தரையில் விழுந்த பூ
வரவேற்பு வாசலில் எடுத்துக் கொள்ள
காம்புடன் ரோஜா பூ வைத்திருந்தார்கள்.
ஏற்கனவே அவை புத்தம் புதுப் பூ.
இவள் தேர்ந்துகொண்டதோ புதிதினும் புதிய பூ.
பேசிக்கொண்டே செருகினால் எப்படி?
சரியாய் அமராமல் கீழே விழுந்தது.
குனிந்து எடுத்துக் கொண்டு மறுபடி
சூடிக் கொண்டால் என்ன? இன்னொரு
பூவை எடுத்தாள், தலையில் வைத்தாள்.
போய்க்கொண்டிருந்தாள். தரையில் விழுந்த பூ
யார் குனிந்தெடுப்பார் என்ற யூகத்தில்
எல்லோர் முகத்தையும் பார்த்துச் சிரித்தது.
யார் நமை மிதிப்பார் என்ற கவலையும்
இல்லாமல் இல்லை. இருக்கும் தானே.
அமுத நீலம்
அவளுடைய நீலம் வெள்ளையாகவே இருக்கிறது.
அவள் நீல மெழுகுவர்த்தி ஏற்றுகிறாள்,
வெள்ளைப் பிரார்த்தனைகள் சொல்லி.
அவள் வெண்ணிற இரவுகளை
அவளுடைய கவிதையில் மொழிபெயர்க்கையில்
அவை நீல இரவுகள் ஆகிவிடுகின்றன.
அவள் பொறுக்கிய ஏழாவது கூழாங்கல்
நீலமாக இருந்தது.
அவளது மேய்ப்பர் நீல நிறமாக இருந்தார்.
ஆட்டுக் குட்டிகளும் அப்படியே.
அவள் ரசவாதி.
அவளுக்கு எல்லாம் கூடும்.
ஒரு நீல எறும்புக்கு
அவளை மிகவும் பிடித்திருந்தது.
அவளுடைய பார்வையின் காருண்யத்தில்
அவன் தன்னுடைய நீலச் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்து வந்தான் ஆடையற்று.
ஒரு நீல வஸ்திரம் தந்து
அவள் அவனை உடுத்தப் பண்ணினாள்.
அவள் மார்புக் காம்புகள் நீலமாக இருந்தன.
விஷம்தானே நீலம் என
அவன் கேட்டதற்குப் பிரதியுத்தரமாக
அமுதமும் அப்படித்தான் என
அவள் புன்னகைத்தாள்.
ஏதோ ஒரு கோவிலின்
அம்மனுக்குப் பெயர் நீலாயதாட்சி.
அவனுக்கு அந்த
ஏதோ ஒரு கோவிலைப் பிடித்திருந்தது.
கையில் இருக்கும் இமயம்
சாலையோர ஜல்லிக்குவியலில் அமர்ந்த
தட்டான் பூச்சியைப்
பிடிக்கமுடியவில்லை ஆதியால்.
ஜல்லிக்கல் ஒன்றைக் கையில் எடுத்து
உற்றுப் பார்த்த சிறிது நேரத்தில்
‘ஹிமாலயாஸ்’ என்று
என்னிடம் நீட்டினான்.
நான்கு வயதுக் கையில் இருக்கும்
இமயவரம்பின் தொடர்ச்சி மீது
எப்படி ஏறுவது என்கிற
மலைப்பு எனக்கு.
தை - 2012.
தரையில் விழுந்த பூ
ReplyDeleteயார் குனிந்தெடுப்பார் என்ற யூகத்தில்
எல்லோர் முகத்தையும் பார்த்துச் சிரித்தது.
யார் நமை மிதிப்பார் என்ற கவலையும்
இல்லாமல் இல்லை. இருக்கும் தானே.
கனிவு, கடவுள் ஆகியவற்றைக் காட்ட முடியாது என்பர்
இந்த வரிகள் போதும் சார்
கனிவையும், கடவுளையும் காண முடிகிறது.
அன்பே சிவம் திரைப் படத்தில் அந்த பேருந்து விபத்திற்குக் காரணமான நாயிடமும்
தரையில் விழுந்த பூவிலும் தானே கடவுள் இருக்கிறார்.