Monday 24 September 2012

வெள்ளிக் கிழமையில்...





புல்லிடை நகர்ந்துகொண்டிருக்கிறேன்
ஒரு வெல்வெட் பூச்சி என.
அடைந்துவிடுவேன் எப்படியும்
மழைக்காலக் காளான்களின் கீழ்
காத்திருக்கும் என் காதலியை.
 %





கல்வெட்டாங் குழியிலிருந்து
கடைசியாக வெளியேறுகிறது ஆமை.
சுழன்று சுழன்று விழுகிறது
கழுகின் நிழல்
மஞ்சணத்தி மர இலைகளின் மேல்.
வெண் பூ வாசம் கலைத்து.
 %

கட்டுமானம் முடிந்து
பால் காய்ச்சாத
சுண்ணாம்பு வாசச்
சுவர்களின் மத்தியில்
கலந்து கரையும் அவர்களை
தூரத்திலிருந்து காவல் காக்கிறது
வெள்ளிக்கிழமை பிற்பகல்.
 %

என்
இல்லாத முலைக்காம்பில்
விழுந்து தெறிக்கிறது
பெய்யாத மழை.
 %



சாம்பல் பூனைக்குட்டிக்கு
பித்துப் பிடித்துவிடும்போல இருக்கிறது,
மதிலுக்கு அப்புறம்
சுருள் அவிழும் வாழைக்குருத்தினுள்
பொட்டலம் கட்டப்பட்டிருக்கும்
வெயில் நிறம் பார்த்து.
 %
வெயிலின் ஐந்தருவியில்
ஆடையற்றுக் குளிக்கிறது என்
ஐம்புலன்
செண்பகப் பூக்கள் மணக்க.
 %
பார்த்தால்தான் என்ன
பாம்புக் கலவியை?
 %



என் மலைப்படுகை பூராவும்
நீயே புஷ்பித்திருக்கிறாய்.
என் சுனை நீர்
உன் மீன்களால்
சுத்தீகரிக்கப் பட்டிருக்கிறது
உன் அழகிய தீயை
என் சுள்ளிகள் கொண்டு
நெடிதாக வளர்த்தேன்.
உன் தாவரம் முழுமையையும்
என் காற்று தொட்டது.
 %



குறுக்கே பறக்கும் சிறு குருவி
நிரப்பிவிடுகிறது
என் சாலையை.
 %
நிலம் துளைக்கிறார்கள்.
நீர் வரட்டும்.
 %
வேண்டுமென்றே
மகனிடம் தோற்கும் தந்தை
அடிக்கிற பந்து
அன்பின் சிறகுகளால்
வடிவம் கொண்டிருக்கிறது.
 %

மைதானக் கால்பந்திற்கு
படபடக்கின்றன வெள்ளைப் புறாக்கள்.
உதிர் சிறகு பொறுக்குகிறாள்
உள்மனச் சிறுமி

%

1 comment:

  1. அருமை சார்
    அத்தனையும்
    இவற்றை விஞ்சும் கவிதை எழுத வேண்டுமானால்
    வண்ண நிலவன் எழுதினால் ஒரு வேளை உருவாகலாம்

    ReplyDelete