Monday 12 August 2013

முக நக - 3


7.
எல்லோரிடமும் ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான். என்னிடமும் உண்டு. அவன் என்னை விடவும் உண்மையானவன். அதனால் உண்மையான பைத்தியங்களை எனக்கு எப்போதும் பிடித்துப் போகிறது. பவித்திரன் தீக்குன்னியின் அப்பா பைத்தியம். அம்மா வேசி. பவித்ரன் பெரும் மலையாளக் கவிஞன்.
எனக்கு திரவியச் சித்தப்பா. வேலாம்மா அத்தை இருவரும் அப்படி. இன்று பார்த்தவல் வேலம்மா அத்தையாகவே இருக்கட்டும். ஏற்கனவே அவளைப் பற்றி அங்கங்கே சொல்லியிருக்கிறேன். சூரியன் கிரணங்களுடன் அவள் மிகக் கூர்மையான வசைகளை நிறையக் காலைகளின் மேல் பரப்புவாள். நமக்கு எவை மிக மோசமான கெட்ட வார்த்தைகளோ அவை அவளுக்கு அன்றாடச் சொற்கள். சமீபத்தில் அவளுடைய சமன் மிகவும் குலைந்திருக்கிறது. இப்படி உச்சம் அடைந்து அப்புறம் அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். மலையின் அந்தப் பக்கம் இறங்கிவிடுவார்கள் போல.
இன்று காலை, அல்லது இன்று காலையும் அவளைப் பார்த்தேன். வழக்கமாக சிறுசிறு பாத்திரங்கள் பிதுங்கும் துணி மூட்டை இருக்கும். ஒரு தடவை புனித தோமையார் ஆலயம் பக்கம், அவள் ஒரு பழைய தண்ணீர் பாட்டிலைச் சரித்து வாய் கொப்பளித்துக் கொண்டு இருந்ததுண்டு. இன்று எங்கிருந்து அவளுக்குக் கிடைத்ததோ, மூடியில்லாத, உபயோகித்துத் தூக்கி எறியப்பட்ட பெரிய மிட்டாய் ஏனம் ஒன்று. இன்னொன்று அதை விடச் சற்றுச் சிறிய நீல நிற தண்ணீர் பாட்டில். இரண்டிலும் தண்ணீர் இருந்தது. அவள் ஒரு குடத்தை வைப்பது போல அந்த பெரிய பாத்திரத்தை வைத்திருக்கிறாள். கிராமத்துப் பொதுக் கிணற்றில் இருந்து அவளுடைய இருபதுக்களில் தண்ணீர் எடுத்து வரும்போது ஆலம் பழம் உண்டு பறந்த கிளிகள் சிறகடிப்பை மறந்திருக்கும். அப்படி ஒரு சாய்ந்த இடுப்பு. குடம் வைத்த கவனம். அவள் எதிரே வரும் என்னையும், யாரையும் கவனிக்கவில்லை. அந்த உள்ளடங்கிய பாதையின் இரு புறமும் வளர்ந்து தரையோடு கிடக்கும் காட்டுச் செடிகளுக்கு அங்கங்கே நின்று தண்ணீர் ஊற்றுகிறாள். எல்லாச் செடிகளுக்கும் ஊற்றவில்லை. அவளிடம் ஒரு தேர்வு இருந்தது. ஏதோ ஒரு செடியை மட்டும் இடுங்கிய கண்களால் அவள் தேர்ந்தெடுத்து நகர்கிறாள். அப்புறம் இடுப்புத் தண்ணீரை சிறு பாட்டிலில் மாற்றி, அதிலிருந்து, ஒரு வைத்தியர் இத்தனை வேளை சூரணம் என்று பத்தியம் சொல்வது போல ஊற்றுகிறாள். நகர்கிறாள். மறுபடி ஊற்றுகிறாள். நான் அவள் அப்படித் தேர்ந்தெடுத்த தாவரம் எது என அறிய விரும்பவில்லை. அத் தாவரமாக இருக்க விரும்புகிறேன். என்னால் இன்னொரு பைத்தியமாக இருக்க முடியாது. ஏன் எனில் ஏற்கனவே ஒருவனாக இருக்கிறேன்.
 
8.

உங்கள் ஊரில் ஆறு இருக்கிறதா? இருந்தால், ஆறு சற்றுப் பெரியது எனில் ஆற்றுப் பாலமும் இருக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்கள். அனேகமாக அந்த ஆற்றுப் பாலத்தின் மையத்தில், ஒரு வில்லின் வளைவில் நாணேற்றிய அம்பு நடு நின்று பாயுமே அந்த இடத்தில்,
யாராவது ஒருவர் நிற்பார்கள்.
குனிந்து பாலத்துக்குக் கீழ் ஓடும் ஆற்றைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆற்றின் மேல் தாழப் பறக்கும் ஒரு மீன்கொத்தி கூட அவரின் கவனத்தைச் சிதறடித்து
விடமுடியாது. அது ஒரு வகை தியானமற்ற தியான நிலை.
அவர் ஆற்றிடம் எதையோ சொல்லிக்கொண்டு இருப்பார். ஆறு மிகுந்த கீழ்ப்படிதலோடு கேட்டுக் கொண்டிருக்கும். அதே போல, ஆறும் எதையாவது நீர்மையுடன் அவரிடம் சொல்லி இருக்கலாம். ஒரு சொல் சிந்தாமல் அவர் அதை அருந்திக்கொண்டு இருப்பார். யார் எவரிடம் என்ன சொன்னார்கள், என்ன கேட்டார்கள் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியவே தெரியாது.
சொன்னதையும் கேட்டதையும் சொல்லாமல், சுழித்துச் சென்றுவிடும் ஆறு. கேட்டதையும் சொன்னதையும் பகிராமல் தனித்து நிற்பார் அவர்.
நேற்று சுலோச்சனா முதலியார் பாலத்தில் ஒருவர் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தார். பாலத்தின் கீழ் அதே ஆறுதான். பாலத்தின் மேல் மட்டும் அதே அவர் என்று சொல்ல முடியாது. அவர்கள் எப்போதும் வேறு வேறு அவர்களாகவே இருக்கிறார்கள்.v

3 comments:

 1. அப்படித் தேர்ந்தெடுத்த தாவரம் எது என அறிய விரும்பவில்லை. அத் தாவரமாக இருக்க விரும்புகிறேன். பாலத்தின் கீழ் அதே ஆறுதான். பாலத்தின் மேல் மட்டும் அதே அவர் என்று சொல்ல முடியாது. அவர்கள் எப்போதும் வேறு வேறு அவர்களாகவே இருக்கிறார்கள்.

  அற்புதம் சார்
  இது போதும்

  ReplyDelete
 2. அந்த வேறு வேறு அவ்ர்களுள் நானும் நீங்களும் அடக்கம். வெவ்வேறு ஆறுகள் (நிலைகள்) வாழ்வில் அந்த வெற்று பார்வையாளனாக மாறதான் முடியலை.

  ReplyDelete
 3. இன்று கூட போகன் இந்த வார்த்தையைக் குறிப்பிட்டார்... "God of Small things". நான் மாறுபடுகிறேன். "God of Invisible things" :)

  ReplyDelete