பதினான்காம் நாள் நிலவு
உங்கள் கையில் இருப்பது
இதுவரை நீங்கள் உபயோகிக்காத ஆயுதம்.
என்னை வன்மத்துடன் தேடுகிறீர்கள்
உங்கள் முதல் கொலையைச் செய்ய.
உங்கள் ஆயுள் முழுவதற்குமான
ஒரே கொலையைக் கூட.
உங்களின் தவிர்க்க இயலாத தோழி
“இன்னும் நீந்தும்
இறந்த கடலாமை” கவிதையை
வாசித்துக் காட்ட அழைத்திருக்கும்
சவுக்குக் காட்டில்,
பதினான்காம் நாள் நிலவு பற்றிய
பழைய திரைப்பாடலைப்
பாடிக்கொண்டிருக்கிறேன்.
பூரித்துக் கண்மூடிச் சொல்கிறாள் உங்கள் தோழி,
‘அவனுக்கு மிகப் பிடித்த பாடல் இது’.
எவ்விய அலை பாறையில் அறைந்த ஓசை
வழிகிறது எங்கும் ஏழேழு கடல்களில்.
நீங்கள் கை நழுவவிடும் ஆயுதம்
மணலில் குத்திட்டு நிற்கும் நொடியில்
தோழியின் கவிதை வரிகளிலிருந்து
கடலை நோக்கி நகர்கிறது ஆமை
என்னை அதன்மேல் இருத்தி.
%
இடையில் நிகழ்ந்தவை
நடத்துனர் பார்வை
என்னைப் பார்ப்பது போலப்
பாராதிருந்தது.
இருந்தால் தரச் சொன்ன
இரண்டு ரூபாய் நாணயத்தை
சட்டைப் பையில் துளாவியபடி
என் விரல்கள்.
இடையில் நிகழ்ந்த இக்கட்டை
உங்களிடம் சொல்கிறேன்.
இந்த தினத்தின்
அதிகாலைக் கனவொன்றின் துணுக்கு
இப்போதுதான் நினைவில் முளைத்தது.
கனவும் நாணயமும் கலந்து கிடக்க
எதை முதலில் எடுப்பது என்ற குழப்பம்
எது முதலில் கிடைக்கும்
என்கிற சிக்கல் எனக்கு.
ஒன்றுவிட்ட அண்ணனின் சாயலை
ஒத்திருக்கும் உங்களால் இதனைப்
புரிந்துகொள்ள முடிகிறதெனில்
போதும் நண்பரே.
%
இப்படித்தான்..
ரொம்ப காலமாகவே
இப்படித்தான் இருக்கிறார்கள்
இவர்கள்.
ரொம்ப காலமாகவே
இப்படித்தான் இருக்கிறேன்
நான்.
ரொம்ப காலமாகவே
இப்படித்தான் இருக்கிறது
இந்த
ரொம்ப காலம்.
கல்யாண்ஜி
உயிர் எழுத்து - ஏப்ரல்.2012.
அருமை சார்
ReplyDeleteகனவும் நாணயமும் கலந்து கிடக்க
ReplyDeleteஎதை முதலில் எடுப்பது என்ற குழப்பம்
எது முதலில் கிடைக்கும்
என்கிற சிக்கல் எனக்கு.