Sunday 23 September 2012

கனவுப் பிரபஞ்சம்.
ஒரு ஐம்பது பக்கங்கள்தான் படித்திருபேன், விமல்குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவலை. உறங்குவதற்கு முந்திய வாசிப்பில், மைலிப் பெத்தாதான் பாறை மேல் நிற்கிற மரத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கனவில் வந்திருந்தால்  ஆச்சரியம் ஒன்றுமில்லை. அந்த மரமோ பாறையோ வரும் சாத்தியங்களும் ஒரு நரை கூடிக் கிழப் பருவம் எய்தும்
ஒருவனின் கனவில் உண்டு. ஆனால் என் கனவில் மைலிப் பெத்தாவுக்குப் பதிலாக பிரபஞ்சன் வந்திருந்தார்.

இந்தப் பெருமாள்புரம் சிதம்பரம் நகர் வீட்டுக்கு அல்லவா அவர் வரவேண்டும். அவர் வந்தது சுடலைமாடன் கோவில் தெரு வீட்டிற்கு.  வரச் சொல்லியது கூட நான் தான் என்று தோன்றுகிறது. அவருடைய விரலில் ஒரு மோதிரம் இடுவது என்று ஏற்பாடு. அப்படி ஒரு மோதிரம் போட வேண்டும் என ஆசைப்பட்டது நான் இல்லை. என்னுடைய அப்பாச்சி. அப்பாவைப் பெற்றவள் அப்பாச்சி. இதை நான் பிரபஞ்சனிடம் எல்லாம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அவர், ‘நீயும் ஆச்சு. உன் பிடுங்கி மோதிரமும் ஆச்சு’ என்று சொல்லியிருக்கவும் கூடும்.

எங்கள் தெருவாசலில் இருந்து இரண்டு கல்படிகள் ஏறினால்,ஒரு நாலுக்கு நாலு சவுக்கம். அதற்கு மேல் ஒரு சிமெண்ட் படி. அதில் இருந்து ஒரு முடுக்குப் போலத் துவங்கி நடக்க வேண்டும். குறைந்த வெளிச்சமும் குறைந்த நிழலும் உள்ள ஒரு அழகான மன நிலையை நமக்கு அது தரும். இடது பக்கம் உள்ள பொதுச் சுவர் அபாரமானது, காரை பூசப் படாதது. செங்கல் கட்டுமானம் வரி வரியாகத் தெரியும். ஒவ்வொரு செங்கலிலும் ஒரு நூறு வருடச் சரித்திரம் இருக்கும். ஐப்பசி கார்த்திகை தாண்டி, மழைக்காலத்திற்குப் பிந்தி வந்தால் அந்தச் சுவர் முழுவதும் பச்சைப் பசேல் என்று பாசி படர்ந்திருக்கும். மரகதப் பச்சை என்று எந்த இடத்தில் வாசித்தாலும் எனக்கு ஞாபகம் வருவது அந்தச் சுவரே பம்பாய் திரைப்படத்தில் அந்த ‘உயிரே, உயிரே’ பாடலில் வருகிற பாசி படர்ந்த பாறை கூட எனக்கு எங்கள் வீட்டுச் சுவரையே ஞாபகப் படுத்தியது. யாரோ ஒருவனின் வீட்டுச் சுவரை நினைவூட்டும்படி ஒரு வரியையாவது நான் எழுத வேண்டும்.

பிரபஞ்சன் ஒருவேளை அந்தச் சுவரைப் பார்ப்பதற்குக் கூடப் புறப்பட்டு வந்திருக்கலாம். அவர் செருப்புக்களைக் கழற்றுகிறார். அவர் நேர்த்தியான உடைகளையும் நேர்த்தியான காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிகிறவர் என நான் அறிந்திருக்கிறேன். ஒரு பெரியப்பாவோ, மாமாவோ ஊரிலிருந்து வந்து, நம் வீட்டுப் பக்கம் செருப்பைக் கழற்றிக் கொண்டே, ‘என்ன டே, எப்படி இருக்கே?’ என்று கேட்கிற நேரம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த நேரம்.

பிரபஞ்சன் அன்று அமைதியாக இருந்தார்.  என்னுடன் அவர் எதுவும் பேசவில்லை. அவர் தரையைப் பார்த்தபடியே வருகிறார். ஏற்கனவே இந்தத் தரைக்கும் அவருக்கும் இடையே நிகழ்ந்துகொண்டிருந்த உரையாடலை அவர் தொடர்வது போல இருந்தது. மிகுந்த தீவிரமான உரையாடலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தது பிரபஞ்சன் முகம்.

ஒரு மகராஜாவை அழைத்துவருவது போல அவரை அழைத்து வருகிறேன். ’பூப் போல ஏறுங்கள்’ என்று சொல்லவில்லையே தவிர, நான் அரை வட்டமான அந்த இரண்டு கல் படிகளைப் பற்றி பிரபஞ்சனுக்குக் கவனப்படுத்துவதைப்பார்த்தால், நான் சொல்லுகிற முறையில் அந்தப் படிகளே இரக்கப்பட்டு, பஞ்சு போல ஆகியிருக்கும் என்ற அளவுக்கு என் செய்கைகள் மரியாதையுடன் இருந்தன.

பிரபஞ்சன் வாசலில் நிற்கிறார். அவரை அப்படி வாசலில் காத்திருக்க வைத்திருப்பதை எனக்குத் தாளமுடியவில்லை. ‘ஆச்சி, ஆச்சி’ என்று சத்தம் கொடுக்கிறேன். ‘ஒஞ்சரித்த பெரிய மரக்கதவில், நடுச் சட்டத்தில் பதித்து இருந்த வெண்கலக் குமிழ்களையே பிரபஞ்சன் பார்க்கிறார். எதைப் பார்ப்பார், எதைபார்க்கமாட்டார் என்று தெரிந்தாலாவது, திட்டமாக அதற்கு ஏற்ப என் அடுத்த பேச்சிற்கான சொற்களை நான் சேகரிக்கலாம். அதற்கு வழியில்லாத பறவைப் பார்வையாக இருக்கிறது அவருடையது.

அப்பாச்சி அங்கணக் குழியை ஒட்டின இடத்தில் பெரிய மரக் கட்டிலில் படுத்திருக்கிறார். நல்ல தூக்கம் போல. இடது கையை மடித்துத் தலைக்கு வைத்துப் படுக்கிற கிராமத்துப் பழக்கம். அப்படிப் படுக்கும் போது மனிதர்கள், குறிப்பாக நமக்குப் பிடித்த மனுஷிகள் அழ்காகவே இருக்கிறார்கள். தூக்கம் கலைந்து எழுந்தாலும். அப்பாச்சி முகம் துடைத்து வைத்தது மாதிரி இருக்கிறது. பொட்டு பளிச்சென்று இருக்கிறது. ‘கொஞ்சம் அசந்துட்டேன்’ என்று சொல்லும் போது ஒரு இளஞ் சிரிப்பு வருமே, அது ஆச்சியின் முகத்தில் இருந்தது. நான் பிரபஞ்சன் வந்திருப்பதையும், அந்த மோதிர விஷயத்தையும் தணிவாகச் சொல்கிறேன்.

பிரபஞ்சன் உள்ளே வருகிறார். ஆச்சியை எல்லாம் பார்க்கவில்லை. ஒரு மர நாற்காலியும், ஒரு அகலமான மர மேஜையும் இருக்கிறது. இரண்டாம் கட்டுக் கதவுப் பக்கம் ஒருபழுப்பு நிற பிளாஸ்டிக் நாற்காலி கிடக்கிறது. அப்பாச்சியின் காலம் பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு முந்தியது. கனவுகள் எப்போதும் கால வழுவமைதி உடையவைதானே. பிரபஞ்சன் மர நாற்காலியில் உட்காருவார் என்றே எதிர்பார்த்தேன். அப்படியேசெய்தார். உறுதியான வழுவழுத்த மரங்களுக்குள் ஒரு வனத்தின் அழைப்பு எப்போதும் இருக்கிறது என அவருக்குத் தெரியாதா?

விளக்கு மாடம். குத்துவிளக்கு. அதையொட்டித் தான் மேஜை. பிரபஞ்சன் அந்த மேஜையில் இருந்த ஏதோ ஒரு புத்தகததை எடுத்துப் படிக்கத் துவங்கிவிடுகிறார். மிஞ்சி மிஞ்சிப் போனால் வழிபாட்டுக்குரிய தேவாரத் திரட்டு, திருவிளக்கு வழிபாடு என்று சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டவையாக இருந்திருக்கும். எங்களுடன் பேசுவதை விடவும் அது உத்தமம் என்று பிரபஞ்சன் தீர்மானித்திருக்க வேண்டும்.  அவர் பேசினால் தானே நான் இரண்டு வார்த்தைகள் பேச முடியும். விரலுக்கு மோதிரம் போடுகிறேன் என்று சொல்லுகிற அப்பாச்சியிடமாவது நான்கு வார்த்தைகள் பேசியிருக்கலாம். இந்த அளவுக்குக் கூட லௌகீகம் தெரியாவிட்டால் எப்படி? பிரபஞ்சனிடம் கேட்டால்,’அதெல்லாம் தெரிந்தால் நான் ஏன் இப்படி பீட்டர்ஸ் காலனி வீட்டில் உட்கார்ந்திருக்கிறேன்?’ என்று சொல்லக் கூடும்.

அப்பாச்சி இரண்டு மூன்று டப்பாக்களை என் முன் வைக்கிறார். ஒவ்வொன்றாகத் திறந்து காட்டுகிறார். எல்லாம் ‘பொட்டுப் பொடிசு’ ஆகத் துண்டு துண்டாக, ஒக்கிட வேண்டிய நிலையில் இருக்கும் பழைய நகைத் துணுக்குகள். அப்பாச்சி செய்திருந்த மோதிரத்தைக் காணோம். அடுத்தடுத்து, அப்பாச்சி, தணிந்த குரலில், ‘வரச் சொல்லீட்டு, இப்போ காணோம்னு எப்படிச் சொல்ல? எனக்கு மானமா இருக்கு’ என்கிறார்.  ‘இதைப் போட்டுவிடலாமா?’ என என்னிடம் ஒரு வெள்ளி வளையத்தைக் காட்டுகிறார். இரண்டு முனைகளிலும் குண்டுவைத்த தண்டை போல இருக்கிறது அந்த வளையம். ‘ பதறாமல் பாருங்க. எங்கியாவது இருக்கும்.’ என்று நான் சொல்ல, அப்பாச்சி உள்ளே போகிறார்.

பிரபஞ்சன் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. அவர் இந்த திரு விளக்கு வழிபாடு புத்தகத்தைப் படிப்பதற்காக மட்டுமே இங்கே வந்தது போல இருக்கிறார். மன்னன், கையில் ஒரு புத்தகத்தை எடுத்தால், அதை வாசித்து முடிக்காமல் கீழே வைக்க மாட்டார் போல.

இதுவரை ஒழுங்காக இருந்த என் புத்தி, செருப்பால் அடித்தாலும் தகும் என்கிற அளவுக்கு ‘கீழாறப் போனது’ இப்போது தான்.  பிரபஞ்சன் என்னை கவனிக்கவே இல்லை. அப்பாச்சியும் பக்கத்தில் இல்லை. நான் அந்தப் ‘பொட்டுப் பொடிசு’ மத்தியில் உருப்படியாக இருக்கிற தங்கத்தையெல்லாம் ஓரமாக எடுத்து வைக்கிறேன். அந்தக் கள்ளத்தனம் எனக்கு வந்தவுடன், இதுவரை கண்ணுக்குத் தெரியாத, அப்பாச்சி காட்டும் போது எல்லாம் டப்பாவில் இல்லாத சிறு சிறு மரச் சிராய் போன்ற தங்கத் துணுக்குகள் எல்லாம் தென்படுகின்றன. நான் பைய அதை ஒரு ஓரமாக எடுத்து எடுத்து
வைக்கிறேன். அப்படி வைக்கிற தினுசைப் பார்த்தால். நல்ல மாதிர்யாகத்
தெரியவில்லை. அப்பாச்சிக்கும் பிரபஞ்சனுக்கும் தெரியாமல் செய்வதற்கு என்னிடம் வேறு திட்டங்கள் இருப்பது தெரிந்தது.

கனவு எப்போது கலைந்தது என்று தெரியவில்லை. எனக்கு இந்தக் காலை
நேரத்தில் இரண்டு குற்ற உணர்வுகள். அப்பாச்சி போடுவதாகச் சொன்ன மோதிரத்தை பிரபஞ்சனுக்குப் போட முடியவில்லை.என்பது ஒன்று. அப்புறம் சமயம் கிடைத்தால். வெளியே தலையைக் காட்டுவதற்குத் தயாராக ஒரு கள்வாணி எனக்குள் இருக்கிறான் என்பது எனக்குத தெரிய வந்தது இன்னொன்று.

எனக்கு ஒரே ஒரு மகிழ்ச்சி. என் இன்றைய குற்ற உணர்வுகளின் பட்டியல் கனவில் இருந்து மட்டுமே துவங்கியிருக்கிறது.  அப்புறம்  அப்பாச்சி செலவிலேனும் பிரபஞ்சனுக்கு ஒரு மோதிரம் போடும் ஆசை எனக்கு இருக்கிறது.

%


1 comment:

 1. முடுக்குப் போலத் துவங்கி நடக்க வேண்டும். குறைந்த வெளிச்சமும் குறைந்த நிழலும் உள்ள ஒரு அழகான மன நிலையை நமக்கு அது தரும்.

  என் மனைவியை அழைத்துக் கொண்டு வந்த பொழுது

  இந்தச் சிறிய தெருவிற்கு உள்ளாகவா நாம் செல்ல வேண்டும் என்று தயங்கினார்.

  உள்ளே நடக்க ஆரம்பித்ததும் , குறைந்த வெளிச்சம் குறைந்த நிழலை உணர்ந்ததும்

  ஒரு கோவிலுக்குள் நுழைந்த உணர்வு வந்து விட்டது என்றார்

  ReplyDelete