவிழாவாக இருக்கட்டும், 
நீங்கள் தொடுத்த பூவை உங்கள் சினேகிதியின் தலையில் சூடுவது போன்ற, அல்லது தொலைபேசியில் கூப்பிட்டு உங்களுடைய நண்பருக்குத் திருமண நாள் வாழ்த்து சொல்வது போன்ற எளிய சந்தோஷங்களாக இருக்கட்டும். நிதானமாகக் கொண்டாடுவோம்.

அறுபது நொடிகள் ஓட வேண்டிய தேரை, ஏன் ஒரே ஒரு நிமிடத்தில் இழுத்துமுடிக்க வேண்டும்?

கேட்பது நான் அல்ல, ரதவீதிகள்.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
25-07-2012    ஒலிபரப்பப்பட்ட பதிவு.

1 comment:

 1. ஊர்க் காரங்க எல்லாம் எல்லை தாண்டி வெளியே வந்து விட்டோம் பணம், புகழ் தேடி.
  பத்து நாள் தேரோட்டம் நடத்தி ஏற்படும் மிட்டாய், துணி, நகை வியாபாரங்களை
  இப்போது நடிக நடிகையரின் விளமபரம் மூலம் பெற்று விடும் வசதி வந்து விட்டது

  இன்னும் பத்து வருடங்கள் ஆனால், தேரோட்டமே தேவையா என்ற நிலை வந்து விடும்
  தேர் நிற்கும் தேரடி இடங்களைக் காலி செய்து, கடைகள் கட்டி விட்டால்
  சேட்டு நல்ல வாடகை கொடுத்துக் கடை போட ரெடியாக இருப்பர்

  ReplyDelete