நேற்றும் இன்றும் புகைப்படங்களிலிருந்து என் வெளிச்சங்களைச் சேகரித்துக் கொண்டு இருக்கிறேன். வைகாசியின் இறுதி வெயிலுக்கும் தென்மேற்குப் பருவக் காற்றுக்கும் இடையில் ஏதோ ஒரு வித தத்தளிப்பில் இருக்கிற என் தினங்களை எந்த முயற்சியும் இன்றி, இந்தப் புகைப்படங்கள் மீட்டுவிட்டன என்று கூடச் சொல்லலாம். ஒரு புல், ஒரு வைக்கோல் துரும்பு, ஒரு தேக்கு இலைச் சருகு, ஒரு காக்கைச் சிறகு, போகும் வழியில் கிடக்கிற ஒரு வௌவால் கடித்த வாதாம் பழம் எல்லாம் என்னை இதற்கு முன் எப்படி மீட்டிருக்கின்றனவோ, அப்படியே இப்போது இந்தப் புகைப் படங்கள் அல்லது நிழற்படங்கள் அல்லது ஒளிப்படங்கள் செய்திருக்கும் மீட்சியும்.
வே.முத்து குமார்தான் ‘வசியம் செய்யும் மேகங்கள்’ என்ற தலைப்பின் கீழ் வரும் அந்த இணைப்பை எனக்குத் தந்திருந்தார்.
ஒரு துவக்க நிலை மொழிபெயர்ப்பாளன் போல, அதையும் விடச் சற்று மோசமாகவே , Mesmerising clouds என்பதை இப்படி நான் சொல்வதால், எந்த வகையிலும் அந்த மேகங்களில் நீலவசியம் குறைந்து போகாது என நம்புகிறேன். ‘muralidharanalagar.blogspot.in’என்ற இந்த வலைப் பூ, மேகங்களைத் தாண்டியும் பல அற்புதப் படங்களின், ‘கண்களுக்கான கவிதை’ப் பதிவுகளைத் தனக்குள் வைத்திருப்பினும். நான் மீண்டும் மீண்டும் மேகங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன் நேற்று இரவு வரை.
இன்று எஸ்.ஐ.சுல்தான் தினம். இந்த ‘சமவெளி’யில் நிற்பதற்கு முன், அவருடைய மடியில்தான் நான் இருந்தேன். இருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பின் அவருடைய வண்ணதாசன் வலைப் பூவில், ’அணிலின் நிறம் அல்லது நிறங்கள்’ என்ற என் சிறுகதை ஒன்றைப் பதிவேற்றி இருக்கிறார். என் கதையை விடுங்கள். அந்தக் கதையை விடவும் நேர்த்தியான சில அணில்களின் புகைப்படங்களை அதில் இடையிடையே அவர் வெளியிட்டிருக்கிறார்.
அணில்களின் அழகு சொல்லமுடியாத ஒன்று. ஒரு முருங்கை மர அணிலை அதன் அசைவுகளை, அன்றாட ஆனந்தத்தை நாம் ஆயுள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். வேறு எதையும் வேட்டையாடாத, வேட்டையாடத் தெரியாத, பசிக்காக வேட்டையாட அவசியமற்ற ஒரே உயிர்ப் பிராணி அணிலாகவே இருக்கும்.
எஸ்.ஐ. சுல்தானுக்கு எங்கிருந்துதான் இத்தனை வித அணில்கள் கிடைத்ததோ? ஒரு அணில், அணில் கூட அல்ல, அணில்குஞ்சு
தென்னைமரத்திலிருந்து தலைகீழாக இறங்கி, இரண்டு ஒளிரும் செம்பருத்திப் பூக்களுக்கிடையே தன் வாழ்வின் தடம் கண்டு, வெயில் ஊடுருவிச் சிலிர்த்திருக்கும் கொய்யாச் செடிக்குத் தவ்விச் செல்லப் போகிறது. அடுத்த படத்திலும் மறுபடியும் ஒருதலை கீழ் அணில்தான். ( ‘தலைகீழ் அணில்கள்’ என்று நான் இன்னொரு கதையோ கவிதையோ கூட எழுதலாம்). இந்த இடது புறத் தலைகீழ் அணிலுக்கு எதிர்புறத்தில் ஒரு பச்சைக் கிளி. இடது புறக் கிளிக்கும் வலது அணிலுக்கும் நடுவில் கிட்டத் தட்டஅணிலும் கிளியும் கடித்த மாம்பழத்தின் காம்போர மிச்சம். ஒருகனியை முன்னிட்டு இதுவரை எந்த ஒரு பறவையும் எந்த ஒரு மிருகமும் இதுவரை ஒரு சிறு யுத்தம் கூடச் செய்திராதபடியே தான் காலம் காலமாக எல்லா மரக் கிளைநுனிகளும் காய்த்தும் கனிந்தும் தன்னைத் திறந்துவைத்திருக்கின்றன.
அந்த மூன்றாம் அணிலின் அழகுடன் விம்மும் வாழைப்பூவின் கருநீலம், வாழையிலைகளின் அடர் பச்சை எல்லாம் சேர்ந்து ஒரு உச்சமான இயற்கையின் தரிசனத்தை நமக்கு முன்னால் வைத்துவிடுகின்றன. பெற்றதாயிடம் பால் குடிப்பது போல அந்த அணில், மலர்ந்த முதல் வரிசை வாழைமடல்களில் துவர்ப்புத் தேனுறிஞ்சிக்கொண்டு இருக்கிறது. நான்காவது புகைப்பட அணில் புல்லில் உருளும் செவ்விள நீருக்குள் தலை நுழைத்துத் திளைக்கிறது.
மேகங்கள், அணில்கள் அப்புறம் என்ன நாம் தானே.
சந்திரா தங்கராஜிற்கு இன்று பிறந்த நாள். முகப் புத்தகத்தில் வாழ்த்துச் சொன்னேன். அப்போது கூட அந்தப் படங்களை எல்லாம் நான் பார்க்கவில்லை. சந்திராவும் மற்றும் மூன்று பேரும், இந்த ஓரத்தில் இருப்பவர் அவர் தங்கையாகத்தான் இருக்கலாம், இருக்கும் புகைப்படத்தை மட்டுமே பார்த்தேன். சிறு இடைவெளியின் பின் மின்னஞ்சல் திறக்கையில் இசையின் வாழ்த்துக் குறிப்பு ஒன்று மறுபடியும் சந்திரா தங்கராஜுவின் முகப்பக்கங்களுக்கு அழைத்தது. இசையின், ‘சிவாஜிகணேசனின்முத்தங்கள்’ தொகுப்பை வாசித்த பின், அவருடைய எந்த ஒரு வரியின் அழைப்பையும் புறக்கணிக்க முடிவதில்லை.
அங்கேதான் அந்தப் புகைப்படங்களை வரிசையாகப் பார்க்க முடிந்தது. அவை சந்திராவும், சந்திராவின் உடன்பிறந்தோரும் உறவினரும் தோழியருமாக இருக்கலாம். ஒரு முறை அல்லது இரண்டாம் முறை பார்க்கும் வரைதான் அவர் சந்திரா. அவர்கள் சந்திரா தங்கராஜுவுக்கு நெருக்கமானவர்கள். பெயருடன் கூடிய அந்தச் சிறு கணம், சிவசைலம் ஆற்றில் உருண்டு செல்லும் பின்னைக்காய் போல நீரின் சுழிப்பில் நகர்ந்துபோய், வெறும் நான்கு பெண்கள் மட்டும், தங்கள் விடுதலையுடன், ஆனந்தத்துடன், இந்த வாழ்வின் பெரு மலர்ச்சியுடன், வாழ்தலின் முழு உயிர்ப்புடன் நம்முடன் இருப்பது மட்டுமே அப்புறம் எஞ்சியது.
இப்படித்தானே நாம் இருக்க வேண்டும், இப்படி இருக்கத் தானே நாம் எல்லாம் வந்திருக்கிறோம். துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியும் எனில், இந்தச் சிரிப்பிலும் அழியும் அல்லவா. இது வெறும் சிரிப்பா? ஆனந்தமே அல்லவா? எதையும்ஒளித்துவைக்காமல், பொத்திவைக்காமல், எதிராளிக்கு மறைக்காமல் ஒரு காட்டு ஓடையென ஆரவாரமற்று கூழாங்கல் உருட்டிப் பிரவகிக்கும் நீர்மையின் பளிங்கும் துல்லியமும் உடைய இந்த ஊனமறு நல்லழகு எவ்வளவு மடங்குகள் அருமையானது.
எனக்கு இந்த மேகங்கள் போதும். இந்த அணில்கள் போதும், இந்த முகங்கள் போதும். இந்தப் புகைப்படங்களிலிருந்து நான் பெற்றிருக்கும்,
சேகரித்திருக்கும் வெளிச்சம் போதும். இப்போது அந்த வசிய மேகங்களை எடுத்தவர், அணில்களை எடுத்தவர், அந்த நால்வரை எடுத்தவர், என்னையும் ஒரு படம் எடுப்பார் எனில், அந்தப் புதிய படத்தில் என் முகத்தில் பரந்துவிரிந்த நீலம் இருக்கும். இடது புறக் கிளிக்கு விட்டுக் கொடுத்து நான் கடித்த ஒரு கனியின் பழுதற்ற விதையிருக்கும். எந்த ஒரு சிறு நிபந்தனைக்கும் ஆட்படாத வாழ்தலின் ஆனந்தம் இருக்கும்.
புகைப்படங்களோ, நிழற்படங்களோ?
புகை நடுவினில் தீ.
நிழல் முடிவினில் ஒளி.
அவ்வளவுதானே.
ஆயிரம் பக்கம் கொண்ட புத்தகங்கள் செய்யாத வித்தையை
ReplyDeleteபல சமயங்களில் ஒரு சிறிய புகைப்படம் செய்துவிடுகிறது
இணையம், சமூக வலை தளங்கள் குறித்து
ReplyDeleteஉங்களின் அன்பு வரிகளில் படிக்கையில்
மகிழ்வாக இருக்கிறது