Saturday, 16 June 2012

நீராலானவர்கள்.

அந்த இடத்தின் பக்கத்தில் வரும்போதே நான் மெதுவாக என் நடையைத்
தளர்த்திக் கொள்வேன்.
மகளிர் கல்லூரி வளாகத்தின் சுற்றுச் சுவர்கள் முடிந்து திரும்புகிற இடத்தில் ஒரு தெரு துவங்கும். அப்படித் திரும்புகிற வளைவில் தரையோடு தரையாக, இந்தப் பக்கத்தில் வேறெங்கும் பார்க்காத அழகிய சிறுசிறு இலைகளுடன் அடர்த்தியாகப் படர்கிற ஒரு கொடி இருக்கும்.  ரோஸ் கலரில் கொத்துக் கொத்தாகப் பூக்கள். ஒரு தாவரம் எப்படி இத்தனை வெயிலுக்கும் புழுதிக்கும் இடையில் இப்படி விடாப்பிடியாகத் தன்னுடைய இருப்பைக் கொண்டாடிக் கொள்கிறது?

 உலகத்தில் என்னென்னவோ நடந்துகொண்டிருக்க, எனக்கே உரிய கிறுக்குத்தனத்துடன், அப்படியொரு படர்கொடி அங்கிருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காகவே, அந்தத் தெருவில் குடியிருக்க மாட்டோமா என்று தோன்றும். ஐம்பது வருடங்களுக்கு முன்பு,  அல்லது அதற்கும் முந்திய காலங்களில் இங்கு ஏதேனும் ஒரு ஓடை நிரம்பிப் போயிருக்க வேண்டும்.  இப்போது ஒரு சொட்டுத் தண்ணீர் அற்ற ஒரு அகலமான மடையின் அடையாளம் மட்டும்.   அந்த மடை நிரம்பிப் போகிற நீராலான காலம் ஒன்றில், இன்னும் இருக்கிற கல்வெர்ட் சுவர்களில் உட்கார்ந்து பேசிய யாராவது இரண்டு பேர்,  பழைய நினைவுகளுடன் இச்சமயம் தங்கள் கல்லறைகளில் புரண்டுபடுக்கக் கூடும்.

நேற்று அந்த இடத்தை நெருங்கும் போது, எதிர்த் திசையில் இருந்து வந்து
கொண்டிருந்த அந்தக் கார் என் பக்கம் வேகம் குறைத்தது. முன் ஜன்னல்
முகம், ‘ராயல் ஆஸ்பிடல் எங்கே இருக்கு/” என்று கேட்டது. வெளியூர்
முகம்.வெளியூர்க் குரல். வெளியூர்ப் பதற்றம்.  அவர்கள் ஏற்கனவே அந்த
மருத்துவ மனைக்கு மிக அருகில் வந்துவிட்டிருந்தார்கள். மிக அருகில் வந்திருக்கும் போது, இது போன்ற நெருக்கடி நேரங்களில், இன்னும் மிக நெடுந்தூரம் போகவேண்டியதிருக்குமோ என்ற படபடப்பு வரத்தான் செய்யும்.  நான் சொல்லிமுடிப்பதற்குள் வண்டி நகர்ந்துபோய்விட்டது.  ஒரு மருத்துவமனை நோக்கிப் போகிற எல்லாக் கால்களும்,  எல்லாச் சக்கரங்களும் இந்த அவசரம் உடையவையாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.

இன்றும் அதே இடம். எதிரே அவர் வந்துகொண்டு இருக்கிறார். கட்டம் போட்ட வெள்ளை கைலி கரண்டைக்கு மேல். மடித்துவிடாத வெள்ளை
ஜிப்பா. ஆனால் எல்லாம் கசங்கிச் சுருக்குச் சுருக்காக இருக்கிறது. தொப்பி.
வெள்ளை தாடி. எல்லாம் சரி.  மிக நீண்ட வருடங்களாக காற்றும் கடும்  புழுதியும் மட்டுமே அவர் எதிர்கொண்ட பருவங்களாக இருக்கும் என்பது
போல  அவர் காற்றாலும் புழுதியாலும் எழுதப்பட்டிருந்தார்.  ஒரு நகர
முடியாத தூரத்துப் பாய்மரம் போல, அவரைச் சுற்றி சாயுங்காலம் மினுங்கிப் பளபளத்தது.

என்னை நிற்கச் சொல்லிக் கையைக் காட்டினார். கைதான் பேசியது. இடது
புற வாகனங்கள் மகளிர் கல்லூரி நிறுத்தத்தில் நின்று புறப்பட்டு, கியர்
மாற்றி வேகம் எடுக்கும் இடத்தில் இருந்த அவரை ஒதுக்கி ஓரமாகக்
கொண்டுவர முயன்றேன். முடியவில்லை. பாதத்தைத் தூக்கி நகர்த்துவதில்
அவருக்குச் சிரமம் இருந்தது. அவருடைய செருப்பின் குதியடிகள் மிகத்
தேய்ந்திருக்கும். நரம்பியல் மருத்துவர்கள் தரைக்கும் நம் பாதங்களுக்கும்
உண்டாகும் உராய்வை வைத்தே , நோய் முதல் நாடிவிட முடியும். ஆனால் புழுதியுடன் அதிகம் சம்பந்தமுடைய,  சமீபத்தில் கால் விரல் நகங்கள் வெட்டப்படாத இந்த முதிர்ந்த பாதங்களை இன்னும் எல்லாத் தெருவோர மண்பூமியும் மிகுதியாக நேசிக்கின்றன. முக்கியமாக, இது போன்றவரின்
பாதங்களில் தெறித்திருக்கிற மூத்திரத் தெறிப்பின் உலர்ந்த புள்ளிகளை.

எந்தக் கணத்தில் யார் நமக்கு, அல்லது யாருக்கு நாம் முக்கியமானவ்ர்
ஆவோம் என்பது தெரியாது. எங்களின் பரஸ்பர முக்கியப் பொழுது அது.
அவர் இப்போது என் வலது தோளில் தனது இடது கையை வைத்திருந்தார். நான் பெரும் துக்கத்தில் இருப்பது போலவும் அவர் ஆறுதல் சொல்வது
போலவும் இருந்தது .  ஒரு ஒடிந்த சிறகு போல கனமற்று என்னுடைய
தோளில் விரல்களை அகற்றிப் பற்றிய அந்தக் கையின் நடுவிரலின் மேல்
தோல் சுருக்கத்தில் அவருடைய மொத்த வாழ்வும் சுருட்டிவைக்கப்பட்டு
இருந்ததாக இப்போது சொல்லத் தோன்றுகிறது.

காற்றைச் சொல்லாகவும் சொல்லைக் காற்றாகவும் அசைத்த அவரின்
உதட்டசைவை, “இது பாளையங்கோட்டைக்குப் போகிற பாதையா?” என
அவர் கேட்பதாகப் புரிந்துகொண்டேன்.  நான் இது பெருமாள்புரம் என்றும்
அந்த மகளிர் கல்லூரியைத் தாண்டி அவர் வந்திருப்பதாகவும் நேரே
சென்றால் அரசு ஊழியர் குடியிருப்பு வந்துவிடும் என்றும் சொன்னேன். தோளில் இருந்த கை, இப்போது  அங்கேயே மேலும் அழுந்த இறுகியது.  நான் முந்திய தினம் தான் நகங்கள் தேய்ந்த ஒரு வல்ல நாட்டுக் கழுகு பிடிமானமற்று அது அமர்ந்திருந்த பாறையில் இருந்து நழுவிச் சரசரத்துக்
கீழிறங்குவது பற்றி ஒரு கவிதையில் எழுதியிருந்தேன்.

அவர் பேசாமல் அப்படியே நின்றார். ‘உட்காருதீங்களா?’ என்றேன்.   அந்த
ஓடைப் பக்கத்துச் சுவரில்தான் உட்காரவேண்டும்.  அவரால் முடியாதுதான். ஆனால் அந்த நேரத்தின் என் அதிக பட்ச இதம் தரு சொல் அந்தக்கேள்வி
மட்டுமே. புத்தி அல்ல, மனம் கேட்கிறவை அப்படித்தான் இருக்கும்.

மூடிய கண்களைத் திறந்தார். வாய் குவித்து ஊதிக்கொண்டார். “லேசா,
கண்ணைக் கட்டீட்டுது” என்கிறார். எதிரே இருப்பவருடன் அல்லாமல், அவர் இதை வேறு யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார்.  அப்படித்தான் அது இருந்தது. என்னையே பார்த்தபடி இருந்தவர் லேசாகச் சிரித்தார்.   தோளில் இருந்த அவர் கையின் வழியாக அந்தச் சிரிப்பு என் மேல் இறங்குவதை
நான் உணரமுடிந்தது.

ஒரு நேற்றைய பூ என் தோளில் உதிர்ந்து கிடப்பது போல, அதைத் தட்டி
விடுவது போல, அவர் கனமற்ற விரல்களால் வருடினார்.  நன்றிசொல்லத் தெரிந்த விரல்கள். நான் முதலில் எங்கு போகவேண்டும் என்று கேட்டேன்.
சிரித்தார். பதில் இவ்வளவுதான். ‘ வீடு எங்கே? கொண்டுவந்து விடட்டுமா/” என்று கேட்டதற்கு, ‘பொதிகை நகர்” என்றார். ‘ உடம்புக்கு முடியாம, ஏன்
இவ்வளவு தூரம் வந்தீங்க/” என்றேன். ‘இப்போது நிறையவே சிரித்தார்/ ‘சும்மா வந்து பார்த்தேன்’  என்றார். வயது ஆக இப்படி. சும்மா வரவும், சுமமா போகவும் அடிக்கடி தோன்றும் போலும்.

மேற்கொண்டு நிற்கவில்லை. எதுவும் என்னிடம் சொல்லவில்லை. நேற்று
அவசரமாக நகர்ந்து போன வாகனம் போல, இவர் நிதானமாக நகர்ந்து செல்லத் துவங்கியிருந்தார். நம்  தோள்களில் இதுவரை இருந்த கைகள்
நம்மை விட்டு விலகுகிற நேரம் மிகவும் கனமான ஒன்று.  ‘நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை’ என்று  ராஜு முருகன் இந்த வார ‘போட்டு வாங்குவோ’மை முடித்திருந்த விவிலிய
வரிகளை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

ரோஸ் நிறப் பூக்களுடன் படர்ந்து, என் வலப் புறத் தெருவில் திரும்பித்
தரையை நிரப்பியிருந்த கொடியையே பார்த்தேன். இப்போது அந்தத் தெரு
மேலும் பிடித்திருந்தது.  இதே தெருவில்தான், அவரும் நானும் இருப்பதாக நினைத்துக் கொண்டேன்.

ஒரு மழை பெய்யும் எனில், இந்த ஓடை நிறைந்து கொப்பளித்து ஓடும் எனில், நானும் அவரும்தான் இந்தப் பக்க கல்வெர்ட் சுவரில் உட்கார்ந்து பார்ப்போம்.   நீங்கள் விரும்பினால், இதோ அந்த எதிர்ப்பக்கத்துச் சுவர்
உங்களுக்காகத்தான்.






2 comments:

  1. பெருமாள் புரமும், அஞ்சாம் நம்பர் பேருந்து நிறுத்தமும்
    எப்போதும் சுவாரஸ்யமான/ உயிர்ப்பான இடங்கள் சார்

    ReplyDelete
  2. மனுஷனை சமனப்படுத்த மனசை பதப்படுத்த ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்னு விதித்திருக்கும். சிலருக்கு கோவில், சிலருக்கு மகான்கள் தரிசனம், சிலருக்கு ஆறு, குளம், வயல். எனக்கு உங்கள் எழுத்து. :)

    ReplyDelete