Sunday, 20 May 2012

இப்போதும் கூட


இன்றும் இன்னொரு புகைப்படமே உதவிக்கு வருகிறது.
இதுவும் ஹிந்து ஞாயிறு இணைப்பில் வெளியாகியிருக்கும் ஒன்றுதான்.
மிக எளிய ஒன்று. சுலபமாகத் தாண்டிபோய்விட முடிவது போல, ஆனால் அப்படி முடியாமல், பார்வையைத் தானிருக்கும் மேல்பக்க மூலையிலேயே
நிறுத்துவது.

அந்தப் பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை.   அயல் பெயர்களை, அந்தந்த மொழி, அது சார்ந்த இன, பிராந்திய மரபு தெரியாது
முழுமையாக அழைக்க இயலாது.   Sebastian Cortes  என்பதன் பின் பெயரை
எப்படிஎழுதுவது, கோர்ட்ஸ் எனறா, கோர்ட் என்றா அல்லது வேறெதுவும்
ஆகவா? எந்த எழுத்தில் மௌனம், எந்த எழுத்தில் அழுத்தம்?   பேசாமல்,
செபாஸ்டியன் என்பதை வண்ணநிலவன் குரலில் ’செபஸ்தி’  என்று
கூப்பிட்டுவிடலாம்.  நன்றாகத்தான் இருக்கும்.

செபஸ்தியின் அம்மா வழி இத்தாலி. அப்பா வழி பெருவியா.  ஆனால்
செபஸ்தியிடம் இருப்பது அமெரிக்க கடவுச் சீட்டு. 2004 ல் இருந்து மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும் ஆரோவில் நகரியத்தில் இருக்கிறார். அவர் பாண்டிச்சேரியை எடுத்த புகைப்பட - கட்டுரைப்  புத்தகம்
வெளியாகியிருக்கிறது. அதில் உள்ள ஒன்றுதான் ஹிந்துவில்.

ஒரு பழைய பாண்டிச்சேரி ‘தெருவடி’ வீடு. இடது பக்கம் மூடிய கதவுகள்
உள்ள ஒரு கம்பி ஜன்னல். நடுவே வீட்டு வாசல்.    ஒன்று    சற்றுத் திறந்திருக்கிற, இன்னொன்று மூடியிருக்கிற மரக் கதவுகள்.  வலதுபக்கமும்
ஜன்னல் உண்டு. அது திறந்திருக்கிறது. ஒரு சிவப்பு சைக்கிள் குறுக்காக.
லேடீஸ் சைக்கிள். வேறு இருசக்கர வாகனங்களும் உண்டு போல.  ஏற்றி இறக்க ஒரு சாய்தளம். ஒரு சருகு இல்லாத துப்புரவான தெருப்பக்க நடை
பாதை. கருப்பு வெள்ளை போக்குவரத்து விளிம்பு பளிச்சென்று.  இதை
எல்லாம் விட முக்கியமானதும், புகைப்படத்தின் ரத்த ஓட்டமும் ஆக, அளந்து எடுத்தது போல மைய ஒழுங்குடன், கவிந்து கிடக்கும் அற்புதச்
சிவப்பு பொகைன்விலா பூக்கள்.

அந்த அடர்த்தியான பூச் சிவப்பு, படத்தின் குவளையை இப்படி மூன்றில் ஒரு பங்கு நிரப்பியிராவிட்டால், இது இவ்வளவு அழகாக இருக்குமா? அந்த சிவப்பு சைக்கிள் இல்லாவிட்டால்? அந்த இடதுபக்க மூடிய ஜன்னலும்
வலதுபக்க திறந்த ஜன்னலும் இல்லாவிட்டால்? இந்த கருப்பு வெள்ளை இல்லாமல் நடைபாதை விளிம்பு நிறமற்று இருந்திருந்தால்   இந்தப் புகைப்படம் எப்படி இருந்திருக்கும்?

நிச்சயம் இவ்வளவு அழகாக இருந்திராது. எல்லாம்  சேர்ந்து இந்தப் படத்தை
நிரப்புகின்றன. ஒரு படுகைக் கூழாங் கல் ஆற்றை நிரப்புவது போல. ஒரே ஒரு ‘நசுக்கூட்டான்’ புழு முருங்கை மரத்தை நிரப்புவது போல. ஒற்றைப்
பெருவிரல் பாலுண்ணி கே. அருணாசலத்தின் அண்ணன் பரமானந்தத்தின்
ஞாபகத்தை நிரப்புவது போல.  எல்லா முழுமையும் ஒரு சிறு புள்ளி வந்து சேரக் காத்திருக்கிறது. ஒரே ஒரு துளி வந்து சேரத் தவித்திருக்கிறது கடல். ஒரே ஒரு சருகை நகர்த்தக் காத்திருக்கிறது கொடுங்காற்று.

அந்த செபஸ்தி புகைப்பட பொகைன்விலா பூக்களைப் போல எங்கள் தெருவிலும் ஒரு காலத்தில் காணக் கிடைத்தது. அப்போது அது பொகைன்
விலா என்றோ போகன் விலா என்றோ தன் அகராதி மற்றும் தாவரவியல் உச்சரிப்புக்களை அடைந்திருக்கவில்லை. எல்லோரும் சொன்னது போல,
‘தாள் பூ’ என்றுதான் நாங்களும் சொன்னோம்.

அது தெருவோர மரம் இல்லை.  கட்டளை ஆபீஸின் கீழ்ப் பக்கமாகவும், தெருவிலிருந்து வடபக்கமாகவும் உள்ளே போனால், ராமச்சந்திர பிள்ளையன் வீடு, வாத்தியார் சிதம்பரம் பிள்ளை வீடு, உலகம்மாச்சி வீடு
எல்லாம் தாண்டினால்,  சங்கரையா பிள்ளையன் வீடு வரும். அந்த வீட்டில்
தான் தாள் பூ அப்படிப் பூத்துக் குலுங்கும்.

வசதியான வீடு. மரக்கட்டை ரீப்பர் அடித்து மேலே படரவிட்டிருப்பார்கள்.
இடது உள்ளங்கையை வட்டமாகக் குவித்து, அதன் மேல் தாள் பூ இலையை வைத்து, வலது கையை அகல விரித்து அடிப்போம்.  ‘டொப்’
என்று சத்தம் வரும். அது ஒரு விளையாட்டு. அது எல்லாவற்றையும் ஒரு
விளையாட்டாக ஏற்றுக்கொள்கிற மனம் இப்போதும் இருந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்.

இந்த வயதில் அல்ல, முறுக்கி முறுக்கி மேலே ஏறிப் படர்ந்திருக்கிற தாள்
பூ கொடியின் / மரத்தின் தாவர அமைப்பு, அதை முதன்முதலில் பார்த்த
சின்ன வயதிலேயெ என்னை ஒரு புதிர் போல ஈர்த்தது.   புதிரை சற்று அவிழ்ப்பதற்குப் பதிலாக, தவறுதலான திசைகளில் தன்னுடைய பிரியை
முறுக்கிக் கொள்வது போல், சமீபத்தில் அந்த வீட்டில் துக்கம் கேட்கப்
போயிருந்த சமயத்தில் கூட, முன்னிலும் அதிகமாக  தனக்கு மத்தியில்
அது காலத்தைப் பின்னிப் படர்ந்து கிடந்தது. அந்த வீட்டில் நிகழ்ந்திருந்த
மரணத்தையொட்டி, ‘காடு மாதிரிக் கிடந்த’  அதை ‘அரக்கி’விட்டிருந்தார்கள்.
எந்த இலையும் எந்தப் பூவும் இன்றி, அது தான் இது காறும்  வளர்ந்து
நிற்கிற வீட்டின் துக்கத்தைக் காத்துக்கொண்டு இருந்தது.  தன் அத்தனை
விரல்களையும் இழந்த பிறகும் மீண்டும் தன் பூக்கால ஓவியம் ஒன்றை
வரைவதற்கான தீவிரமான வண்ணங்களைச் சேகரிக்கத் துவங்கிவிடும் தீர்மானத்தில் இருப்பதை என்னிடம் சொல்லியது.

ஒரு காலத்தில் அது அப்படிப் பூத்தது.
ஆனி, ஆடியில் அடிக்கிற காற்றில் அந்தப் பூக்கள் தெருவில் தரையோடு தரையாய் நகரும். நான் படித்து முடித்து வேலை கிடைக்காது இருந்த,
பறப்பதற்கு முந்திய புழுக்காலம் அது..  தெருவாசல் நடையிலேயே தனியாக நின்றுகொண்டு இருப்பேன். தரையில் நகர்கிற அந்தத் தாள் பூ எதுவரைஅப்படிச் செல்லும் எனப் பார்க்கப் பார்க்க, பார்வை மயக்கத்தில் தெருவே இளம் சிவப்பாகி நகர்கிற மாதிரி இருக்கும். உலகத்தில் தாள் பூவை அச்சு அசலாக வரைந்துவிடக் கூடிய ஓவியர்களின் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் தகுதி அப்போது எனக்கு இருந்தது.

கண்ணதாசனில் வெளிவந்த என்னுடைய ‘புளிப்புக் கனிகள்’ கதையில்
பிரபா வருகிற போது இந்த பொகைன்விலா பூக்களும் வரும். ‘செம்பூக்கள்
காற்றில் தரையை மெழுகியபடி’ என எழுதியிருப்பேன். பிரபா காணாமல்
போய்விட்டாள். இந்தப் பூக்கள் காணாமல் போய்விட்டன. ஒரு வார்த்தை
கூட யாருடனும் பேசாமல், மிக நேர்த்தியான உடைகளில் சாயுங்காலம் மட்டும் தெருவில் நடந்து செல்லும் அந்த வீட்டுக்கார  சங்கரையா பிள்ளையனும். நடு வகிடு எடுத்து சுருட்டை முடி வாரி, முண்டா பனியன் தெரிய மல் ஜிப்பா போட்டு வேட்டி கட்டி,  நாம் பார்த்தால் நம்மைப்
பார்த்துச் சிரிக்கிற அவருடைய மூத்த மகனும். சமீபத்தில் அதற்கு அடுத்த மகனும் காணாமல் போய்விட்டார்கள்.

தெருவும் நானும் மட்டும் என்ன வாழ்கிறோம்?
நாங்களும் காணாமல் போய்விட்ட மாதிரிதான்.  பொதுவாக, ஏற்கனவே
காணாமல் போன ஒன்று, இப்போது வேறு எதையோ தொலைத்துவிட்டுத்
தேடும் போது, தற்செயலாகக் கிடைக்கும் இல்லையா.  செபஸ்தியின் இந்தப் புகைப்படத்தின் மூலம், காணாமல் போன எங்கள் 69 -70 ம் வருடத் தெரு இன்று கிடைத்துவிட்டது. தாள் பூ கிடைத்துவிட்டது.   சொல்ல முடியாது, பிரபா கூடக் கிடைத்து விடுவாள்.

கிடைக்காமலே இருக்கப் போகிறவன் எப்போதும் நானாகத்தான் இருக்கும்.
அல்லது    இப்படி  வைத்துக்   கொள்ளலாம்.    தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டு இருப்பது இப்போதும் கூட என்னைத்தான்.










மலைகள்.காம் இணைய இதழ் 2ல் இருந்து.

இன்றைக்கு
--------------------

காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.
*
வீட்டு நடையில்
நின்றுகொண்டிருந்தேன்.
அருகில் வந்து
ஒரு கருப்புக் கன்றுக்குட்டி
அசையாமல் என்னைப் பார்த்தது.
போய்விட்டது.
இது போதும் எனக்கு
இன்றைக்கு.






நீல வட்டத்தின் தடாகம்.
*

தீர்மானித்தபடியே
மழை துவங்கு முன்
அடுக்ககம் வந்துவிட்டாள்.
பொத்தான் அழுத்தி
மின் தூக்கி மேல் நகர்கையில்
ஆட்டோ விலகிச் செல்வதை
கேட்டாள்/பார்த்தாள்.
உப்பரிகைக் கொடியில்
உலர்ந்த ஆடைகளைச் சேகரிக்கையில்
பெரும் துளியிட்டு மழை துவங்கியது.
அவள் செல்லத் தொட்டியில்
பூத்திருந்தது வெண் சங்கு புஷ்பம்.
படுக்கையறையில் குவித்து
ஆடைகளை மடிக்கையில்
ஆளுயரக கண்ணாடி அழைப்பது போல
அந்தரங்கப் பெயரின் உச்சரிப்பு.
முற்றிலும் அகற்றிக் கொள்ளச் சொன்ன
இடவலக் குரலை விரும்பினாள்.
கீழ்ப்படிந்துகொண்டே வந்தவளின் காலடியில்
கழன்றுவிழுந்திருந்தன உள்ளாடைகள்.
கருப்புக் காப்பியா, பச்சைத் தேனீரா
என்பதைத் தீர்மானித்தாள்
மார்புக் காம்புகளில் ஒன்றைத் தொட்டு.
கொதிக்கிற பாத்திரத்தை அகற்றி
சுனையெனப் பொங்கும்
ஜ்வாலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
.பழைய பாடல் ஒன்றைப்
பாடிச் சுழலும் போதும்
நீல வட்டத்தின் தடாகத்தில் குதிக்கும்
முன் தீர்மானத்தை எடுக்கவே இல்லை.
நிகழ்வது அனைத்தின் அசாதாரணம் உணர்ந்து
தனிமையின் பதற்றத்துடன் காத்திருந்த
பீங்கான் கோப்பையில்
மின்னலிட்டு நிரம்பத் துவங்கியது
அவள் மேல் பற்றிப் பெய்த
அந்தி மழை.
%
கல்யாண்ஜி

Saturday, 19 May 2012

கல்யாணி.சி - ஒரு பிறந்த நாள் பரிசு.

தேதி சரியாக ஞாபகமில்லை.
சுதீர்செந்திலின் பிறந்த நாள் அக்டோபர் கடைசியில் வரும்.  அப்படியெல்லாம் சரியாக அட்டவணைப்படுத்தி, அதிகாலையில் முதல் வேலையாக வாழ்த்துச் சொல்லும் பழக்கம் ஆதியில் இருந்தே எனக்கு இல்லை. போன வருஷம் சொல்லியிருப்பேன். இந்த வருஷம் கல்யாணி
அனுப்புவான் என்று எதிர்பார்ப்பார்கள். அனுப்பியிருக்க மாட்டேன். சில பேருக்கு சாயுங்காலம், ஒரு தடவை ராத்திரி பத்து மணிக்குக் கூட, அல்லது இரண்டு நாட்கள் கழித்து எல்லாம் அனுப்புவேன். எப்போது ஞாபகம் வருகிறதோ அப்போது.  புள்ளி வைத்தது மாதிரி, காலையில் பேப்பரை விரித்ததும் குரு பெயர்ச்சி, அட்சய திருதியை என்று மேலே
விழுந்து ஆவி சேர்த்துக் கட்டுகிறது போல எல்லாம் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லக் கட்டுபடியாகுமா நமக்கு?
இன்றைக்குக் கூட ஒரு குறுஞ் செய்தி வந்திருக்கிறது, “இன்று நீங்கள் என்னை ஆசீர்வதிக்கலாம். எனக்கு சந்தோஷம் தருவது அது” என ஆங்கில
நெருக்கத்தில். நெருக்கம் தானே உண்டு. அதென்ன ஆங்கில நெருக்கம்
என்று கேட்கத் தோன்றும்.   மொழி சில காரியங்களைப் பண்ணுகிறது. சில சமயம் தென்னந்தோப்பு நிழல், சிலசமயம் அரச மரநிழல், சில சமயம் ஆற்றங்கரை மருத மர நிழல். நிழல்தான், ஆனால் மரம் வேறுவேறாகிச்
சில காரியங்களைப் பண்ணுகிறது இல்லையா, அப்படி.
சுதீர் செந்திலுக்கு அனேகமாக குறுஞ்செய்திதான் அனுப்பியிருப்பேன் என நினைக்கிறேன். தொலைபேச்சு உரையாடலுக்கும் நமக்கும் அவ்வளவாக
எப்போதுமே தோதுப்படாது. பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதும் சுதீர்
செந்தில், ’எனக்கு ஒரு பிறந்த நாள் பரிசு தரவேண்டும்’ என்று கேட்டார்.
நமக்குத் தெரியாதா, வெள்ளரிப் பிஞ்சு விற்கிற பெண்ணிடம், மிஞ்சி
மிஞ்சிப் போனால் கூட ஒரு பிஞ்சு போடச் சொல்லப் போகிறார்கள்.
பொது நூலகம் என்றால் , நாம் இப்போது படித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கை, நம் வாசிப்புக்குப் பிறகு அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
கட்டை விரலை உயர்த்தி புத்தகப் பையும் அரக்குக் கலர் ட்ராயருமாக
ஒரு பையன் குலவணிகர்புரம் கேட் பக்கம் கைகாட்டினால், ஊசிக் கோபுரம் ஸ்டாப் பக்கம் அவனை இறக்கிவிடவேண்டும். நம்மை மாதிரி  எழுதுகிறவனாக இருந்தால் அடுத்த இதழுக்கு ஒரு கதை தர வேண்டும்.
அதற்கு மேல் தர நம்மிடம் என்ன வக்கு இருக்கிறது?
சுதீர் கதை கேட்கவில்லை. கவிதை கேட்டார். அடுத்த மாதத்திற்கு அல்ல. அடுத்த வருடம் முழுவதற்கும். ‘பன்னிரண்டு இஷ்யூவுக்கும்
கடைசி பக்க கவிதை தரணும் சுந்தரம்’ என்றார். ஒப்புக் கொண்டேன். க்டைசித் தவணை வரை அனுப்பாமல் நாளைக் கடத்துகிறவன் என்பதால்,
‘மாசா மாசம் எத்தனாம் தேதிக்குள்ள அனுப்பணும்?’  என்று கேட்டதற்கு சுதீர்,  ‘உங்களுக்காக இது.  பன்னிரண்டாம் தேதி லாஸ்ட் டேட்’
என்றார்.
இதைச் சுதீர் சொன்னதும் நான் கேட்டுக் கொண்டதும் எல்லாம் அக்டோபர் மாதம்.    விகடனில் அதற்குச் சற்று முன்பாக ஒரு வாரத்தில்தான் அந்த
என்னுடைய சிறுகதை, ‘எண்கள் தேவையற்ற உரையாடல்கள்’ வெளியாகி இருந்தது.  நான் தொடர்ந்து சிறுகதை எழுதும் உத்தேசத்தில்தான் இருந்தேன். என் உள்ளூர ஆசை,   2013க்கு ஒரு புதிய சிறுகதைத் தொகுப்பு கொண்டுவருவது.  ஆனால், நான் தொடர்ந்து கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். ‘மணலுள்ள ஆறு’ தொகுப்பின் மன நிலை மேலும்
கண்ணி விலகாமல் சங்கிலி கோர்த்தது.   உயிர் எழுத்து இதழுக்கு மாதா மாதம் என்று ஒப்புக்கொண்டது, விகடன் கதையையே இன்றுவரையிலான
என் சமீபத்திய ஒன்றாக வைத்திருக்கிறது.
மாதம் ஒன்று அனுப்பச் சொல்லியிருந்தார். நான் ஏழெட்டு, சமயத்தில்
பத்துப் பனிரெண்டு கவிதைகள் அனுப்பிவைத்தேன். கடைசி பக்கக் கவிதை என்பது கடைசிப் பக்கத்திலும் கவிதை என்றாயிற்று. இந்த ஐந்து மாதங்களிலும் உயிர் எழுத்துவில் முப்பதுக்குக் குறையாமல் வெளியாகி
இருக்கும்.  வேறு யாருக்குப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ , எழுதுகிற
எனக்குப் பிடித்திருக்கிறது. இதுவரை நான் கவிதையென எழுதிவந்ததன்
 சாயல் மாறாமலும். அங்கேயே நிற்காமல் முன் நகர்ந்தும், என் சற்றே
மனத்தடைகள் குறைந்த இந்த வயதின் விசாலத்துடனும் வாழ்வு குறித்த அக்கறையுடனும் அவை இருப்பதாக நான் நினைக்கிறேன்.
எஸ்.ஐ.சுல்தான் தொடர்ந்து என்னுடைய கவிதைகளைப் பிரசுரித்த போது எல்லாம் அந்தக் கவிதைகளுக்கு அதிக வாசிப்பும். அவர் எப்போதெல்லாம் என் கதைகளைப் பதிவேற்றினாரோ அப்போதெல்லாம் அதற்குக் கவிதைகளுக்கு உரியதை விடக் குறைவான வாசிப்பும் நிகழ்வதை உணர முடிந்தது.
இதுவரை, இந்த சமவெளியில், வண்ணதாசனை மட்டும் அறிந்தவர்கள் போக, கல்யாண்ஜி ஆகவும் என்னை எதிர்பார்க்கிற ஒரு பகுதியினர் இருக்கக்கூடும் அல்லவா. அவர்களுக்காக, அந்த ஏற்கனவே இதுவரை பிரசுரமான, ஏற்கனவே வாசிக்கப் பட்ட,  உயிர் எழுத்துக் கவிதைகளில்
சிலவற்றை இங்கே தரத் தோன்றுகிறது.  மிகுதி இருக்கிற ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இதழ்களுக்குக் கவிதை தந்த பிறகும், நான் கவிதைகள் எழுதுவேன் ஆகில், எழுத எழுத நேரடியாக இங்கே பதிவேற்றவும் விரும்புகிறேன்.
ஒரு துவக்கம் ஆக, உயிர் எழுத்து கவிதைகள்.
கல்யாண்ஜி என்றால் என்ன, கல்யாணி.சி என்றால் என்ன, எல்லாம் ஒன்றுதான் என உங்களுக்குத் தெரியாதா?

உயிர் எழுத்து ஜனவரி-2012.

இதற்குமேல் உருளமுடியாது
கல் நதியைவிட்டுக் கரையேறிற்று.
இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று.


2.
முதன்முதல் பார்க்கையில்
ஒரு கை உடைந்திருந்த
மர நாற்காலியில்
உட்கார்ந்திருந்தார் முருகேச மாமா
ஓரம்தைத்த பனையோலை விசிறி
ஒன்றை வீசிக்கொண்டு.
ஒடிந்த பின் நாற்காலியும்
கிழிந்த பின் விசிறியும்
இறந்தபின் மாமாவும்
எனக்குள் ஒன்றாக அப்படியே
இருப்பது எப்படி?

3.
பார்த்தாயிற்று இந்தப் பனிக்காலத்தின்
முதல் மஞ்சள் பூவை
விரையும் ஜன்னல் வழியாக
நேற்றே என் ரயில் பயணத்தில்.
பீர்க்கங் கொடி படர்ந்த
நீர்க்கருவையின் பச்சை மறைவிலிருந்து
அவசரமாக எழவேண்டியவராக இருந்தார்கள்
அந்த இரண்டு பெண்களும்.
என் 66ம் வயதை நோக்கி
சலனமின்றி நகர்ந்துகொண்டிருந்த
இந்த டிசம்பர் அதிகாலையின்
முதல் ரயில் பூச்சியை அடையாளம் காட்டுவதாக
ஞாயிற்றுக் கிழமை ஆராதனை மணி.
எப்போதோ பார்த்த வளையல் பூச்சியின்
முதுகுப் புள்ளிகள் தேடி
ஊர்ந்துகொண்டிருந்தது ஆயுள்
என் ஆயிரம் நரைமயிர் அசைத்து.
சிவப்பாக வாசலில் தொங்கும்
முதல் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை
காண்பிக்கும் இரவு வரும்போது
சாம்பல் பூனை மதில் மேலிருக்க
கணவனின் சினேகிதி ஒருத்தியுடன்
கைபேசியில் சிரித்துப் பேசும்
உங்களைப் போல ஒருவர் நிற்பதைப்
பார்க்கமுடிந்தால் இருக்கும் உன்னதமாய்.