Wednesday 13 June 2012

கருப்பு வெள்ளை ஆல்பம்.

 
முத்து குமாருக்கு இந்தக் கவிதை எங்கிருந்து, எப்படிக் கிடைத்ததோ
தெரியவில்லை.
 முதன்முதலில் எங்கள் வ.உ.சி.கல்லூரி ஆண்டுமலரில்
அப்புறம் தாமரை. கண்ணதாசன் இதழ்,கடிதம், இவை தவிர என்
தனிப்பட்ட எத்தனையோ கடிதங்களில், சமீபத்தில் மரபின்மைந்தன்
முத்தையாவுக்கு, இசைக்கவி ரமணனுக்கு, நான் மரபுக் கவிதை
களையும் சந்தக் கவிதைகளயும் எழுதிக்கொண்டுதான் வந்தேன்,
வருகிறேன்.
பாரதி நூற்றாண்டை ஒட்டி நிலக் கோட்டையில், வாடிப்பட்டியில்
தலைமை ஏற்ற, பங்குகொண்ட கவியரங்குக் கவிதைகளை இப்படி
யாராவது அகழ்வாராய்ந்தால், இன்னும் ஒருமுறை அதைத் தனியாக
வாசித்துக் கொள்வேன்.
பாரத ஸ்டேட் வங்கியின் சென்னைப் பெருங்கிளையில் பணிசெய்த
காலத்தில், எங்கள் வங்கி அதிகாரிகள் சங்க இலக்கிய அணியின்
சார்பில், மாதம் தோறும் நடத்திய ’கவிதைமாலை’ நிகழ்ச்சியில் நான்
வாசித்த கவிதைகளை நான் திரும்பச் சேகரிக்க முடிந்தால், அந்தத்
தொகுப்பு இன்னொரு, ‘பழைய பனையோலைகள்’ ஆக இருக்கும்.
எனக்கு இலக்கணம் முறையாகத் தெரியாதுதான்.  தெரியாத என்
போன்றோரிடமும் ஒரு சரியான இலக்கண முறை இருக்கலாம்
அல்லவா?

வே.முத்து குமார், குறுகிய இடைவெளியில், மீண்டும் எனக்கு ஒரு
நல்ல தினத்தைத் தந்திருக்கிறார். 1969ல் எடுத்ததாக இருந்தாலென்ன,
கருப்புவெள்ளைப் படமாக இருந்தாலென்ன, அதுவும் நான் தானே?
அல்லது ஒருவேளை, அதுதானே நான்?

%


கீழே முத்து குமாரின் ஆல்பத்தில் என் முகம்.

%

”அன்புமிக்க வண்ணதாசன் சாருக்கு,

            வணக்கம். நீங்கள் எழுதியிருந்த 'புகை நடுவில், நிழல் முடிவில்' இடுகையினை வாசித்துக் கொண்டே வந்தேன். ‘அணில்களின் அழகு சொல்லமுடியாத ஒன்று. ஒரு முருங்கை மர அணிலை அதன் அசைவுகளை, அன்றாட ஆனந்தத்தை நாம்  ஆயுள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.வேறு எதையும் வேட்டையாடாத, வேட்டையாடத் தெரியாத, பசிக்காக வேட்டையாட அவசியமற்ற ஒரே உயிர்ப் பிராணி அணிலாகவே இருக்கும்..’
       
     இந்த வரிகளை வாசிக்கும் போது நீங்கள் முன்பொரு முறை எழுதியிருந்த 'அடிவயிற்றுப் பசித்தோட்ட /அக்கினிப்பூங் கொடிகளிலே /அணிலாகி விளையாடும்/ ஆத்மாக்கள் எங்குளதோ' என்ற கவிதை வரிகள் ஞாபகத்துக்கு வந்தன. அடடா.. இப்படி இடையிலிருந்து சொல்லிவிட்டால் கவிதை ரசிக்குமா.. பல்லவி, அனுபல்லவியை பாடாமல் சரணத்திலிருந்து ஆரம்பித்தால் பாட்டு ரசிக்குமா .. முழுவதுமாக சொல்லி விடுகிறேன்.. இல்லை இல்லை, பாடி விடுகிறேனே ...

இந்தயுக வைகறையில்
எத்தோட் டத்தில்
இளஞ்சிவப்பு ரோஜாக்கள்
இதழ்ம லர்த்தும் ?

கரும்படகாய் விழியெங்கே
கண்ணீரில் மிதக்கிறதோ -
கன்ணீர்கள் உழுதநிலக்
கன்னங்கள் எங்குளதோ -

            அங்கே தான் ரோஜாக்கள்
            அரும்பவிழ்க்கும் பூப்பூக்கும்

நெற்றிக் கடற்கரையில்
நித்திலமாய் வேர்வையினைக்
கொட்டுகிற வாழ்வலைகள்
குமுறுமுகம் எங்குளதோ -

            அங்கே தான் ரோஜாக்கள்
            அரும்பவிழ்க்கும் பூப்பூக்கும்

எங்கெல்லாம் நெஞ்சடியில்
எரிமலைகள் துயில்கிறதோ -
ஏக்கத்தின் நீள்நிழலில்
இதயமிருந் தழுகிறதோ -

            அங்கே தான் ரோஜாக்கள்
            அரும்பவிழ்க்கும் பூப்பூக்கும்

உடற்பாறை மலைகளிலே
உழைப்பு உளிக் காவியமாய்
உருவாகும் மானிடத்தின்
உயிர்ச்சிலைகள் எங்குளதோ -

            அங்கே தான் ரோஜாக்கள்
            அரும்பவிழ்க்கும் பூப்பூக்கும்

அடிவயிற்றுப் பசித்தோட்ட
அக்கினிப்பூங் கொடிகளிலே
அணிலாகி விளையாடும்
ஆத்மாக்கள் எங்குளதோ -

            அங்கே தான் ரோஜாக்கள்
            அரும்பவிழ்க்கும் பூப்பூக்கும்

எங்கெல்லாம் மனயாழோர்
எழுச்சிமிகு ராகத்தில்
துருவத்துப் பனிக்காடு
துயரங்கள் ; நம்பிக்கை
தூரத்துச் சூரியனின்
தூதுவர்கள் என்றுதினம்
பாடி வாழ்க்கைப்
பயணத்தைத் தொடர்கிறதோ -

            அங்கே தான்
            அங்கே தான்
            இந்தயுக வைகறையில்
            இளஞ்சிவப்புப் பூப்பூக்கும்

சிவ.கல்யாணசுந்தரம் என்ற பெயரில் , 'இந்தயுக வைகறையும் , இளஞ்சிவப்பு ரோஜாவும்' என்ற தலைப்பில் ஜனித்திருந்த இந்தக் கவிதைக்கு இன்றைய தினத்தில் எத்தனை வயதிருக்கும். 42 வயதும் 8 மாதங்களும் இருக்குமா ? 'கண்ணதாசன் - தீபாவளி மலர் 1969' என்றால் என் கணக்கு சரிதானே சார்.. ?!

அன்பும் , மகிழ்ச்சியும்,

வே.முத்துக்குமார்”

2 comments:

  1. ஸார்!!:))))). லவ்லி

    ReplyDelete
  2. அற்புதம் சார்

    உங்கள் எழுத்துக்களைப் போலவே உங்கள் வாசகர்களும் தரம் உயர்ந்தவர்கள்

    ReplyDelete