Thursday 31 January 2013

வாசிப்புக்குரியவர்கள்.


அப்படியெல்லாம் எனக்கு ஓவியம் பற்றித் தெரியாது எனக்கு. ஒரு அரூப
ஓவியக் கண்காட்சி வரிசையில், வழிதப்பி வந்து மிரண்டு நிற்கிற கிழட்டுப் பூனை போலத்தான் நான் நிற்பவனாக இருப்பேன். என்னிடம் உரத்துக் கூட அல்ல, மௌனமாக உச்சரிக்க எந்த செவ்வியல், நவீன, பின் நவீன ஓவியர்களின் பெயர்களும் இல்லை. ஆனாலும் ஓவியமும் ஓவியர்களும் சார்ந்த சிறு பூகோளம் எனக்குள் உண்டு.

பாஸ்கரனை ஓவியராக மட்டும் அல்ல மனிதனாகவும் ரவிசுப்ரமணியன்
அறிந்திருக்கலாம். கிருஷ்ணமூர்த்தியை இளையபாரதி அவருடைய ஓவியம் சாராத முகத்துடன் நெருக்கமாக உணர்ந்திருக்கலாம். மறைந்த ஆதிமூலத்தை என் அம்பாசமுத்திரம் நண்பர் நாறும் பூ நாதன் ஒரு தகப்பனை விட மேலான மனிதராக அறிந்திருக்கிறார். சந்ருவுக்கும் கோணங்கிக்குமான  உறவு ஓவிய வெளியைத் தாண்டிய  அகண்ட கலையின் பெரு வியாபகம் சார்ந்தது. நான் சக்திகணபதியை, அவருடனான மிகச் சிறிய நெருக்கத்தில், ஒரு ஓவியனாக, சுதைஞனாக,கேலிச்சித்திரக்காரனாக மட்டும் அறிந்திருக்கவில்லை. சுசீந்திரம் சன்னதித் தெருவீட்டில் அவரைப் பார்த்தபோதும், சுசீந்திரம் கோவில் மேல் விமானத்தில் நாங்கள் இருந்த சமயத்திலும் உணர்ந்த சக்திகணபதியின் குரலில் துக்கமும் கண்ணீரும் இருந்தன. தன் மகள் வயிற்றுப் பேத்தியை, தொட்டிலுக்குள் குனிந்து பார்த்து, அவர் சொன்ன சொற்களை, ஒரு புழுங்கிய வாடை அடிக்கும் பழஞ்சேலை சுருக்கங்களுக்கும் தொட்டில் கம்பின் கடைசல் வளைவுகளுக்கும் இடையே மட்டுமே சொல்லியிருக்க முடியும்.

புத்தக விழாவில் மருதுவை மீண்டும் பார்த்தேன். மருதுவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். சந்தியா பதிப்பகம் அரங்கிற்கு முந்திய அரங்கில் அவர் வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். மருதுவுக்குப் பேசவும் முடியும் அல்லது மருதுவுக்குப் பேசாமல் தீராது. அவருடைய உரையாடலில் குறுக்கிடும் அளவுக்கு என் சந்தோஷம் இருந்தது. சில பொழுதுகளில் சந்தோஷம் இப்படி நாகரீகக் குறைவுகளை அனுமதிக்கிறது.
அவர் அப்படியே தழுவிக் கொண்டார். அவர் சிரிப்பில் சமீபத்தில் அவர் இழந்திருந்த முன் கடைவாய்ப் பல்லின் இடைவெளி இருந்தது. அவருடன்  நான் கழித்த ‘திரைக்கூடம்’ பொழுதுகளை நினைவூட்டினேன். அஞ்சுகம் நகர் ஐந்தாவது தெருவாகி விட்டது அந்த ஷெல்லி வீதி. அவர் எப்போதும் சொல்லத் தயாராக இருக்கிற, அவருடைய செல்ல வட்டாரமான சந்திரபாபு, சோலை மலைத் தாத்தா பற்றி நுனியெடுத்துக் கொடுத்தேன். அதற்குள் சாம்ராஜ். பி.ஜி.சரவணன் எல்லோரும் வந்துவிட்டார்கள். ஒரு சொடக்குப் போடும் நேரத்துக்குள், அது வைகை மேல் பாலமாகவும், கோரிப்பாளையம் ஆகவும் தல்லாகுளமாகவும்  அழகர்கோவிலாகவும் மாறிவிட்டது. மருது  ராக்கியம்மன் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்.

அரஸ் என்கிற திருநாவுக்கரசையும் அங்கேதான் பார்த்தேன். இதுதான் முதல் முறை. எனக்கு அரஸ் எழுதுகிற பத்திரிகை ஓவியங்களை ரொம்பப் பிடிக்கும். வரைவதை எழுதுவது என்று சொல்வது கூட, சக்திகணபதிதான்.  அரசின் வரைகோடுகளில் தென்படும் கைவைத்த பனியன் போட்ட நடுத்தர வயது மனிதர்களை நீங்களும் நானும் எங்காவது ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். நடுத்தர வயதைக் கொண்டுவருவது சுலபமில்லை. இழுத்துக் கட்டிய தோலும் அல்லாத, சுருக்கம் விழுந்த தோலும் அல்லாத நடுத்தர வயதுப் பெண்களை அரஸ் மிகச் சரியாக வரைய முடிபவராக இருக்கிறார். அவர் வரைகிற கேலிச் சித்திர முகங்கள் கடந்த இருபதுவருட பத்திரிக்கைப் பக்கங்களில், சமீபத்திய கண்ணா தவிர்த்து, வேறு யாரிடமும் பிடிபடாதவை. அவரிடம் என் கூடப் பிறந்த அண்ணன் தம்பியிடம் பேசுவது போலப் பேசிக்கொண்டு இருந்தேன். அழகற்ற முகங்களை அழகாக வரைவது பற்றி எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். முத்தாரத்தில் குமுதத்தில் தீபம் பத்திரிக்கையில் எல்லாம் ஓவியங்கள் வரைந்திருக்கிற விமலா எனும் செல்லப்பன் வரைந்த முகங்கள் அப்படிப் பட்டவை. அருமனையிலோ, தோவாளையிலோ, சுத்தமல்லியிலோ ராமையன்பட்டியிலோ, பனைவிடலிச் சத்திரத்திலோ பார்க்கமுடிகிற மூக்கும் முழியும் உடைய முகங்கள் அவை.  இந்த என்னுடைய பேச்சு அரஸ் முகத்தில் ஒரு நெகிழ்வைக் கொண்டுவந்திருந்தது. அவருடைய முகவரி அட்டையை
சந்தோஷமாக எடுத்து நீட்டினார். என்னிடம் எப்போதுமே முகம் மட்டுமே உண்டு. முகவரி அட்டைகள் கிடையாது.

அன்றோ மறு நாளோ சந்திக்க முடிந்த இன்னொரு ஓவியர் ராஜா. சுபமங்களா நாட்களில் ராமச்சந்திரனைப் பார்க்கப் போகும்போது பார்த்ததன் பின் இப்போதுதான் பார்க்கிறேன். அதே அமைதி. அதே புன்னகை. தணிந்த குரலில் பேசுகிறவர்களுக்கே உண்டான அழகு அவரிடம். விகடனில்  லே அவுட் ஓவியர். எனக்கு பாண்டியன் ஞாபகம் வந்தது. அகம்புறம் தொடரின் கடைசிப் பகுதிக்கு லே அவுட் செய்த கையோடு அவர் பேசின குரல் ராஜாவிடம் கேட்டது. வைகறை நஞ்சப்பன் வெளியிட்ட ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்கிற என் கடிதத் தொகுப்பின் முகப்பை வரைந்தவர் ராஜாதான்..அவருடைய  கைகளையும் நான் பிடித்துக் கொண்டேன். காவேரி தீரத்துக்காரர். ஒரு நதி ஒரு ஓவியனிடம் என்னென்ன ஒப்படைத்திருக்குமோ அது அவரிடம் அப்படியே இருப்பதை அந்தக் கைகளில் உணரமுடிந்தது.

புத்தக விழாவில் வாங்கிய புத்தகங்களைச் சிலர் பட்டியல் இடுகிறார்கள். ஒரு மாறுதலுக்கு நான் இடுகிற பட்டியல் இது. மனிதர்களை, அதுவும் ஓவியர்களை புத்தகங்கள் அல்ல என்று யாராவது சொல்லமுடியுமா, என்ன?,

%

6 comments:

  1. அருமை சார் வழக்கம் போல்
    கணினி, ஓவியத்தில் ஏற்படுத்தி உள்ள தாக்கம்
    குறித்தும் முடிந்தால் பகிருங்கள்

    ReplyDelete
  2. வாசித்து விட்டு போகும் போதெல்லாம் எழுதத் தான் தெரியவில்லை . பாராட்டக் கூட தெரியவில்லை என நினைத்துக் கொள்வேன். . வார்த்தைகள் அகப்பட மாட்டேன் என்கிறது. ஆனால் சமவெளிக்குவந்து போனால் மகிழ்ச்சி தான் எப்போதும் .

    ReplyDelete
  3. Kalaignargalin pattiyal arumai sir.

    ReplyDelete
    Replies
    1. ஜி.குப்புசாமி1 February 2013 at 19:06

      கல்யாணி அண்ணன் எழுதுவது எல்லாமே பேனாவினால் அல்ல, தூரிகையால்தான் இருக்கும் என்று எப்போதுமே தோன்றும். உங்கள் ஒவியங்களில் வருகிற யார்தான் அழகில்லை? மனசின் அழகுதானே கையில் வருகிறது. எனக்கு உங்களை உடனே பார்க்கவேண்டும் போலிருக்கிறது. ‘பெய்தலும் ஓய்தலும்’ஐ எடுத்து வைத்துக்கொள்கிறேன்.

      Delete
  4. ஒரு நதி ஒரு ஓவியனிடம் என்னென்ன ஒப்படைத்திருக்குமோ
    அதை ஓவியரின் கைகளை நீங்கள் பற்றும்போது எல்லாவற்றையும்
    பெற்று விடுகிறீர்கள்!அதற்கு மேல் கூடுதலாக தந்தும் விடுகிறீர்கள்அன்பை!

    ReplyDelete
  5. மதுரைப் புத்தக திருவிழா சமயம் அமெரிக்கன் கல்லூரியில் நடந்த அந்நியமற்ற நதி 50 என்ற விழாவில் உங்கள் உரையைக் கேட்டதும் அதில் கலந்து கொண்டதற்கும் பெருமை கொள்கிறேன். அன்று எல்லோரும் சொன்ன மாதிரி உங்கள் கதைகளே அழகான சித்திரங்கள்தானே!

    ReplyDelete