இந்த வெயில் பயணத்தில்
எங்கேயாவது சின்னஞ் சிறு காற்றடித்து
நெற்றியில் அப்பிய ஈர முடி உலர்த்தி
உங்கள் முகம் குளிர்ந்தது எனில்,
அது நானாக இருக்கும்.
எங்கேயாவது
ஒரு கருப்பு நிற பட்டாம் பூச்சி
நீங்கள் பார்த்தும் பார்க்காத
சாலையோர உன்னிப் பூவில் அமர்ந்ததெனில்
அது நானாக இருக்கும்.
தாய்க் காம்பில் இருந்து உதடு விலக்கி,
பால் வாசத்துடன் ஒரு சிசு
தொலைந்து போகும் உங்கள் முகம் பார்த்து
அடையாளமற்றுச் சிரிக்கும் எனில்
அது நானாக இருக்கும்.
காய்ந்த மட்டையைத்
தென்னந்தோப்பில் இழுத்துக் கொண்டே
தன் கதையைத் தன்னிடமே ஒப்பிக்கும் ஒரு கிழவி
உங்களைப் பார்த்ததும் நின்று,
‘பார்த்துக் கொள்ள நாளாச்சு. நல்லா இருக்கியா ப்பா’
எனக் கண் இடுங்கக் கேட்டாள் எனில்,
அது நானாக இருக்கும்.
தீட்டுத் துணி சிக்கிக் கிடக்கும்
இலந்தம் புதரில் பழம் பறிக்கும்
கருத்த ’செவனி’ப் பெண்ணின் கைக் கயிற்றில்
வெயிலைத் தின்றபடி ஒரு வெள்ளாட்டுக் குட்டி
தளிர்க் குரல் எழுப்புகிறதெனில்
அது நானாக இருக்கும்.
பம்ப் செட் குழாயில் குளிக்கிறவரின்
உச்சந்தலையில் சிதறும் தண்ணீரில்,
மண்வெட்டியைச் சாட்சி வைத்து,
ஊறுகாய் வாசனையடிக்கும் உச்சிவெயில்
ஒரு வானவில் வரைந்தது எனில்
அது நானாக இருக்கும்.
சோணை டீக் கடைப் பக்கத்து,
சொர்ணமஹால் நகைக்கடை விளம்பரத்தில்
மகளின் தோள் வருடி, கண்கலங்கி
ஒரு நரைத்த மீசை அப்பா நிற்பார் எனில்
அது நானாக இருக்கும்.
சிவந்த ஆலம்பழங்களை மிதித்தபடி
மொத்த வாழ்வின் செம்புழுதியும் படிந்த
நெடுங்கால்களுடன் செல்லும் ஒரு பித்தனை
உங்கள் வாகனம் கடந்து செல்லும் எனில்,
அது நானாக இருக்கும்.
இரண்டு மக்காச் சோள வயல்களுக்கு இடையே
ரோட்டோரச் சுடுகாட்டில்
வெந்து தணிந்த சாம்பல்
வெதுவெதுத்துக் கிடந்தது எனில்,
அது என்னுடையதாகவே என்னுடையதாகவே
இருக்கும்.
சூப்பர். இதுதான் கல்யாண்ஜியின் மொத்தமும்.
ReplyDeleteஅசையாத ஆற்று நீரில்
ReplyDeleteஅசைந்தபடி நின்றிருக்கும்,
நாணல் தலைப் பூவைப்போல,
இந்த வரிகளைப் படித்துவிட்டு,
காற்றோடு
தலையசைத்துக்கொண்டிருப்பது
நானாகத்தான் இருக்கும்.
அற்புதம் சார், செல்வராஜ் சொல்வது மிகவும் சரி
ReplyDeleteயார் நீ என்று மோகன்லால் கேட்டதும்
உன்னைப் போல் ஒருவனில் கமலஹாசன் சொல்வது
விரக்தி ரகமான வரிகள் .
கல்யாண்ஜியின் வரிகள் அத்துனையும் அன்பு ரகமான வரிகள்
என்ன சொல்ல... ! பிரமிக்க வைக்கும் கவிதை ! சேகரம் செய்து கொண்டேன் உங்கள் வரிகளை. அன்றாட வாழ்க்கை எவ்வளவு தகித்தாலும் ..நிழல் தரும் விருட்சங்களென உங்கள் வரிகளிடம் ஓடி வந்து விடலாம் மீண்டுயிர் பெறுவதற்கு.. .- கோபால் மனோகர்.
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=Eh-4E5Yrcw4&feature=related
ReplyDeleteஅந்த "நான்" நானாக இருக்க கூடாதா என்று ஏங்க வைத்த கவிதை... கல்யாண்ஜி யின் முத்திரை ஒவ்வெரு வரியிலும் ... அற்புதம் ஐயா !!!
ReplyDelete