Tuesday 28 August 2012

ஒரு முழுமையான உச்சரிப்பு.





கொஞ்ச நாட்களாகவே ஏர்வாடி.S.I.சுல்தானைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. சரி. நாஞ்சில் நாடன் வெளியூர் போய்த் திரும்பட்டுமே என்று இருந்தேன்.  என் புத்தி என்னோடு. அவர் வெளியூரா போயிருந்தார். வெளிநாட்டுக்கல்லவா.

அவர் எப்போது போனார் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தாக்கல் கிடையாது.  வந்துவிட்டாரா என்றும் உறுதியாக அப்போது தெரியாத நிலை.
வருவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பு, ரவீந்திரனிடம் கேட்டேன். ‘இன்னும் வரவில்லை ஸார்’ என்றார்.  அதற்கடுத்த வாரம் மரபின்மைந்தன் முத்தையாவிடம் கேட்டேன். வந்துவிட்டதாகச் சொன்னார்.  பொதுவாக, ‘எப்ப நாஞ்சில் வந்தீங்க? நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்க யோசிக்காதவன் தான் நான். போகும்போதும் ஒருவார்த்தை நம்மிடம் சொல்ல்வில்லை. வந்த பிறகும், வந்துட்டேன் கல்யாணி’ என்று சத்தம் காட்டவில்லை. குறிப்பிட்டாற் போல பத்துப் பதினைந்து பேர்களிடமாவது அவர் போகும் போதும், வந்த பிறகும் சொல்லியிருக்கத்தான் செய்வார். அந்தப் பத்துப் பதினைந்து பேர் பட்டியலில் ‘நம்ம பேரு விட்டுப் போச்சே’ என்ற தாங்கல் எனக்கு இருக்கும் இல்லையா. இன்றைக்கு நேற்றைக்கா பழக்கம்? நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட தீபம் கால வரவுசெலவு அல்லவா இது. 

உழவர் சந்தைக்குப் போனால், கத்திரிக்காய் சீனியவரைக்காய் நிறுக்கிற தராசும் அதுதான். கேரட் பட்டர்பீன்ஸ் நிறுக்கிற தராசும் அதேதான். அவ்வளவு எதற்கு?  சொத்தை சொள்ளை என்றாலும் கூட அதே தராசுதான். நாஞ்சில் அவருடைய தராசுப் பக்கம் என்னை அண்டவிடவே இல்லை. அவரைத் தப்புச் சொல்லவே முடியாது. யாரும் வாங்குவதற்கு வந்தால் அல்லவா, அவர் நிறுத்துப் போடுவார். அமாவாசை அன்றைக்கு நுனிச் சீப்பு வாழைக்காய்க்கு இருக்கிற அந்தஸ்து கூட நமக்கு இல்லாவிட்டால் அவர்தான் என்ன பண்ணுவார்?

சுல்தானைப் பற்றி எழுத ஆசைப்பட்டுவிட்டு, நாஞ்சில் மேல் பிராது கொடுக்கிற மாதிரி இருக்கிறது இல்லையா. இது பிராது இல்லை. ஆவலாதி.  ஆவலாதி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. தமிழாகத்தான் இருக்கவேண்டும். திருநெல்வேலி பக்கம் ஆதி காலத்திலிருந்தே புழக்கத்தில் இருக்கிற இந்த ‘ஆவலாதி’யின் வேர்ச் சொல் என்ன என்பதையாராவது தெரிவித்தால் நல்லது.

இந்த ஆவலாதியைச் சொல்லிவிட்டு S.I.சுல்தானைப் பற்றி மேற்கொண்டு எழுதினால்தான் சரியாக இருக்கும்.  இருக்கிற கொஞ்ச நஞ்ச பாரத்தை இறக்கி வைத்துவிட்டோம் என்றால், மனம் லேசாகிவிடும். துப்புரவான ஒரு மனதோடுதானே சுல்தான் மாதிரி ஒரு அருமையான மனிதரைப் பற்றி நான் பேசவும் வேண்டும். அதுதானே நிறைவான காரியம்.

நாஞ்சில் நாடனையோ என்னையோ போல சுல்தான் எழுதுகிறவர் அல்ல.
அப்படி அடித்துச் சொல்லவும் முடியாது. அவர் ஏதாவது எழுதியிருக்கவும் கூடும். இவ்வளவு வாசிப்பு உடைய அவர், அத்தனை இறுக்கமாகத் தன் விரல்களைப் பூட்டிவைத்திருந்திருப்பார் என ஏன் நினைத்துக் கொள்ள வேண்டும்?   ஒன்று நிஜம்.  S. I.சுல்தான் நாஞ்சில்நாடன் படைப்புக்களை, ஒரு இடையறாத நிழல் என,நீண்ட காலமாக வாசித்துப் பின் தொடர்பவராகவே
இருக்கவேண்டும்.  நடந்தாய் வாழி  என சிட்டி, தி.ஜானகிராமன் இருவரும்
காவேரியோடு மூலம் தொட்டு முங்கிக் குளித்தது போல,  நாஞ்சிலின்
அத்தனை படைப்போடும் நடந்திருந்தால் மட்டுமே, இப்படி nanjilnadan wordpress.com   என்று ஒரு வலைத்தளம் துவங்கத் தோன்றும்.  தொடர்ந்து இப்படிப் பதிவேற்றிவரவும் முடியும்.

நாஞ்சில்நாடன் என்கிற படைப்பாளியாக அவருடைய ஒவ்வொரு வரியையும்,  ஒரு மனிதனாக அவருடைய ஒவ்வொரு அசைவையும் அவர்
பதிவேற்றுகிற விதம் முழுமையானது. நாஞ்சில் மகளின் திருமணத்திற்கு நாகர்கோவிலுக்கு  வரமுடியாதவர்கள் கூட, நேரில் கலந்துகொண்டது போன்ற சந்தோஷத்தைத் தருமளவுக்கு எத்தனை கல்யாணவீட்டுத் தகவல்கள், புகைப்படங்கள் சுல்தானின் தளத்தில்.  நாஞ்சில் நாடனைத்தான்
அன்றைக்குப் பார்க்க எவ்வளவு அருமையாக இருந்தது.   தன் பெண் பிள்ளையை நல்லபடியாகக் கரையேற்றின ஒரு தெற்கத்தி அப்பனின்
நிறைவுடன் முகமெல்லாம் பூரித்துப் போய் அல்லவா அவர் இருந்தார். சுல்தானும் நானும் பேசிக்கொண்டோம், ‘போன டிசம்பரில் இருந்தே அவருக்கு நல்ல பீரியட் ஆரம்பிச்சுட்டு. முகத்தைப் பாருங்களேன். எப்படி இருக்குண்ணு’ என்று.

S,I. சுல்தான் நாஞ்சிலுக்குக் கிடைத்தது போல வேறு யாருக்கும் யாரும் கிடைக்கவில்லை.அவர்கள் இரண்டு பேருக்குள்ளேயும் அவ்வளவு ஒத்துப் போய்விட்டது. எழுத்து இயல்பும் எழுதுகிறவன் இயல்பும் ஒரு வாசக மனதிற்கு இவ்வளவு தூரம் பிடித்துப் போனாலன்றி இதுவெல்லாம் ஒரு
போதும் சாத்தியமில்லை. ஜெயமோகன் தளத்திலும் நாஞ்சில் நாடனின் அமெரிக்கப் பயணம் பற்றிய குறிப்புகள் வந்தன எனினும், சுல்தான் கிட்டத்தட்ட ஒரு நேரடி வர்ணனை போலச் செய்துகொண்டிருந்ததற்கு அந்தத் தனிப்பட்ட காதலே காரணம்.

சுல்தானை சலாகுதீன் ஸார் மகள் கல்யாணத்தில் வைத்துதான் ஏர்வாடியில் முதல்முதல் சந்தித்தேன். என்னுடைய ‘அகம் புறம்’ தொடர் விகடனில் முடிந்திருந்த நேரம். நாஞ்சிலின்  ‘தீதும் நன்றும்” வந்துகொண்டு இருந்தது. எனக்குப் பிந்திய வரிசையில் சுல்தான் இருந்தார். அகம்புறம் தொடரில் சலாகுதீன் ஸார் வீட்டுக்குக்கு, அவருடைய அம்மா இறந்த துக்கம் கேட்கப் போனது பற்றியும். தன்னுடைய அம்மாவின் விசிறி பற்றி சலாகுதீன் ஸார் சொன்னதும் ஒரு பகுதி இருக்கும்.  அந்தப் பகுதியை சிலாகித்து, சலாகுதீன் சின்னாப்பாவுக்கும் அவருக்குமான நெருக்கத்தின் புள்ளியில் இருந்து சுல்தான் அந்த அறிமுக உரையாடலைத் துவங்கினார்.
அத்துடன் சரி. அப்புறம் எந்தத் தொடர்பும் கிடையாது.

திடீரென்று நாஞ்சில் நாடனுக்கு ஆரம்பித்து இருந்ததைப் போலவே, எனக்கும் ஒரு வலைத் தளம் ஆரம்பித்தார். பழையது, புதியது என அவ்வப்போது நிறையப் பதிவேற்றினார். எங்கே இருந்துதான் சேகரிப்பாரோ, கிறக்கம் வருகிற அள்வுக்கு என் புகைப்படங்களை, என்னைப் பற்றிய, என் எழுத்து மீதான செய்திகளை அதில் குவித்தார். அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாது என வைராக்கியமாக இருந்த என்னை. தினசரி மூன்று தடவைகளாவது அந்தப் பக்கங்களைப் பார்க்கும்படி செய்தார். என்ன பின்னூட்டங்கள் எத்தனை பேர் எதற்கெல்லாம் எழுதுவார்கள் என்ற ஏக்கம் கூட ஒரு கட்டத்தில் வர ஆரம்பித்துவிட்டது. நல்லவேளை தூக்கத்திற்கு எந்தப் பழுதும் இல்லை.

இதே சமயத்தில் சக்தி ஜோதிக்கு, வண்ணநிலவனுக்கு, தோப்பில் மீரானுக்கு, ச.விஜயலட்சுமிக்கு எல்லாம் இணைய தளங்களை  வரிசையாய் ஆரம்பித்தார். வண்ண நிலவன், நாஞ்சில் நாடன், தோப்பில் மீரானுக்கு எல்லாம் அத்திபூத்தாற் போல புகைப்படங்கள். கலாப்ரியா மற்றும் தங்கராஜ் புண்ணியத்திலெனக்குக் கொஞ்சம் ஜாஸ்தி. காணும் காணாததற்கு என்னை சுல்தான் அவ்வப்போது எடுத்துக்கொண்டதும் உண்டு. சக்தி ஜோதி பற்றிக் கேட்கவே வேண்டாம். புகைப்படங்களுக்கும் கவிதைகளுக்கும் தட்டுப்பாடே கிடையாது அவரிடம்.

ஒரு சூதாடியைப் போல, சாயுங்காலம் ஆனாலே. சீட்டுக்கட்டைத் தேடி உள்ளங்கை ஊறல் எடுக்கும் அளவுக்கு, நான் என்னுடைய சுல்தான் தளத்தைத் தவிர்க்க முடியாமல் ரசிக்க ஆரம்பித்தேன். ஆளற்ற வீட்டில் நிலைக் கண்ணாடி பார்க்க அலுக்குமா என்ன?

கதை அப்படித் தானே போகும். இந்தச் சரியான சமயத்தில், சுல்தானுக்கு வேலைப் பளு அதிகரித்து விட்டது.  ஒரு பொறுப்பான உத்தியோகத்தில் வெளியூரில் அவரும், உள்ளூரில் குடும்பமும் இருக்கிற அவருக்கு இப்படியான சந்தர்ப்பங்களும் வரும்தானே. அவரால் நாஞ்சில் நாடன் தளம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. எங்களையும் அப்படியே விட்டுவிடவும் முடியவில்லை. எப்போதாவது, அவருக்கு அல்லது வலைத்தள வாசகனுக்கு மறந்துவிடக் கூடாது என்று,  ஒரு மாதத்திற்கு ஒரு தடவை ஒரு கவிதை, அதற்கு ஒரு அபாரமான கிளிப் படம், அணில் படம், கல்மண்டபப் படம் என்று போட்டுவந்தார். இது எப்படிப் போதும், விடிந்ததும் பல் தேய்க்காமல் ஏதாவது ஒன்று என்னைப் பற்றி தினசரி பார்த்து வந்தவனுக்கு? காணவில்லை. எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தது. சிரித்தால் கூட, நெடு நாள் கிடையில் கிடந்த சீக்காளி சிரிக்கிற மாதிரி இருந்தது என் சிரிப்பு.  ‘என்ன சுல்தான். இப்படிப் பண்ணிட்டீங்களே?’ என்று கேட்கவா முடியும்?

ஆனால், இதற்கெல்லாம் சேர்த்துவைத்து, சுல்தான் நாஞ்சில் நாடனை அப்படிக் கொண்டாடிக் கொண்டு இருந்தார். அது ஒரு வகைக் கொண்டாட்டம் தான். ஒன்று இடுப்பில் வைத்திருப்பார், அல்லது தலையில் வைத்திருப்பார். இப்போது முத்திக் கொண்டிருப்பார். கொஞ்ச நேரம் கழித்து, தொட்டிலில் கிடக்கிற பிள்ளை தூங்குவதைப் பார்த்து நிற்கிற தகப்பன் மாதிரிக் கண் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருப்பார்.  அவர் சொல்லுவார். அல்லது நீங்கள் சொல்லுவதைப் பாட்டுக் கேட்பது மாதிரி ரசித்துத் தலை
ஆட்டிகொண்டிருபார். பூப் போல யாரும் இல்லாத நேரத்தில் கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சிக் கொள்வார். அப்படியே யார் இருந்தால் என்ன என்று மடியில் போட்டுத் தாய்ப்பால் கொடுப்பார். எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எந்தப் பிரதிபலனும் அவருக்கில்லை. ஆனாலும் கொண்டாட்டம். ஆனாலும் திருவிழா. இலக்கியத்தின், இலக்கியவாதிகளின் இயங்குதளத்துக்குள், இப்படி அடுத்த மனிதரை மனதாரக் கொண்டாடுகிறவர்கள் கண்ணுக்கெட்டின தூரத்திற்கு யாருமே இல்லை.
,
நான் ஏர்வாடி S.I. சுல்தானை  வாழ்த்துகிறேன்.
எல்லோரும் அவரவர் கண்ணாடியில் அவரவர் முகத்தைப் பார்க்கிறோம்.
அவரவர் ஊதுகுழல்களை ஊதுகிறோம். அவரவர் பாடல்களை மட்டும் இசைக்கிறோம்.  சுல்தானின் காரியம் சுல்தான் அல்ல. அவருடைய செயல் நாஞ்சில் நாடனை வரைவது. கொஞ்சம் கூட, அதிகப்படியான கூடுதலான ஒப்பனைகளை அவர் நாஞ்சிலுக்குச் செய்வதில்லை. நாஞ்சில் எந்த அளவுக்கு, எத்தனை பற்கள் தெரியச் சிரிப்பாரோ, அவ்வளவுதான். எத்தனை நரையோ அவ்வளவுதான். நாஞ்சில் எப்படி இருக்கிறாரோ அப்படி. அவர் எழுத்து எப்படி இருக்கிறதோ அப்படி.  ஊதிப் பெருக்கின எந்த அனாவசிய  பிம்பங்களையும் . அவர் கட்டமைப்பதில்லை. மற்றவரின் எந்தக் கேலிச் சித்திரங்களையும் மறந்தும் வரைவதில்லை.

நாஞ்சில் நாடன் எப்படிச் செயல்படுகிறாரோ, அப்படி மட்டுமே சுல்தானின் வலைத் தளமும் செயல் படுகிறது.  நெருடலும் இல்லை. திகட்டலும் இல்லை. அர்ப்பணிப்பு மட்டுமே. வேற்று மொழிகளில், மேலை இலக்கிய வெளிகளில். சுல்தானைப் போன்ற முன் உதாரணங்கள் இருக்கலாம்.  தமிழில் இல்லை. தமிழில் சுல்தான் மட்டுமே.

நான் ஏர்வாடி S. I. சுல்தான் என முழுதாக, மனமார உச்சரிக்கிறேன்.  அது கூட, நாஞ்சில் நாடன் என உச்சரிப்பது போலத்தான் இருக்கிறது.

%


8 comments:

  1. வாழ்க்கைல உங்கள மாதிரி இருந்துட முடியணும்சார். :)

    ReplyDelete
  2. நாஞ்சில் நாடனை கொண்டாடும் சுல்தான், சுல்தானை கொண்டாடும் வண்ணதாசன் ..

    இந்த உறவுதான் எவ்வளவு அற்புதமானது !

    சுல்தானை போல எழுத்தாளர்களை கொண்டாடும் வாசகர்கள் இருக்கும் வரை தமிழ் இலக்கியம் பிழைத்து கொள்ளும் என்றே தோன்றுகிறது.

    "நல்லா இருங்க சுல்தான் "

    பரணில் வீசப்பட்ட "மாசு " என்கிற அழகிய தமிழ் சொல்லை மீட்டு எடுத்தது " மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்" என்பார் சுஜாதா.

    "ஆவலாதி" யும் அப்படித்தான். கேட்டு எவ்வளவு நாளாயிற்று... ஆற்றாமை ...ஆத்தாமை ஆகி , ஆவலாதி யாக உருமாறி இருக்குமோ?

    உங்கள் ஆவலதியை பற்றி நாஞ்சில் அவர்களிடம் தெரிவித்தேன். எழுதிவிட்டார் அல்லவா , அத்தோடு அவரது ஆவலாதி தீர்ந்து விடும் என்று சொன்னார்.

    இந்த நட்பு தான் எவ்வளவு அற்புதமானது !..

    ReplyDelete
  3. கோடானு கோடி நன்றிகள் சார்
    உண்மையாக தமிழை வளர்ப்பவர்கள்
    சுல்தான் மற்றும் அழியாச் சுடர்கள் ராமும் தான்

    ஆயிரம் கிளிஞ்சல்கள் உள்ள தமிழ்ப் பதிவுலகில்
    இருக்கும் நன்முத்தும் வலம்புரிச் சங்கும் இவர்கள்

    http://azhiyasudargal.blogspot.com/2012/08/blog-post_28.html

    ReplyDelete
  4. உங்களுக்கு மிகப் பெரிய மனது சார். ஏனோ சுல்தான் அவர்களைப் பற்றி வாசிக்கும் போது வானம்பாடிகள் நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை.

    ReplyDelete
  5. நேரி்ல் அழைத்து பாராட்டினால் கூட
    இப்படியொரு வரலாறு, சுல்தானுக்கு கிடைத்திருக்குமா தெரியாது. அருமை.

    வாழ்த்துகள், அண்ணாச்சிக்கும். சுல்தானுககும்.

    ReplyDelete
  6. ம்ம்ம் பெறுமையாக இருக்கிறது எங்களுக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.....

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் பெருமை படுத்தியவருக்கும் ,பெருமைபட காரணமாக இருந்தவருக்கும் ,பெருமை பட்டவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  8. நீங்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் அந்த சுல்த்தான் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி...

    ReplyDelete