Tuesday 21 August 2012

ஒரு நகரும் சருகு ஒரு ஊர்ந்துசெல்லும் நத்தை,







வெளியேறமுடியாத அவள்.
-------------------------------
அனுமதி கோரவில்லை.
அவனாகத் திறந்துகொண்டுவந்தான்.
வந்ததன் பின் கதவை மூடவும் இல்லை.
ஒரு சருகு தரையுடன் நகர்ந்து
உள்ளே வந்ததைப் பார்த்து
‘படுத்துகிறது அதுஎன்றான்.
பரவிக்கொண்டிருந்த
பீம்சேன் ஜோஷியின் தரவிறக்கம் முடியும்வரை
புதைந்திருந்தான் அவரைப் பை இருக்கையில்.
ஏற்கனவே மது அருந்தியிருக்கவும் இல்லை.
அது குறித்த வேண்டுதல்களும் இல்லை.
ஏப்ரல் மாதத்தில் இருந்த படக் காலண்டரை
நடப்பு மாதத்திற்கு மாற்றினான்.
புத்தக வரிசையில் ஒளித்துவைத்திருந்த
புகைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு
மறுபடியும் வரிசையில் இட்டான்.
இரண்டு சிகரெட்களை மட்டும்
உருவி எடுத்துக் கொண்டான்.
சொல்லிக்கொள்ளவில்லை. புறப்பட்டான்.
போகும்போது நான் கேட்டுக்கொண்டேன்
கதவை மூடச் சொல்லி.
மூடவில்லை.
திறந்தே இருந்த வாசலுக்குத்
திரும்புவதா வேண்டாமா என
யோசிக்கத் துவங்கியிருந்தது
அவனுக்குப் பின்னால் உள்ளே வந்த
ஒற்றைச் சருகு.
வெளியேறமுடியாமல்
புத்தக வரிசைக்குள் துடித்துக்கொண்டு
இருந்திருக்கக் கூடும்
அவளுடைய புகைப்படம்.

%





அசையும் உணர்கொம்புகள்.
-------------------------------------------------
மரணம் கலைத்துபோட்ட
பிளாஸ்டிக் நாற்காலி வரிசையில்
தனித்திருந்தேன்.
அந்தக் குழந்தை என்னிடம் வந்து
‘தாத்தா, எனக்கு நத்தை வேண்டும்
வேப்பமரத்தைக் காட்டிக் கேட்டது.
ஒரு மஞ்சணத்திக்காய் போல
அப்பியிருந்த நத்தையைப்
பிய்த்து எடுத்துக் கொடுத்தேன்.
பிஞ்சு உள்ளங்கையில்
பயணமற்றுக் கிடந்தது நத்தை.
‘வெயிலில் விடுஎன யாரோ சொன்னார்கள்.
புல்லில் விடச் சொன்னேன் நான்.
வெயிலும் புல்லுமற்ற
தண்ணீர் கசியும் ரப்பர்குழாயின்
நெளிவின் மத்தியில் இட்டது அதை.
சற்றுக் காத்திருந்தது.
கையை விரித்து, உதடு பிதுக்கி
நத்தையுடனான அதனுடைய ஒப்பந்தத்தை
ரத்துசெய்து, குழந்தை நகர்ந்தது
வேறோரு உலகம் சிருஷ்டிக்க.
வெடித்துக் கதறியபடி இறங்கி
வாகனக் கதவு திறப்பவரிடம்
தரையில் கிடந்த வெயில் ஓடிப்போகையில்,
காணாமல் போயிருந்த வேப்பமர ஞாபகத்துடன்
ஊர்ந்துசெல்லத் துவங்கியிருந்தது
உணர்கொம்புகள் அசையும் நத்தை.

%

கல்யாண்ஜி

4 comments:

  1. நத்தையுடனான அதனுடைய ஒப்பந்தத்தை
    ரத்துசெய்து, குழந்தை நகர்ந்தது
    வேறோரு உலகம் சிருஷ்டிக்க.

    அருமை சார்.

    ReplyDelete
  2. கலாப்ரியா அவர்களின் வின்
    பேஸ் புக் பக்கம் மூலம்
    நாளை (22-08-2012) உங்களின் பிறந்த நாள் என்பதை அறிந்தேன்

    கொண்டாடுவீர்களோ, இல்லையோ தெரியாது
    இருந்தாலும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள்

    ReplyDelete
  3. பிறந்த நாள் நல் வாழ்த்துகள் சார்.:)

    ReplyDelete