Friday 6 September 2013

மழையை வணங்குகிறேன்.

’மழைக்குத்தான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன். அப்போதும் கூட மழையையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்ற கி.ராஜநாராயணன் வரிகள் ஞாபகம் இருக்கும்.
நேற்று மழைக்குப் பள்ளிக்கூடத்தின் ஒதுங்கினேன். ஒதுங்கினோம் என்பது சரி. சிவசு சார், கிருஷி ஆகியோருடன் நானும் அந்த ஒதுங்கியவர் பட்டியலில். முருகபூபதியின் ‘குகைமரவாசிகள்’ நிகழ்ச்சி ம. தி.தா. உயர்நிலைப்பள்ளி மைதான வளாகத்தில். அப்படிச் சொன்னால் புரியாது போகலாம். ஒழுங்காக, ’எம்.டி.ட்டி ஹைஸ்கூல் க்ரவுண்டில்’ என்று சரியாகச் சொல்லிவிடுகிறேன்.
மழை துவங்கிவிட்டது. சரியான மழை. பாட்டம் பாட்டமாகப் பெய்கிறது. எப்போதுமே மழை பார்த்தல் பிடிக்கும், உங்களைப் போலவே எனக்கும். மழையைப் பள்ளிக்கூடத் தாழ்வாரம் ஒன்றில் இருந்து பார்ப்பது பேரனுபவம். மழை நின்றபின் வீடுதிரும்பலாம் என்று பள்ளிக்கூடச் சீருடையில் பிள்ளைகள் அமர்ந்திருக்கிறார்கள். டீச்சர்கள் காத்திருக்கிறார்கள். நாங்கள் எங்கள் அறுபதை, அறுபத்தைந்து வயதைத் தாண்டிய மழை நினைவுகளுடன் நிற்கிறோம்.
மூன்று பேராக இருந்தாலும், மழை ஒவ்வொருவரையரையும் அவர் அவராகவே வைத்திருந்தது. அவரவர் பார்த்த மழையும், பார்க்காத மழையும் அவரவர்களுக்குள். பெரிய வார்த்தையில் சொன்னால் மழை பார்த்தல் தியானம். சின்ன வார்த்தையில் எனில் ஆனந்தம்.
எல்லோரும் ஆனந்தமாக இருந்தோம். ஒரு பெண்குழந்தை ‘மணி என்ன சார்?’ என்று கேட்டுவிட்டுப் போனது. என்னதான் மழை பெய்தாலும், நனைந்து கொண்டாவது அது இருட்டுவதற்குள், அல்லது இருட்டியவுடன் வீடு திரும்பும் அவசியத்தை அதனுடைய பின்னலும் சீருடைச் சுடிதாரும்
நிர்ப்பந்திருந்தன. முன்பின் தெரியாதவர் எனினும், சிவசு சாரிடம் குடையை இரவல் கேட்கும் சுதந்திரத்தை மழை ஒருவருக்குக் கொடுத்திருந்தது.
எல்லாம் பூ போட்ட கலர்க்குடைகள். நான் வெளியே சொல்லவில்லை கருப்புக்குடைகளை நான் தேடிக்கொண்டு இருந்ததை. கருப்புத்துணிக்குடையின் நுனிக்கம்பிகளில் இருந்து சொட்டும் மழைத் துளிகளின் ஊடாக நான் என் அம்மாத்தாத்தாவை அடைந்துவிட முடியும்.
நான் சொல்ல ஆரம்பித்தேன். எப்போதும் கேட்கிறவனாக இருக்கும் என்னை, மழை சொல்கிறவன் ஆக்கியது. நான் சிவசு சார் முகத்தையோ, கிருஷியின் முகத்தையோ பார்க்காமல் மழையின் முகத்தை மட்டும் பார்த்தபடி சொன்னேன். தரையில் நகர்ந்து செல்லும் மழைக் கொப்புளங்கள் பற்றி. எங்கள் பேத்தி அர்ச்சனாவுடன் ஆடிய 2007 மழை நடனம் பற்றி.
அவள் ’மழைக்கொப்புளம் ஒரு கிரீடம் போல இருக்கிறது தாத்தா’ என உதாரணம் சொன்னது பற்றி.
இதைச் சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் எதுவுமே சொல்லவில்லை. எப்போதுமே சொல்கிற நேரத்தை விட, சொல்லாத நேரம் முக்கியமானது. கூர்மையானது. அருமையானது.
நான் எங்களுக்கு முன் பக்கத்துத் தரையில் வழிந்தோடும், வடிந்தோடும் மழைத்தண்ணீரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சீனிக்கற்கள் முளைத்தெழ அவை தனித்தனித் தன்னிச்சையான ஓடைகளாக ஓடத்துவங்கியிருந்தன. யுகம் யுகமாக ஓடி மறைந்த தன்னுடைய தடங்களைக் கண்டடைந்து, மீட்டெடுத்து அவை ஒரு இளம் நதியைப் போலப் பெருகிக் கொண்டிருந்தன. நான் பள்ளிக்கூடத் தாழ்வாரத்தில் இல்லை. ஒரு நதிக்கரையில் இருந்தவன் ஆனேன்.
நான் மீண்டும் சொல்ல ஆரம்பித்தேன். 64-67ம் வருடங்களின் மழை பற்றி. தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரித் தாழ்வாரங்களில் நின்று பார்த்த மழையையும் இப்படிப் பெருகியோடிய மழைத்தாரையையும் பற்றி. அதை விடவும் அப்படி மழை பெய்யும் பொழுதில் தரையில் இருந்து நூற்றுக் கணக்கில், ஏன் ஆயிரக் கணக்கில், துளையிட்டு மேல் வரும் மண் புழுக்களைப் பற்றி. நான் அப்போது மழையாகி இருந்தேன். செம்மண் தரை ஆகியிருந்தேன். மண்புழுக்கள் ஆகியிருந்தேன்.
நான் நேற்றைய மழையை வணங்குகிறேன். மழை பெய்ததற்காக மட்டும் அல்ல.
என்னை ஒரு சிறு கணம் மண்புழுவாக ஆக்கியதற்கு.

1 comment:

  1. உங்களுடைய தமிழ் கொஞ்சுகிறது சார்.. அழகாய் எழுத வருதுகிறது... படித்துக்கொன்டே இருக்கலாம் என்கிற மாதிரி ஒரு நடை..... வாழ்த்துக்கள்..

    ReplyDelete