Thursday 28 June 2012

அவர் பொருட்டு..

மனம் இன்னும் சிகாபுதீன் பொய்த்தும் கடவுவின் ,’போதேஸ்வரனில்,  சதீஸ் பாபு பய்யனூரின் ‘ஆறாவது வார்டி’ல், அதைவிடவும் விலக முடியாதபடி, ‘குருவிளை ஸார், உலகச் சந்தையில் கதையிலும் இருந்தது.
ராமச்சந்திரன் தான் “யௌவனத்தின் கடல்” புத்தகத்தை எனக்குப் படிக்கத் தந்தார்.  அம்ருதா வெளியீடு. எல்லாம் சமீபத்திய மலையாளக் கதைகள். குளச்சல் மு. யூசுஃப் மொழியாக்கம்.

நான் ராமச்சந்திரனிடமிருந்து திரும்பி ராமச்சந்திரனிடமே போய்விடும் ஒரு
ஒற்றையடியையே இந்த வாசிப்புத் தந்தது. ராமச்சந்திரனின் எஸ்தர் போல, இந்த குருவிளை ஸார் கதையிலும் ஒரு எஸ்தர் வருகிறார்.  பாபு பய்யனூர் அவருடைய ஆறாவது வார்டில் கூட, ராமனுக்கு எஸ்தர் சித்தியின் சாயல்
இருக்கிறது. ராமனின் நடுங்கும் விரல்கள், எஸ்தர் சித்தியின் கைகளை விடவும் நேரடியாக,அந்த ராமகிருஷ்ண பணிக்கரின் கழுத்தில் மெல்ல இறங்குகின்றன. போதேஸ்வரனுக்கு அங்கங்கே என்னுடைய   படம் வரைகிற சுபாவம். என் கல்லூரி வகுப்புச் சகா  தங்கசாமி கொடுத்த க்ரூப்  ஃபோட் டோவில் அவருடைய  பால்யகால சகியின் முகம், வரையவே முடியாத அளவுக்குப் படு மங்கலாக, போதேஸ்வரனுக்கு ஏற்படுத்திய அத்தனை உளைச்சலையும் எனக்கும் கொடுத்ததுண்டு.


நான் இந்த மூன்று கதைகளாலும் ஒரு பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருந்தேன்.  எனக்குப் பிடித்தமான கதைகள் அனேகமாக எப்போதும் இப்படி ஒருவித துக்கம் கவியும் மனநிலையையே உண்டாக்கிவிடுகின்றன. இந்த வகையான துக்கம், என் அன்றாட ரணங்கள் சார்ந்து உண்டாகி, அப்புறம் தானாக ஆறிவிடுகிறவை அல்ல. பகலுமற்ற இரவுமற்ற ஒரு கருக்கலில் நம்மைத் தனியாக இவை நிறுத்தியும்,  படித்துறையிலும் அல்லாது நீச்சலிலும் அல்லாத ஒரு தக்கைத் தவிப்பில் ஒரு கசத்தில்சுழற்றி இழுக்கவுமாக என்னைத் தனிமைப்படுத்திவிடுவதில் மாற்றமே கிடையாது.

 நேற்று இரவுதற்செயலாக, மனதோடு மனோ நிகழ்ச்சியில் கேட்ட பண்டிட் ஜனார்தனன்அவர்களின் சிதார் மீட்டல் போல், கடைசி விள்ளல் தூண்டும் பெரும் பசியைஅந்தக் கதைகள் உண்டாக்கியிருந்தன.   இது போன்ற மனநிலையில், பெருமாள்புரத்திலேயே வெளியே போகத் தோன்றாது. இங்கே ஆதம்பாக்கம், லட்சுமி ஹயக்ரீவ நகர், முதல் நெடுந்தெருவில் இருந்து என்ன செய்ய?
ஏதாவது எழுதிவிட முடிந்தால், இது கொஞ்சம் தணியும்.  ராமச் சந்திரனே
எழுதாதிருக்கிறபோது எனக்கென்ன வந்தது?

நல்ல வேளை, மழை காப்பாற்றியது.முதலில் மழையின் சத்தம்தான் அழைத்தது.  எந்த நான்கு சுவர்களின் கனத்த இருட்டுக்குள் இருந்தாலும்,  எல்லாக் கதவுகளையும்  அகலத் திறந்து,  மழைச்சத்தம்   நம்மைக்  கையோடு வெளியே அழைத்துச் சென்றுவிடுகிறது.  ஒருமருத்துவ விடுதியின் படுக்கையில் இருக்கும்   முதிய பெண்ணின் பச்சை   நரம்புகளை நீவி, உள்ளங்கை பற்றி ஆறுதல்படுத்துவது போல மழைவாசம் நம் கையைப் பற்றுவதை ஒவ்வொரு முறையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் வாசல் இரும்பு கேட் பக்கம் வந்து சேர்கையில் மழை என்னுடைய
கைகளை விட்டுவிலகி,  நடனமிடத் துவங்கியிருந்தது. அல்லது ஏற்கனவே நடந்துகொண்டிருந்த ஒரு ஈரநடனத்துடன் அது தன்னை இணைத்துக் கொண்டது.

நான் மனதால் ஆடத் துவங்கியிருந்தேன். எனக்குப் பிடித்த அத்தனை பேரும் என்னுடன் ஆடுகிற நடனமாக அது இருந்தது. .என் சின்ன வயதில் இருந்து இன்னும் தீராத பேரழகாகக் கொப்பளிக்கும் மழைக் குமிழிகள் இந்தத் தார்ச் சாலையில் கீழிருந்து நீர்ப்பூ மலர்த்தின. அதற்கான ஒரு உவமானத்தை
என்னால் இதுவரை உருவகிக்கவே முடியாதவனாகவே நான் இருக்கிறேன்.

தெருவில் நடமாட்டமே இல்லை. நடமாட்டமற்ற ஒரு சென்னைத் தெருவை
மழை மட்டுமே உண்டாக்கித் தரமுடியும். ஒரு கார் ட்ரைவர் எதிர் அடுக்ககச்
சுவர்ப் பக்கம் ஒண்டியிருந்தார். பழைய துணிகள் தைக்கிற தையல்காரர், அவருடைய வழக்கமான வாகை மரத்தின் கீழ், தன்னுடைய தையல் இயந்திரத்தைக் கூடாரமிட்டுக் காப்பாற்றியபடி இருந்தார். ஒரு பல்சர் பைக்
மழைக்கு எந்த பாதுகாப்புத் தலைக் கவசமும் அவசியமற்று, ஒரு  சாய்வான சுதந்திரத்துடன் நனைந்துநின்றது.
எந்த மரமும் ஆடவில்லை. எல்லா தனித்தனி இலையும் இந் த மழையின்
துளிக்குத் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தன.

மழை முதல் பாட்டம் முடிந்து இரண்டாவது பாட்டத்தையும் துவங்கி வீசியது. மழை தீயைப் போல எரிவதாகத் தோன்றியது. மழையில் குளித்தலும் தீக் குளித்தலும் ஒன்றென நினைக்கையில், எனக்கு எங்கள் ஊர் தீப்பாய்ச்சி அம்மன் ஞாபகம் வந்தாள்.  ‘ செம மழை சித்தப்பா’ - என்னிடம் பாலாஜி சொல்லிவிட்டுப் போனான்.
நான் அண்ணன் வீட்டுச் சலவை இயந்திரத்தைப் பழுது பார்க்கவந்திருக்கும் அந்த சுருட்டை முடிச் சீருடை இளைஞனிடம் கேட்டேன், ‘தம்பி, சென்னையில இந்த மூணு மாசமா இப்படி மழை பெஞ்சுருக்கா?’  .

அவர் என் பக்கம் திரும்பவே செய்யாமல்,  சலவை இயந்திரத்தின் உதிரி பாகங்களைக் கழற்றிப் போட்டபடியே சொன்னார், ‘இல்லீங்க ஸார்”. 

 இந்த அரை மணி நேரமாகப் பெய்யும் மழையை அவர்  ஒரு நொடி கூடப்
பார்த்திருக்கவில்லை.
 அவர் பொருட்டும்  பெய்து கொண்டிருந்தது மழை.

2 comments:

  1. /எனக்குப் பிடித்தமான கதைகள் அனேகமாக எப்போதும் இப்படி ஒருவித துக்கம் கவியும் மனநிலையையே உண்டாக்கிவிடுகின்றன. இந்த வகையான துக்கம், என் அன்றாட ரணங்கள் சார்ந்து உண்டாகி, அப்புறம் தானாக ஆறிவிடுகிறவை அல்ல. பகலுமற்ற இரவுமற்ற ஒரு கருக்கலில் நம்மைத் தனியாக இவை நிறுத்தியும், படித்துறையிலும் அல்லாது நீச்சலிலும் அல்லாத ஒரு தக்கைத் தவிப்பில் ஒரு கசத்தில்சுழற்றி இழுக்கவுமாக என்னைத் தனிமைப்படுத்திவிடுவதில் மாற்றமே கிடையாது./

    இந்த அவஸ்தைக்காகவே தினமும் ஏதாவது நீங்கள் எழுதியதைத் தேடிப் படிக்கிறது சார். எழுத்தின் சுழலுக்கு முழுதும் ஒப்புக் கொடுத்து ஓய்ந்து போய் கண்கள் எழுத்தை வெறிக்க மனது பறப்பதோ சலனமற்று இருப்பதோ அதன் போக்கில் இருக்க இரவின் தனிமையில் தொலைந்து போவது பிடித்திருக்கிறது.

    சென்னை வந்திருக்கிறீர்களா சார்.

    ReplyDelete
  2. என் சின்ன வயதில் இருந்து இன்னும் தீராத பேரழகாகக் கொப்பளிக்கும் மழைக் குமிழிகள் இந்தத் தார்ச் சாலையில் கீழிருந்து நீர்ப்பூ மலர்த்தின. அதற்கான ஒரு உவமானத்தை
    என்னால் இதுவரை உருவகிக்கவே முடியாதவனாகவே நான் இருக்கிறேன்.

    உங்களாலேயே முடியாவிடில் வேறு யாரால் முடியும்

    சார் நேரமும் மனமும் இருந்தால், ஆதம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை நடக்கும் ரயில் வேலை அருகில் உள்ள பகுதிகளில் (அந்த சாலையில், ஸ்டாலின் அவர்களின் புதல்வி பள்ளிக்கூடம் இருக்கும் சாலை ) சென்று பாருங்கள்

    நெல்லை நகர வாசனை அங்கு வீசும்

    ReplyDelete