Monday, 23 July 2012

எல்லாவற்றையும் விட...


சமீப காலமாக எங்கள் வீட்டுப் பகுதியில், அவர் காலையில் நடந்து செல்கிறார்.
நேர்த்தியான மேல் உடை. கால் சட்டை. காலணிகள். அதைவிட முக்கியமான அடையாளம் நடந்துவரும்போதே அவர் விசிலடித்துப் பாடிக்கொண்டே வருவது.  அப்போதுதான் விசில்செய்யக் கற்றுக்கொள்வது போல இருக்கும். காற்றும் அந்த கிறிஸ்துவ கீதங்களின் மெட்டும் தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது போல விலகும். கையில் ஒரு நேர்த்தியான ஒரு தோல்பட்டியில், மினுமினுக்கும் பித்தளைக் கண்ணியுடன், ஒரு நாயைக் கூட்டிக்கொண்டு வருவார். 

அவருடைய தோற்றத்திற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் அந்த நாய் இருக்கும். நம்முடைய எந்தத் தெருவிலும், எந்தச் சந்திலும்  பார்க்கமுடிகிற சாதாரண நாய் அது. ஊட்டமாகக் கூட இல்லை. மெலிந்து இருந்தது. பொதுவாக, நாய்கள் அதற்கு வேற்று முகமாகப் படுகிற இன்னொரு தெரு நாய் அல்லது வளர்ப்பு நாயைப் பார்த்தால், குரைத்து  தன் வீரத்தை அல்லது பயத்தைக் காட்டும். தன் அதிகார எல்லையை நிரூபிக்கும். இது அப்படிக் குரைக்கவே இல்லை.  சாதுவாக அவருடைய வலது பக்கத்தில் வந்தபடி இருந்தது.

ஏன் இப்படி ஒரு நாயைத் தனக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்?  பார்த்தாலே நம்மை விரட்டுகிற, கன்றுக்குட்டி உயரச் செல்லங்கள் எவ்வளவோ இருக்கிறதே, இவர் ஏன் இதைப்போல ஒன்றை அழைத்துக்கொண்டார்?  என்னால் கேட்காமல் இருக்கமுடியவில்லை. ஆனல் கேட்கத் தயக்கம்.  சங்கரியம்மாவுக்கு இதுபோன்ற விஷயங்களில் தயக்கமே கிடையாது. அவர் கேட்டேவிட்டார்.

நேரடியாகக் கேட்கவில்லை. ‘என்ன அதுக்கு உடம்புக்குச் சரியில்லையா?’ என்று கேட்டார்.  அவர் விசிலடிப்பை நிறுத்திவிட்டுச் சிரித்தாராம்.  ‘ஏன்? நல்லாத்தானே இருக்கு’ என்று குனிந்து நாயினுடைய உச்சந்தலையைத்  தடவினாராம்.    அது அவர் இடுப்புவரை முன்கால்களைப் பதித்து, கொஞ்சுவது போலச் சத்தம் கொடுத்ததாம். அவர் வேறு ஒன்றும் சொல்ல வில்லையாம். ‘பார்த்தீங்களா?’ என்பது போல மறுபடி சிரித்தாராம். மறுபடியும் விசிலடித்துப் பாடிக்கொண்டு போக ஆரம்பித்தாராம்.

சங்கரியம்மாவும் இதை அதிகம் விவரிக்கவில்லை.  ‘இது நம்ம லட்சுமி  தத்து எடுத்த கதையால்லா இருக்கு’ என்றார்.  லட்சுமி அவருடைய சினேகிதி.  தாமதமாகத்தன் லட்சுமிக்குக் கல்யாணம் ஆயிற்று.   கணவர் பஸ் ஓட்டுநர். மிகச்சின்ன வாடகை வீடு. சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். பத்துப் பதினைந்து வருடமாகியும் குழந்தை இல்லை. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு செய்தார்கள்.  இவர்களைப் போலவே, இன்னொரு சிறிய  வாடகை வீட்டில் பிறந்த அந்த நான்கு வயதுக் குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டார்கள்.  அதற்கு நான்கு வயதுக்கு உரிய மனவளர்ச்சி இல்லை. சரியாகப் பேச்சு வரவில்லை.  அந்தக் குழந்தையை லட்சுமியின் கணவர் கொஞ்சுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கும்.

இதுவரை தரையில் படுக்கும் அவர், அந்தக் குழந்தைக்காக ஒரு கட்டில் வாங்கினார். சின்ன அளவு தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார். லட்சுமி சங்கரியம்மாவிடம் சொன்னாளாம்,   ‘ஓடியாடுகிற பிள்ளைகளை வளர்க்கத்தான்  ஊரு உலகத்தில ஆயிரம் பேரு இருக்காங்களே’ என்று.

நம்முடன் இப்படி ஒரு லட்சுமி இருக்கிறார்.  நாயைக் கூட்டிகொண்டு விசிலடித்துப் பாடியபடி நடந்துபோகிற ஒருத்தர் இருக்கிறார்.

இவர்களிடம் இருந்தும் , இவர்களைப் போன்ற பலரிடம் இருந்தும்தான் நான் கற்றுக் கொள்கிறேன்.  நான் கற்றது கையளவு. ஆனால் அந்தக் கையளவு எல்லாம் இது போன்ற மனிதர்களின் மனதளவு.

எல்லாவற்றிற்கும் மனம்தான் அளவு.
எல்லாவற்றையும் விட மனம்தான் அழகு.

%

ஆனந்த விகடன் - இன்று, ஒன்று, நன்று
24-07-2012  ஒலிபரப்பப்பட்ட பதிவு/

No comments:

Post a Comment