மாம்பழ வாசனையடிக்கிற என் உள்ளங்கையை யாருடைய நாசியில் சற்றுப் பொத்தலாம்? பொத்தின கையையும் பொத்தாத இன்னொரு கையையும் தோள்வழியாக முன்னிழுத்துத் தன் முதுகோடு அணைத்துக் கொள்ளப்போகிற அந்த குணசுந்தரியை இந்த ஆனிக்காற்றின் வெளியிலிருந்து உருவிட முடியுமா?
ஒரு பழமாகப் பிறந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது, ஒரு நல்ல சப்போட்டா பழத்தை அல்லது நல்ல மாம்பழத்தைத் துண்டுதுண்டாக எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும்போது, (இதை இரண்டு மூன்று தடவை சொல்லியும் விட்டேன்). இந்தபட்டணம் ஜாதி என்கிற, நீலம் என்கிற, காசாலட்டு என்கிற பழத்தில் மட்டும் காணமுடிகிற வண்டாகக் கூடப் பிறக்கலாம்.அல்லது எங்கள் புறவாசலில் பிடிவாதமாகத் தன் தாமிர இலை அசைத்து வளர்ந்துகொண்டிருக்கிற எச்சில் மாங்கொட்டையாக வேனும்.
யாரோ புசித்துவிட்டு எறிவார்கள். விழுந்த இடத்தில் பிடிவாதமாக வளர்வேன். புறக்கணிப்பின் அத்தனை தினங்களுக்கிடையிலும் கொட்டையில் சேமிக்கப்பட்டிருந்த கடைசி அணு ஜீவனும் தீர்கிறவரை, நிச்சயம் விதையிலைக்கு அப்புறமும் ஒரு மூன்றாவது இலையையும் விடுவேன். மனிதர்கள் பார்க்காவிட்டால் என்ன? ஒரு இளம் கன்றுக் குட்டியோ, ஆட்டுக்குட்டியோ பார்க்கும்வரை, என் தாமிரக் கனவுகளை இளவெயிலில் கண்டுகொண்டு இருப்பேன
எங்கள் அம்மாச்சியிடமிருந்து நான் சரஸ்வதி அம்மன் முகம் செய்யக் கற்றுக் கொண்டேன். எங்கள் அம்மாத் தாத்தாவிடம் இருந்துதான் என்னையே நான் கற்றுக்கொண்டேன். என் பெயர் முதற்கொண்டு எல்லாம் அவரிடமிருந்து பெற்றது.
மாம்பழத்தை நறுக்குவதற்குக் கூட அவரிடமிருந்தே தெரிந்தேன். தாத்தாவிடம் இரண்டு மூன்று மாம்பழக் கத்திகள் இருக்கும். குறைந்தது இரண்டாவது. காம்பை ஒட்டி ஆரம்பித்து கீழ்நுனி வரை, இழை சற்றும் அறுந்துபோகாமல், தாத்தா தோலை நறுக்கிக்கொண்டே போவார். ஒரு ஸ்ப்ரிங் போல மாம்பழத் தோல் கீழே விழும்.
தாத்தா தோல் சீவின பழத்தைத் தட்டில் வைத்துவிட்டு, இன்னொன்றை எடுப்பார். அப்புறம் இன்னுமொன்று. எத்தனை நபர்களுக்கு எத்தனை மாம்பழங்கள் சரியாக வரும் என்று அவருக்குத் தெரியும். மறுபடியும் முதலிலிருந்து மாம்பழங்களை, நீளவாட்டில் குறுக்கு வாட்டில் வகிர்ந்து துண்டுபோடுவார். அளந்து எடுத்தது போல் மாம்பழத் துண்டுகள் குவியும். எல்லாப் பழங்களையும் துண்டுபோட்ட பிறகு, நறுக்கின மாம்பழக் கத்தியாலேயே ஒவ்வொரு கூறாக வைப்பார். இது கல்யாணிக்கு, இது கணபதிக்கு என்று சொல்லச் சொல்ல, கொட்டை யாருக்கு என்பதில் எங்கள் கவனம் போய்விடும் அது ஒரு லாட்டரிப் பரிசு போல, யாருக்கு யோகம் இருக்கிறதோ அவர்களுக்குக் கிடைக்கும்.
தாத்தாவின் மாம்பழக் கத்திகள் எங்கு போயிற்றோ? தாத்தா மாதிரியே மாம்பழம் நறுக்குகிறோம். எங்கள் விரலிடுக்குகளில் தாத்தாவின் ஞாபகச் சாறு ஒழுகுகிறது. இன்றைக்கு அம்மாச்சி இருந்தால், அம்மாச்சியின் மூக்கை என் கைகளால் இப்போது பொத்துவேன். என் கைகளில், அம்மாச்சிக்கு மாம்பழ வாசம் அல்ல, தாத்தா வாசம் அடிக்கும்.
மனிதர்கள் வாசம் எவ்வளவு அருமையானது.
%
சாம்ராஜுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து
இந்த மாம்பழக் காலத்தின் முடிவில்.
எனக்கும் மாம்பழம் ரொம்பப் பிடிக்கும். மாம்பழக்காலத்தில் அம்மாவுக்கு அதுதான் சாப்பாடே. வயதாகி பர்கின்ஸன்ஸும் அல்சீமரும் அவள் நினைவைக் கொள்ளையடித்தபோது சாப்பிட வாய் திறக்கமாட்டேன் என்று அடம் பிடிப்பவள் கையில் ஒரு மாம்பழம் கொடுத்துவிட்டால் போதும். வேறு எந்த சொல்லும் மனம்புகாதவள் சாதம் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடவேண்டும் என்ற சத்தியத்துக்கு கட்டுப்படுவாள். பிறகு அந்த மாம்பழக் கொட்டையைப் பிடுங்குவது பெரும்பாடாகிவிடும். மாம்பழமஞ்சளே தெரியாதவாறு வெளிறிப் போய் இருக்கும். கை கழுவி விட்ட பிறகு குழந்தைச் சிரிப்பில் கைவாசனை பார்ப்பதும் சற்று நேரத்தில் மாம்பழம் தின்றதை மறந்து கேட்டு அடம் பிடிப்பதும் கண்முன் வந்து போகிறது.
ReplyDelete//இரண்டாவது. காம்பை ஒட்டி ஆரம்பித்து கீழ்நுனி வரை, இழை சற்றும் அறுந்துபோகாமல், தாத்தா தோலை நறுக்கிக்கொண்டே போவார். ஒரு ஸ்ப்ரிங் போல மாம்பழத் தோல் கீழே விழும்.//
ReplyDeleteஎன்னுடைய தாத்தாவும் இப்படியே மாம்பழத்தை நறுக்குவார். இழை பாதியிலையே அறுந்து போய்டாதான்னு பார்த்துகொண்டிருப்பேன். எப்படி தாத்தா உனக்கு மட்டும் இப்படி வருதுன்னு கேட்டா, எலேய் அதெல்லாம் தட்சணை கொடுத்து கத்துகிட்ட விசயம்லா அப்படித்தான் வரும்பாரு.