Tuesday 10 September 2013

முக நக - 19.








26.
இந்த தினம் என்னைப் போன்ற ஒரு சராசரியனுக்கு அனேகமாக முடிந்து விட்டது. அனேகமாக எல்லா ஒலிகளும் அடங்கிவிட்டன. முன் அறையில் நடமாடிக்கொண்டிருந்த நெடுந்தொடர் மனிதர்கள் தங்கள் சலனத்தை மறு தினத்திற்கு ஒத்திவைத்து விடைபெற்றுவிட்டார்கள். பக்கத்துத் தேவாலயம் தூரத்துப் பிள்ளையார் கோவில் எல்லாம் தங்கள் மணிகளின் அதிர்வுகளைப் பத்திரப்படுத்திவிட்டன, விடிகாலைப் பிரார்த்தனைகளுக்காக. இன்னும் சற்று நேரத்தில் அந்த ஒற்றை ஆந்தையின் குரல் பறந்துவந்து எரியாத தெரு விளக்குக் கம்பத்தின் வழக்கமான வளைகம்பியில் அமர்ந்துவிடலாம். பூப் பூக்கும் ஓசையை கேட்க ஆசைப்படலாம், கேட்டுவிட முடியாது. நல்ல குறுந்தகடுகள் இருந்தால் இசை கேட்கலாம். இசைகேட்டுப் பழகிய காதுகளுக்கு அமைதி கூட இன்னொரு சுழலும் இசைதான்.
முடிந்துகொண்டிருக்கும் இந்த தினத்தின் பக்கங்களை வாசிப்பது போல நான் இந்த அறையின் கட்டமிட்ட தரையையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் இடது கால் பாதம் மற்றும் விரல்களின் நிழல் அப்படியொரு கட்டத்தில் விழுந்துகொண்டிருப்பது தவிர வேறு உயிர்ப்பு எதுவும் இல்லை. இன்று எந்த உணவுத் துணுக்கும் இங்கே சிந்தவில்லை அல்லது சிந்தி, உடனடியாகத் துடைக்கப்பட்டு சுத்தமாகிவிட்டது, எந்த எறும்புவரிசையும் அதை இழுத்துச் செல்லும் வாய்ப்பு இன்றி.
அன்றாடங்களின் அத்தியாயங்கள் வேறு தேய்ந்த வரிகளைக் கொண்டிருக்க, என்னுடைய இந்த முடியும் இரவின் பக்கத்தில் இரண்டே இரண்டு படங்கள் இந்த நாளின் அடையாளமாக எனக்கு மிஞ்சியிருக்கின்றன. என் அடுத்த, எதிர்வரும் தினங்களுக்கு என்னை இட்டுச்செல்லச் சித்தமானவையாகவும் கூட.
ஒன்று என் அதிகாலையில் இந்த நாளின் சரியான மனநிலையில் என்னை வைத்த அந்த முகப் புத்தகப் படம். ஓரளவுக்குத் தெரியும் தாமரை இலை. முழுவதுமாக நம் முன் நிற்கும் ஒரு தாமரை மொக்கு. அதன் கூம்புச்சியில் அமர்ந்திருக்கும், நம்மை நோக்காது அதனுடைய வலப்புற வாழ்வில் கவனம் குவித்த சிட்டுக்குருவி. எல்லாம் முழுதாகத் தெரியவேண்டியதில்லை. முழு வானம், முழு ஆறு, முழுக்கடலை நாம் அறியாதது போல ஒரு முழுத் தாமரை இலையையும் நாம் அறியவேண்டியதில்லை. அதைப் போல அந்த மொக்கும் மலர்ந்திருக்க அவசியமில்லை. அந்தச் சிட்டுக்கு நம்மைத் தவிர, உற்றறிய ஆயிரம் உண்டு ஆகாயத்தின் கீழ். நான் அந்த ஏகாந்த மொக்கையும் ஏகாந்தக் குருவியையும் சேமித்துக் கொண்டேன். இதை எழுது முன்பு கூட பார்த்துக் கொண்டேன். அந்த மொக்கு இன்னும் மலரவில்லை. அந்தச் சிட்டு இன்னும் பறந்துவிடவில்லை.
இன்னொன்று, இன்றைய ஹிந்துதினசரியில் வந்திருந்த யானைகளின் படம். அமராவதி அணைப்பக்கம் தண்ணீர் தேடி ஏழெட்டு உறுப்பினர் உள்ள அந்த யானைக்குடும்பம். நம் ஆதி வீட்டுப் பட்டாசல்களில் தொங்கும் கூட்டுக் குடும்பப் புகைப்படங்களின் கருப்புவெள்ளைக்குள் குறைந்தது நான்கு தலைமுறை முகங்களின் வெவ்வேறு வண்ண அடர்த்திகள் நிரம்பி வழிவது போல, அந்த எட்டு ஒன்பது யானைகளுக்குள் எல்லாப் பருவமும் வயதும் உள்ள தாகத்தின் துதிக்கைகள். ஒரு யானையின் சித்திரத்தை, நாம் முன்பு எப்போதோ பார்த்த யானையின் அசைவுகளோடு மட்டுமே பார்க்கமுடியும். அந்த ஐந்தாம் பக்க அசட்டுக் காகித நிற மூலையில் அவை ஒரு பெரும் வனத்தை உண்டாக்கியபடி தலையை அசைத்து வாலைச் சற்று உயர்த்திச் செல்கின்றன. அதன் மூப்பனின் துதிக்கை, புறப்படுகிற நேரத்தின் ஈரக் காற்றிலேயே எந்தத் திக்கில் அருந்துவதற்கும் அவை அமிழ்வதற்குமான தண்ணீர் பெருகிக் கிடக்கிறது என்பதை உணர்ந்திருக்கும். அதன் மத்தக அசைவுகளுக்கு ஏற்ப, அது மலையில் இருந்து இறங்கும் முதல் காலடியில், அமராவதி அணையின் நீர்ப்பரப்புத் தளும்பி அசைய ஆரம்பித்திருக்கும். எங்கோ தேங்கிக் கிடக்கும் தண்ணீர், எங்கிருந்தோ இறங்கும் தவித்த தும்பிக்கைகளுக்காகக் காத்திருக்கும் படியாகவே இயற்கை தன்னை எப்போதும் வைத்திருக்கும்.
இந்த இரவில், இப்போது அல்லது இன்னும் சற்றுப் பிந்திய நிசியில் அந்த அத்தனை யானைக்குடும்பமும் தண்ணீரில் அமிழ்ந்து துளாவி, உடலைப் பக்கவாட்டில் சாய்த்துக் கிடக்கும் என்று இந்தப் புகைப்படத்தை நீட்டித்துக் கொள்கிறேன்.
இதோ இந்த இரவின் அமைதியை. தாமரை மொக்கின் மேல் அமர்ந்திருக்கும் சிட்டுக் குருவிக்கும், தண்ணீர் தேடி அலையும் யானைக்குடும்பத்திற்கும் இடையில் வைக்கிறேன்.

 

2 comments:

  1. அற்புதம் சார் . இசைகேட்டுப் பழகிய காதுகளுக்கு அமைதி கூட இன்னொரு சுழலும் இசைதான்.

    ReplyDelete