Tuesday, 5 June 2012

ஆறா வடுவும் அக்காக் குருவியும்.



எண்ணலின் எண்ணாமை

மழைத் துளிகளை, வேப்பம் பூக்களை,
மண்புழுக்களை எண்ணினேன் என்றாள்.
வழுக்கோடையின் தேளிமீன் எண்ணிக்கை சொன்னாள்.
ஆலம் பழங்களையும் எண்ணிவிட்டாளாம்.
ஒரு சோளக்கொண்டையில் எத்தனை மக்காச் சோளம்
ஒரு வெள்ளரியில் எத்தனை விதைகள் என்று கூட.
நம்புவோம், ஒன்றும் நஷ்டமில்லை.
எத்தனை பேர்கள் வன்புணர்ந்தார்கள்
என்பதையும் அவள் சொல்லக் கூடும்.
பைத்தியக்காரியின் உளறலை எல்லாம்
எங்கேயாவது யாரும் பொருட்படுத்துவார்களா?


சிதறி

ஒரு மருத்துவரின் அறைவாசலில்
பச்சைத் திரைவிலக்கி
உள்ளே வரலாமா என
அனுமதிகேட்கும் நோயாளி இளம்பெண்ணின்

பார்வையுடன் இருந்தது
அறைவாசல் பூனை.
கிளிநொச்சிக்கும் வள்ளிபுனத்துக்கும்
இடையில் நகரும்
வாசிப்பின் பதற்றத்தில் இருக்கும்
என்னுடைய முகத்தை யூகிக்க
பெரும் அவகாசம் தேவைப்படவில்லை
அதற்கொன்றும்.
உச்ச வெயிலில் பரவிய
செவ்வரளி வாசனைக்கு
குருதி உறிஞ்சித் துப்பும் காட்டம்.
‘பலிக்கல் குங்குமம்என்றொரு
பதச்சேர்க்கை உச்சரிப்பு உள்ளுக்குள்.
செயற்கைக் காலூன்றி,
இறுதிப் பக்கத்திற்கு வெளிவந்து பார்க்கையில்
சிதறிக்கிடந்தது
தவிட்டுக் குருவிச் சிறகுகள்.
வெள்ளைப் பூக்களுக்கு என்ன,
எங்கும்தான் உதிருமே அவை.

 53.A. பாரதி நகர்.

இந்த இளவேனிலின்
முதல் அக்காக் குருவிக் கூவல்
நடந்து வியர்த்த என்
மார்பின் மேல் விழுந்தது.
மலையாளத்துக்காரர் வீட்டு
மஞ்சட் பூ மரம்
கேட்டுச் சிலிர்த்ததாக எண்ணிக்கொண்டேன்.
குறுக்குத் தெரு வழியாக
சிவன்கோவில் போகிற பெண்களின்
நரைவகிட்டில் விழுந்து நழுவியது
அக்காச் சத்தம்.
புத்தகப் பைகள் காய்த்துத் தொங்கும்
ஸ்கூல் ட்ரிப் ஆட்டோக்கள் சீறி நுழைந்து
அடுத்தடுத்த இரண்டு கூவல்கள் இடையே
அப்புறம் புழுதி உதறிப் போயின.
காய்கறி வாங்கி, கைபேச்சுப் பேசி,
வீடு திரும்பும் அலுவலக முகத்தில்
இது எல்லாம் விழ வாய்ப்பே இல்லை.
முதல் ஒரு கூவலுக்கு எதிர் கூவல் கூவி
மூன்றாவது ‘அக்கோவிற்கு
எதிர்க்குரல் கொடுத்து
பேத்தி முகத்தைப் பார்த்துச் சிரிக்கும்
பெரியவர் என்னையும் பார்த்துச் சிரித்தார்.
அக்காக் குருவி, பாரதி நகரின்
53.ஏ. வீட்டிலும் வசிக்குமோ?

%

கல்யாண்ஜி
உயிர் எழுத்து - மார்ச்.2012.


1 comment:

  1. அற்புதம் சார்

    முதல் கவிதை படித்ததும்
    தனு தான் ஞாபகத்திற்கு வந்தார்

    ReplyDelete