Saturday 10 August 2013

என்னை என் மூலமாகவே








ஆறு ஏழு வருடங்களாக இதே பாதையில் தான் நடக்கிறேன். மாற்றிகொண்டதே இல்லை. கனத்த மழையிடையே கூட ஒதுங்க இடமற்ற மைதானத்தின் வழியாகவே சென்று, கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் ஒரு தேவாலயத்திலிருந்து மழை பார்த்துக்கொண்டு நின்று, மழை சற்று ‘வெறித்ததும்’ அதே பாதையில் தான் மீண்டும் போனேன். போகிறேன். அடையாளம் தெரிகிற அளவுக்கு ஒரு செம்போத்தும் மூன்று ஆட்காட்டிக் குருவிகளும் உண்டு. பார்த்தால் சிரிக்கிற வகையில் பூமி பூஜை செய்த தினத்தில் இருந்து, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நேற்று வரை, அந்த வீட்டுக் காவலர் உண்டு. வேறு யாரையும் நானும், என்னை வேறு யாரும் கண்டுகொண்டதில்லை.

ஆனால் அவரிடம் மட்டும் எனக்குப் பேசத் தோன்றியது, எண்பது வயது அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலாகவும் இருக்கலாம். வீசி நடக்க இயலாமல், கால்களைத் தரையோடு நகர்த்தி நகர்த்தி நடப்பார். உயர்தரக் காலணிகள், அரைக்கால் சட்டை, பனிக்காலம் எனில் அதற்கான உடைகள் என்று நல்ல தோற்றத்தில் இருப்பார். வட்டக் கண்ணாடி, அடர்த்தியான நரை மீசை, முக அமைப்பு , ஒதுங்கும் சிரிப்பு எல்லாம் காந்தியை நினைவு படுத்தும். காந்தியைக் கூட அல்ல, காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லியை.

அவரை நான் தான் முதலில் வணங்க ஆரம்பித்தேன். முதலில் எந்த முகமனும் சொல்லாது, கைகளின் மரியாதையான கூப்பல் மட்டும் என் வணக்கமாக இருந்தது. அவர் அதை ஏற்றுக் கொண்டார். ஏற்கனவே அவரிடம் உண்டாகும் கிறிஸ்தவப் புன்னகை, நாளுக்கு நாள் விகாசம் அடைந்தது. நான், ‘வணக்கம் ஐயா’ என்று சொல்ல ஆரம்பித்தேன். ஒரு கையில் ஊன்றிய கம்பு, இன்னொரு கையில் உள்ள பையில் ஏதாவது உணவுப் பொட்டலங்கள். நான் நினைத்துக் கொண்டேன், படுக்கையில் இருக்கும் அவருடைய மனைவிக்கு உரியவை அவை என.

அந்தத் தெருவில் அந்தப் பெரியவர் பற்றி விசாரிக்கும் அளவுக்கு எனக்கு இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் அவர் யார், என்ன வேலை பார்த்து ஓய்வு பெற்றார், குழந்தைகள் இல்லையா, மனைவிக்கு உடல் நலக் குறைவா என்று எதையும் யாரிடமும் கேட்கத் தோன்றவில்லை. அவரை அவர்மூலமாகவே அறிந்துகொள்ள வேண்டும், அப்படி அறிந்துகொள்வதே அவரைச் சரியாக அறிவதாகும் எனத் திடமாக நம்புகிறேன்.

அவருடைய வீடு எது என்பதை சமீபத்தில்தான் தெரிந்துகொண்டேன். ஆற்றுத்தண்ணீர் குழாய் பதிக்க தெருவின் பக்கங்களில் தோண்டியிருந்தனர். அவர் வீட்டுக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டிருந்தது. செம்மண் குவியல் மேல், யாருடைய தோளிலோ ஆதரவாகச் சாய்ந்துகொண்டு, வேப்ப மரக் கிளையில் தபால் பெட்டி தொங்கும் அந்த வீட்டிற்குள் அவர் சென்றுகொண்டிருந்தார்.

அந்தத் தோள் என்னுடையதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவரைக் கை தாங்கியபடியே அவருடைய வீட்டுக்குள் பிரவேசிப்பது என்பது என் வரவைக் கூடுதலாக அர்த்தப்படுத்தியிருக்கும். உள் அறைகளில் படுக்கையில் இருக்கும் அவருடைய துணைவியாரை கூட நான் பார்த்து நலம் விசாரித்திருக்க முடியும். புறங்கைத் தோல்களிலிருந்து கழன்று நரம்புகளோடிக் கிடக்கும் தளர்ந்த கைகளை நான் பற்றியிருக்கவும் முடிந்திருக்கலாம். அந்த மனுஷி ஒருவேளை என் உச்சந்தலையில் கை வைத்து ஆசீர்வதித்திருப்பார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ,அவர் மூலமாகவே அவரைப் புரிய விரும்பிய என்னை, என் மூலமாகவே அவர் சற்றுப் புரிந்திருப்பார் இல்லையா?
4%

1 comment:

  1. அவரை அவர்மூலமாகவே அறிந்துகொள்ள வேண்டும், அப்படி அறிந்துகொள்வதே அவரைச் சரியாக அறிவதாகும் எனத் திடமாக நம்புகிறேன்.

    உண்மைதான். பிறர் மூலமான அறிமுகம் அறிந்தோ அறியாமலோ அவர்கள் கருத்தையும் சுமந்து வந்து விடுகின்றன நம்மிடம்.

    ReplyDelete