'மவுண்ட்
ரிட்டர்ன் ஒன்னு'
மாம்பலம் மின் ரயில் நிலையத்தில் சீட்டு வாங்கும் போதே திரும்பி வரும்போது அசோக்நகர் ஐம்பத்து மூன்றாது தெரு வரை நடப்பது என்று தீர்மானித்திருந்தேன். எதற்குமே
தீர்மானங்கள்
எடுக்கப் பழகியிராத நான், இது போலஎப்போதாவது எளிய தீர்மானங்களின் மணல் வீடு கட்டிக்
கொள்வது உண்டு. நாமே கட்டி, நாமே சந்தோஷமாகச் சிதைத்துவிட்டு, வீட்டுக்கு வந்த பின், மணல்வீட்டைமறந்து கால்விரல்களுக்கு
இடையே மினுங்கும் மணல்பரல் பார்த்து , கனவில்
மறுபடி கடல்கரையில் நிற்கமுடியும் சாத்தியம் அதில் எப்போதும் நிறைய அல்லவா.
வெள்ளிக் கிழமை மாலைதான். ஆனால் மின் ரயிலில் அப்படியொன்றும் நெரிசல் இல்லை. 90 சதவிகிதம் பேர், ஒரு முழு வேலைநாளின் அலுப்பை கைபேசியில் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் இரண்டு எதிர்
எதிர் இளைஞர்களின் புல்லாங்குழல் இசைப் பகிர்வில் ஒரு சிறுகணம் ரயிலில்
மூங்கில் அசைந்து வேணுவனம் ஆயிற்று. நான் மாம்பலம் நிலையத்தில் எனக்குப் பிடித்த படிக்கட்டின் எந்தப்பக்கத்தில்
ரயிலின் என்னுடைய இறங்கும்
வாசல் நெருங்கும் என்ற விளையாட்டில் இருந்தேன். சேதாரமே இல்லாத விளையாட்டு.
எனக்கு
ஒரு விளையாட்டு உண்டெனில் ரயிலுக்கும் ஒன்று இருக்கும் அல்லவா? அது
அதன்
விளையாட்டில் ஜெயித்து, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்
அல்லாது, படிக்கட்டின்
தராசு முள்ளில் நின்றது. கிண்டியில் ஏறி, சைதாப்பேட்டையில் தலைமுடி கலைய
நின்று, எனக்கு முன்னே
இறங்கின நாலைந்து கலகலப்பரின் நிழலாக இறங்கினேன். மூன்றே நிலையங்களின்
இடைவெளியில்,
என்னிடம் எதையோ தந்து விட்டும் என்னிடமிருந்து எதையோ
எடுத்துக்கொண்டும், நகர்கிற தொடர்வண்டியின் மெலிதான வேகம் எப்போதும்
போல இப்போதும் எனக்குப் பிடித்திருந்தது.
நான் படிகளில் ஏறினேன். என் கால்களின் கீழ், 97, 98, 99ஆம்
வருடப் படிகள் வந்து
சேர்ந்திருந்தன. 2. ராஜு நாயக்கன் தெரு, மேற்கு
மாம்பலத்துக்கு அழைத்துச்
செல்லும் படிகள். இப்போது பயணச் சீட்டுகள்
வாங்குகிற இடமாக மாறியிருக்கும் அந்தத் திருப்பத்தில்தான், அதற்கு
முந்திய தின இரவில் தன் கிராமத்தில் இருந்து துரத்தப்பட்டு இந்தத்
திக்கற்ற நகரத்தில் கையேந்தும்படி அந்த
முதியவரும் அவருடைய கிழவியும் நின்றார்கள். அந்த இருவரும் உங்களுடைய, அல்லது என்னுடைய
அல்லது
யாருடைய
வீட்டுப்
பட்டாசலில் தொங்கக்கூடிய ஒரு குடும்பப் புகைப்படத்திலிருந்து கிழித்து எடுத்து அப்புறப்படுத்தி, இந்த
மாம்பலம் நிலையப் படிக்கட்டில் வீசப்பட்ட முகத்துடன் இருந்தார்கள். ஒரு வேளை, இத்தனை
வருடங்களிலும் ஒரே ஒரு
புகைப்படம் கூட எடுக்கப் படாத முகங்களாகக் கூட அவை இருக்கலாம்.
அந்த அம்மா கட்டியிருந்தது ஒரு மஞ்சள் நிறப் புடவை.
எங்கள் பக்கத்தில் மாம்பழக் கலர் என்று சொல்வார்கள் . ஒரு திருவிழாவுக்கு அல்லது
அவருக்கு வேண்டிய ஒருத்தரின் கல்யாணவீட்டுக்குப் புறப்பட்டது
போல, தங்களின்
மிக மோசமான ஒரு தினத்தில்
பிரவேசிக்கிறதை அறியாமல், பின்கொசுவம் வைத்து அதை உடுத்தியிருந்தார்கள்.
குங்குமம்
வைத்த நெற்றியும் அடர்ந்தமீசையுமாக, கலங்கிச் சிவந்துதவிக்கும்
கண்களுடன் அந்தப் பெரியவர் நின்ற கோலம் இன்னும் என்னை வதைக்கிற
நினைவுகளில் ஒன்று. கும்பிட்டபடியே ஒரு கருஞ்
சிலையென நின்ற அவர், நல்ல வேளை அந்த நொடி வரை, கையேந்தி
எதுவும் கேட்டுவிடவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், சொல்ல முடியாது, அப்போது
கடந்து
சென்ற மின்ரயில்கள் ஒன்று மேலும் ஒரு விபத்துச் சிதைவைத் தாண்டிப்
போயிருக்கும்.
படிகளில் இறங்கி, பிள்ளையார் கோவில் தாண்டி, வாகனக்
காப்பக வரிசை பார்த்து
ஸ்டேஷன் ரோட்டில் திரும்பும் போது நான் அஜயன் பாலாவையும்
மாரிமுத்தாகிய யூமாவாசுகியையும் அந்த சப்போட்டாப்
பழக்காரரையும் எதிர்காண
விரும்பினேன். ஒரு இடிந்த சுவரை, ஒரு தொலைந்த தெருவை, ஒரு
கிழிந்த பக்கத்தை நமக்கு நெருக்கமான ஒரு முகத்தின் ஞாபகங்களுடன் மீட்டுக் கொள்வது அருமையானது அல்லது துயரமானது. அதற்கு
அடுத்து ஸ்டேட் பாங்க் குடியிருப்பில்
இருந்து ஜெயவர்மன் வர மாட்டாரா?.
நாம் நினைத்த போதெல்லாம்,
நினைத்த
இடங்களில் நினைத்த மனிதர் வர, இது என்ன தமிழ்
சினிமாவா? யாரும் வரவில்லை.
ஆனால் அந்தப் பூ விற்கிற பெண் அப்படியே அதே இடத்தில் இருந்தார்.
எனக்கு மேலும் வயதாகிவிட்டது போல,
இந்த பதினான்கு வருடங்கள் அவர் மீதும் மெல்லக் கிளையில் அமரும் பறவை போல இறங்கியிருந்தது. ‘ மூன்று நாட்களாக அவரை எங்கே காணோம்?’ என யாரோ பூ வாங்கியபடியே அவரிடம்
விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு வேளை அவர், என்னை எங்கே காணோம் இத்தனை வருடங்களாக என்று விசாரித்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும். பூ விற்கிறவர்கள் பூ வாங்குகிறவர்களை மட்டும்தான்
விசாரிப்பார்கள் என யார் சொன்னார்கள். அவர்கள் அவர்களுடன் வாழ்கிற அனைவரையும் விசாரித்தபடியேதான்
இருக்கிறார்கள். விசாரிப்பின் வாடாத பூவுடன் அவர்களின் பூக் கூடை ஈரமாகவே
இருக்கிறது.
நான் அந்தப் பழக்கடையைத் தேடினேன். பழக்கடையைக் கூட அல்ல, பழம் விற்கிற அந்த முகத்தை. அவ்வளவு அழகான
கருப்பு. அழகான முகக் களை, பொட்டு, சிரிப்பு எல்லாம். பூமா என்று ஒரு ரெட்டைச்
சடை போட்டபெண் குழந்தை உண்டு என ஞாபகம். பூமாவுக்கு இப்போது கல்யாணம் ஆகிப் போயிருக்கலாம்.
ஒரு கணினிப் பொறியாளர் ஆகவோ
அவருடையதுணைவியாகவோ கூட இந்தப் பழைய
மகாபலிபுரச் சாலையில் பூமா போய்த் திரும்பிக் கொண்டிருக்கலாம். சற்று, முன்
பக்கங்களைத் திருப்ப முடியும் எனில், ஜூனியர் விகடனின்
‘காதல் படிக்கட்டுகள்’ வரிசையில், என் வரிகளில் நீங்கள் இந்த பழக்கடைக்கார முகத்தை வாசித்திருக்க முடியும்.
இது போதாதா? நீங்கள்
வாசிக்கச் சில வரிகளை நானும், நான் வாசிக்கச்
சில வரிகளை இந்த மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோடும் விட்டுச் செல்லும் எனில், அந்த வரிகளை நிரந்தரப்படுத்த யாரோ ஒருவரின்
முகமும் இன்னும் இருக்குமெனில்.
போதும்தானே.அந்த முகம் அந்த முகமாகவே இருந்தது. அந்தப் பழக்கடைக்குப் பின் ஒரு
செருப்புக் கடை புதிதாக வந்திருந்ததே தவிர, அவர் அப்படியே இருந்தார். பட்டுப் புடவை போல மினுங்குகிற, பட்டுப் புடவை அல்லாத ஒன்றை அணிந்து, அதே மூக்குத்தியும் சிரிப்புமாக, அந்த செருப்புக் கடைவாசலில் ஒரு ஸ்டூலில் அமர்ந்திருந்தார்.
சந்தோஷம்
ஒரு ராணியின் தோரணையை அவருக்குக் கொடுத்திருந்தது. அல்லது வாழ்வை
அதன் போக்கில் மலர்ந்த நிம்மதியுடன் வாழ்கிறவர்களுக்கு, ஒரு
தாமரைக்குளத்தின் பறிக்காத பூவின் அப்படியொரு அழகு வாய்த்துவிடுகிறது. நான்
அவரிடம் பேச விரும்பினேன். பேச வேண்டும் என நினைத்துப் பேசாமல் போகிற பாசாங்கு
அல்ல, ஏதோ ஒரு கூச்சம், அவரைப் பார்த்தபடியே என்னைத்
தாண்டிப் போகவைத்தது. பேச நினைக்கிறவர்களிடம் பேசமுடியாத சொற்களின் மிச்சமாகவே
இந்த வரிகள் அதனுடைய அடுத்த வரிக்கு என்னை இட்டுச்செல்கின்றன. இந்தப் புள்ளிக்கு மேல், நான்முற்றிலும்
வேறு ஒருவனாக ஆகியிருந்தேன்.ஏரிக்கரைச் சாலை, தம்பையா தெரு,
ஆரிய
கௌடா சாலை, போஸ்டல் காலனி
மூன்றாம் தெரு, அஷோக் நகர் 49ஆம் தெரு எல்லாம் தாண்டி, நான் அந்த ஐம்பத்து மூன்றாவது தெரு, ரெங்க நாயகி அடுக்ககத்தை எப்படி இத்தனை விரைவில் அடைந்தேன் என்பது
ஆச்சரியமாக இருந்தது. இடையில் பெயர் தெரியாத ஒரு
தெருவில், மன நல மருத்துவர் ராமானுஜத்தை, நடனப்
பயிற்சிமுடித்து நின்றுகொண்டிருந்த அவர் குழந்தையுடன் பார்த்ததும் பேசிவிடை
பெற்றதும் மட்டுமே நினைவில் இருந்தது. அப்படி உயரப்
பறந்து வந்திருக்கிறேன்.
சில முகங்கள்
இப்படிச் சிறகுகளாக இப்படி நம் விலாப் புறங்களில் முளைத்து விடுகிறார்கள். அல்லது சில மனிதர்கள் பறவைகளாக
நம்முடனே பறந்து வருகிறார்கள். மனிதர்கள்
அவ்வப்போது
யாரை முன்வைத்தாவது பறவைகள் ஆவதும் பறக்கமுடிவதும் எவ்வளவு அருமையானது.
%
.
நல்ல ஒரு அனுபவ விவரிப்பு, கற்பனையோ ,கதையோ என்றும் நினைக்கும் வண்ணம் சிறுகதை போல ஒரு ஓட்டம்.எழுதப்பழகிவிட்டால் சிந்தனையும்,பேச்சும் தானாக எழுத்துவடிவிலே தோன்றுமோ:-))
ReplyDeleteNice one sir.
ReplyDeleteமாடத் தெருவை
ReplyDeleteமட்டும் அல்ல
மாம்பலம் ரயில் நிலையத்தையும்
லேக் வியு தெருவையும் கூட
கண் முன்னே கொண்டு வரும்
வித்தகர் சார் நீங்கள்