Monday 16 September 2013

முக நக - 21.









கடைசி வேப்பிலை உதிரும் போது முதல் கொத்து வேப்பம் பூ பூக்க ஆரம்பித்துவிடும் என இதைத் துவங்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிய போது, நான் புனித மேரி தெருவின் வலது பக்க வேப்பமரத்தில் இந்த வேனிலின் முதல் வேப்பம் பூவைப் பார்த்துகொண்டிருந்தேன். எனக்கு எதிரே யாரும் வரவில்லை. நான் வாதைகளின் கூடாரமாக இருக்கிறேன்என்று வெளிச் சுவரில் எழுதப்பட்டிருக்கும் வீட்டின் முன் எப்போதும் ஒரு பழைய வெள்ளை அம்பாசிடர் கார் நிற்கும். அந்தக் காருக்கும் எப்போதும் தன் இலைகளை விடவும் அதிகமாகப் பூக்கும் மர மல்லிகைக்கும் இடையில் அனேகமாக்க் காணமுடிகிற அந்த வீட்டின் பணியாளர் மற்றும் ஓட்டுநர் இருந்தால் கூடக் கேட்டிருப்பேன். வேப்ப மரம்லாம் பூத்துட்டுதுபோல இருக்கேஎன்று. அவர் கொஞ்சம் அதற்குச் சிரித்திருந்தால், ’அதெப்படி, உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லாம இந்தத் தெருவில ஒண்ணு நடக்க முடியுமா?’ என்று என் சந்தோஷத்தை அவர் சந்தோஷம் ஆக்கியிருப்பேன். மனதார ஒரு கணத்தைக் கொண்டாடும் போது, அர்த்தம் எல்லாம் பார்த்தால் முடியுமா?
வேப்பம் பூவுக்கு தாமரைப் பூ மாதிரி ஒரு நுட்பமான வாசனை. அது வழக்கமாக வாசனை என நாம் மூக்கில் முகர்வதற்கும் சற்றுக் கூடுதல். மனதால் முகர்வது. அதுவாகவே நம்மிடம் வந்து சேரும். நாம் தேடி அடைவதைவிட நம்மை அடைவது சற்றுக் கூடுதல் வாசனை இல்லையா? இந்த வாசனையை நான் எங்கள் சுடலைமாடன் கோவில் தெருவில் இருந்தே அடைந்துவருகிறேன். முதலில் இருந்தே, என் நுரையீரல்களின் காற்ற்றைகள் வைக்கோல் வாசனையாலும், வேப்பம் பூ வாசனையாலும் வாதமுடக்கிப் பூ வாசனையாலும் எங்கள் தாத்தாவால் பெத்த பிள்ளைமாதிரி வளர்க்கப் பட்ட பசுக்களின் கன்றுகளின் வாசனையாலும் நிரம்பியிருக்கின்றன. அந்த மிகப் பெரும் வேம்பின் ஞாபகக் கிளைகளில் இன்னும் நான் பெயர் அறியாத வினோதப் பறவைகள் அமர்ந்து பறக்கின்றன. உதிர் இறகுகள் பொறுக்குகிறவனாக என்னை மாற்றியதே அந்த வேப்பமரப் பறவைகள் தான்.
சிவசைலம் தாத்தா வீட்டு வில்வண்டியை தெருவோர வேப்பமரத்தின் கீழ்தான் அவிழ்த்துப் போட்டிருப்பார்கள். அந்த வளைந்த மேல் கூண்டின் தார்வாசனை அடிக்கிற தடித்த விரிப்பில் படிந்துகிடக்கும் வேப்பம் பூக்களை சேகரிப்பதும். மினுக்கட்டாம் பூச்சிகளைப் பிடித்து உள்ளங்கைகளில் வைத்துப் பார்ப்பதும் என் அந்த வயதுமுழுப் பரீட்சை லீவுவுக்குரிய பிரதான நிகழ்ச்சி நிரல்கள். இன்னும் என் உள்ளங்கை ரேகைகளை வெதுவெதுப்பான மினுக்கட்டாம் பூச்சியின் இளம்பச்சை வெளிச்சத்தில் வேப்பம் பூ வாசனையோடு நான் பார்த்துக்கொள்ள முடியும்.
மதுரையில் பிச்சைப்பிள்ளை சாவடியில் இருந்தோம். ரோட்டுக்கு எதிர்ப் பக்கம் ஒரு அம்மன் கோவில் உண்டு. அதன் பக்கம் சின்னச் சின்னதாக சில வேப்பமரங்கள். தெருவிளக்குக் கீழ் அந்த வேப்பங்காற்றுப் பட்ட இரவில் நெடு நேரம் வரை கேரம்போர்டு விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அவர்களே அழகாக இருப்பார்கள் அந்த சோடியம் வேப்பர் வெளிச்சத்தில். அவர்கள் தலையில் உதிர்ந்துகிடக்கும் வேப்பம் பூக்கள் அவர்களை மேலும் அழகாக்கி விட்டிருக்கும். திருப்பரங்குன்றம் கலையிரவை ஒட்டி சு.வெங்கடேசன் வெளியிட்ட மலரில் அந்த வேப்பம் பூ உதிர்ந்த சிகைகள் பர்றி எழுதிய கவிதை ஒன்று இருக்கும்.
கசப்பாக ஒரு வாசனைஎன்று கூட குமுதத்தில் வந்த ஒரு கதைக்குத் தலைப்பு வைத்திருந்தேன். கசப்பு மாதிரி ருசியில்லை. வேப்பம் பூ மாதிரி வாசனை இல்லை. இந்தக் கோடை போன கோடையை விட இந்தக் கோடை மோசமாகத்தான் இருக்கும். வெயிலைத் தாங்க முடியாது. தண்ணீர் லாரிகள் குறுக்கு மறுக்கே தப்பிவந்த ஆட்கொல்லிப் புலிகள் என அலையும். அக்காக் குருவிகளின் எக்கி எக்கிக் கூப்பிடும் குரல்களின் தவிப்பைத் தாங்க முடியாது. ஆனாலும் வெயிலில் வேப்பம் பூ வாசனை நிரம்பியிருக்கும். மீண்டும் தன் அடுத்த தவணையைத் துவக்கும் மின்தடைக்குத் தற்காலிக ஆசுவாசமாக நீங்கள் உங்கள் வீட்டின் ஜன்னலைத் திறக்கும் போது இருட்டோடு இருட்டாக வேப்பம் பூ வாசனை உங்களிடம் வந்து சேரும்.
உங்கள் வீட்டுக்குத் தன் இடது தோளில் கனத்த, சாயம் போன சிவப்பு சிலிண்டரைச் சாய்த்துக்கொண்டு சிவா கேஸ் சீருடையோடு வருகிறவர் தலையில் இந்த வேப்பம் பூ இருக்கும். சங்கரியமா இருக்கிறார்களா என்று கேட்டுக்கொண்டே வருகிற, (இருக்கிறார்கள் என்று தெரியும்) ஜோதியம்மா தலையில் இந்த வேப்பம் பூ இருக்கும். நான் நடந்து செல்லும் போது, வக்கீல் வீட்டு ஷெர்லி, ‘அர்ச்சனா எப்போ வருவா அங்க்கிள்?’ என்று கேட்பாள். அவளுடைய சிகையிலும் வேப்பம் பூக்கள் கிடக்கும்.
நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். யார் தலையில் உதிர்ந்து கிடந்தாலும் அதை அப்படியே அங்கேயே இருக்கவிடுவோம். அங்கே இருப்பதற்காகத்தான் வேப்பம் பூக்கள் அப்படி உதிர்ந்திருக்கின்றன

No comments:

Post a Comment