Friday 13 September 2013

மன்மத லீலையை ...


     


                                                                                    

எழுந்திருக்கும்போது ஞாபகம் வந்தது பரமன் கழுதை மேல் செல்கிற கனவுதான். அதே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியுடன் உட்கார்ந்திருக்கிறான். குதிரை மேல் இருப்பது போல இந்தப் பக்கம் ஒரு கால், அந்தப் பக்கம் ஒரு கால் போட்டிருக்கிறான். காலில் வெள்ளை நிறச் செருப்பு. என்னைப் பார்க்கவில்லை. செம்மண்ணில் செய்தது போல இருந்த உயர உயரமான மலைகளை நோக்கி நூற்றுக் கணக்கில் நகர்கிற கழுதைகளின் மந்தையில் அவன் மட்டும் அசைந்தசைந்து போகிற காட்சியை ஒரு சினிமா தியேட்டரின் அகலத் திரையில் நிறைத்துவிடலாம். புழுதி நிறத்தில், இதுவரையில் கழுதைகளின் பக்கவாட்டு வயிற்றில் பார்த்திராத வழவழப்புடன் அவை, உருட்டிவிடப்பட்ட கூழாங் கற்களைப் போல நகர்வதில், எதையும் உச்சரிக்காத ஒரு தியான நிலை இருந்தது.
‘என்ன சுந்தரம், எப்படி இருக்கே?என்று பரமன் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். நான் போகட்டும். ‘சிவசைலம் சின்னையா எப்படி இருக்காரு?என்று கேட்டிருக்கலாம். என்னுடைய சிவசைலம் பெரியப்பா, பரமனுக்கு சிவசைலம் சின்னையா. ஒருத்தருக்கு ஒருத்தரை இரண்டு பேருக்கும் பிடிக்கும். பெரியப்பா என்னைப் பார்த்த இரண்டாவது நிமிஷம்,என்ன, பண்ணையார் எப்படி இருக்கார்?என்பார்.  அப்படிக் கேட்கும் போது கண்ணைச் சிமிட்டுவார். பரமனும் இதே போல கண்ணைச் சிமிட்டிக்கொண்டு என்னிடம், ‘அவாள் எப்படி இருக்காக?என்பான். அல்லது ‘சிவசைலம் சின்னையாவை என்ன கண்ணிலேயே காணோம்? எங்கேயாவது டூர் கீர் போய்ட்டாளா?என்று சிரிப்பான்.
அது என்ன கண் சிமிட்டல், அது என்ன சிரிப்பு, அது என்ன டூர் என்று தெரியவில்லை.  விவசாயம் உண்டு, மாடு கன்று உண்டு, தான் உண்டு என்று இருக்கிற சிவசைலம் பெரியப்பா எனக்குத் தெரியாமல் எந்த ஊருக்கு டூர் போனார் ?
பரமன் அப்போது ஒரு சிவப்பு ஆம்னி வண்டி வைத்திருந்தான். நாங்கள் நாலைந்து பேராக அதில் குற்றாலம் வந்திருந்தோம். தென்காசிவரை ஒரு கல்யாணத்திற்கு வந்திருந்த சிவசைலம் பெரியப்பா, ஊருக்குத் திரும்ப பஸ் ஏறுவதற்காக நின்றுகொண்டு இருந்தார்.  அந்தச் சமயம் பெரியப்பா இன்னார் என்றே பரமனுக்குத்  தெரியாது. ‘கொஞ்சம் வண்டியை நிறுத்து பரமா. எங்க பெரியப்பா மாதிரி இருக்குஎன்று சொன்னேன். டிரைவர் பக்கம் முன்னால் இருந்த பரமன் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினான். ‘வாங்க சின்னையாஎன்று கும்பிட்டான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘ஏறுங்கஎன்று கதவைத் திறந்துவிட்டு, முன்பக்கம் அவரை ஏறச் சொன்னான். அவரும் பரமனுடைய இந்த வண்டி வருவதற்காகவே காத்திருந்தது போல ஏறிக் கொண்டார். எங்கே, என்ன என்று ஒருவார்த்தை கேட்கவில்லை.
வண்டி புறப்பட்டதும் முன் சீட்டில் இருந்து கழுத்தைத் திருப்பி, பரமன் தோளைத் தொட்டார். ‘கையைக் கொடும் வே என்றார். அது எப்படி காருக்குள் வசம் இல்லாமல் கை கொடுக்க முடியும்? பரமன் வெறுமனே சிரித்தான். ‘இப்படித்தான் இருக்கணும்என்றார். இப்படித்தான் என்று பெரியப்பா எதைச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் பரமன் மறுபடி சிரித்தான். சிவசைலம் பெரியப்பா பரமனைப் பார்த்து, ‘ரொம்பப் பிடிச்சுப் போச்சுஎன்றார். பரமன் அதற்கும் சிரித்தான்.
அந்தச் சிரிப்பு அன்றைக்கு ராத்திரி முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஐந்தருவிகளில் கேட்டது. மங்குஸ்தான் பழங்களில் கேட்டது. மிளகாய் பஜ்ஜியில் கேட்டது. மறுபடி மறுபடி நிரம்பிய கண்ணாடி டம்ளர்களில் கேட்டது. தரையில் சிந்திக் கிடந்த காரா பூந்தி உருண்டைகளில் கேட்டது. தளவாய் விடுதியின் குளிர்ந்த கல்கட்டிடச் சுவர்களில் கேட்டது.
சிவசைலம் பெரியப்பா சிவப்பு அருவித் துண்டால் தலைப்பாகை கட்டியிருந்தார்.  ஒரு மலையாளத்துக்காரரைப் போல் முறுக்கிச் செருகியிருந்த தலைப்பாகையில் அத்தனை அழகாக இருந்தார். அடுக்கடுக்காக அவர் அந்த மாதிரியான கதைகளையே சொல்லிக்கொண்டு போனார். பரமன் ‘சின்னையா, சின்னையாஎன்று அவரைக் கொஞ்சி முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தான். சுத்தமாக சாப்பாடு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எல்லோரும் முடித்த பிறகு, அவரும் பரமனும் இன்னொரு புதுக்கணக்கை தனியாக ஆரம்பித்த போது, பெரியப்பா ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ?என்று துவங்கினார். வரிசையாக, ‘தீன கருணாகரனே நடராஜா’, ‘பூமியில் மானிட ஜன்மம் அடைந்துஎன்று அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாடப் பாட, பரமன் அவர் மடியில் படுத்துக் கொண்டான். நான் பார்க்கும் போது அவர், ‘ராஜன், மகராஜன்பாடிக்கொண்டு இருக்க, பரமன் அப்படியே உறங்கிவிட்டிருந்தான். ‘படுக்கலையா பெரியப்பா?என்று கேட்க நினைத்தேன். கண்களை மூடியபடி அவர் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்துஎன்று எங்களை விட்டு எங்கோ போயிருந்தார்.
மறு நாள் காலை நாங்கள் எழுந்திருக்கும் முன்பு சிவசைலம் பெரியப்பா ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டார் போல. ஈரமாக அந்த சிவப்புத் துண்டு ஜன்னல் கதவில் கிடந்தது. வெயில் வந்த பிறகுதான் பரமன் எழுந்திருந்தான். ‘என் கிட்டே சொல்லிக்கிட்டுதான் சின்னையா போனாஎன்றான். சிரித்தான்.
சிவசைலம் பெரியப்பாவுக்கு பரமனைப் பிடித்த அளவுக்கு, பெரியம்மாவுக்குப் பிடிக்கவில்லை.  முதலில் என்னைக் கூட்டிக்கொண்டு சிவசைலம் போனவன், அப்புறம் தனியாகவே போய் பெரியப்பாவைப் பார்க்க ஆரம்பித்து இருக்க வேண்டும். என்னையும் வைத்துக்கொண்டே ஒரு தடவை பெரியம்மை பெரியப்பாவைப் பார்த்துச் சொன்னாள், ‘அந்தப் பிள்ளைகள் வயசு என்ன, உங்க வயசு என்ன? ஜமுக்காளத்தை மடிச்சுத் தடுக்காகப் போட்ட மாதிரி, உங்களுடையதிலே பாதி கூட இராது. அதுக கூட விடிய விடிய உட்கார்ந்து என்னத்தைப் பல்லைப் பல்லைக் காட்டி இளிச்சுப் பேசிக்கிட்டு இருக்கியோ? அது என்ன கதை, அவுத்துப் போட்ட கதை? மனுஷி அங்கே ரெண்டு காதையும் பொத்திக்கிட்டுத் தூங்கவேண்டியது இருக்கு. எந்த வயசில என்ன பேசணும்னு ஒரு கணக்கு இருக்கு‘ல்லா
இதைச் சொல்லிக்கொண்டே கையில் பறித்து வைத்திருந்த ஒரு கொத்து கருவேப்பிலையை நனைக்க கிணற்றுப் பக்கம் போனது ஞாபகம் வந்தது. கப்பிக் கிணறு இல்லை. ஏற்றம் போட்டு இறைக்கிற துலாக் கிணறு . நல்ல சச்சவுக்கமாக இருக்கும்.  பெரியப்பா மாதிரி இல்லை பெரியம்மா. பெரியப்பா சிலம்பக் கழி போல உருவிவிட்டது மாதிரி இருப்பார். பெரியம்மா திரட்சி. அவள் துலாவைத் தாழ்த்தி, மொண்டு, வாளித்தண்ணீரைக் காலில் கவிழ்த்து, கவிழ்த்த வாக்கிலேயே கருவேப்பிலையைக் கழுவிக்கொண்டது, கழுதையின் மேல் பரமன் போகிற சொப்பனம் கண்ட இந்த விடியக்காலம் வரை ஞாபகம் வருகிறது.
வாளியினுடைய இரும்புச் சத்தமும், பெரியம்மையின் காலைக் கழுவி சலார் என்று பாய்ந்து வெளியேறும் தண்ணீர்ச் சத்தமும் மட்டுமில்லை, அதோடு சேர்த்து வேறு ஒன்றும் குளிர்ச்சியாகத் தன் கண்ணாடிப் பாளம் விரித்தது. சொப்பனம் கண்ணாடிப் பாளம் மாதிரி அல்லாமல் வேறென்ன? பரமனைப் பற்றி மட்டும் அல்ல, இன்னொரு சொப்பனமும் நேற்றுக் கண்டிருக்கிறேன். அது இப்போதுதான் ஞாபகம் வருகிறது. சொப்பனங்களின் குமிழி உண்டாகிற இடமும் அந்தக் குமிழிகள் உடைந்து காணாமல் போகிறதும். மழைத்தரையில் அரைக் கொப்புளமாக நகர்வதும் எப்படி நிகழ்கிறது  என்று சொல்ல முடியுமா?
சிவசைலம் பெரியம்மையும் பரமனைப் போல, தவறிப் போய்விட்டாள். ஏழெட்டு வருடங்களாவது இருக்கும் அவள் போய்ச் சேர்ந்து. ஆனால் சொப்பனத்தில் அவ்வளவு சந்தோஷமாகக் கிணற்றில் நீச்சல் அடித்துக்கொண்டு இருக்கிறாள். இதுவும் சதுரக் கிணறுதான். துலா இல்லை. திறந்து கிடக்கிறது. நான்கு திசைகளையும் அடைத்துச் சுவர் எடுத்தது போல அவ்வளவு பெரியது. பாசிக் கலரில் தண்ணீர் அப்படிக் கிடக்கிறது. பெரியம்மை ஒருத்திதான் முங்கி முங்கிக் குளிக்கிறாள். உடுத்தியிருக்கிறாளா இல்லையா என்பது எல்லாம் எதற்கு? முங்கி உள்ளே போய்விட்டு அம்பு மாதிரி மேலே வருகிறாள். தண்ணீரைக் கொப்பளிக்கிறாள். 
‘அவனை எங்கே? பெரியப்பாவைக் காரிலே ஏத்திக் கூட்டிகிட்டுப் போயிட்டானா? எவள் வீட்டுக்கு , எந்த ஊருக்கு டூர் போயிருக்காங்க ரெண்டு பேரும்?’. இப்படி அவள் கேட்டாளா? பெரியம்மை கேட்டது மாதிரியும் இருக்கிறது. கேட்காத மாதிரியும் இருக்கிறது. இதை ஒருத்தி சிரித்துக்கொண்டே எப்படிக் கேட்கமுடியும்? பெரியம்மை சிவந்து கிடக்கிற கண்களோடு, பளிச்சென்று உமிக் கரி போட்டுத் தேய்த்த பல் வரிசையோடு சிரிக்கிறாள். சத்தியமாக ஞாபகமில்லை, துணி இருந்ததா இல்லையா என்று. ஒரு சொப்பனத்தில் இது ஞாபகம் இருக்கும், இது ஞாபகம் இருக்காது என்ற கணக்கெல்லாம் பார்க்கமுடியுமா.
இனிமேல் பரமனிடம் கேட்க முடியாது, ‘எங்கே எந்த ஊருக்கு டூர் போய்விட்டு வந்தாய் சிவசைலம் பெரியப்பாவுடன்?என்று. அடியும் நுனியும் இல்லாமல், பல்லி வால் துடிக்கிற மாதிரிச் சொல்லிவிட்டுப் பெரியம்மையும் போய்விட்டாள்.
அது என்ன போக்கு. அதுவும் கழுதை மேல்?  ஒன்று இரண்டு இல்லை. நூற்றுக் கணக்கானவை. இங்கே ஒரு கழுதையைக் கூட சமீபத்தில் பார்க்க முடியவில்லை. எப்போதோ பார்த்த சடைக்கழுதை, கட்டுப் போட்ட பின்கால்களுடன் வினோதமாகக் கெந்திக் கெந்தி நகர்வதுதான் ஞாபகம் வருகிறது. அல்லது அநேகமாக நீங்களும் நானும் பார்த்திருக்கிற ஒரு ஆண் கழுதை. கொஞ்சம் குட்டிதான். ஆனால் அசையாத சிலை மாதிரி அது நிற்கிற நிலையை வாய்விட்டுச் சொல்ல வேண்டியதில்லை. சொப்பனத்தில் வந்த இந்தக் கழுதைகள் அப்படிக் கிடையாது. ஒன்று போல, குசவன்தட்டித் தெருவில் யாரோ செய்து செய்து அனுப்பிவைத்தது போல இருக்கிறது. கூழாங்கற்கள் உருள்கிறதாகச் சொன்னது கூடச் சரி. தியான நிலை கூடியவை என்பதும் சரிதான். காலையில் அரைகுறையாக ஞாபகம் இருக்கிற ஒரு கனவை வர்ணிக்க முடிகிற அளவுக்குச் சொற்கள் எல்லாம் அதனதன் இடத்தில் நிரம்பியிருக்கின்றன. சந்தோஷம்தான்.
இதை சிவசைலம் பெரியப்பாவிடம் சொல்ல வேண்டும். பரமனா, கழுதையில் போனானா? என்று சிரிப்பார். மாட்டார். சிரிக்க மாட்டார். பொதுவாக நம்மை விட்டுவிட்டு முன்னால் சென்றுவிட்டவர்களின் நினைவைப் பார்த்து நாம் சிரிப்பது இல்லை. முதல் தடவை பரமனைப் பார்த்து, சிவப்பு ஆம்னியில் ஏறி உட்கார்ந்ததும் சொன்னது மாதிரி, ‘இப்படித்தான் இருக்கணும்என்பார். அல்லது ‘ரொம்பப் பிடிச்சுப் போச்சுஎன்று கண்ணைத் துடைத்துக் கொள்வார். சிவசைலம் பெரியப்பாவுக்கு எதற்குச் சிரிக்க வேண்டும், எதற்குக் கசிய வேண்டும் என்று தெரியும். அவர் வயது என்ன, காரியம் என்ன?
பரமனைப் பற்றிச் சொன்னால் போதுமா? அது எப்படி ஒன்றைச் சொல்லி, ஒன்றைச் சொல்லாமல் விட? பரமன் கழுதையில் போனான். அவன் பின்னால் ஒரு மந்தையே போய்க்கொண்டு இருந்தது. ஊருக்குள் வந்து சேராத ஆறு மாதிரி, படித்துறை இல்லாமல் இருந்தது அந்த நகர்வு. பாறையில் காயப் போட்டிருக்கிற காவி வேட்டி மேல் விழும் வெயில் மாதிரி என்னவோ செய்கிறது அது. தெற்குப் பிரகாரம் திரும்பி மேலப் பிரகாரம் வந்து, நாம் மட்டும் தனியாகக் கல்தளத்தில் நடக்கிறபோது உண்டாகிறது போல ஏதோ பரமனைப் பார்க்கும் போதும் உண்டாகிறது. அதை அதற்குரிய கூடுதல் குறைவுடன் சொல்லிவிடலாம். சொல்லிவிட முடியும். ஆனால் பெரியம்மை குளித்ததை எல்லாம் சொப்பனத்தில் பார்த்ததை எப்படிப் பெரியப்பாவிடம் சொல்ல?
‘ஏ, என்னத்தையாவது உடுத்தியிருந்தாளா, இல்லை என்னைப் பார் என் அழகைப் பாருண்ணு வந்து நிண்ணாளா?என்று சிவசைலம் பெரியப்பா நேரடியாகக் கேட்டாலும் கேட்டுவிடுவார்.  இதில் உண்டு, கிடையாது, ஆமாம், இல்லை என்று எதையும் திட்டமாகச் சொல்லமுடியுமா? சொப்பனத்தில் பார்த்த தண்ணீரில் பாசி இருந்ததா, இல்லையா என்று கேட்டால் என்ன பண்ண? இலையைப் பார்த்தாயா தண்டைப் பார்த்தாயா பூவைப் பார்த்தாயா என்று தனித் தனியாகப் பரீட்சை வைத்தால், குளத்தைப் பார்த்தேன் என்றுதானே சொப்பனம் பதில் சொல்லச் சொல்கிறது.
எனக்கு சொப்பனத்தில் வந்த பெரியம்மையின் சிவந்த கண்களை, சிரிப்பை, தலைமுடியைப் பின்பக்கம் கோதி விட்டுக்கொண்டு செய்த தண்ணீர்க் கொப்பளிப்பைப் பிடித்திருந்தது பெரியப்பா என்று எப்படிச் சொல்ல? ஒரு வேளை அப்படி நான் சொன்னால், ‘ஆமா டே. அது ஒரு சரியான தண்ணிப் பிசாசு. தரையில விட தண்ணிக்குள்ளே லெச்சணமாகத்தான் இருப்பாஎன்று சொல்வாரோ?
பெரியம்மை போய், தனியாகப் பொங்கிச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிற பெரியப்பாவிடம் இப்படி நான் போய் நின்று, கொஞ்சம் ஒருவிதமான இந்த சொப்பனத்தைச் சொல்லி அவளை ஞாபகப் படுத்துவது சரியாக இருக்குமா? குனிந்து நடக்கிறவரைப் பிடித்து குப்புறத் தள்ளிவிடுகிற மாதிரி ஆகிவிட்டால் என்ன பண்ண?  என்னை விட பரமன் இருந்தால் இப்படி ஒரு சொப்பனத்தை பெரியப்பாவிடம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல்லிவிடுவான். நான் ‘பெரியப்பாஎன்பதை விட, அவன் ‘சின்னையாஎன்பதை ஒரு மந்திரம் போல உச்சரித்துவிடுவான். பெரியம்மா இப்படி வந்த சொப்பனத்தை அவன் சிரித்துக்கொண்டே சொல்ல, பெரியப்பாவும் அதைச் சிரித்துக்கொண்டே கேட்டுக்கொள்வார்.
பரமா. பெரியம்மா குளத்தில் குளிக்கிற இப்படி ஒரு கனவைக் கொடுத்துவிட்டு, நீ இன்னொரு கனவில் கழுதை மேல் ஏறிப் போய்க்கொண்டு இருக்கிறாய். இது உனக்கே நன்றாக இருக்கிறதா?
இதை நான் என்னிடமே கேட்டபோது, பரமன் கழுதையில் இருந்து லேசாக என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் செல்ல, பெரியம்மை மட்டும் தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்து, ‘சொன்னால் என்ன கெட்டுப் போச்சு?என்று சிரித்தாள். சொல்லுக்குக் கட்டுப்படா விட்டாலும் அந்தச் சிரிப்புக்குக் கட்டுப்பட வேண்டும். ஏற்கனவே லீவு நாளாகப் போயிற்று. பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரத்தில் பெரியப்பா முன்னால் கொண்டுபோய் விட்டுவிடப் போகிறான்.
ஒரு எட்டு போய் சிவசைலம் பெரியப்பாவைப் பார்த்துவிட்டு வந்தால்தான் என்ன? இந்தச் சொப்பனம் இரண்டும் உங்களுக்குத்தான் என்று, தோப்பில் உதிர்ந்துகிடந்த எலுமிச்சம் பழத்தைப் பொறுக்கிக்கொண்டுபோய்க் கொடுக்கிறது போல, அவரிடம் சேர்ப்பித்துவிடலாம். பரமன் இருந்தால், பெரியப்பா உடனே எலுமிச்சங்காய், நார்த்தங்காய் , மாங்காய், தேங்காய் என்று வேறு மாதிரிக் கதைகள் சொல்ல ஆரம்பித்துவிடுவார். இரண்டு பேரும் அப்படிச் சிரிப்பார்கள். எனக்குத்தான் கதை சொல்லவும் தெரியவில்லை, கேட்கவும் தெரியவில்லை.
பெரியப்பாவை எப்போது கடைசியாகப் பார்த்தேன்? ஏதோ ஒரு துக்க வீடு என்று நினைக்கிறேன். இப்போது வரிசைவரிசையாக, நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் ஒன்றுபோலப் போட்டுவைக்கிற பிளாஸ்டிக் நாற்காலிகளின் கடைசி வரிசையில், சட்டை போடாமல் சவரம் செய்யாத முகத்துடன், ஒரு சிட்டித் துண்டைப் போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அதைக் கூட நான் பார்க்கவில்லை. இவள் தான் சொன்னாள். ‘சிவசைலம் மாமா வந்திருக்கா. நாம வாரதைப் பார்த்துகிட்டு குனிஞ்சுக்கிட்டாஎன்று என் தோளின் ஓரமாக. பக்கத்தில் போய்ப் பேச முடியவில்லை. நான் ‘எப்போது வந்தீர்கள்?என்று சைகையில் கேட்க, ‘உதயத்தில்என்பதை உதட்டசைவால் சொல்லிவிட்டு, ‘இரு, இருஎன்று பதில் சைகை காட்டினார். சைகைகளால் முழு விபரத்தையும் சொல்லிவிடுகிற மாதிரியான அசைவுகள் பழைய ஆட்களிடம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.
பஸ்ஸில் இருந்து இறங்கி, பெரியப்பா வீட்டுக்குள் போகும் போதும், பெரியப்பா, ‘வா, வா, வாஎன்று தலையை அசைத்து சைகைகளால் தான் வரவேற்றார். காலைச் சாப்பாட்டு நேரத்திற்கும் மதியச் சாப்பாட்டு நேரத்திற்கும் மத்தியில் அவர் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டு இருக்கவேண்டும். சுட்டு விரலை கடைவாய்கள் ஓரம் கொடுத்து வாய் கொப்பளித்துக்கொண்டு இருந்தார். நார்க்கட்டிலைக் காட்டி, ‘உட்கார், உட்கார்என்று கையை அமர்த்தினார். இடுப்பு வேட்டியில் குனிந்து வாய் துடைத்துக் கொண்டே, ‘வா, சுந்தரம்என்றார். ‘பதினொன்னரை சம்பங்குளம் வண்டி அதுக்குள்ளேயே வந்துட்டானா?என்றார்.
நான் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். தொழுவில் இருந்த பசு எக்கிக் கூப்பிடுகிற குரல் கேட்ட்து. வேப்பமர உச்சியில் ஒரு பெரிய காக்காய்க் கூடு இங்கிருந்து பார்க்கத் தெரிந்தது. இவர் கொப்பளித்துத் துப்பின ஈரத்தில் மிக மெல்லிய சத்தத்தில் கனகாம்பரச் செடி விதை வெடித்து வெயிலில் உதிர்ந்தது. கல்லில் கட்டின பொச்சக் கயிறு முனக, துலா வாளியோடு கிணற்றுள் இறங்கி, தண்ணீர் அள்ளி, சளப் என்று சிந்தி, தண்ணீரைத் தண்ணீர் அறைகிற சத்தத்தைக் கேட்பதற்கு விரும்பினேன்.
‘என்ன சாப்பிடுதே அய்யா? டீ போட்டுத் தரட்டுமா?என்றார். என்னை ஐயா என்றதும், அவரே டீ போட்டுத் தருவதாகச் சொன்னதும் ஒரு துக்கத்தை உண்டாக்கியது. வண்டிப் பறைக்குப் பக்கவாட்டில், அவருடைய தனிமை முழுவதும் அம்பாரமாகக் குவிந்துகிடப்பது போல வைக்கோல் போர் மினுங்கியது. குற்றாலம் துண்டை முறுக்கிக் கட்டிக்கொண்டு சம்மணம் போட்டு உட்கார்ந்து, பரமன் மடியில் படுத்துக் கிடக்க, அவர் பாடின எம்.கே.ட்டி பாடல்கள் ஞாபகம் வந்தன.
எனக்கு எந்தச் சொப்பனங்களையும் சொல்ல முடியாது என்றும், சொல்ல அவசியம் இல்லை என்றும், சொல்லவேண்டாம் என்றும் தோன்றிவிட்டது.
‘எப்படி இருக்கீங்க பெரியப்பா?என்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டேன். மாட்டுக்கு வைக்கோல் போட்டுவிட்டு, அதைத் தடவிக் கொடுத்தால் ஒரு வாடை அடிக்குமே, அது பெரியப்பாவிடம் அடித்தது. பெரியப்பா என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. என்னைத் தோளோடு சேர்த்து முதுகுப் பக்கமாகக் கையைக் கொடுத்து இறுக்கிக் கொண்டார்.
என்னை அங்கே இங்கே அசைக்காமல் கண்ணை விட்டுக் கண்ணை நகர்த்தாமல் பார்த்தார். என்னுடைய வலது கையை எடுத்து அதன் உள்ளங்கையில் அவருடைய வலதுகையால் அடித்துவிட்டுச் சிரித்தார். கீழே குனிந்து கொண்டு சிரிப்பு மாறாமல் உட்கார்ந்திருந்தார். என் உள்ளங் கையில் இருந்த தன்னுடைய கையை எடுத்து, சுட்டு விரலால் நார்க்கட்டிலின் ஒவ்வொரு கண்ணாகக் குத்திக்கொடுத்தபடி என்னிடம் சொன்னார்,
‘ஒரு வேடிக்கை தெரியுமா அய்யா. உன் வீட்டுக் காரியை நாலைந்து நாட்களுக்கு முன்னால் சொப்பனத்தில் பார்த்தேன். எப்படித் தெரியுமா? நிறை அம்மணமா. அரணாக் கொடி கூட இடுப்பில இல்லை
பெரியப்பா கைத்துப் போனது போல சிரித்துக் கொண்டு இருந்தார். ஆனால் இடது கண்ணின் ஓரத்தில் நிறையவும் வலது கண்ணில் குறைவாகவும் கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது. குனிந்து வேட்டி நுனியால் அவர் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.
நான் அவருடைய இரண்டு கைகளையும் எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டேன். ஒன்றும் சொல்லவில்லை.
இதில் எல்லாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
%%%

உயிர் எழுத்து
செப்டம்பர் - 2013.


3 comments:

 1. உங்களது எழுத்துக்களை படிக்கும் போது ஏதோ அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தை பார்ப்பது போல உள்ளது.வாழ்க்கையில் வரக்கூடிய மனிதர்களை படம் பிடித்து விடுகிறீர்கள் இப்போது யாரைப் பார்த்தாலும் இந்த மனிதர் நினைப்பு வரும் இது தான் இந்த எழுத்தின் வெற்றி.சாமானியனின் வாழக்கையின் லயம்.
  உயர்தரம்

  ReplyDelete
 2. உங்க பெரியம்மா திட்டின மாதிரியே எங்க சரஸ்வதி அண்ணியும் திட்டிகிட்டு இருந்தாங்க எங்க பரமன் அண்ணனை ... :)

  ReplyDelete
 3. சைகைகளால் முழு விபரத்தையும் சொல்லிவிடுகிற மாதிரியான அசைவுகள் பழைய ஆட்களிடம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

  எனக்குத்தான் கதை சொல்லவும் தெரியவில்லை, கேட்கவும் தெரியவில்லை.

  ஆம் , கதையை வாசகரின் மனதில் நேரடியாகப் பதிக்கும்/சேமிக்கும் உத்தியை அல்லவா
  கற்று இருக்கிறீர்கள் . கதை சொல்லி அல்ல, கதை நடுபவர் நீங்கள்

  நுண்ணிய விவரிப்பின் கூகிள் நீங்கள் அய்யா

  ReplyDelete