Tuesday 7 August 2012

தொட்டிப் பூ




முதலில் கோபாலிடம்தான் கேட்டேன். கோபால்தான் கலாப்ரியா என்று எல்லோர்க்கும் தெரியும். அவன் தான் வலைப் பூ துவங்குவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தான். ‘கல்மண்டபம்’ என்று நான் யோசித்து வைத்திருந்த பெயரை விட,  அவன் சொன்ன ‘சமவெளி’ எனக்குப் பிடித்திருந்தது. கல்யாணியண்ணனுக்கு எது பிடிக்கும் என்பது மட்டும் அல்ல, எது சரியாக இருக்கும் என்பதும் அவனுக்கு எப்போதுமே தெரியும். அவன் ரெண்டாவது மகள் தரணிதான் முகப்பை ‘வரைகலை’த்தாள் அல்லது ‘கலைவரை’ந்தாள்.  முதலில் இருந்தது பாலை மணல் , குத்துச் செடி என ஒரு பின் புலம். கொஞ்சம் மாற்ற முடியுமா என்று தரணியிடம் சொன்னேன்.  இப்போது இருக்கிற முகப்பை அப்புறம் கொடுத்தாள். அந்த பக்கவாட்டுப் படம் சேவியர் எடுத்தது. கோபாலின் புகைப் படக் கோப்பில் இருந்திருக்கும் போல.

எனக்கு அதற்கு மேல் இம்மி கூட தெரியாது. தோன்றுவதை, சற்றுப் பிழை இன்றித் தமிழில் தட்டெழுத முடியும் அவ்வளவுதான்.  புகைப்படங்களை இணைப்பதுபற்றி வே.முத்து குமாரிடம் ஏற்கனவே விபரம் கேட்டிருந்தேன். அப்பாவுடைய அருமையான படங்களை ‘தி.க.சி’ வலைப்பக்கத்தில் அவர் பதிவேற்றுவது எனக்குப் பிடித்திருந்தது. அதில் வருகிற அப்பாவின் புகைப்படங்கள் உயிர்ப்பு நிறைந்தவை. அப்பாவைப் போல எனக்கு அழகும் கிடையாது, உயிர்ப்பும் கிடையாது என எனக்கே தெரியும்.
என் புகைப்படங்களை போட்டுக் கொள்வதில் எனக்குப் பெரிய ஆர்வம் இல்லை. தனிப்பட்ட முறையில், எனக்கு நான் மற்றவர்களைப் புகைப்படம்
எடுப்பதும், நான் எடுக்கப்படுவதும் விருப்பமானவை எனினும்.

அவர் நேற்று மாலை திடீர் என்று வந்திருந்தார்.அவருக்கு இருந்த நெரிசல் நேரங்களுக்கு ஊடேஒரு சிறுபொழுதை எனக்காக பிதுக்கியெடுத்து வந்திருந்தார். அவரிடம் எப்படிப் புகைப்படங்களைப் பதிவேற்றுவது, வரிகளை எப்படி சமன்படுத்திப் பதிவேற்றுவது போன்ற சில எளிய பயன்பாடுகளை அறிந்துகொண்டேன்.

இதற்கு முந்தி,  முதன் முதலாகப் பதிவேற்றின சி.கே.கே ஆண்டுவிழா
புகைப்படங்களை சக்தி ஜோதிதான் கொடுத்தார். அவர் சொன்னதை ஞாபகம் வைத்துக் கொண்டுதான் ஓரளவு சரியாக அவற்றைப் பதிவேற்றி
விட்டேன். ஒரு புதியதைக் கற்று, அதன் வழி நின்று, அதையே ஒரு மூன்றாம் நபராக சற்றுவிலகி நின்று பார்க்கையில் சந்தோஷமாகத்தான்
இருந்தது.

இந்த பூந்தொட்டிப் புகைப்படமும் அதைச் சார்ந்த என் பழைய கவிதை
ஒன்றும் இங்கே பதிவேற்றப்படுவது, முத்து குமாரிடம் எவ்வளவு சரியாக
நான் கற்றிருக்கிறேன் என மீண்டும் நான் உணர்வதற்காக.

வேறெந்த நோக்கங்களும் நிச்சயம் அதற்கு இல்லை.








                              நீ இருக்கும்
                              திசைக்கு முகம் காட்டி
                              உன் சதுரமான எதிர்பார்ப்பின் மேல்
                              பூக்காது
                              தொட்டிப் பூ.
                              பூ பூத்தல் அது இஷ்டம்.
                              போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்.


                              %

                              கல்யாண்ஜி



3 comments:

  1. உன் சதுரமான எதிர்பார்ப்பின் மேல்
    பூக்காது
    தொட்டிப் பூ.
    பூ பூத்தல் அது இஷ்டம்



    அற்புதம் சார்

    வாழ்க்கை ஒரு பார்முலா படி நடிக்காது

    ReplyDelete
  2. பூவில் இப்படி கவிதை பூப்பது அதிர்ஷ்டம்

    ReplyDelete