Wednesday 16 January 2013

வாழ்வெனும் பெரும் பூ.








எதிர்த்த வீட்டில் நெல்லி மரம் இருக்கிறது. அல்லது நெல்லிக்காய் மரம் சுவரோரமாகத் தெருப்பக்கம் சாய்ந்திருக்கிற வீட்டிற்கு எதிரே நாங்கள்
இருக்கிறோம். எப்படிச் சொன்னாலும் சரிதான்.

இது ஜோதியம்மா வீட்டில் நிற்கிற ஒட்டு ரக வீரிய நெல்லி இல்லை. . இப்போது பழமுதிர்சோலைகளில் மினுமினுவென முன்வரிசைக்
கூடைக்கு வந்துவிட்ட, வேறு ரகம் அது.  அந்த வகை நெல்லியின் நிறத்தை ஒரு ஓவியன் வரைவதில் ஒரு சவால் இருக்கும். ‘தண்ணிக் கலர்’ என்று
தெய்வக்கா , வேறு யாரும் இல்லை, எங்கள் அம்மா, சொன்ன நிறத்தையும்
என்னால் வரைய முடியாது. சில வார்த்தைகளே ஓர் அற்புத நிறம் உடையது.

கோபாலின் இடைகால் வீட்டில்  இருந்து, அவனை நெல்லிமரத்து ஊஞ்சல் கவிதை எழுதச் சொல்லிய அரிநெல்லியும் இல்லை. வீட்டு  முன் திண்ணையில் உட்கார்ந்திருக்கிற கோபாலை, தன்னுடைய வேறு வடிவ இளம்பச்சையால், கலாப்ரியா ஆக்கிவிடும் மாயம் அரிநெல்லி இலைகளுக்கு  உண்டு. ‘யப்பா. எனக்கு வேண்டாம்ப்பா. புளிச்சுக் கொடுக்கீரும்” என்று சொன்ன பால்யகால சகி அல்லது சகாக்கள் நம் எல்லோர்க்கும் இருப்பார்கள். இப்படி சொல்லும்போது இடுங்குகிற கண்களின் அழகை சாகும் வரை மறக்க முடியாது. சற்றுப் பழுத்த அரிநெல்லியின் மிச்சமாக கடைவாய்ப் பற்களில் உருளும் சிறுவிதையை உணரும் நேரம், சற்று யோசித்தால், கிட்டத் தட்ட இந்த வாழ்வை உணர்வது போலத்தான்.  விழுங்கவும் முடிவதில்லை. துப்பவும் முடிவதில்லை. ஆனால் அதன் பல் கூசாத, நீர்த்த புளிப்பு  நமக்குத் தேவையாகவே இருக்கிறது.  அதிகம் ருசிசாராத ஒரு  களங்கமின்மை இருப்பதால்தான் ஆரம்பப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு அரிநெல்லிக்காய் விற்கிற கிழவிகள் இன்னும்  கூடத் தென்படுகிறார்கள் சில சமயங்களில் அதே  அரிநெல்லிக்காய்கள் போலத்தான், அதைச் சாக்கில் கூறுகட்டி விற்கிற அந்த மனுஷிகளும் இருக்கிறார்கள். எதில் புழங்குகிறோமோ, அதன் சாயல் கொஞ்சம் நமக்கு ஒட்டிகொள்ளும் போல.

வெளியூரில் இருந்து வந்தவர்கள் , பொதுவாக இந்தப் பக்கம் வெயிலடித்தால் காரை எதிர்வீட்டுச் சுவர்ப் பக்கம் நிறுத்துவார்கள் தானே. நான் பார்க்கும் போது அந்த டிரைவர் உதிர்ந்துகிடந்த நெல்லிக்காயைப் பொறுக்கிக் கடித்துவிட்டு, கடித்த வேகத்திலேயே துப்பிக் கொண்டு இருந்தார். இது போன்ற நேரங்கள் யாரிடம் வேண்டுமானாலும் உடனே ஒரு உரையாடலைத் துவக்கிவிடச் செய்கின்றன. . தான் நினைப்பதை தன்னிடம் சொல்வதுதான் அது. அவர் என்னைப் பார்த்துக் கொண்டு சொன்னார்,”கடுத்துக் கிடக்கு ஸார். புளிப்பும் இல்ல. இனிப்பும் இல்ல.” . என் முகத்தில் இருந்து பார்வையை நகர்த்தி அவர்
சுவருக்கு அந்தப் புறம் நிற்கும் நெல்லிமரத்தைப் பார்த்தார். அது இதுவரை இவர் பார்ப்பதற்கு முன், எப்படிச் சடை சடையாய்க் காய்த்து, கனம் இழுத்த,
தணிந்த கொப்புடன் அசைந்ததோ அப்படியே இருந்தது.  இப்போது அவர் மறுபடியும் என்னிடம் தொடர்ந்தார். “காட்டு நெல்லி போல ஸார்”. அவர் காடு பார்த்திருப்பாரோ என்னவோ. நான் பார்த்ததில்லை. பார்க்காத ஒரு வனத்தில் ஒரு நெல்லிமரத்தை உடனடியாக எனக்கு முன்னால் வளர்த்துவிட அவரின்
அந்தச் சொற்கள் போதுமானதாக இருந்தன.

காட்டு நெல்லி என்ன, எல்லா நெல்லியுமே இப்படிச்  சடைடையாகக் காய்த்து
நிற்பவை தான். இப்படி காய்த்துக் கிடக்கும் நெல்லி மரத்தை, அது கண்ணில் பட்டும், ஒரு தடவை ஏறிட்டுப்  பாராமல் செல்கிற ஒருவனை நான் முற்றிலும் சந்தேகிக்கிறேன் அல்லது அவனுக்காகப் பரிதாபப் ப்டுகிறேன். சற்று அவனிடம் எனக்கு பயம் கூட. கீழாநெல்லி இலையின் கீழ் கடுகுகடுகாக
வரிசைகோர்த்திருக்கிற நெல்லியின் அழகை தன்னிடம் கற்கவந்திருக்கும் அத்தனை பிள்ளைகளுக்கும் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியன் காண்பித்துக் கொடுத்தால், அதைவிட அவன் எந்த மொழியின் ஆனா ஆவன்னாவையும் கற்றுக் கொடுக்கவேண்டியதே இல்லை. சிறு தாவரங்களின் தன்னிச்சையான மொழி அத்தனை அபூர்வமுடையது. ஒரு நெல்லி இலையை அறியமுடியாத ஒருவன் ஒருபோதும் ஒரு வனத்தை அறிவதற்கில்லை.

நான் அந்த டிரைவருக்கு நன்றி சொல்ல்வேண்டும். அது காட்டு நெல்லி என்று அறிந்த பின் அதை நான் அதிகம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு ஒரு மரத்தின் காய்களைவிடவும் கனிகளை விடவும் அதன் கிளைகளின் அசைவும் இலைகளின் அசைவுமே தொடர்ந்த ஈர்ப்பைத் தருகின்றன. அப்போதுதான் விடிந்திருக்கிற  அதிகாலைகளில், தூக்கம் வராத அல்லது தூக்கத்தை நானே தவிர்த்து  விட்ட பின்னிரவுகளில் நான் இந்த நெல்லி மரத்தை வெகு நேரம் பார்த்து நின்றிருக்கிறேன். என்னைப்  போலவே நெல்லி மரத்தைத் தேர்ந்து, வேறெந்த பக்கத்து மரங்களிலும் அமராமல், அதன் அடர்த்திக்குள் இருந்து, அமர்ந்து, மறைந்து, பறந்து போகிற சிறிய கருங்குருவிகளை சில காலைகள் எனக்குக் காட்டியிருகின்றன. அந்தக் குருவிகள் நெல்லி மரத்தில் அமர்ந்து இசைப்பதற்கென்றே சில பாடல்களை வைத்திருக்கும் போல. திரும்பத் திரும்ப அந்த நெல்லிமரப் பாடலையே அவை பாடுவதாகவும், அப் பாடலை அவை வேறெந்த மரக் கிளையிலும் பாடாது என்று கூட எனக்கு ஊகம். அவை அப்படிப் பாடிப் பறந்த பின் சுவோரோரம் தெருப்பக்கம் உதிர்ந்து கிடக்கும் நெல்லிக்காய்களில் அந்தப் பாடல் கேட்கக் கூடும். இப்படியெல்லாம் தோன்றுகிறதே தவிர, நான் அந்த நெல்லிக்காய்களைக் காதருகே வைத்துக் கேட்க இதுவரை முயன்றதே இல்லை.

எனக்குப் பதிலாகத்தான் அந்தக் கிழவன் அதைச் செய்துகொண்டிருந்தான். தெருப்பக்கம் உதிர்ந்து கிடந்த நெல்லிக் காயகளை அவன் பொறுக்கிக் கொண்டு இருந்தான். முகர்ந்து பார்த்தான். காதோரம் வைத்து, ஒரு கிலுக்கு
போலச் சத்தம் வருகிறதா என அசைத்தான். உலர்ந்த காட்டுப் பழங்களுக்குள் குலுங்கும் விதைகளை அறிந்த ஒருவனின் நுட்பமான குலுக்கல் அது. அந்தக்
கிழவனை இதற்கு முன் இந்தப் பக்கம் பார்த்ததில்லை. அவனுடன் அவன் மகளும் இருந்தாள். சிறியதும் பெரியதுமாய் இரண்டு குழந்தைகள். இரண்டும் பெண் குழந்தைகள். அழகிய முகங்களைப் பார்க்கையில் அதைப் பெற்ற தாயையும் தகப்பனையும் நினைத்து வணங்கிக் கொள்வேன் என்று மகுடேஸ்வரன் முகப் புத்தகத்தில் இட்டிருக்கும் நிலைத்தகவல் முற்றிலும் மெய். அந்த இரு குழந்தைகளையும் பெற்றதற்கு அவற்றின் தகப்பனையும். இவளைப் பெற்றதற்கு இந்தக் கிழவனையும் வணங்கத்தான் வேண்டும். அந்தப் பெண் குப்பைகள் பொறுக்கிக் கொண்டுவந்த பெரிய உரச்சாக்குப் பை அவள் அருகிலும் முதுகிலும் இருந்தது.  அவளும் குழந்தைகளும் நெல்லிக் காய்களைப் பொறுக்கிக் கொண்டு இருந்தார்கள்.

அந்தக் கிழவன் தன் கால்களை அகலமாக நீட்டி, ஒரு வினோதமான இருப்பு நிலையில் தன்னை வைத்திருந்தான். அவனுடைய இடுப்பில் இருந்து அந்தக் கால்கள் வெகுதூரம் நீண்டிருந்தன. அவன் பிறந்து, வளர்ந்து, திரிந்த அத்தனை ஊர்களையும் இப்போதும் அவை தொட்டுக்கொண்டு இருந்ததாகவே சொல்ல முடியும்.  அவற்றின் மீது படிந்திருக்கும் மண்ணையும் புழுதியையும் ஒருபோதும் கழுவுவதற்கு இல்லை  என அவன் இதுவரை தாண்டிவந்த நீர் நிலைகளிடமும் அவனை நனைத்த மழையிடமும் அறுதியிட்டிருக்க வேண்டும். அவனுடைய முகத்தையும் கைகளையும் விட அந்த மண்ணும் புழுதியும் படிந்த கால்களும் பாதங்களும் மிகுந்த சோபையுடன் இருந்தன. வலது கரண்டை மேல் ஒரு செப்பு வளையம் கிடந்தது. அது சதா சுழன்றுகொண்டு இருப்பது போலவும், அந்தச் சுழற்சி ஒரு வண்டு தூரத்தில் பறக்கும் உறுமலை உண்டாக்குவதாகவும் நான் நினைத்துக் கொண்டேன். அவன் என்னைப் பார்த்தால் நன்றாக இருக்கும் .

பார்க்கவே இல்லை. அந்தப் பெண்ணும் குழந்தைகளும் நெல்லிக் காய்கள்
பொறுக்கிக் கொண்டிருக்க, அவன் தன்னுடைய கையில் வைத்திருந்த ஒரு குச்சியால்  தன்னுடைய நீண்ட கால்களுக்கு இடையே இருந்த மண்ணைக் கொத்திக் கொண்டே இருந்தான். அப்படிக் கொத்தும் போது, கிளம்பி வந்த சிறு கற்கள் ஒவ்வொன்றையும் எடுத்து எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டுத் தூர வீசினான். ஒரு சிறு கல். ஒரு நொடி நேர நுகர்வு. ஒரு எறிதல் என அந்தக் கிழவன் தொடர்வதில் ஒரு பெரும் வினோதம் இருந்தது.

இந்த முறை கிடைத்த கல்லை ஒரு முறை நுகர்ந்தான். நாசித்துவாரம் அழுந்தும்படி அந்தக் கல்லை மிக நெருக்கமாக வைத்து ஆழமாக மூச்சை உள்ளே இழுத்தான். மூக்கில் இருந்து கல்லை அகற்றி, விரல்களுக்குள் லேசாக உருட்டி அதைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, மறுபடியும் அந்தக் கல்லை நுகரத் துவங்கினான். இதுவரை தீவிரமாக இருந்த அவனுடைய முகத்துத் தசைகள் எல்லாம் இளகி, ஒரு சிரிப்பாக உருவடைந்திருந்தன.
வாயோரமும், கண்களின் பக்கவாட்டிலும் விழுந்திருந்த சுருக்கங்கள் அந்தச் சிரிப்பில் மேலும் துலங்கின.

அவன் அப்படி நுகர நுகர, மலர மலர, எனக்குள் நிரம்பத் துவங்கியது வாழ்வெனும் பெரும் பூவின் வாசம்.

%





6 comments:

  1. வரும்போதெல்லாம் ஏதோ ஒன்றைக் கற்றுத்தருகிறீர்கள் ஆசானே:) நன்றி

    ReplyDelete
  2. இங்கேதான் அவ்வப்போது விழுந்து கிடக்கிறது.
    இன்னமும் வார்த்தைகள் கோர்வையாக வராத அழுத்தம் வேறு மனதில்..
    உணர்வு பூர்வமான எண்ணங்களுக்கும், சொற்களுக்கும்,விரல்களுக்கும் ஏராளமான இடைவெளிகள் காலம் பூராவிலும் இருக்கும் போல...
    எப்படி நீங்கள் வெளிப்படுத்துகிறீர்களோ அதில் நூறில் ஒரு பங்காவது நன்றி தெரிவிக்க ஒரு போதும் கையாலானது இல்லை.
    எவ்வளவு கிடைக்கப்பெற்றிருப்போம் என்கிறதில் பதில் தராத குற்றவுணர்வும் அடக்கம் என எடுத்துக்கொள்ளலாம்.சொல்லத்தெரியாமல்தானே இவ்வளவும்..
    அந்த கைகளில் ஒரு முத்தமிடக்கூட வாய்க்கப்பெறாத நெல்லைக்கு வந்துபோன அவசர நாளினை இன்றளவும் நொந்துகொள்ளவேண்டியதாகிறது..

    ஒரு தூரத்து சொந்தமாவோ அல்லது தெருவின் அன்றாட காய்கறி கடைக்காரனாகவோ அல்லது தினசரி ஒரு புன்னகையை பதிலாக பெற்றுப்போகிற பால்காரனாகவோ அல்லது இப்படியான யாரோ ஒருவனாக உங்களை அடிக்கடி நெருக்கத்தில் பார்க்கிறமாதிரியாக இந்த வாழ்வு அமையாதது ஏக்கம் கொள்ள வைக்கிறது.....

    ReplyDelete
  3. இவ்வளவு அருமையான எழுத்துகளுக்கு சொந்தக்காரனுடன் நான் சில காலம் பணிபுரிந்திருக்கிறேன் என எண்ணுகையில் பூரிப்பு ஏற்படுகிறது.

    ReplyDelete
  4. வணக்கம்.அநுபவம் என்றால் இதுதானோ. மிக நன்றி.லயிக்கச் செய்துவிட்டீர்கள்.

    ReplyDelete
  5. அலுவலக மனச்சலனத்தினை துலக்கிப்போட்ட பதிவு. சபரிக் கிழவியை நினைவூட்டிய கிழவன்.எப்பவோ நெல்லிக்காய்பின் நீருண்ட ஒரு துவர்த்த இனிப்பு மனசில் நிழலாடியது. மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  6. இந்தப் பெரும்பூவின் அருமை தெரியாமல் இருக்கிறோம் நாங்கள்
    மீண்டும் மீண்டும் , வாழ்க்கை பற்றிக் கற்றுத் தருகிறீர்கள்

    ReplyDelete