Friday, 31 August 2012

முதற்றே உலகு.







இப்போதெல்லாம் கனவுகள் அதிகம் வருவதில்லை.
நனவுகள் இப்படித்தான் இருக்கும் என கிட்டத்தட்ட யூகித்து விட முடியும் தினங்களில், கனவுகள் தன் கண்ணாம்பூச்சி விளையாட்டை நிறுத்திவிடும் போல.

சமீபத்தில், ஆகஸ்ட் 22 இரவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்தக் கனவு வந்தது. அதுதான் முன்பு அடிக்கடி வருகிற யானைக் கனவு. இந்த முறை, வழக்கமாகச் செய்கிறது போல அது விரட்டி விரட்டித் துரத்தவெல்லாம் இல்லை.  சாதுவாக நின்றது. எனக்கு அறுபத்து ஏழு வயதாகும் போது, என் கனவு யானைக்கும் ஒப்பீட்டு அளவில் அதே வயது ஆகியிருக்கும் தானே.
ஆனால் அது முன்னிலும் அழகடைந்திருந்தது. வயதின் முதிர்வு அல்ல வயதின் கனிவு ஒரு அழகைத் தரும் என்றுதான் தோன்றுகிறது.  எங்கள் அப்பாவைப் பார்க்கையில், முன் எப்போதையும் விட அழகாகி இருப்பதை உணர்கிறேன்.  காம்பு பழுக்கையில் கனியழகு தனிதான்.

அழகு மட்டும் அல்ல, அந்த யானையின் உருவமும் அதிகரித்து இருந்தது.
சுடலைமாடன் கோவில் தெரு நடுவீட்டு வாசலில் நடைப்பக்கம் நிற்கிற அதன் உயரம் மச்சு ஜன்னல் வரை இருந்தது. இந்த ‘அகவெளி’ கார்த்திகேயன் வரைந்த யானையைப் பார்க்கையில் எனக்கு அதுதான் ஞாபகம் வந்தது. ஒருத்தர் கனவில் வருகிற யானையை எல்லாம் இன்னொருத்தரும் பார்க்க முடியும் போலும்.  முட்டுக்காட்டிலிருந்து பைய நடந்து ஒரே ராத்திரியில் பெருமாள்புரத்திற்கு இடம்பெயர்ந்துவிடும் நெடு வனம் ஒன்று கனவுத் தொடர்ச்சி மலைகளில் இருக்கக் கூடும்.  பிறந்த நாளன்றைக்கு வந்ததுதான் வந்தது, தும்பிக்கையை என் சிரசின் மேல் வைத்து ஆசியளித்திருக்கலாம்.  எனக்குத் தும்பிக்கைச் சுருக்கங்களும் அதன் செவ்வெள்ளைச் சுட்டியும், பயத்துடன் பிடிக்கும் என்பதை அந்த
யானை அறியுமே ரொம்ப காலமாக.

நேற்றுக் கண்ட கனவில் யானை வரவில்லை. அது அதிகாலைக் கனவும் அல்ல. முன்னிரவுக் கனவு. இளைய ராஜாவின் ‘யாருக்கு யார் எழுதுவது’, தங்கராஜ் தந்ததை வாசித்துக் கொண்டிருந்தேன். கேட்டுக்கொண்டிருந்த ராஜேஷ் வைத்யா குறுந்தகடும் அவனுடையதுதான்.  என்னையறியாமல் தூங்கியிருக்க வேண்டும்.  படித்துக் கொண்டிருக்கும் போதே ‘இசையில் துவங்குதம்மா” என்ற அஜய் சக்ரவர்த்தி பாடலை,   வேறெங்கிருந்தோ ஒரு
அருவி வழிவது போலத் திரும்பத் திரும்பக் கேட்கமுயன்றுகொண்டே இருந்ததும்,அந்த வித்தியாசமான குரலில் பாடலின் முதல் இரு வரிகள் மட்டும் சுழன்று சுழன்று கல் தூண்களில் சிற்பம் செதுக்கிக் காணாமல் போனதுமாக இருந்தது.

மறுபடியும் அந்தக் கனவின் நிகழிடம் 21.இ. சுடலைமாடன் கோவில் தெரு வீட்டு மாடிதான். நான் வழக்கமான என்னுடைய இடத்தில் இடது ஓரச் சன்னல் பக்கம் படுத்திருக்கிறேன். இருட்டாக இருக்கிறது.  ராத்திரி இருட்டு அல்ல. சரஸ்வதி பூஜையை ஒட்டி, தீபாவளியை ஒட்டி எல்லாம், மழை கொட்டு கொட்டு என்று கொட்டுவதற்கு முன் வாசல் முழுவதும் தட்டுப்பந்தல் போட்டது மாதிரி இருட்டுமே அந்த ஐப்பசி கார்த்திகை அடைமழை இருட்டு. யாரோ வருகிற சப்தம்.  வருவது பெரிய ஆளாகத் தெரியவில்லை. சின்னக் குழந்தையுடைய வருகையில் தளம் பூப்போல அதிருமே அப்படி. ஊஞ்சல் சங்கிலி குலுங்கியதா என ஞாபகம் இல்லை. இதை எழுதும் போது ஊஞ்சல் பலகையைக் கனவில் உந்தி அசைத்து ஆடவிடுகிறேன்.  கனவில் ஆடாத ஊஞ்சலை இப்படி இரு தினங்களுக்குப் பின்னால், வெறும் நுனிவிரல்களால் ஆட்டிவிடுவது கூட இன்னொரு கனவு போலத்தான் இருக்கிறது. எங்கேயோ பறந்த கிளிகளை, எந்தக் கோவிலின்
பிரஹாரத்திலோ பறக்கவிடாமலா இருக்கிறோம்?  அய்யப்ப மாதவன் எந்த நூற்றாண்டுச்  சீனச் சித்திர மூங்கில் இலையிலோ இன்றும் நேற்றும் கவிதையெழுதாமலா இருக்கிறார்?  அந்த ஊஞ்சலை அசைக்க கனவின் அனுமதி உண்டு. கனவே, அப்படி அந்தரத்தில் அசையும் ஒரு ஆளற்ற ஊஞ்சல்தான்.

நான் வருவது யாரென யூகிக்கும் பதற்றத்தில் எழுந்து உட்கார்கிறேன்.
‘கல்யாணித் தாத்தா” என்ற குரல் ஒரு மின்னல் போலக் கீறிக்கொண்டு அந்த இருட்டில் கேட்கிறது. குரலோடு குரலாக, அந்தக் குரலைச் சுளையாக அதிலிருந்துதான் உரித்து எடுத்தது போல ஒரு சிரிப்பு.  அடுக்கடுக்கான சிரிப்பு. சின்னஞ்சிறு பெண்குழந்தையின் சிரிப்பு. அப்படிச் சிரிப்பையெல்லாம் தொலைக்காட்சி நெடுந்தொடரில் வருகிற குழந்தைகள் மட்டுமே சிரிக்கும்.
திரும்பத் திரும்ப சிரிப்பு. மறுபடி மறுபடி,’கல்யாணித் தாத்தா’. மூன்று வயது கூட இராத முளையானுக்குப் பாவாடை.  ‘யாரு கூட வந்தே நீ?’ என்கிறேன். ‘எங்க அப்பாவும் நானும் வந்தோம். இங்கே தான் இருந்தோம்’ என்று ஓடிப் போய் அது நிற்கிற இடம், நாங்கள் எப்போதும் புழங்குகிற, நான் படிக்கிற, எழுதுகிற, வரைகிற முன் கூடம் முடிந்து (அதை எங்கள் அம்மா ‘புல் பங்களா’ என்பாள்) மச்சுப்படி இறங்குகிறதற்கு நடுவில் உள்ள
பாத்தி போன்ற இடம். அதில் யாரோ இதுவரை படுத்திருந்தது போல ஒரு கசங்கல் துணியும் பழந்தலையணை ஒன்றும் கிடக்கிறது.  இப்போதும்  அந்தக் குழந்தை  சிரிக்கிறது. ‘கல்யாணித் தாத்தா’ என்று சொல்கிறது. கனவில் கேட்ட அந்தச் சிரிப்பும் குரலும் அதிர்ந்து என்னைத் தூக்கிப் போடுகிறது. நான் விழித்து விடுகிறேன்.

அந்தக் குழந்தை யார் ஜாடையில் இருந்தது? எங்கள் அம்மா ஜாடையிலா? அது எங்கள் அம்மா எனில், ‘எங்க அப்பா’ என்று அந்தக் குழந்தை சொன்னது யாரை? எனக்குப் பெயர் இட்டிருக்கிற எங்கள் தாத்தாவையா?
அது எங்கள் அம்மாவும் தாத்தாவும் எனில், எங்கள் அம்மாச்சி எங்கே போனாள்/ ‘தெய்வத்துக்குப் படைக்கச் சொல்லி’ கேட்பதற்கு இப்படித்தான் நீத்தார் வருவார்கள் எனில், அந்தச் சிரிப்பு எதற்கு?    அந்த ‘கல்யாணித் தாத்தா” என்ற அற்புத விளிப்பு எதற்கு?

இதோ, இதை எழுதும் இந்தக் கணத்திலும் அந்தச் சிரிப்புக் கேட்கிறது.
மீண்டும் ஒரு ஒலிநாடாவை ஓடவிட்டது போல, ‘கல்யாணித் தாத்தா”  என்ற குழந்தைக் குரல் அழைக்கிறது. அது யாராகவும் இருக்கட்டும். என் முன்னோரின் முன்னோராக, உங்கள் முன்னோரின் முன்னோராக, முதற்றே உலகு எனச் சொலும் மூலமாக இருக்கட்டும்.

அந்த ‘சின்னஞ் சிறு பெண்ணை’ வணங்குகிறேன்
 அவள் என் அன்னையெனில் அவள் வயிற்றில் நான் பிறந்தேன் என இருக்கட்டும். அவள் என் பெயர்த்தி எனில், எங்கள் மகனுக்கு அவள் மகளாகப் பிறக்கட்டும்.

%


4 comments:

  1. Kalyani thaaththaavin ninaivugal oru varipadam. Excellent sir.

    ReplyDelete
  2. அருமை சார்

    சுடலை மாடன் கோவில் தெருவில் யானை , நினைக்கவே வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. எங்கள் தெருவில் யானை வருவது அதிசயமே இல்லை. தினசரி எங்கள் தெரு வழியாகத்தான் அப்போது எல்லாம் நெல்லையப்பர் கோவில் யானை பாட்டப் பத்து வாய்க்காலில் குளிக்கப் போகும். பின்னால் வரும் யானைக்கு முன்னே வந்த மணிச்சத்தம் கேட்காத நாட்கள் குறைவு.
      என் கனவில் யானையும் யானைகளும் வருவதும், அது என்னைத் துரத்துவதும், ஜன்னல் வழி தும்பிக்கையால் துளாவி என்னைத் தொடுவதும், எங்கு நோக்கினும் யானைகள் செதுக்கப் பட்ட கல்மண்டபத்தில் நான் இருப்பதும், என் நாற்சக்கர வாகனம் செல்லும் வனப்பகுதியில் காயத்துடன் ஒரு யானை விழுந்துகிடப்பதும், மச்சுப்படியேறிவந்து நிற்பதும், இப்படி நடுவீட்டு வாசலில் வான் தொட வடிவெடுப்பதும் தான் என் கனவில் நான் பெறும் வரம்.

      Delete
  3. ..பெண் குழந்தை ஒரு அழகு! நம்முடைய அன்பையெல்லாம் கொட்ட கடவுள் அனுப்புற வரம் அது..அவள் முதற்றே உலகு..சர்வ சத்தியம் அது. உங்கள் கனவு, ஆசை எல்லாம் பலிக்கணும்..கடவுள் ஆசீர்வதிக்கட்டும்...

    ReplyDelete