Sunday 1 March 2020

கொண்டாட்டத்தின் முதல் ஆளாக...


சுகா என்றால்  தான் எல்லோருக்கும் தெரியுமே. அவருடைய முன்னெடுப்பில் ஒரு கூட்டம். திருநெல்வேலி வட்டாரச் சொற்களைச் சேகரிப்பது குறித்து ஒரு பத்துப் பேர் பூர்வாங்கமாக உட்கார்ந்து பேசினோம். உதய சங்கர் எனது இடது பக்கத்து நாற்காலியில் இருந்தார்.

உதய சங்கரின் எழுத்துகளை எனக்குப் பிடிக்கும். என்னைப் பொருத்தவரை, த.மு.எ.க.ச அமைப்பின் இப்போதைய மிக நல்ல புனை கதை எழுத்தாளர் அடையாளம் அவர்தான்.  வழக்கமாக ‘இப்போ என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க சங்கர்? என்று கேட்பேன். வாசலில் ஏறி அறைக்குள் வருவதற்கு நடையேறும் வரை புகைத்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். அவரிடம் இருந்த சிகரெட் வாடை பிடித்திருந்தது.  அந்தக் கிறக்கத்தில் இருந்ததால் பேச்சுக் கொடுக்கவில்லை. அவரும் சும்மா இல்லை. ஒரு சீப்பை எடுத்து பஸ் பயணத்தில் கலைந்திருந்த சிகையை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தார். சீராகப் படிந்திருக்கிறதா எல்லோரும் விரல்களால் நீவிப் பார்த்துக் கொள்வோம் தானே.

அது முடிந்ததும் , மடியில் வைத்திருந்த  - இல்லை, அது நாற்காலிக் கால் பக்கம் தரையில் இருந்தது -- தோள்ப் பையிலிருந்து  அவருடைய சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான  ‘துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்’  புத்தகப் பிரதி ஒன்றை எடுத்து சுகாவிடம் கொடுத்தார். இன்னொன்று நாறும் பூ நாதனுக்கு என நினைக்கிறேன்.  மூன்றாவது பிரதியை என்னிடம் கொடுத்தார். மூன்றுதான் கொண்டுவந்ததாகச் சொன்னார்.  அதைத் தவிர இன்னொரு மிக அழகான புத்தகத்தைக் காட்டினார். கே.கணேஷ்ராம்  மொழிபெயர்த்திருக்கும்  ’காஃப்காவின் நுண்மொழிகள்’.  அதுவும் நூல் வனம் வெளியீடுதான். இவ்வளவு அழகான வடிவமைப்பில், கட்டுமானத்தில் பதிப்பிக்கப்பட்டிருக்கும் ஒரு தமிழ்ப்  புத்தகத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. சொல்லப் போனால், திருப்பிக் கொடுக்கவே மனசில்லை/.

‘எல்லாம் இப்போ எழுதினதா சங்கர்?’ என்று கேட்டேன். ‘ஆமா, அண்ணாச்சி. இது போக அஞ்சாறு இன்னம்  இருக்கு. அதை எல்லாம் திருத்தி எழுதணும்’ என்றார். ஏற்கனவே  பத்திரிக்கைகளில் வெளிவந்தது, இன்னும் வராதது எல்லாம் நிரந்து இருக்கிற தொகுப்பு என்று தெரிந்தது. நான் சங்கரிடம் சொன்னேன், ‘நானும் ஒரு ஒண்ணரை வருஷமா கதைண்ணு எதுவும் எழுதவே இல்லை. ஒருவேளை  இதிலே இருக்கிற உங்க கதையை எல்லாம் படிச்சால் ஏதாவது தோணுமே என்னமோ/’ என்றேன். உண்மையாகவே, அப்படி ஏதாவது ஒருத்தருடைய ஒரு கதை, அதிலிருக்கிற ஒரு வரி வந்து கதவைத் திறந்துவிட்டுவிடாதா என்று எனக்கு ஆசைதான்.

ஷோபா சக்தியின்  ’இச்சா’  வாசிப்பில் இருந்தது. 203, 204 பக்கங்கள் வந்திருந்தேன். வீட்டுக்கு வந்ததும் உதய சங்கர் தொகுப்பை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அவர் என்னை மாதிரி ஆள் இல்லை. இரட்டைக் கோடு போட்ட நோட்டில் எழுதமாட்டார்,  கோடு போட்டது போடாதது எல்லாவற்றிலும் எழுதுகிறவர். புதிது புதிதாகச் சோதனை பண்ணிக் கொண்டே இருப்பார். ‘துண்டிக்கப்பட்ட தலையில் தொகுப்பிலும் முதல் ஐந்து கதைகள் அப்படித்தான் இருந்தன.கொஞ்சம் திகட்டி விடுமோ என்று கூட. அப்படி எல்லாம் இல்லை என்று,   ஆறாவதாக ’அப்பாவின் கைத்தடி’   என்று ஒரு கதை வருகிறது.  அதன் கடைசி நான்கைந்து வரிகளையும், ’அப்படியே உறங்கிவிட்டாள் ஈசுவரி அக்கா’ என்று முடிகிற   வரியையும்  படித்த பிறகு  எப்படியோ ஆகிவிட்டது. அந்தக் காலம் என்றால், பஸ் பிடித்து உதய சங்கரைப் பார்க்கக் கோவில் பட்டி கூடப் போயிருப்பேன்.

அடுத்து வந்த ’கானல்’, ‘நொண்டிநகரம்’, ‘மரப்பாச்சிகளின் நிலவறை, கிருஷ்ணனின் அம்மா’  எல்லாம் ஒன்றை விட ஒன்று கூடுதலாகப் போய்க் கொண்டே போய் இன்னொரு உச்சமாக  ‘அன்னக்கொடி’.   கதை ஒருமாதிரி இப்படித்தான் முடியும் என்று தெரிகிறது, ஆனால் அந்த ‘இப்படித்தான் முடியும்’முக்கு முன்னால் அது எழுதப்பட்டிருக்கும் விதம்?.  கருப்பையாவின் வனத்தோடு  நேற்றிரவு வாசிப்பை முடித்துக்கொண்டேன்.

இன்றைக்கு ‘முதல் ஜோலியாக’ மீதி யிருந்த எட்டுக் கதைகளையும் வாசிக்க ஆரம்பித்தாயிற்று. பதிநான்காவது கதையான  ’அறை எண் 24 -மாயா மேன்சன்’  படித்ததும் மீண்டும் அந்த ‘அப்பாவின் கைத்தடி’   இடத்திற்கு மனம் போய்விட்டது. யாரிடமாவது இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று தோன்றி, நாறும் பூ நாதனுக்கு, உதய சங்கருக்கு, கடலூர் சுவாமி நாதனுக்கு எல்லாம் வாட்ஸாப்பில் கிறுக்குப் பிடித்த மாதிரி எதையோ அனுப்புகிறேன். மேலே இருக்கிற படம் கூட, மாயா மேன்ஷன் படித்தவுடன்  நானே என்னை எடுத்துக்கொண்டது தான். அதில் என் கண்கள் கொஞ்சம் மினுங்குவது மாதிரி இருக்கின்றன என்றால் அந்த மினுக்கத்தின் மாயம் உதயசங்கர்  கதைகள் உண்டாக்கியது.

எல்லோரும் தான் புத்தர் கதை எழுதிப்பார்க்கிறார்கள்.  ‘முதல் காட்சி’  அப்படி ஒரு கபிலவஸ்து, கௌதமன், யசோதா  கதையே. அது எழுதப்பட்டிருக்கும் விதம் ,தடாகம் பற்றி வரும் அந்த நீண்ட பத்தி,தேரோட்டி சன்னா  திறந்து வைக்கிற அந்த முதல் காட்சி.!  ஒரே மாதத்தில் இருபது கதைகள் எழுதினதாக உதயசங்கர் என்னிடம் நேற்றுச் சொன்னார். அதற்கு ‘ நீங்களும் அப்படி எழுதுவீங்க அண்ணாச்சி’ என்று  உற்சாகப்படுத்துகிற அர்த்தம்.  சாமி வந்து தான் வரிசையாக இப்படி எழுதியிருக்க வேண்டும்.

 ’புற்று’, ’’துண்டிக்கப்பட்ட தலையில் சூடியரோஜா மலர்’  ஒரு வகைச் சோதனை எனில், ’அந்தர அறை’, ‘நீலிச் சுனை’  இன்னொரு வகைச் சோதனை. எதுவும் வெற்றுச் சோதனை இல்லை. ஒன்றுமே இல்லாத நடைத் திருகலை வைத்து அந்தரத்தில் நடத்தும் பாவலா கிடையாது.  எல்லாம்  தரையோடு தரையாக, மனிதரோடு மனிதராக, வாழ்வோடு வாழ்வாக, அதனதன் அசலோடும்  புதிரோடும்  புனையப்பட்டவை. இந்த வாழ்வை விடச் சோதனை இருக்கிறதா என்ன?

’துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர்’  என்ற இந்த சிறுகதைத் தொகுப்புக்காக. , உதய சங்கர்  என்ற  கலைஞன்  கொண்டாடப்பட  வேண்டியவன்.  நான் அந்தக் கொண்டாட்டத்தை முதல் ஆளாகத் துவங்கி வைக்கிறேன்.

சொல்ல முடியாது, இதே கையோடு நான் மறுபடியும் கதை எழுத மாட்டேனா என்ன?


No comments:

Post a Comment