Tuesday, 25 December 2012

மீனுரை




சந்தியா பதிப்பகம் வெளியிடயிருக்கும் என் கவிதைத் தொகுப்புக்கான என்னுடைய முன்னுரை.





மீனைப் போல இருக்கிற மீன்.
               கல்யாண்ஜி



மெய்ப்புத் திருத்த அனுப்பியிருக்கிறார்கள்.
திருத்த வேண்டுமா என்றிருக்கிறது. எல்லாப் பிழைகளையும் நான் திருத்திவிடமுடியுமா? நான் செய்த பிழைகளை நானே திருத்தும் போது, ஏதோ ஒரு கட்டத்தில், ஒரு இருபது அல்லது இருபத்தி இரண்டாம் பக்கத்தில், என் பிழைகளை நானே ரசிக்கவும் ஆரம்பித்து விடுகிறேனே என்ன செய்ய?
7ம் பக்க்ததில் முதல் கவிதையின் அச்சடிப்பு இருக்கிறது. 6ம் பக்கம் காலியாக இருக்கிறது ,  ஒரு எழுத்து. ஒரு புள்ளி கூட அற்ற வெள்ளையாக. அதற்கு முந்திய 1 முதல் 5 பக்கங்களை, இதை எழுதுகிற இந்த நொடிப் பிளவில், யூகிக்கமட்டுமே வேண்டியதிருக்கிறது. மற்றவர்களையும் உள்ளடக்கி, பொதுவாக எல்லாக் கவிதைகளையும் பற்றிச் சொல்ல எனக்கு வக்கு இல்லை.
என்னுடைய இந்தத் தொகுப்பின் கவிதைகளுக்கு முன்னாலும் இப்படி யூகிக்கவேண்டிய, காலியான பகுதிகள் இருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.  முன்னாலோ பின்னாலோ அப்படி இருந்தால்தான் என்ன என்றும், அப்படி இருப்பதுதானெ இயல்பு என்றும் கூடக் கேட்கவும் சொல்லவும் செய்யலாம். நானோ, என் வாழ்வோ எந்தப் பிழைகளும் இன்றி, எந்தக் காலியிடங்களும் இன்றி, எந்த யூகங்களும் அவசியப்படாமல் அப்படியே மெய் மிகுத்து, துலாம்பரமாக் நிரம்பி வழிகிறோமா என்ன? ஒரு மேல்நிலைத் தொட்டி போல நிரம்பிக் கொண்டு, தேவைப்படுகிற நேரங்களில், தேவைப்படுகிற குழாய்களைத் திறந்துவிட்டுக் கொள்வது போல என்னுடைய கவிதைகள் இருக்குமெனில், அது மாநகராட்சிக் குடிநீர் வாரியம் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டிய விஷயமே தவிர, ப்ளீச்சிங் பவுடர் வாடையடிக்கிற அந்த சுத்தீகரிக்கப்பட்ட கவிதைகளை வைத்து நான் என்ன செய்ய?

போன டிசம்பரில் இருந்து, அனேகமாக இந்த 2012 ஆகஸ்ட் இறுதி வரை இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளையும், இதற்கு மேல் பத்துப் பன்னிரெண்டையும் நான் எழுதியிருப்பேன். இரண்டோ மூன்றோதான் சிறுகதைகள் எழுத முடிந்தது என்ற சிறிய கவலை ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்கிற சிறிய சந்தோஷமும் இருக்கவே செய்கிறது. எப்போதுமே பெரிதினும் பெரிதுதான் கேட்க வேண்டுமா? அப்புறம் சிறிதினும் சிறிதை யார் கேட்பது? அப்படிச் சிறிதினும் சிறிதைக் கேட்கிற ஒருவனாக இருப்பதிலும், அப்படி இருந்து இவற்றை எழுதியதிலும் எனக்கு மகிழ்ச்சிதான்,

இது மழைக்காலம். ஐப்பசி முடியப் போகிறது. சரஸ்வதி பூஜைக்கு முன்னால் கொஞ்சம் மழை பெய்தது.  கொஞ்சம்தான். அந்தக் கொஞ்ச மழையை முதலில் புல் கொண்டாடுகிறது. அதற்குப் பின் கொழுஞ்சி தன் கருநீலச் சிறு பூக்களால். பத்து நாட்கள் போனால் தரையோடு தரையாய் மஞ்சட் பூக்கள். பெயர் தெரியாத தாவரங்கள் தன் சின்னஞ்சிறு வெள்ளைப் பூக்களுடன் அடுத்து கொண்டாட்டத்தின் வரிசையில் நிற்கும். போகப் போக, தும்பை பூத்துவிடும். ஈசல் பறந்த வெளியில் தட்டான்கள். என் புல், என் கரு நீல, என் மஞ்சள், என் வெள்ளை, என் தும்பை முளைத்தும் பூத்தும் கிடக்கிற இவற்றின் இடையே தான், என்னுடைய நீண்டகால ஒற்றையடிப் பாதை வளைந்தும் நெளிந்தும் வகிடெடுத்துக் கிடக்கிறது, காளான்கள் பார்த்தபடி.


இவை எழுதப்பட, ‘உயிர் எழுத்து’ சுதீர்செந்தில் மட்டுமே காரணம். அவருடைய சென்ற பிறந்த நாளில் நான் அவருக்கு வாழ்த்துச் சொல்லும் போது, ‘எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசு தருவீர்களா சுந்தரம்?’ என்றார். நான் இந்த பிறந்ததினக் கொண்டாட்டங்கள், வாழ்த்துச் சொல்லல், பரிசு கொடுத்தல் எல்லாம் அவ்வளவாய் பழகாதவன். வரவர எல்லாவற்றையும் தானே பழகிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஒரு பிறந்த நாள் தொடர்பான் சந்தோஷமான உரையாடலில் ஜாக்கிரதை உணர்வு எல்லாம் இருக்காது அல்லவா? ‘ சொல்லுங்க சுதீர்’ என்றேன்.
’2012  உயிர் எழுத்து முழுவதற்கும் கடைசிப் பக்கக் கவிதைகள் எழுதவேண்டும். பத்தில் இருந்து பன்னிரண்டு தேதிக்குள் எனக்குக் கவிதைகள் கிடைத்தால் போதும்’ என்றார். ஒப்புக் கொண்டேன். கல்யாணி.சி என்ற பெயரில் வெளிவரட்டும் என்று நானே அவரிடம் கேட்டுக்கொண்டேன். பெயர்தான் ஜாடையா என்ன? இத்தனை வருடங்களாக எழுதுகிற எழுத்தின் ஜாடையைத் தெரியாமலா போவார்கள்? அப்படியெல்லாம் ஒன்று தெரியாமல் போகாது. தெரியாதது போல வேண்டுமானால் இருப்பார்கள். அப்படி இருப்பவர்களுக்காக, நான் என் கூர்நுனிக் குறைவான மூக்கால் நுகராதும், இடைவெளியுள்ள முன் பற்களால் சிரிக்காதும் இருக்க முடியுமா?  நான் தேடியடைந்ததை, என்னைத் தேடி வந்ததை, எனக்குக் கிடைக்கிறவைகளைக் கண்டு, கேட்டு, உண்டு, உற்று, உயிர்த்தபடி இருக்கிறேன் எனில், அந்த உயிர்ப்பின் ஜாடை என் சொல்லில் இல்லாதா போகும்?

என் எல்லைகளை நான் அறிந்திருக்கிறேன்.
எழுதுகிறவனுக்கு எல்லைக் குறைவுகளும் இல்லை. எல்லை நிறைவுகளும் இல்லை. அது ஒரு மாயத் தொலைவும் மாய இருப்பும் உடைய தபசில் சொத்து. நான் குடியிருக்கிற வீடு எத்தனை சதுர அடி என்றால் எனக்குத் தெரியாது. நாங்கள் புழங்கப் போதுமானதாக இருக்கிறது. நீங்கள் வந்தால் உட்கார இடம் உண்டு. எங்கள் அப்பா படுத்திருந்து ஓய்வெடுக்கிற நிலையில்  தன் இத்தனை எண்பத்தேழு வருடங்களையும் திரும்பிப்பார்த்து அசைபோடும் கட்டிலை இட, ஜன்னலும் வெளிச்சமும் நிரம்பிய இடம் உண்டு. சங்கரி பொறுக்கிய முதல் காக்கைச் சிறகும், எதுவும் அணியாது ஒரு சிறிய பிரம்பு நாற்காலியில் கை ஊன்றி ஒரு அப்பழுக்கற்ற சுடர் போல ராஜு நிற்கும் அந்த ஐஸோலி காமெரா புகைப்படமும் இங்கேதான் எங்கோ இறந்தகாலத்தின் இழுப்பறை ஒன்றில் இருக்கும். அர்ச்சனாவோ அல்லது ஆதித்யாவோ ஒளிந்துவிளையாடத் தோதுவான மூலைகளை அவர்களே இங்கே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். நான் உட்கார்ந்து மழை பார்க்க வெள்ளை நிற பிளாஸ்டிக் நாற்காலி இருக்கிறது. அடிக்கடி வகை மாறும் சாம்பல் பூனைகள் நடமாட மதில் சுவருக்குக் குறைவில்லை. நேற்று என்ன கிழமை? புதனா?‘ அய்யா. லெப்பர் அய்யா’ என்ற நகமற்ற குரலுடன் நான்கைந்து தொழுமுகங்கள் என்னைக் கூப்பிட ஒரு வாசல் இருக்கிறது. புருவம் அடர்த்தி குறைந்த அந்த வளர்த்தியான மனிதரின்சிரிப்பு வெயில் போல் பளீரென்று அடித்து மங்கி நிழலாடி அவருடன் நகர்ந்துவிடுகிறது உடனடியாக. பக்கத்து வீட்டு தீபாவளி வெடிகளின் உதிரித் தாள் சிதறிக் கிடக்கும் கோலத்தின் மேல் நரம்பு புடைத்த ஒரு சருகு இலை இவையெல்லாவற்றையும் விட, எனக்கு அல்லது அவளுக்கு மனது முட்டிப் போய் பெருமூச்சு விட, தனித்தனியாகக் கண்ணீர் பெருக்கிக் கொள்ள அவரவர்க்கான பிரத்யேக இடங்கள் உண்டு. போதாதா என்ன?

இந்த இடங்களை உணர்ந்தவனுக்கு எந்த இடங்களையும் உணர முடியும்தானே. மனது அளவைமானியாகி விடுகையில், உப்புக் கல்லில் கடலோசை கேட்காமலா போகும். பேருந்தில் போகும் நமக்கு, சாலையோரத்தில் எங்கோ காகிதம் கருகும் வாடை நூலகம் எரியும் என்னென்ன பதற்றங்களைச் சில சமயம் உண்டாக்கிவிடுகிறது. ஊஞ்சல் கட்டின, நிலைக்கண்ணாடி இருக்கிற ஏதோ ஒரு பூர்வீக வீட்டில் எப்போதோ அவித்துக் கிண்டியிருந்த நெல்லை வந்து வந்து கொத்திப் போகும் சிட்டுக் குருவி அமர்ந்த ஜன்னல்கதவின் விளிம்பில் நான் ஏன் இப்போது உட்கார்ந்து சிறகு கோதுகிறேன்? நான் எங்கெங்கெல்லாம் பறந்திருக்கிறேன்.  என்னென்னவெல்லாம் என் முன் விசிறப்பட்டன?

கலாப்ரியாவுக்கும் சுகுமாரனுக்கும் சமயவேலுவுக்கும் தேவதச்சனுக்கும்  ரமேஷிற்கும் ஒரு சிறிய பறவை போல, அவர்களின் முற்றத்தில் நான் தானியம் பொறுக்குகிற அலகுடன் நடமாடுகிறேன் என்று தெரிந்திருக்காது. இளைய பாரதியும் யுவன் சந்திரசேகரும் மாலதி மைத்ரியும் குட்டி ரேவதியும் அவர்கள் கொடிக் கம்பியில் உலரும் துணிகளின் மேல் இட்டிருக்கும் எச்சம் என்னுடையது என்பதை அறியமாட்டார்கள். மனுஷ்யபுத்திரனும் லட்சுமி மணிவண்ணனும் கரிகாலனும் யவனிகா ஸ்ரீராமும் பிரான்சிஸ் கிருபாவும் அவர்களின் அசையும் கிளைகளில் ஒரு சிறு பொழுது அமர்ந்துவிட்டுப் பறந்து போயிருக்கும் என் சாயலைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அதே பறவையாக, அதே அலகால்தான் எஸ்.செந்தில்குமார் அல்லது முகுந்த் நாகராஜன் அல்லது சங்கர ராம சுப்ரமணியன் அல்லது ராணிதிலக்கின் அல்லது இசையின் முற்றங்களிலிருந்து என் தானியங்களைச் சேகரித்துக்கொண்டே போகிறேன்.
இதோ இதை எழுதுவதற்கு முந்திய இரவில் வாசித்துப் பார்த்த
சாம்ராஜின் முதல் தொகுப்புக்கான கவிதைகள், அதைவிடவும் அதற்கான முன்னுரை உண்டாக்கிய பெரும் அதிர்வு இன்னும்
தணியாமல் இருக்கிறது. ஒருவகை சிலிர்ப்பு நிரம்பிய இந்தச் சமயத்தில் மிகுந்த நெருக்கத்துடன் சாம்ராஜுக்கு நல்வரவு சொல்கிறேன்.
என்னுடைய இந்தத் தொகுப்பின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தவர்
என்பது மட்டுமல்ல, சலனங்கள் மிக்க, சமீபத்திய என்னுடைய தனிப்பட்ட பத்தாண்டு வாழ்வில் படர்ந்த  இருட்டையும் வெளிச்சத்தையும் மற்றெவரையும் விட மிக அதிகமாக அறிந்தவர் அவர். இந்தத் தொகுப்பை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
இக்கணம் என் அலகில் இருப்பது அவருடைய தானியமே.


கல்யாணி.சி                              19.சிதம்பரம் நகர்
15.11.2012.                                பெருமாள்புரம்
                                         திருநெல்வேலி-7.


Monday, 24 December 2012

தக்கையின் மீது ஆயிரம் கண்கள்.






எதிர்வரும்  புத்தக விழாவையொட்டி, சந்தியா பதிப்பகம் என்னுடைய சமீபத்திய கவிதைகளின் தொகுப்பாக இருக்கும் “ மீனைப் போல இருக்கிற
மீன் ” புத்தகத்தை வெளியிடுகிறது.

'உயிர் எழுத்து’வில் வந்த கவிதைகளும், உயிர் எழுத்துக்காக எழுதிய கவிதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் அடங்கியது இது.
சென்ற டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த ஆகஸ்ட் வரை நான் தொடர்ந்து வெவ்வேறு மனநிலையில் , வெவ்வேறு கவிதைகளை எழுதிவந்திருக்கிற
என்னுடைய  வாழ்நிலை, வெறும் மூன்றே மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதுவதற்கே அனுமதித்தது அல்லது  போதுமானதாக  இருந்தது.

சென்ற வருடம் துவங்குகையில், நான் அடுத்தவருடத்திற்கு ஒரு சிறுகதைத்
தொகுப்புக்குரிய கதைகளை எழுதிவிடும் ஆசையிலேயே இருந்தேன். அந்த ‘ஒளியிலே தெரிவது’ தொகுப்பில்  நான் அடைந்திருந்த ஒரு குறிப்பிட்ட நகர்வு மேலும் நான் நகர்ந்துசெல்வதற்கான அல்லது நகர்ந்து செல்வேன் என்ற  விழைவை என்னிடம் உண்டாக்கியிருந்தன.இதற்கு முன்பும் நான்
இப்படியெல்லாம்  தொடர்ந்து கதைகள் எழுத ஆசைப்பட்டிருக்கிறேன்,  அதை
 அடையாமல் என்னை நானே ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறேன். அதைக்
குறித்து அதன் பின் எந்தக் கவலையும் அடைந்ததில்லை. ஆனால், முதல் முறையாக, கடந்த வருடம் நான் எழுதாமல் போன கதைகளுக்காக நான்  இந்த,  இதை எழுதும் மார்கழி இரவில் , மிகக் கூர்மையான தவிப்பை உணர்கிறேன். செயலற்றுக் கழிகிறதோ என் காலம் என்ற கேள்வி கூட பெரியஎழுத்துக்களில் எனக்குள் உண்டாகிறது.

என் எழுது மேஜையில் நான் இதற்காகக் கவிழ்ந்து படுத்து துக்கிக்கையில் என் தோளில் விழுந்து ஆறுதல் படுத்தும் கையாக இந்த ”மீனைப் போல இருக்கிற மீன்” தொகுப்பு இருக்கிறது. “நிலா பார்த்தல்” தொகுப்பு வரை என்னிடமிருந்த குரல் சற்று வேறுவிதமாகத் துவங்கியது, “உறக்கமற்ற மழைத் துளி’ என்ற தொகுப்பிலிருந்துதான். அதற்கு அடுத்து, “இன்னொரு கேலிச் சித்திரம்”. சென்ற புத்தக்க் காட்சியில், “மணல் உள்ள ஆறு”. இப்போது இது,

நான் முன்பை விடவும் மனிதரிடம், மரங்களிடம், பறவைகளிடம், எதிர்ப்படும் உயிர்களிடம் நெருங்கியிருக்கிறேன், அப்படி நெருங்குவதன் மூலம் எனக்கும் வாழ்வுக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறேன் என்பதை இந்தக் கவிதைகளை மீண்டும் வாசிக்கையில் நானே உணர்கிறேன்.

                                                 சில சமயம் கடலைப் போல
                                                 சில சமயம் ஆற்றைப் போல
                                                 ஓடையைப் போல
                                                 கிணற்றைப் போல
                                                 கண்ணாடித் தொட்டியைப் போல
                                                 சுருக்கமாக
                                                 நீரைப் போல இருக்கிற மீன்
                                                 மீனைப் போலவும் இருக்கிறது
                                                 தூண்டில் தருணங்களில்.


சில சமயம் நான் ஓவியனைப் போல, சில சமயம் நான் கவிஞனைப் போல, சிலசமயம் சிறுகதையாளனைப் போல இருக்கிற நான், என்னைப் போலவே இருக்கிறேன், இந்தத் தொகுப்பில்.

என்னுடைய தூண்டில் தருணம் இது.





Saturday, 22 December 2012

செப்பேலோ...

அதற்கு மேல் ஞாபகம் வரவே இல்லை.
திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்க்கிறேன். “போய பிழையும், புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும், செப்பேலோர் எம்பாவாய்”. அதற்கு முந்திய
எந்த அடிகளும் வரிசைகலைந்து கூட, பக்கத்தில் நெஞ்சுக்கு எட்டின தூரத்தில் காணோம்.

ஏற்கனவே பனிக் காலம். அதிகாலை மழையும் சேர்ந்திருந்தது. பனிக்கு ஒரு குளிர். மழைக்கு ஒரு குளிர். குளிரும் குளிரும் சேர்ந்த தீக்குளிர். இன்று சற்று பிந்தித்தான் நடக்க ஆரம்பித்திருந்தேன். தரையெங்கும் புல்லும் புல்லிடை மஞ்சட் பூவும். இந்தச் சிறு பூக்களின் களங்கமின்மை சூரியனை மறக்கடிக்க வைக்கிறது. இந்தப் பூவின் பெயர் தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பார்கள்.  ஒரு ஆதிச் சித்தர் நிச்சயம் இந்த மஞ்சட் பூப் படுகை பற்றிப் பாடியிருப்பார்.
நான் ஒரு முன் பனிக்காலத்தில் கண்மூடுவேன் எனில், என் மேல் தூவப்பட
விரும்பும் பூக்கள் இவையே.

வழக்கமான தெருவில்தான் நடக்கிறேன். வழக்கமாக எதிர்ப்படுகிறவர்தான் எல்லோரும். ஆனால் அவர் வழக்கமானவர் இல்லை. ஆனால் தெரிந்தவர். ஒரு  உல்லாசமான மன நிலையில் இருந்திருக்கவேண்டும்  என்பது அவர் உடையில் தெரிந்தது. இந்தப் பக்கம் அதிகம் அணியக் காணமுடியாத அந்த லக்னோ குர்த்தாவை இந்தக் காலைக்குத் தேர்ந்திருந்தார்.’எங்கே இந்தப் பக்கம்?’ என நானும் கேட்கவில்லை. அவரும் கேட்கவில்லை. இதுபோன்ற வெற்றுக் கேள்விகளைக் கேட்காமல் இருக்கும்படி செய்திருந்தது அந்தக் குளிர்ந்த காலை. புன்னகைத்துக் கொண்டோம். அவர் சிரிப்பில் அவரின் இந்த உடை குறித்த சிறிய வெட்கம் இருந்தது. அவரவர் திசை சொல்லும் கைகாட்டிகள் அந்தப் புன்னகையில் அம்புக் குறியிடப்பட்டிருந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பின் நான்கைந்து  பஞ்சரட்டைக் குருவிகள் தெருவின்  இரண்டுபக்கக் கம்பிகளிலும்.  ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல, எந்தச் சாபமும் இடாது தியானம் கலைத்து மறுபடி உறங்கிய  அந்த மூன்று நாய்களை, அதன் கழுத்து அசைவை இப்போது வரையத் தோன்றுகிறது. உறைந்த கடல், ஒருகணம் உருகி,ஒரே  ஒரு அலையடித்து என் கால் வரை எறிந்து, மறுபடி உறைந்துவிட்ட அசைவு அது.

சற்று நீண்ட தொலைவுக்கு யாரும் எதிர்ப்படவில்லை.  வேறு எதையும் பார்த்த நினைவில்லை. இரண்டே இரண்டு பூவரசம் பூ மட்டும் என்று சொல்ல
ஆசை. அப்படிச் சொன்னால் அது வேறொரு தினம் பார்த்த பூவை நேற்றில் ஒட்டவைப்பது ஆகிவிடும். செம்மண் மைதானம் விரிந்து கிடந்தது. எது எல்லாம் நம் முன் விசாலமாகக் கிடக்கிறதோ, அது எல்லாம் நம்மை மேலும் விசாலம் ஆக்குகிறது தானே.  நான்குசக்கர வாகனப் பயிற்சியில் ஈரச் செம்மண் உழுதுபோடப்பட்டது போல வட்ட,நீள்வட்டத் தடங்களுடன் கிடக்கிறது.  யாருமே இல்லை. வேறு ஏதோ ஒரு பூகோளத்தைப் பெயர்த்துத் துண்டாக்கி இங்கே வைத்துவிட்டுப் போனதாக அந்தச் செம்மண் தரை அந்த வாகனத் தடங்களுக்குள் சுழல்கிறது.

என் காலடியில் ஒரே ஒரு இலை. கொய்யா இலை போல, சற்றுத் தடித்த நரம்புகள் உடைய, மொரமொரப்பான இலை. ஒரு  ஒற்றை இலை மட்டும். நான் அதை உதிர்த்த மரத்தைப் பார்க்க விரும்பினேன். முடிந்தால், அந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் சிறுபறவைகளைக் கூட.

எதிரே வந்தவர் கூட ஒரு பறவை போலத் தான் இருந்தார். வெகு தூரம் திசை தப்பிப் பறந்துகொண்டே இருக்கிற களைத்துப் போன பறவை. முப்பது முப்பத்தைந்து வயது தான் இருக்கும். தனக்குத் தானே பேசிக்கொண்டு செல்கிறவர்களை மேற்கு மாம்பலத்தில் பார்த்திருக்கிறேன். இங்கு அபூர்வம்.
“எல்லாம் ஓப்பன் சீக்ரெட் ஆயிட்டுது. ஓப்பன் சீக்ரெட்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே போனார். என்னைத் தவிர யாருமற்ற அந்தப் பிரதேசத்தில், அவருடைய அந்த திறந்த ரகசியத்தைத் தாங்கமுடியாமல் துடித்து அந்த ஒற்றை இலை மட்டும் சற்று நகர்ந்திருக்கக் கூடும்.

எதிரே நாம் கண்டடைவதை எல்லாம் தொலைத்துவிட்டு, உள்ளே வேறு ஏதோ ஒரு தேடல் நடந்துகொண்டிருந்ததில், “வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து” என்ற வரி பிடிபட்டு, ஏற்கனவே வசப்பட்ட இரண்டு அடிகளுடன் சேர்ந்துகொண்டது.

நுனிக்கொம்பிலிருந்து அடிமரத்துக்கு இறங்குகிற பித்தத்தில்  பாசுரத்தின் விழுதில் தொங்கி வேருக்குப் போகிற முயற்சி. அந்த மூன்று வரிகளை மட்டும் சொல்வது ஒரு விளையாட்டுப் போல் ஆகிவிட்டது. மைதானம் முடிகிற இடத்தில் வலது புறம் திரும்பினால் தென்றல் நகர். அதையும் தாண்டினால், பாரதி நகர் மூன்றாம் தெரு. அதற்குள் முழுதும் ஞாபகம் வராமலா போகும்?
இடது புறப் பச்சையைப் பார்த்துக் கொண்டே போகிறேன். அப்படி ஒரு அடர்த்தியுடன் புல் முளைத்துக் கிடக்கிறது. மழைக்குப் பிந்திய தாவரங்கள் பனிக்காலத்தில் பூப்படைந்து விடுகின்றன. கரும்பச்சை மினுமினுப்புடன் புல்லே பூவாகத்தான் இருந்தது.

புல்லுக்கிடையில் வெள்ளையாகப் பூத்தது போல ஏதோ கிடந்தன. ‘கொக்குப் பூத்த வயல்’ என்ற தேவதேவன் வைத்த நாவல் தலைப்பு ஞாபகம் வந்தது. வயலுக்கு மேல் நாரைகள் பறக்கிற, அவரவர் பார்த்த காட்சிகள், உங்களுக்கும் எனக்கும்  இப்போது வந்திருக்கும்.  தூரத்தில் ஒரு அவுரிச்செடி அசைவு. நாம் தூரத்திலும் பக்கத்திலும் பார்க்கிறவர்கள். சில பொழுதுகளில் தூரமே அற்றும்
பக்கத்திலிருந்து விலகியும்.

புற்களின் இடையில் சுக்கல் சுக்கலாகக் கிடந்தது ஒரு கடிதம். அப்போதுதான் கிழித்து எறியப்பட்டிருக்கக் கூடிய பீங்கான் வெள்ளையில் அவை எந்தச் சிறு கசங்கலும் இன்றி, பச்சை வலையில் பிடிக்கப்பட்ட  வெள்ளைச் சதுர மீன்களாக வாய்பிளந்த தன் கடைசிச் சுவாசத்தில் தவித்துக்கொண்டிருந்தன.
யார் யாருக்கு எழுதிய கடிதமோ? எழுதியவரோ பெற்றவரோ முழுதுக்கத்துடன் அல்லது முழு வெறுப்புடன் கிழித்து வீசியிருக்க வேண்டும். விரல் நுனி வரை பரவியிருந்த ஆவேசத்துடன், இதற்கு மேல் அடைய வாய்ப்பற்ற ஆகச் சிறிய
துணுக்குகளாக அவை அப்படிக் கிடப்பது எனக்கு ஏன் அவ்வளவு பதற்றம்
உண்டாக்கியது என்று இப்போதுவரை தெரியவில்லை.

அடுத்த பத்தாவது அடியில், நனைந்து கருத்த தார் மினுங்கும் ஜல்லிக்கல் பாதையில்  பவளம் உருள்வது போல், ஒரு வெல்வெட் பூச்சி இடமிருந்து வலமாக நகர்ந்துகொண்டிருந்தது.

நான் வருவதை அவர்கள் பார்த்துவிட்டார்கள். எனக்கு எதிரே வருவதற்கு அவர்களுக்குச் சம்மதமில்லை. முக்கியமாக அந்த அம்மாவுக்கு. தன்னுடைய வீட்டின் அகலமான இரும்பு கேட்டிற்குள் தன்னையும் தன் மனவளர்ச்சியற்ற மகனையும் ஒளித்துவைத்துக் கொள்வது போல், உள் ஒடுங்கி நின்றார்கள். அந்த இருபது இருபத்தைந்து வயது ஆணின் முகம் இந்தக் காலையில் அவனுக்கு மட்டும் நட்சத்திரங்கள் உதித்துக்கிடக்கும் வானத்தில் போய் அமர்ந்திருப்பது போல் சிரித்துக்கொண்டிருந்தது. வெளியே வந்துவிடும் ஆர்வத்தில்  அந்த இரும்புக் கதவை நடுவில் பிளப்பது போல அவன் உந்தித் தள்ள, ஆதாரம் தவறி அந்தத் தாய், புகைப்படத்துக்கு சாத்திய மாலை அதன் ஒருபக்க ஆணியில் இருந்து அவிழ்ந்துதொங்குவதாக, சட்டென்று தன் பாதி உடலுடன் வெளியே சரிந்து, நிதானித்தது. விழுந்துவிடவில்லை. அத்துடன் விட்டிருக்கலாம். அந்தப் பையன் முகத்தில் வேகமாகக் கையை வீசி அடித்தது. நெஞ்சில் கைவைத்து மகனை உள்ளே தள்ளியதை  நான் பார்த்துவிட்டதும், அழ ஆரம்பித்தது.

எனக்கு மறுபடியும் புல்லுக்கு இடையில் சுக்கல் சுக்கலாகக் கிடந்த அந்த வெள்ளைத் துணுக்குகள் ஞாபகம் வந்தன. இதுவரை உச்சரித்துக்கொண்டு இருந்த வரிகள் உட்பட எல்லாவரிகளும்  தீயினில் தூசாகிவிட்டிருந்தன.

இப்போது செப்புவதற்கு ஒன்றுமே இல்லை என்னிடம்.

%