Tuesday 29 January 2013

பச்சைக் கனவு.







சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ’தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம்’ வாசித்துக்கொண்டு இருக்கிறேன். சிறு புத்தகம்தான். அனேகமாக
தாத்ரிகுட்டியை அறிந்துகொண்டவனாக இருக்கிறேன். மலையாளத்தில் ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் எழுதியது. நம்முடைய யூமா.வாசுகி தமிழில் தந்திருக்கிறார்.

ஆரங்கோட்டுக் கரையிலிருக்கிற கல்பகச்சேரி இல்லத்து குரியேடத்து தாத்ரியை ஸ்மார்த்த விசாரணை செய்கிறார்கள். அவள் மீது வைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக தாத்ரி ஒரு கலகம் செய்கிறாள். அதே பெண்ணுடலும் அதே பாலியலுமே அவளின் ஆயுதம். அறுபத்து நான்கு ஆண்களை அவள் குற்றவாளிகள் ஆக்கி, பெயர்களுடனும் விவரங்களுடனும்  விசாரணையில் தெரியப்படுத்துகிறாள். அறுபத்தி ஐந்தாவது நபரை அவள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. அது கொச்சி மகாராஜா அல்லது அவருடைய மிக நெருங்கிய உறவினர் என்று யூகிப்பதற்கான அடையாளமாக அவருடைய மோதிரத்தை தன் தோழியின் மூலம் காட்டுகிறாள். அந்த அறுபத்து நான்கு பேரும் சாதி நீக்கம் செய்யப்படுகிறார்கள். சமூகத்தின் மொத்த  வெறுப்புக்கும் நிந்தனைக்கும் உள்ளாகும் அவர்கள்  ஊரையும் வீட்டையும் விட்டுவெளியேற நேர்கிறது.

அப்படி வெளியேறியவர்களில் ஒருவர்தான் ‘காவுங்கல் சங்கரப் பணிக்கர். இந்த இடத்தில் இருந்து நான் குரியேடத்து தாத்ரியை விட்டு விலகி, முழுக்க முழுக்க சங்கரப் பணிக்கரின் பக்கம் போய்விட்டேன்.  குரியேடத்து தாத்ரிக் குட்டி பெரும் ரசிகை. கதகளிப் பாட்டும்,  கர்னாடக இசையும் தாத்ரி  அறிவாள்.
ஏழு  இரவுகள்  கதகளி கண்டும்  எட்டாம் இரவுக்காக அவள் காத்திருப்பவள்.
களரியும் கதகளியும் அறிந்த காவுங்கல் சங்கரப் பணிக்கர் செம்மந்தட்ட சிவன் கோவிலுக்கு கதகளி நிகழ்த்த வருகிறார். கீசகன் வேடம் அவருக்கு.

தாத்ரிக் குட்டி, சங்கரப் பணிக்கரை, கதகளி ஆட்டத்தின் கீசகவேடத்தைக்
கலைக்காமலேயே குளப்புரைக்கு அழைத்துவந்து கூடுகிறாள். ஒப்பனை அகலாமல்,அலங்காரம் அழியாமல் அப்படியொரு கூடியாட்டம். அவள் சங்கரப் பணிக்கரை மாயாவியாக்கிக் கீசகனுடன் லயிக்கிறாள். மனிதனை முற்றிலும் அருவமாக்கி, கலைஞனுடன் ஒரு அகாம உன்னதம் துய்க்கிறாள்.

ஸ்மார்த்த விசாரத்தின் சாதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் இந்த சங்கரப் பணிக்கர் மட்டுமே.பிற்பாடு தன் செயல்பாட்டுக்கு வருகிறார். மற்ற அறுபத்து மூன்றுபேரும் காணாது போய்விடுகிறார்கள். பணிக்கரை அவரது  கதகளியும் களரியும் மட்டுமா உயிர்த்தெழ வைத்திருக்கும்? எனக்கென்னவோ கீசகவேடம் கலையாமல்  குரியேடத்து குளப்புரையில் பாசிபடிந்த தண்ணீரின்  பச்சை வாசனையடிக்க, தாத்ரிகுட்டியுடன் அவர் கலந்து கரைந்திருந்த மதனோற்சவத்தின  காந்தர்வமும் அவருக்குப்  பெரும் அழைப்பாக இருந்திருக்கவேண்டும்.என்று தோன்றுகிறது.

’திரும்பா பயணம்’  என்கிற அத்தியாயத்தின் துயரார்ந்த வரிகளின் ஊடு நடமாடும்  காவுங்கல் சங்கரப் பணிக்கர் அதற்குப் பின் தொடர்ந்து நடத்துகிற ‘மறுக்கப்பட்டவனின் கலக வரலாறு,  குரியேடத்து தாத்ரிக்குட்டியின் பெண்ணுடல் கலகத்துக்கு ஒரு உணர்வு பூர்வமான நீட்சியாகவே நிலை பெறுகிறது. வேடங்கட்ட உரிமையில்லாது அலைந்த அந்த கதகளிக் கலைஞன் என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறான். கலையின் பொன் கிரீடம்  அணிந்து  நடமாடிய காவுங்கல் களரியை அவர் கடைசியாகத் திரும்பிப் பார்த்துவிட்டுப் படியிறங்கி  நகர்வது என்பது எத்தனை வதை..அந்த நள்ளிரவில் அவர் தன் குல வீட்டைப் பார்த்துப் பிரார்த்தனையில் மூழ்கி இருக்கிறார். ஒரு கூக்குரல் கேட்கிறது.

சங்கரப் பணிக்கரின் சகோதரிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை இந்த உலகத்திற்கு உரத்துச் சொல்லும் நற்செய்தியாக அது இருக்கிறது. ‘இவனுக்குக் கச்சைகட்டி ஆட்டம் சொல்லிக்கொடுக்க நான் வருவேன்’ என்று முடிவுசெய்தபடியேதான் அவர் குன்றிறங்குகிறார்.  அதே போலத் திரும்பிவரவும்  செய்கிறார்.சுதந்திரத்துடன் ஐக்கியம் கொண்ட அந்தக் கலைஞன், தன் எதிர்த்து நிற்றலுக்கான வழியாக ,மேடையையே தேர்ந்தெடுக்கிறான். அறுவடை முடிந்த நெல் வயல்களிலும் வெள்ளரி நிலங்களிலும் ஆட்டக் களம் அமைக்கிறார். தன்னுடைய தொடர்ந்த இந்த கலைக் கலகத்தின்  மூலம் அவருடைய  கதகளிக்கும்  மக்களுக்கும் ஸ்மார்த்த விசாரப் பிரஷ்டம் உண்டாக்கிய இடைவெளிகளைத் தகர்க்கிறார்.

கொச்சி ராஜாவுக்கு முன்னால் கதகளி ஆடும்  வாய்ப்பையும் அவர் தன் சக கலைஞன் வெங்கிச்சன் மூலம் சம்பாதிக்கிறார். வெங்ஙு நாட்டு அரண்மனையில் விளக்கு வைத்த நாடக சாலையின் மூலையில் அவர் பூரண ஒப்பனைமுடித்துத் தயாராக இருக்கிறார். நாடக சாலைக்குத் தீவைப்போம் என சில பழமைவாதிகள்  ஓடிவருகிறார்கள்.சங்கரப் பணிக்கரின் முகத்து ஒப்பனையையும்  பூண்டிருந்த அணிகலன்களையும் பலவந்தமாகக் கலைக்கிறார்கள்.   பாதி அழிந்து அசிங்கமான ஒப்பனையின் மீது தாரை தாரையாகக் கண்ணீர் பெருக, ‘அணிகலன்களையும் கிரீடத்தையும் பெட்டியையும் தீயில் இட்டு, தானும் அத் தீயில் மாய்ந்து போகிறேன்’ எனத் துடிக்கிறார்.

ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் எழுதிக்காட்டாத ஒரு காட்சியை நான் எழுதிக் கொண்டேன். கீசகனின் வேடம் கலைக்காமல் குரியேடத்துக் குளப்புரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பணிக்கரின் முகம், கொச்சிராஜா நாடக சாலையின் மூலையில் பலவந்தமாக ஒப்பனை கலைக்கப்பட்டு தீப்பாயத் தயாராகிற
பணிக்கரின் முகம். கலைஞனை உருவமாக்கி, மனிதனை அருவமாக்கிக் கலந்த காமினியே தாத்ரிக் குட்டி, நீ அறிவாயா உன் கூடியாட்டத்தின் களிக்கூட்டுகாரன் தன் கலைக்கப்பட்ட ஒப்பனையின் மீது வழியவிடும் இந்தக் கண்ணீரின் தாரையை?

எப்போதும் போல ,  இப்போது நான் காவுங்கல் சங்கரப் பணிக்கராக இருக்க விரும்புகிறேன். அதே சமயம் என் கண்ணீர் உலருமுன், அந்த குடியேடத்து குளப்புரையின் பாசிவாசனை தீராப் பச்சைக் கனவையும் நான் மீண்டும் காண விரும்புகிறேன்.

%


1 comment:

  1. புத்தக அறிமுகத்துக்கு நன்றி சார்.

    ReplyDelete