Monday, 14 January 2013

வராமலேநான் எதிர்பார்த்த அந்தப் பிற்பகல் இன்று வராமலே போயிற்று.

பொஙகல் தினத்தின் பிற்பகல் மற்று எந்தப் பிற்பகல்களையும்
விட அபூர்வமானது. என் நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு
முந்திய பொங்கல் மத்தியானங்களில்  வெயில் மட்டும் வாசலில்
நடமாடிக்கொண்டு இருக்கும். அடுப்புக்கட்டிக்குள் வெதுவெதுப்பாகக்
கிடக்கும் ஓலைச் சாம்பல், சிறுசிறு கருந்தகடாக காற்றில் மலரும்.
நிறை நாழிக்கு விளக்கு முன்னால் வைத்த நெல் சிந்திக் கிடப்பதை
சிட்டுக்குருவிகள் ஒவ்வொன்றாகக் கொத்தும்.அவை கொத்துவதற்காக
இறங்குவதும், கொத்திவிட்டுப் பறப்பதுமாக, உண்டாக்கும் சாய்ந்த
பறத்தல்களை, அந்தப் பறத்தல்களை தன் குதூகலமான குரல்களில்
கோர்த்துக்கொண்டு எவ்வும் கணத்தை, அவதானித்துவிட்டது போல
அந்தந்த வீட்டில் இடப்பட்ட கோலங்களும் காவிப் பட்டைகளும், அவை
வரையப்பட்டிருக்கும்  தரையிலிருந்து நான்கு விரற்கடை உயரத்தில்
விம்முவதை, நான்கு வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டுப் பட்டாசல் ஜன்னலில்
யாராவது ஒரு குஞ்சமக்கா பார்த்துக்கொண்டு நிற்பாள்.

 கோயில்வாசல் கடையில் குவித்துவைத்திருக்கிற குங்கும வாசனை ஏன் இப்போது தனக்கு ஞாபகம் வருகிறது என அவளுக்குத் தெரியாது. பொருட்காட்சி ஸ்டாலில் பாம்பு உடலும் பெண்ணின் தலையுமாக வரையப்பட்டிருந்த படத்தில், அந்தப் பெண்ணின் தலைக்கு ரெட்டைச் சடை போட்டிருந்ததும்,ரிப்பன் முடிச்சுப் போடப்பட்டிருக்கிற இடத்தில் அந்த பேனர் துணி கிழிந்து போயிருப்பதும்  எத்தனையோ வருடங்களுக்குப் பின் சம்பந்தமே இல்லாமல்இப்படியொரு பொங்கல் மத்தியானத்தில் ஏன் அவளைச் சங்கடப்படுத்த நேர்கிறது என்ற காரணத்தை யாராலும் சொல்லமுடியாது. அவளுக்கு அழுகை அழுகையாய் வருவது என்னவோ நிஜம்.

அப்படி அழுவதற்குத் தயாராகும்நேரத்தைத் துல்லியமாக அறிந்தது போல, தெருவில் இருந்து வீட்டுக்கு வரும் முடுக்குக்குள் அந்த மகுடி ஊதும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். தெரு நடையில் வளைந்து வளைந்து படியேறி  அந்த மகுடிச் சத்தம் வாசலை நோக்கிச் சரசரவென்று ஊர்ந்துவரத் துவங்கி விட்டிருக்கும். முடுக்கின் பாதி தூரத்தில் அந்த்ச் சத்தம் கேட்கக் கேட்க, இங்கே வாசலில் போட்டிருந்த புள்ளிக் கோலமெல்லாம் தன் தன் இழைகளை ஆவேசமாக  உருவிக்கொண்டு பக்கத்துக் கோலங்களுக்குள் புகுந்துவிடுவது போல நெளிய ஆரம்பிக்கும். இது வரை பொங்கலிட்ட வாசலாகக் கிடந்த இடம், சட்டென்று இப்போது ஒரு சர்ப்பக்காவு ஆகிவிட்டது போல, வாசம் அடிக்கும். தடயமே இல்லாமல்  ஒரு மெல்லிய தகடு போலப் படர்ந்திருந்த வெயில், எட்டயாபுரம் ராஜா தோட்டத்து நாகலிங்கப் பூக்களைப் போல உதிர ஆரம்பிக்கும்.

இப்படி அதனதன் இடத்திற்கு எல்லாக் காய்களையும் நகர்த்தி முடித்துவிட்டதை அறிந்தது போல,மகுடியூதும் வாயும், ஊதி முடித்த மறுநொடியில் பாம்பு சீறுவது போன்ற குரலுமாகப் பிடாரன் தன்னுடைய பிரவேசத்தை நிகழ்த்துவான். ஒரு சொல் கூட பசிக்கிறது என்றோ, சோறு போடுங்க என்றோ அவன் உச்சரிப்பதே இல்லை. மகுடியின் துளைகளில் அமிழ்ந்து அமிழ்ந்து உயரும் விரல்களின்(அந்த விரல்களில் ஒன்றில் ஒரு ஈய வளையம்) ,  நர்த்தனம்  புற்றின் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். எந்த அவசியமும் இன்றி, ஒரு சிரிப்புடன், கருங்கம்பளி வழியும் தன் இடதுதோள் பக்கம் திரும்பி, அவன் பேசும் மொழி மகுடித்தனம் உடையது. ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் பிரப்பங் கூடைக்குள் இருந்து அவனுடைய பேச்சுக்கு வரும் படமெடுத்த பதில்களைக் கேட்டுவிட்டு,  சாந்தப்படுத்துவது போல, வேறு விதமாக இப்போது அவன் மகுடியை இசைப்பது போல இருக்கும்.

குஞ்சமக்கா ஜன்னலை விட்டு விலகி, அழிக்கதவைத் திறந்து வெளியே வந்து,
‘நல்ல பாம்பு வச்சிருக்கியா?’ என்று கேட்பாள். இதற்குப் பதில் சொல்லும் முன்பு பிடாரன் மகுடிஊதுகிற விதம் என்னவோ போல இருக்கும்.  நிறுத்தவே இயலாத படி அகப்பட்டிருக்கும்  சிக்கலை அவன் எப்போது தாண்டுவான் என்பதை அந்தப் பிற்பகலால் சொல்லவே முடியாது.

இன்றைக்கு வரும்  என எதிர்பார்த்தது அப்படியொரு பிற்பகலையே.
வராமல் போனது பிற்பகல் மட்டுமா?  பிடாரனிடம் அப்படிக் கேட்கிற குஞ்சமக்காக்களும் தான்.

%


3 comments:

 1. பிடாரர்களும் குஞ்சம்மாக்களும் இல்லாத நம் தெருக்கள் வெயில் மட்டுமே சர்ப்பம் போல் ஊர்ந்து திரிகிறது ... அற்புதமான பதிவு ஐயா ...

  ReplyDelete
 2. " வீட்டுக்கு வரும் முடுக்குக்குள் அந்த மகுடி ஊதும் சத்தம் கேட்க ஆரம்பிக்கும். தெரு நடையில் வளைந்து வளைந்து படியேறி அந்த மகுடிச் சத்தம் வாசலை "

  முடுக்குகளும் வளவுகளும் கண் முன்னே வந்து விட்டன ,
  இந்த மகிழ்ச்சி , உணர்வு, தருணம் இன்று போதும்,

  மீதியை நாளைக்கு வாசிக்கிறேன், மகிழ்வோடு சேமித்து வைத்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 3. பொங்கல் அன்று முற்பகல், பிற்பகல் எல்லாவற்றையும் இந்த தொலைக்காட்சி வந்து பறித்துவிட்டது. யாசகம் கேட்டு இப்போது யாரும் வருவதும் இல்லை.

  ReplyDelete