Sunday 16 September 2012

முகம் தெரியா அம்மாவின் முகம்பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி 15.09.2012, 16.09.2012 இரு தினங்களிலும்
சிறுகதை வாசிப்பும் படைப்பும் என்று ஒரு பயிற்சிப்பட்டறை நடத்தியது.  ‘தனுமை’ சிறுகதையை எப்படி எழுதினேன் என்பதைப் பயிலரங்கின் மத்தியில் பகிர்ந்து கொள்ளச் சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். 

இத்தனை வருடங்களுக்குப் பின் அந்தக் கதையைப் படித்துவிட்டு, அங்கே பேசுவதற்கான குறிப்புக்களை எடுத்துகொண்டபோது, கிட்டத்தட்ட ஒரு சரியான கட்டுரையின் வடிவத்தை அது எட்டியியிருந்தது.  வழக்கம் போல இதை ஓரமாக வைத்துவிட்டு, இதன் நீள அகலங்களுக்கு, பேசுகிற அந்தக்
கணத்தில் விகசிக்கும் அழகையும் ஆழத்தையும் சேர்த்து, பயிலரங்கில்
பங்குகொண்டவர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

இந்த இரவில் எழுதிவைத்த அந்தக் குறிப்பைப் படிக்கையில் இதைப் பதிவு செய்வது அப்படி ஒன்றும் தப்பில்லை என்று தோன்றுகிறது.

%

   


நான் தூத்துக்குடி  வ.உ.சி கல்லூரியில் படித்தது 64 - 67 ம் வருடம். அது எல்லாம் ஞாபகம் இருக்கிறது. ஆனால் ‘தனுமை’ கதையை எப்போது எழுதினேன் என்று திட்டமாகச் சொல்லமுடியவில்லை.  74 அல்லது 75 ஆக இருக்கலாம். அதற்கு இலக்கிய சிந்தனை ஆண்டுப் பரிசு கொடுத்தார்கள். வானதி பதிப்பகம் போடும் அந்தப் புத்தகத்தை நூலகத்தில் தேடினால், ஒருவேளை எந்த வருடம், எந்த மாத ‘தீபம்’ இதழில் அது வெளிவந்தது என்ற விபரம் கிடைக்கலாம்.

64-67ல் நிகழ்ந்ததை 74-75ல் எழுதி, 2012ல் எப்படி உருவானது என்று சொல்வது மிகவும் சிரமமானது. உலகத்திலேயே ரொம்பக் கஷ்டமானது எது தெரியுமா? கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது. எழுதுகிறவனுக்கு, அதுவும் என்னைப் போன்ற மனநிலை வாய்த்தவனுக்கு, 35/40 வருடங்கள் கழித்து , எழுதிய மேற்படி கதையின் கருமூலம் பார்ப்பது எனபது கூடுதலான துயரம் தருவது.

கதையின் கதையைச் சொல்வது, ஒரு புதிய கதையாகிவிடக் கூடுமே தவிர, பொய்யாய்ப் பழங் கதையாய் மெல்லப் போனதுவே   எனும்படியாக மட்டுமே அது  இருக்குமே தவிர,  அதே தனுமையாக இருக்காது.

ஞானப்பன் எனப்படுபவனாகியவன், யதார்த்தத்தில் இந்தக் கதையை எழுதியவனாக இருக்கும் எனக்கு விடுதியில் அறைத்தோழன்.  மொத்தம் அறையில் நான்கு பேர். ஜவஹர் முக்கூடல்காரர். ஞானப்பன் (பத்திரிக்கைக் காரர்கள் குறிப்பிடுவது போல, ‘பெயர் மாற்றப்பட்டிருக்கிறது’) வாசுதேவ நல்லூர் பக்கத்துக் கிராமக்காரர். திருச்செந்தூர் பக்கம் சிவசுப்ரமணியனுக்கு. என்னைத் தெரியும், நான் திருநெல்வேலிக்காரன்.

ஜவஹர் பி.யூ.சி.   திருவிளையாடல், சரஸ்வதி சபதம் படம் துவங்குவதற்கு முன் ஏ.பி.நாகராஜன் பேசுவாரே, அதை அப்படியே அதே குரலில் பேசுவார். சிவசுப்ரமணியன் பௌதிகம் படித்தார். சீனியர். எட்டுமுழ வேட்டியை அப்படி அழகாகக் கட்டுவார். ஒரு தட்டை மடித்து, ஒரு தட்டை கரண்டை வரை அவர்  வேட்டியைக் கடடுவது புதுவிதமாக இருக்கும். நான் யார், எப்படி என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. நான் வணிகவியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறவன். தீபத்தில் ஏற்கனவே நான்கைந்து கதைகள் வந்துவிட்டிருந்தன. அப்புறம் படிப்பு எந்த லட்சணத்தில் இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

நாலாவதுதான் ஞானப்பன். பொருளாதாரம் இளங்கலை படித்தார். ஆள் நல்ல கருப்பு. ஜோராக இருப்பார். சுருட்டை முடி. அழகான பல் வரிசை. வசீகரச் சிரிப்பு. கலகலப்பாகப் பழகுவார். சற்று உள்வாங்கியே இருக்கும் எனக்கு அவரைப் பிடித்ததில் ஆச்சரியமில்லை. விடுதி விழாக்களில் அவர் பாட்டு, வில்லுப் பாட்டு எல்லாம் இருக்கும். பாடும் போது அவருக்கு ஒரு பழக்கம்.  கிட்டத் தட்ட வானத்தைப் பார்த்துக் கொண்டு பாடுவார். குனிந்து முகத்தை நேராகப் பார்த்துப் பாடச் சொன்னால், அவரால் பாடவே முடியாது.  இவை எல்லாம் போக, வாலிபால் விளையாடுவார். போதாதா. மொத்தத்தில் எங்கள் அறையின் கதாநாயகன்.

கதாநாயகன் என்றால், கதாநாயகிகளும் காதலிகளும் இருப்பார்கள்தானே. அவருக்குக் காதல் கடிதம் ஊரிலிருந்து வரும். தனியாக, இப்போதைக்கு உள்ள கூரியர் தபால் மாதிரி, விடுதிக் காவலர் ராமையாவுக்கு நாலணா கொடுத்தால், பத்திரமாக எடுத்துவைத்து, நேரடியாக, பூப் போல நம் கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.  என்னிடம் நாலணாக்கள் கூட இருந்தன. கடிதம் எழுதி அனுப்பக் காதலிகள்தான் இல்லை.

காதலிக்கு ஞானப்பன் எழுதிய பதில் கடிதத்தை, நான் திருட்டுத் தனமாக
அவருடைய ட்ரங்குப்பெட்டியைத் திறந்து வாசித்திருக்கிறேன்.  கொஞ்சம் நெருக்கமான, தணிக்கைக்குரிய வரிகள் உள்ள கடிதம்தான் அது. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று பாரதி சொன்னது சரி. அவன் காதலினால் மானுடர்க்கு என்னென்ன எல்லாம் உண்டு என்று சொன்னானோ அவை பூராவும் கடிதத்தில் இருந்தது.

இப்படி ஊரில் ஒரு காதலி இருக்க, அல்லது ஊரெல்லாம் காதலிகள் இருக்க, ஞானப்பனுக்கு தனலட்சுமியின் மேலும் காதல் வந்தது. சொல்லப் போனால் தனலட்சுமியின் மேல் யாருக்கு வேண்டுமானாலும் காதல் வரும். எனக்கும் கொஞ்சம் வந்திருந்திருக்குமோ என்றுதான் இப்போது தோன்றுகிறது. இதற்குப் பின்னால் நிறைய சமூக, உளவியல் சார்ந்த  காரணங்கள்  இருக்கின்றன.

ஞானப்பனின் தந்தை வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிறவர்.  அந்த அவருடைய வம்ச வாடையை உடம்பில் ஏந்தியிருக்கிறவன் ஞானப்பன்.  ஞானப்பன் ஒரு இடத்தில் இருப்பதை ஞானப்பனின் வாடையே சொல்லி விடும்.  ஞானப்பனுக்குப் பிடித்த தனலட்சுமி மெலிந்து சிவந்தவள் அல்லது சிவந்து மெலிந்தவள். டெய்ஸி வாத்திச்சியை விட இவள் சின்னஞ் சிறியவள். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அளவுகளை மீறிய பாரமான உடம்புடன், பெருந்தொடை தெரிய சைக்கிள் ஓட்டிக்கொண்டு குடும்பத்தோடு சர்ச்சுக்குச் செல்லும் அந்த ஆங்கிலோ இந்தியப்பெண்ணை ஞானப்பனுக்குப் பிடிக்கவில்லை. தனலட்சுமியின் மெலிந்த சிவப்பு மட்டுமே பிடித்திருக்கிறது. அவளை மேலும் பிடித்தவள் ஆக்குகிற ஒன்று அவளுடைய சிறிய ஊனம். இது போன்ற எளிய ஊனங்கள் கருணையை மட்டும் அல்ல, காதலையும் உண்டாக்குகிறது அனேகமாக.

அந்த தனலட்சுமியையும் விட, டெய்ஸி வாத்திச்சியையும் விட, என்னை இந்தக் கதையை எழுதத் தூண்டியது அந்த ஆர்பனேஜாகத்தான் இருக்கும் என்று இப்போது படுகிறது.நான் தனலட்சுமியும் அவளுடைய சின்ன வழித்துணையான அவளுடைய தம்பியும் வரும் பாதைகளுக்கு ஞானப்பனை அனுப்பிவிட்டு, அந்த ஆர்பனேஜில் திரிந்தவனாக அந்த வருடங்களில் நான் இருந்திருக்க வேண்டும்.

துக்கமும் தனிமையும் அனாதரவும் எழுதுகிறவனைக் கூடுதலாக ஈர்க்கவும் அலைக்கழிக்கவும் செய்கின்றன. இந்தக் கதையின் நுட்பமான சாம்பல் சித்திரங்கள் அனைத்தும் ஆர்பனேஜ் சார்ந்தவையாகவே தீட்டப் பட்டு இருக்கின்றன.  பழைய தமிழ்ப்படங்களின் ஷெனாய் வாத்தியப் பின்னணி இடையறாது ஒலிக்கிற வரிகள் இந்த ஆர்பனேஜ் காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பவையே.\

நான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும், இந்தக் கதையை எழுதியதற்காக
சந்தோஷப்படுவது, தனலட்சுமியையோ ஞானப்பனையோ அல்லது டெய்ஸி வாத்திச்சியையோ எழுதியதற்கு அல்ல.  இந்த ஆர்பனேஜ் பற்றி இவ்வளவு எழுதியதற்காக மட்டுமே.  ஒரு நல்ல திரைப்படத்தின் மாண்டேஜ் காட்சிகள் போல, ஒரு அனாதை இல்லத்தை அப்படியே நான் தனுமையில் துல்லியச் சித்திரங்கள் ஆக்கியிருக்கிறேன்.

’இந்த நல் உணவை தந்த நம் இறைவனை வணங்குவோம்’ - அனாதைகளை மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடல்

அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம் பூக்களும் பாடுவது போல, வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப் போய்வருகிறவரின் புழுதிக் கால்களின் பின்னணி போல

பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவது போல

வாரத்துக்கு ஒருமுறை வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கும் பையனின் சோகம் போல

எந்த சத்துக் குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிறகான பிரார்த்தனை போல

கிணற்றடியில் உப்பு நீரை இறைத்து இறைத்து, ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களின் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல் போல

இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாக தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்துகொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக் கனவுகள் போல

இதைத் தவிர, ஒரு தகர டின்னில் வரிசையாக நிற்கிற வேப்ப மரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்கள்...   ஊடுசுவருக்கு அந்தப்புறக் கொட்டகைகளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொரிந்து கிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கஞ் செடிகளில் போய் வண்ணத்துப் பூச்சியின் முட்டையும் புழுவும் எடுக்கிற....   குப்பைக் குழிகளுக்கும் அய்யாக்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதியில் க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை...  ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாக முன்பிருந்து, இப்போது இடிந்து தகர்ந்து போன
சர்ச்சின் சுவர்களில் கருப்பாகச் சிந்தியிருக்கிற கெட்டவார்த்தைகள், வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் அப்படியொரு வரிகளில் ஒன்றில் சுவரில் அறையப்பட்டிருக்கிற டெய்ஸி வாத்திச்சி...

இப்படியாக. இப்படியாக, மீண்டும் இந்தக் கதையை வாசிக்கையில், நான் தனுமையை அல்ல, தனிமையை உணர்கிறேன். அனாதரவை உணர்கிறேன். எழுதுகிறவன் தன்னை அனாதையாக உணர்கிற சந்தர்ப்பங்கள் அவனுக்கு எப்போதுமே இருக்கின்றன.

இக்கணம் என்னை விடக் கைவிடப்பட்டவன் இந்த இரவில் வேறு யாரும் இருக்க முடியாது.


%

4 comments:

 1. அருமை சார்

  திருவள்ளுவர் கல்லூரி நிர்வாகத்திற்கும், பேராசிரியர்களுக்கும் மிகுந்த நன்றிகள்
  உங்களைச் சரியாகப் பயன் படுத்தத் தொடங்கி உள்ளனர்

  கண்டிப்பாக உங்களின் பேச்சுக்களை எழுத்துக்களை அனுபவங்களை அறியும்
  மாணவர்கள் , வரும் காளலத்தில் சக மனிதர்கள்
  மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்களாக வருவர்

  ReplyDelete
 2. சார்.. மன்னிக்க வேண்டும், சொல்வது தப்பாக இருக்குமானால்.. உங்களுடைய கதைகள், முக்கியமாக 'தனுமை' போன்றவைகள் வாசகனுடைய உள்மன அனுபவங்களோடு பேசுபவை...அந்த கதைகள் தரும்..ஞாபகமூட்டும் அனுபவங்கள் மிக நுண்மையானவை..அவை அப்படியே இருந்துப் போகட்டுமே..அவற்றின் 'நதி மூலங்கள்' ஏதோ வகையில் கதையின் 'ஆத்மாவைத்'தொட்டுப் பேசுகின்றன ...அந்தத் தொடுதல் எதனாலோ கூசுகிறது...நீங்கள் தொடுவதற்கு முழுக்க உரிமை உள்ளவர்தான். என்றாலும்...

  ReplyDelete
 3. வே.முத்துக்குமார்17 September 2012 at 17:58

  உங்களது தனுமை சிறுகதை தீபத்தில் பெப்ருவரி 1974 இல் வெளிவந்தது சார்.

  ReplyDelete
 4. கதையின் பின்னணியைப் பற்றி எழுதுவது சில சமயம் சுவாரஸ்யம் தரும் சில சமயம் மலரும் நினைவுகளாக எழும். சில சமயம் இது போல ”இக்கணம் என்னை விடக் கைவிடப்பட்டவன் இந்த இரவில் வேறு யாரும் இருக்க முடியாது” மாறும்.

  ReplyDelete