Sunday 11 August 2013

முக நக - 2

4.
வேண்டுமானால் நேற்றிரவு அவன் அவனுடைய இருபதுக்களில் நுழைந்திருக்கலாம். கிளிப்பச்சை, வெள்ளை, கருப்பு வரிகள் இட்ட டீ ஷர்ட்டும் நேர்த்தியான கால்சட்டையுமாக இருந்தான். முகத்தில் கருப்புக் கண்ணாடி. நின்ற இடம் பார்வையற்றோர் பள்ளி வெளி வாசல். அவன் கையில் மிக வீரியமாக வளர்ந்த ஒரு நாற்று. நான் ஸ்ப்லெண்டர் வாகன விரைவில் அவதானிக்க முடிந்த நேரத்தில், சகல திசைகளையும் பச்சையாக அது பார்த்தபடி, கொய்யா இலை போலத் தடித்த நரம்புகளுடன், அவன் உடம்போடு ஒட்டிச் செல்லமாக அசைந்தது. பூச் செடியாகத்தான் இருக்க வேண்டும். என்ன பூச் செடி என்று தெரியவில்லை. நிச்சயம் அவனுக்குத் தெரிந்திருக்கும். சொல்லப் போனால், அது ரோஜாச் செடியாக இருந்தால், நம்மால் ஒரு ரோஜாப் பூவை மட்டுமே அதில் பார்க்க முடியும். உலகத்தின் அத்தனை வகைப் பூக்களையும் அது அவனுக்குப் பூத்துக் காட்டும். எல்லாப் பூக்களையும் அந்த ஒரே செடியில் அவன் பார்ப்பான். நம்மைப் போல அவன் வெறும் ஒரு பூ-க்காரன் அல்ல. அது ஒரு பூ-ச் செடி அல்ல.
 
5.
மழை தூறிய பிற்பகல். மகப் பேறு மருத்துவ மனையில் அல்ல. வீட்டில் போய்ப் பார்த்தோம். கடைசல் தொட்டில் கம்பு. பழஞ்சேலையில் கட்டிய தொட்டில். குழந்தை ஒருச்சாய்ந்து தூங்கியது. தூங்கும் போதும் குழந்தைகள் அழகானவை.
ஜான்ஸன்ஸ் பேபி சோப், குடிகூரா பவுடம் எதையும் வாங்கியிருக்கவில்லை. எங்களுக்கு வேறு நடைமுறை யோசனைகள் இருந்தன. பேம்பர், ஸ்னக்கீஸ் என்று கவசங்கள் வாங்க நினைத்தோம். வரும் வழியில் இருந்த கடைகளில் கிடைக்கவில்லை.
சாக்லெட் தந்தார்கள். எடுத்துக்கொண்டோம். புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கையில் எடுத்துக் கொள்ள எனக்குப் பிடிக்கும். தர வேண்டும். தந்தால் வைத்துக் கொள்ளலாம். தொட்டில் அசைந்தது. தொட்டிலுக்குக் கீழ் ஈரம் கசிந்தது. அழுகைச் சத்தம் வந்தது. அம்மாக்காரி வந்து குனிந்து எடுத்தாள், அம்மாக்காரியுடன் அம்மா வாசமும் வந்திருந்தது.
யாரெல்லாம் உன்னைப் பார்க்க வந்திருக்கா, பாரு குட்டிஎன்று கொஞ்சினாள். புரிந்துகொண்டதுபோல் கைகளை உயர்த்தி உடலை நெளித்தது. கருவறைக்குள் இன்னும் இருக்கும் ஞாபகத்தில், கால்களை ஒரு மாதிரி, புடலம் பிஞ்சு போல உயர்த்தி மடக்கிக் கொண்டது.
இடுப்பில் எதுவும் இல்லை. எல்லாம் தெரிந்தது. எல்லாம் என்றால் எல்லாம்தான். ரொம்ப காலத்திற்குப் பிறகு ஒரு குழந்தையை குழந்தையாகவே பார்க்கிற சந்தோஷம் எனக்கு.எங்கிட்டே கொடு பிள்ளையஎன்று கைகளை நீட்டுகிறேன்.
குழந்தை வருவதற்கு முன்பே குழந்தையின் வாசம் என்னிடம் வந்துவிட்டிருந்தது.
 
6.
சபாபதி சித்தப்பா இறந்து முப்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். இதோ இவரைப் பார்த்ததும் சித்தப்பா ஞாபகம் வந்துவிட்டது. சைக்கிளின் இரண்டு ஹாண்டில் பாரையும் பிடித்து உருட்டிப் போகவில்லை. பட்டும் படாமல் இடதுபக்கக் கைப்பிடியை மட்டும் பிடித்துக் கொண்டு நடக்கிறார். சைக்கிள் தானாக உருண்டு அவருடன் போகிற மாதிரி இருக்கிறது. அந்த சாயுங்கால நெரிசல் போக்குவரத்தை முற்றிலும் அலட்சியப்படுத்தி விட்ட முகம் அவரிடம்.
பாபதி சித்தப்பா வாய்க்காலில் மாட்டைக் குளிப்பாட்டிக் கூட்டிவருவது இப்படித்தான் இருக்கும். மாட்டின் கயிற்றையோ கன்றுக்குட்டி தும்பையோ கையால் கூடத் தொடமாட்டார். மாடு, கன்றுக்குட்டியைத் தவிர, வெயிலும் அவருடன் நடந்து வருகிற மாதிரி இருக்கும். கையில் வாய்க்காலில் பறித்த இரண்டு மூன்று அல்லியைப் பூவும் தண்டுமாக வைத்திருப்பார். முதலில் யாரைப் பார்க்கிறாரோ, அவர்களுக்கு எல்லாம் ஆளுக்கு ஒன்று கிடைக்கும்.
சபாபதி சித்தப்பா எப்போதோ எனக்குக் கொடுத்த அல்லிப் பூ இன்னும் முழுத் தண்டுடன், தண்ணீர் வழுவழுப்போடு நினைவில் வாடாமல் அப்படியே தான்
இருக்கிறது. இந்த சைக்கிள்காரச் சித்தப்பாவிடம் அதைக் கொடுத்துவிட்டால் என்ன?

 %


No comments:

Post a Comment