Thursday 13 September 2012

லகுவான கனமும் நகரும் ஜன்னல்களும்.







கருங்குருவி அளவுக்கு.

அது மக்காச் சோள அறுவடைக் காலம்.
வாகனங்கள் மேலேறிச் செல்ல
நீ உன் தானியங்களுடன்
சாலையில் காத்திருந்தாய்.
உன்னுடைய இடுப்பில் இருந்தது
உன்னுடைய மூன்றாவது குழந்தையாகக் கூட
இருக்கலாம்.
அதனால் என்ன?
உன்னிடம் எதையோ சொல்லிக்கொண்டு
இன்னொருவரின் சைக்கிள் பின்னால்
ஏறிப்போனவர் உன் கணவராக இருக்கலாம்.
அதனால் என்ன?
நீ அணிந்திருந்த மூக்குத்திப் பொட்டுதான்
உன்னுடைய ஒரே ஆபரணமாக இருக்கலாம்.
அதனால் என்ன?
என்னுடைய இருசக்கர வாகனம் தாண்டுகையில்
நான் பெற்றுக்கொண்ட சிரிப்பு,
எப்போதும் இதுபோன்ற அறுவடைக்காலங்களில்
நீ வழங்குகிற சிரிப்பாக இருக்கலாம்.
அதனால் என்ன?
உன்னிடம், உனக்குத் தெரியவே தெரியாத
ஒரு மறக்க முடியாத அழகு இருந்தது,
இத்தனை வருடங்களின் பின்பும்
இந்தப் பேனா முனையில்
மக்காச் சோளக் கொண்டையில் வந்தமரும்
கருங்குருவி அளவுக்கு.
அவ்வளவுதான்.


நகர்தல்.

வந்து நிற்கிறது
நான் ஏறவேண்டிய தொடர்வண்டி.
பெரும் சுமைகளுடன்
அந்தப் பெண் இறங்கிக்கொண்டிருந்தாள்.
நீலப்பையை வாங்கி வைத்தேன்.
அந்தப் பை என்னுடையதே போல
லகுவாகக் கனத்தது.
இடுப்பில் இருந்த குழந்தையை
ஏந்தி வாங்கிக்கொண்டேன்.
அந்தக் குழந்தை என்னுடையது போல
சிரித்தது, சட்டைப் பேனா உருவி.
குழந்தையைத் தோளில் இட்டு
சுருட்டை முடியை ஒதுக்கி
நன்றி சொல்லிச் சிரித்து
நகர்கிற பெண்ணும்
என்னுடையவள் போலவே ஆக்குகிறது
நடைமேடையிலிருந்து
விடைபெறத் துவங்கும் சன்னல்கள்.

%

கல்யாண்ஜி

3 comments:

  1. எப்போதும் போல் மனசை வருடும்
    இரண்டு கவிதைகள்
    அதனாலென்ன
    அடுத்த கவிதை வந்து படிக்கும்போதும்
    மனசு நிறைந்து இப்படி பின்னூட்டம் போட்டு
    நன்றி சார் சொல்வோம்
    அவ்வளவுதான்!

    ReplyDelete
  2. உணர்சிகளைக் காட்சிகள்
    வழியாகத் தான் எளிதாகப்
    பகிர முடியும், சொல்ல முடியும்
    என்னும் கூற்றுக்களைப் பொய்யாக்கும் கவிதைகள்
    இவை இரண்டும்

    நீ உன் தானியங்களுடன்
    சாலையில் காத்திருந்தாய்.

    இந்த வரிகளைப் படித்த உடனேயே மனதில் கோவில்பட்டி நெல்லை சாலை
    கண் முன்னே வருகிறதே


    வந்து நிற்கிறது
    நான் ஏறவேண்டிய தொடர்வண்டி.
    பெரும் சுமைகளுடன்

    தச்ச நல்லூர் தாண்டி இந்தியன் ஆயில் டேன்க்,
    உணவு கழக கோடொன் கண் முன்னே

    ReplyDelete
  3. உன்னிடம், உனக்குத் தெரியவே தெரியாத
    ஒரு மறக்க முடியாத அழகு இருந்தது,

    இரு கவிதையிலும்
    அப்படி ஒரு அழகு இருக்கிறது

    ReplyDelete