Friday, 18 January 2013

மறக்க முடியாதவர்


’ ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது குணக்கிக்கிட்டே இருக்கு. ஆஸ்பத்திரி வீடுண்ணு அலஞ்சு முடியல’ என்று மடியில் ‘சுழண்டு’ படுத்திருக்கும் ஏழு எட்டு வயதுப் பெண்பிள்ளையைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே, மேலே ஒரு கையால் கம்பியைப் பிடித்தபடி,  ’என்ன செய்து?’ என்று குனிந்து கேட்கிற இன்னொருத்தரிடம்  யாராவது சொல்வதை ஹைகிரவுண்ட் போகிற எந்த டவுண் பஸ்ஸிலும் இங்கே கேட்கலாம். 'ஒண்ணும் செய்யாது.சரியாப் போகும்’ என்று ஆறுதல் சொல்கிற முகத்தை,கிறங்கின கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு,மறுபடியும் மடியில் தலையைச் சாய்க்கிற பிள்ளையை அதனுடைய அம்மாவின் கை கூடுதலாக இரண்டுதடவை தட்டிக் கொடுக்கும்.
தன்னை அறியாமல், அதனுடைய  சட்டை முதுகில் போட்டிருக்கிற ஊக்கு அழுத்துமோ என்பது போல நகர்த்திவிட்டு,’தல பின்னிவிட்டு நாலு நாளாச்சு’ என்று மகளின் தலையை வருடும்

 நானும் மடியில் படுத்திருக்கிற அந்தப் பிள்ளை மாதிரித்தான் இருக்கிறேன். பத்து நாட்களாக உடலையும் மனதையும் யாராவது அப்படித் தட்டிக் கொடுக்க மாட்டார்களா என்றுதான் இருக்கிறது. நல்ல வேளை ராமசந்திரன் அதைத் தெரிந்து கொண்டார். அவருடைய இரண்டு புத்தகங்களைக் கூரியரில்  நேற்று அனுப்பிவைத்திருக்கிறார். இரண்டும் அவருடைய கட்டுரைப் புத்தகங்கள்.  ‘பின்னகர்ந்த காலம்’  மற்றும் ’மறக்க முடியாத மனிதர்கள்’. முன்னதை நற்றிணை பதிப்பகமும் அடுத்ததை கிழக்கு பதிப்பகமும் அழகாக வெளியிட்டு இருக்கின்றன  அதிலும் நற்றிணையின் முகப்பு, அதன் பாசிக்கலர் எல்லாம் நேர்த்தி. புத்தர் குட்டிப் பையனைப் போல வலதுமுட்டின் மேல் தலையைச் சாய்த்து உட்கார்ந்திருக்கிற அவர்களின் இலச்சினையே ஒரு அழகு.

கிட்டத் தட்ட வண்ணநிலவனின் அத்தனை தொகுப்புக்களையுமே புதிதாகப் பதிப்பித்துவிட்டார்கள். ஏற்கனவே, தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை’ வந்திருந்தது. இப்போது ‘கடல்புரத்தில்’, ‘கம்பா நதி’, ‘ரெயினீஸ் ஐயர் தெரு’  தவிர புதிதாக ஒரு கட்டுரைத் தொகுப்பு ஒன்று, ’ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்’ என்ற பெயரில். சி.மோகன் தான் பதிப்பு ஆசிரியர் போல. அவருடைய கூர்மையான ரசனையை அவர் பதிப்பித்த எந்தப் புத்தகத்திலும் நாம் உணரமுடியும். ஏனைய படைப்புகள் மீதும், படைப்பாளிகள் மேலும் அவர் கொண்டிருக்கிற மரியாதையை, அவர் பதிப்பிக்கிற புத்தகத்தின்
எல்லாப் பக்கங்களிலும் அவர் வெளிப்படுத்தி விடுகிறார். அவர் விடுகிற வெள்ளைப் பக்கம் கூட, அது சார்ந்த கலைஞன் குறித்த எதையோ ஒன்றை நம்மிடம் சொல்லிவிடும். இதுவும் அதையே செய்கிறது.

‘பின்னகர்ந்த காலம்’ தொடரை அனேகமாக, மணாவின் ‘நட்பூ’ இணைய இதழில் ஏற்கனவே வாசித்துவிட்டேன். மிஞ்சினால்,ஒன்று இரண்டு விட்டுப் போயிருக்கும். அதைப் பின்னால் படித்துக்கொள்ளலாம் என்று, முதலில் மறக்க முடியாத மனிதர்களைத் துவங்கினேன். வல்லிக்கண்ணனில் ஆரம்பித்து சோ வரை மறக்கமுடியாதவர்களாக  இருக்கிறார்கள். என் பெயரும் உண்டு.

முன்பு என்றால், என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்று அதைத்தான் முதலில் திருப்பியிருப்பேன். ஆல்பத்தின் கூட்டுமுகங்களில் நம் முகத்தை முதலில் தேடிப் பார்க்கிற இயல்பான சிறுபையன் தொலைந்துபோனான். அது வருத்தத்திற்கு உரியது. சந்தோஷத்திற்கும் உரியது.  தொலி உரித்த பின், சில சமயம் தொலியும் அழகாக, பழமும் அழகாக இருந்துவிடுகிறது, என்னசெய்ய?

வல்லிக்கண்ணன் முதல் பிரபஞ்சன் என்ற பிரபஞ்ச கவி வரை வந்துவிட்டேன்.  அம்பை என்கிற சி.எஸ்.லட்சுமி அடுத்து. இதற்குள்ளாகவே மனம் துல்லியமாகி விட்டது. அது அப்படியாவது  துன்பம்தான். ராமச்சந்திரனின் மறக்கமுடியாத மனிதர்களை அறிய அறிய, ராமச்சந்திரன்தான் மேலும் மேலும் எனக்கு மறக்கமுடியாத மனிதர் ஆகிவருகிறார். அவரை நான் அடைந்தது போலவும் இருக்கிறது. இழந்துவிட்டது போலவும் இருக்கிறது.

அவர் ‘என்ன கல்யாணி? எப்படி இருக்கிய?’ என்று இப்போது வந்து நின்றால் கூட நல்லதுதான்.  அது கூட வேண்டாம், ஒரு போன் போட்டு,பேச ஆரம்பிக்கு முன் அவருக்கு ஏற்படும் கொன்னலின் சிறு குரலைக் கேட்டால் கூடப் போதும்.

நான் இப்போது ‘கண்ணு முழிக்காமல்’ கிடக்கிறேன். இப்போதைக்கு  இந்த ‘காச்சல்’ விட்டுவிடும் என்று தெரியவில்லை.

%

5 comments:

 1. எல்லாதுக்குமே குடுத்து வெச்சிருக்கணும்லா..

  ReplyDelete
 2. அருமை சார்.
  இரண்டு கட்டுரைப் புத்தகங்களும் சிறக்க வாழ்த்துகள்
  அவருக்கும் உங்களுக்கும் நன்றிகள்

  ReplyDelete
 3. நற்றிணை..சி.மோகன் மேற்பர்வையில் என்றால் கண்டிப்பாக அநத்ப் பதிப்பில் அவர் ரச்னையை நாம் உணரமுடியும்.. அவர் பணி செய்யும் பொது அருகிலிருந்து பார்த்து ரசித்துள்ளேன்..

  ///ஆல்பத்தின் கூட்டுமுகங்களில் நம் முகத்தை முதலில் தேடிப் பார்க்கிற இயல்பான சிறுபையன் தொலைந்துபோனான்./// வருத்தத்திற்கு உரியது..

  அருமையான் கட்டுரைகள் சார்..

  ReplyDelete
 4. நற்றிணை- சி.மோகன் மேற்பார்வையில் என்றால் அது ரசனையுடன் தான் இருக்கும்.. அவர் பணி செய்யும் போது உடனிருந்து பார்த்து ரசித்திருக்கேன்..

  ///நானும் மடியில் படுத்திருக்கிற அந்தப் பிள்ளை மாதிரித்தான் இருக்கிறேன். பத்து நாட்களாக உடலையும் மனதையும் யாராவது அப்படித் தட்டிக் கொடுக்க மாட்டார்களா என்றுதான் இருக்கிறது. நல்ல வேளை ராமசந்திரன் அதைத் தெரிந்து கொண்டார்.///

  உங்கள் எழுத்துகள் தான் எங்கள் மனதை தட்டிக் கொடுக்கும் மாமருந்து.. நல்ல கட்டுரை சார்..

  ReplyDelete
 5. வண்ணநிலவனின் அந்த இரண்டு கட்டுரைத் தொகுப்புகளையும் உடனே படிக்க வேண்டும் போலிருக்கிறது. பின்னகர்ந்த காலம் கொஞ்சம் நட்பூ தளத்தில் வாசித்தேன். ஆனாலும், புத்தகமாய் படிக்க வேண்டும். மறக்க முடியாத மனிதர்களும் வாசிக்க வேண்டும்.

  ReplyDelete