இதுவரை உயரத்தில் இருந்தவை
எப்போதுமே
எனக்கும் வீட்டுக்கும்
கோடைகாலச் சாயுங்காலங்களில்
அதிகமாகிவிடுகிறது தூரம்.
இந்தத் தெரு வழி போனால்
சற்று அருகில் வரும் அது.
புதிதில்லை இங்குள்ள
பூவரச மரங்களும் நாய்க்குரைப்பும்.
வாய் உடைந்த ஒரு தொட்டியில்
நீர்வார்த்துக்கொண்டிருக்கும் பெண்
என்னைப் பார்க்கவில்லை.
இரண்டு பசுக்களும் ஒரு கருப்புக் கன்றும்
தாகத்துடன் முகத்தைத் தணித்தன.
தலையை உயர்த்திய மூத்த பசுவின்
தாடை வழியே நீர் ஒழுகியது.
இதுவரை உயரத்தில் இருந்த வானம்
இப்போது மேகங்களுடன்
கீழிறங்கி நின்றது.
எங்கள் வீடு நகர்ந்து அதன்
நடுவில் வந்திருந்தது.
%
இன்னும் அப்படியே.
இன்று யாரும் வரவில்லை
நீங்கள் உட்பட.
நீண்ட காலத்திற்குப் பிறகு பார்த்த
மரங்கொத்தி பற்றிச் சொல்லியிருப்பேன்.
செங்குத்துத் தோற்றத்தில்
யாரோ ஒட்டவைத்துப் போன ஒன்றாக
பார்க்கமுடிகிற ஒரே பறவை அது.
உங்களுக்கு இதில் மறுப்பெதுவும் இராது.
பறவையை விட, தாவர இயலோ
விலங்கியலோ விருப்பம் உடையவரெனில்
மரப்பட்டைகள் பற்றி, புழுக்கள் குறித்து
நீங்கள் உரையாடலைத் தொடர்ந்திருக்கக்கூடும்.
வழியில்லாமல் போயிற்று அதற்கு.
யாரும் வராத,
தன்னைப் பார்த்த ஒருவர், யாருடனும்
தன்னைக் குறித்து எதுவும் சொல்லாத
ஒரு சாயுங்காலம் பற்றிக் கவலைப்படாமல்
பறந்து போய்விட்டது மரங்கொத்தி.
மற்றும் மரத்தில்
சாத்திவைக்கப்பட்ட இளம்பச்சை நிற
பள்ளிக்கூட சைக்கிள்
இன்னும் அப்படியே இருக்கிறது புத்தகப்பையுடன்
என்பதை அறியாமலும் கூட.
%
தான்மட்டும்.
எப்போதும் விளையாடுவதற்கு
இரண்டுபேராக வரும் சிறுமி,
விபத்தில் அக்கா இறந்துவிட்ட
துக்கத்தின் இடைவெளிக்குப் பின்
முதன் முறையாக வருகிறாள்
இறகுப் பந்து மைதானத்திற்கு
தான் மட்டும்.
சைக்கிள் கேரியர் கவ்வலுக்குள்
செருகிவைக்கப் பட்டிருக்கின்றன
இரண்டு மட்டைகள்
மறதியாக / ஞாபகத்துடன்
%
கல்யாண்ஜி
உயிர் எழுத்து - செப்டம்பர். 2012
விபத்தில் அக்கா இறந்துவிட்ட
ReplyDeleteதுக்கத்தின் இடைவெளிக்குப் பின்
முதன் முறையாக வருகிறாள்
அவளின் மன அழுத்தத்தை, வருத்தத்தை
அளவிடுதல் மிகவும் கடினம் சார்
கதையானாலும், கட்டுரையானாலும், கவிதையானாலும்
வாசிப்பவரின் சிந்தனையில் மாற்றங்களை
ஏற்படுத்தாமல் இருந்தது இல்லை உங்களின் வரிகள்
"இரண்டு மட்டைகள் மறதியாக /ஞாபகத்துடன்" - சகோதரி இறந்து போனதை மறந்து அவளின் ஞாபகத்துடன் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள், அருமை. - உமா ஜெயராமன்.
ReplyDelete