Tuesday 17 September 2013

வேம்பு, அவர், நான்.


நான் போகும்போது அவர் வீட்டு முன் வாசலில் இருந்த செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சியபடி இருந்தார். பெரிய முன் வாசல். பந்தல் போட்டால், அந்தக் காலம் போல வீட்டிலேயே மணமேடை போட்டுத் தாலிகட்டச் சொல்லிவிடலாம். அவ்வளவு பெரியது.

என்னை விட இரண்டு வயதாவது இளையவர். ‘வாங்க அண்ணாச்சி’ என்று சிரித்தார். இயல்பாகவே அவர் எதைச் சொல்வதற்கு முன்னாலும் பின்னாலும் சிரிக்கும் வகை. இந்தச் சிரிப்பில் அவர் கையிலிருந்த ரப்பர் குழாய்வழியாகப் பாய்ச்சிக்கொண்டிருந்த தண்ணீர்க் குளிர்ச்சியும் இருந்தது.

நிலத்தில் நீரோட்டம் பார்க்கிறவர்கள் ஒரு இடத்தில் டக்கென்று
அசையாமல் நிற்பது போல, அவரை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நான் ஒரு இடத்தில் நின்றேன். மூச்சை இழுத்தேன். ‘ நல்லா இருக்கே. என்ன பூ வாசனை இது ?’ என்றேன். அவர் ஒரு நிமிடம் நான் நிற்கிற இடத்தைப் பார்த்தார். மறுபடி தண்ணீர்ச் சிதறலுக்குள் குனிந்தபடி, ‘பவழ மல்லி அண்ணாச்சி. புற வாசல்’ல நிக்கில்லா’ என்றார். நான் குனிந்து குனிந்து வாசனையைப் பொறுக்க ஆரம்பித்திருந்தேன்.

‘என்ன வேப்பமரத்தைக் குளிப்பாட்டி ஆகுது, காலங் கார்த்தால?’ என்றேன். அவர் தனக்கு முன்னால் இருந்த வேப்ப மரத்தின் இடுப்பை, ஈரத்தை உடுத்துவது போல, சுற்றிப் பாவாடைக்கட்டாக, நனைத்துக்கொண்டு நின்றார். எனக்குப் பதில் சொல்லவில்லை. நான் பக்கத்தில் போனதும், ‘ஆமா
அண்ணாச்சி. நிர்மால்ய பூசை’ என்றார். முகம் வேறு மாதிரி இருந்தது. இறுக்கமும் இல்லை. இளகவும் இல்லை.

அவர் சொல்ல ஆரம்பித்தார். ‘அண்ணாச்சி, இந்த வீட்டுக்குள்ள சுடலைமாட சாமி பூடம் இருக்கு. வாசல் மாடாக்குழியில புள்ளையார் இருக்கது உங்களுக்கே தெரியும். அது அது பாட்டில அது இருந்துட்டுப் போட்டும். யாரு எதைக் கும்பிடணுமோ அதை அவங்க கும்பிட்டுக்கிடட்டும். அது அவங்க பாடு. நமக்கு இதுதான்’ என்று பட்டை வெடித்துக் கிளம்பியிருந்த வேப்ப மரத்தை விரல்களால் வருடினார்.

அது எத்தனை காலமாக நிற்கிறது என்று அவருக்குத் தெரியாதாம். இந்த மனை வாங்கும் போதே இங்கே நின்றதாம். சொல்லப் போனால் இதைப் பார்த்ததும் தான் இங்கே வீடு கட்டவேண்டும் என்றே அவருக்குத் தோன்றியதாம். வீடு நிறைய ஆள் இருக்கிற மாதிரி வெளியாட்களுக்குத் தெரியுமாம். ஆனால் ஒவ்வொருத்தருக்கும் யாருமே இல்லாதது போல, தனியாகத்தான் மனுஷாட்கள் எல்லாரும் இருக்கிறோமாம்.. இதைச் சொல்லும் போது, ‘உங்களுக்குக் கூட யாருமே இல்லாத மாதிரிச் சிலசமயம் தோணி இருக்குமே’ என்று கேட்டார். ‘வியாபாரம், காரு,வண்டி, ஆளு அம்பு கல்யாணம் காட்சி எல்லாம் சரிதான். ஆனால் நிண்ணு என்னான்னு கேட்க உருத்தான ஆள் கிடையாது.’ என்று கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். ‘அப்படியே இருந்தாலும். நம்ம பாரத்தை அவன் தோளில இறக்கிவைக்கிறதுக்குள்ள, அவம் பாரம் நம்ம தலையில ஏறியிருக்கும். அது உள்ளது தானே’ என்றார்.

’ ஆதியோடு அந்தமா நான் எல்லாத்தையும் இதுகிட்டேதான் சொல்லுதேன். நல்லது கெட்டது எல்லாத்தியும் டைரி எழுதுத மாதுரி, எம் பேரன் பேத்தி ஹோம் ஒர்க் செய்ய்த மாதிரி, அது கிட்டேதான் சொல்லுதேன். சில சமயம் தடவிக் குடுப்பேன்,சில சமயம் தொட்டு முத்திக்கிடுவேன். ஏதாவது வெளியில வீட்டில தப்புப் பண்ணிட்ட மாதிரி இருந்தால் கையைக்கட்டிக்கிட்டு நிப்பேன். ரெண்டு மூணு தடவை முட்டி முட்டி அழக்கூடச் செய்திருக்கேன். எல்லாத்தையும் அது கேட்டுக்கிடும். சில சமயம் வருத்தப்படாத. சரியாப் போகும்’னு சொல்லும். சில சமயம் ‘அட, பைத்தியாரா’ண்ணு லேசா சிரிக்கும். தெக்க போகாத, வடக்கே போ’ண்ணு கையைக் காட்டும். என்ன அவன் கூட ரொம்ப ஒட்டுதே. புண்ணாகிச் சலம் வச்சிரப் போகுது. பாத்துக்க’ண்ணு எச்சரிக்கை பண்ணும். இது எல்லாம் எண்ணிப் பத்தே நிமிஷத்தில முடிஞ்சிரும். எங்களுக்குள்ளே இப்படி ஒண்ணு இருக்குண்ணு காக்கா குருவிக்குக் கூடத் தெரியாது . ஆனா இருக்கு அண்ணாச்சி’ என்று அவர் சிரித்தார்.
கையில் இருக்கிற குழாய்த் தண்ணீரில் தூர் முழுவதும் நனைந்த அந்த மரத்தையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

எனக்கு அந்த மரத்தைத் தொடவேண்டும் போல இருந்தது. தொடவில்லை. அவருடைய கையைத் தொட்டேன். கையில் இருந்த ரப்பர் குழாயை வாங்கினேன்.தண்ணீரைப் பாய்ச்ச ஆரம்பித்திருந்தேன்.

வேப்ப மரத்தின் கீழே தானாக் விழுந்து முளைத்திருந்த ஒரு
சின்னஞ்சிறு வேப்பங்கன்று தன் தாமிர இலைகளுடன் நனைந்து. திரும்பத் திரும்ப என்னைப்பார்த்துப் பேசுவதாக அசைந்துகொண்டு இருந்தது.

என்ன சொல்கிறது என்று இனிமேல்தான் புரியும் போல
15Like ·  · Promote · 
  • வ்

1 comment:

  1. வீட்டின் முன் உள்ள வேப்பமரத்திடம் பேசாமல் போய்விட்டோமே என்று இப்போது வருத்தமாய் இருக்கிறது.

    ReplyDelete