Thursday, 21 June 2012

வேறு ஏதேனும்.
 
 
இன்று தர்பூசணிக்
கீற்றுகள் விற்கிறேன்.
எவ்வளவு என்று விலைகேட்டு
உள்ளங்கைச் சில்லறை நோக்கி
வாங்காமல் போகிறாள்
வேறெங்கோ பார்க்கும் முகத்துடன்
செம்பட்டை முடிச் சிறுமி.
அந்த உள்ளங்கைச் சில்லறைக்கு
இந்த உலகத்தையே விற்றுவிடும்
வேறேதேனும் வியாபாரம் செய்ய
இப்போது
விருப்பம் எனக்கு.

%
 
 
நினைவுகளின் மஞ்சள் உலோகம 

விதம் விதமாக
மெத்தை தலையணைகள் தயாரிக்கும்
கிட்டங்கி ஒன்றுக்குப் பின்னால்தான்
மரகதம் இருந்தாள்.
அழுக்கு வெள்ளை நிற
இலவம்பஞ்சின் வாடையைத் தாண்டுகையில்
கழிப்பறைத் தகரக் கதவு திறந்து
வெளிவந்த பெண் அப்படி
குனிந்துகொண்டு செல்ல
எந்த அவசியமும் இல்லை.
பக்கத்து வீட்டு மதில் உள்ளிருந்து
செப்புத்தகடுகளாகத் துளிர்த்து
சாய்ந்திருந்த மாமரம் சாட்சி
இதுவரை நான் மரகதத்திடம் பெற்ற
ஒரே ஒரு அழியா முத்தத்திற்கு.
நெளிந்த பித்தளைக் குடம் சரித்து
துளி சிந்தாமல் மரகதம் குடித்தாள்
தண்ணீரின் பளிங்கு விழுதை.
விழுங்கி வாய்பிளந்து நிற்கும்
ராட்சச நகைக்கடை இதனின்
கடைவாய்ப் பல் சொத்தையிலிருந்து
சொல்கிறேன்
நினைவுகளின் மஞ்சள் உலோகம் அழித்து
ஒரு மரகத அட்டிகை செய்ய
செய்கூலி எவ்வளவு
சேதாரம் எவ்வளவு என்பதை.

%

பரவச ஈக்கள்.
 
நூறு இருக்கும், ஆயிரம் இருக்கும்
அதற்குக் கூடுதலாகவும்.
மீன்கூடையின் ஈயவிளிம்பில்
மரணத்தின் உப்பு வாசனை மொய்க்கும்
பரவச ஈக்கள்.
பார்க்கப் பார்க்க மினுமினுத்தன
எத்தனை கோடியோ
இன்பம் வைத்த சிறகுகள்.
இத்தனையும் வண்ணத்துப் பூச்சிகளாக
இருந்துவிடும் எனில்,
அவை அமர
அத்தனை எண்ணிக்கைப் பூக்களுக்கு
எங்கே போவேன் நான்
என் சிவனே.



 









 





 
 
 

4 comments:

  1. Just no words to describe my feelings at this moment. Thats it. thank you sir.

    ReplyDelete
  2. அருமை சார் மூன்றும்
    முதல் கவிதையின்

    தாக்கத்தைத் தாண்டி வரவே நெடுநேரம் ஆகி விட்டது

    ReplyDelete
  3. Sir! First one really touches our heart.

    ReplyDelete