Thursday 26 March 2015

இப்போதும்






ஏப்ரல் கூட இன்னும் பிறக்கவில்லை..

அதற்குள்ளா முழுப் பரீட்சை லீவு விட்டுவிட்டார்கள்?

எங்கே பார்த்தாலும் தாத்தா பாட்டிகள், பேரன் பேத்திகளின் தென்படல். வழக்கமாக நடைவரும் ஒரு தாத்தாவுடன் புதிதாக ஒரு பேரனும் பேத்தியும். தாத்தா ஒரு சிறு பையனைப் போல,ஒரு முருங்கை இலைக் கொத்தைச் சுழற்றிக்கொண்டே வருகிறார். நுனியில் முருங்கை மொட்டும் பூவும் அப்படிச் சிலிர்க்கின்றன.

பைக்கில் மீன் வாங்க வந்து இறங்குகிற தாத்தாவுடன் பேரன் இறங்குகிறான். மீனைத் தொட்டுப் பார்த்து, வழுவழுப்பு உணர்ந்த விரலைக் கூச்சத்துடன் உதறுகிறான். விரல் நுனியில் இருந்து எந்தக் கடலோ புனித ஜோஸஃப் தெரு முனையில் தெறித்து விழுகிறது.

பொதுவாக[,  இந்தப் பேரப் பிள்ளைகள் மைதானத்திற்கு வருவதில்லை என்று நினைப்பேன்.  அதுவும் நேற்றுத் தப்பிவிட்டது. பெயர் கூடச் சொல்லத் தெரியவில்லை. ‘ GOD’S GIFT ‘  என்று எழுதப்பட்ட ஒரு குட்டிக்காரின் ஓட்டுநர் பக்கக் கதவு திறந்து ஒரு பாட்டி இறங்கிச் சாவியை உருவுகிறார்.  இரண்டு பத்து வயதுச் சிறுமிகள்  கையில் வலை மட்டையுடன் பின்னிருக்கையிலிருந்து.  ஒரு சர்வ தேசப் போட்டியில் கலந்துகொள்ள அணிந்தது போல உடைகளின் கச்சிதம். அந்தக் காலணி வகையை இந்த ‘கல் தோன்றி மண் தோன்றா’க் காலத்துச் செம்மண் இதுவரை பார்த்தே இராது.

தென்றல் நகரில் இருந்து பாரதி நகர் வீதிக்குத் திரும்புகிற வளைவில் , அக்காக் குருவிக்குத் திருப்பிக் கூவி, ஒரு தாத்தா தன் முதியோர் ஊதிய விலாவில் சிறகுகள் அணிய, அவருடைய குரல் பறக்கும் திசையில் பேத்திக் குருவி லயித்திருந்தது.

அந்த வாகை மரமும் 'பனைச் செல்வம்' குட்டி லாரியும் அதியரசனின் வியாபாரமும் என்ன சாதாரணமா? குவிந்து கிடக்கும் இள நீரும், நுங்கும் பதநீர்ப் பானையும் தாத்தாக்களையும் பேரன் பேத்திகளையும் வேறொரு அதிசய உலகத்திற்கு அழைக்கிறது.

பச்சைப் பட்டையை ஏந்தி, பதநீர் குடிக்கும் தாத்தா, ஏற்கனவே இருந்ததை விட அழகாகிவிட்டது போலப் பேத்திக்குத் தெரிகிறது.  ‘எனக்கு, எனக்கு’ எனக் காலைச் சுரண்டுகிறது. தான் குடித்த பட்டையைக் குனிந்து அந்தக் குருவிக் குஞ்சின் உதடுகளுக்குக் கொண்டு போகிறார். ஒரு சிறு மடக்குக் குடித்துவிட்டு நிமிர்கிறது. ‘நல்லா இருக்கா?’ – தாத்தா கேட்கிறார்.  

நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை  என்று தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாத அந்த ருசியின் முதல் சுவைப்பில் திளைக்கிற, தத்தளிக்கிற சிறுமியின் முகம் ஆரத்தியாகக் கங்கையில் விட்ட அகல் போல ஒளிர்கிறது.

‘நீ, குடிக்கையா?’ – தாத்தா பக்கத்தில் இருக்கிற சின்னப் பேத்தியிடம் கேட்கிறார். அது தலையை அசைக்கிறது. வேண்டாமாம்.

‘நுங்கு திங்கியா?’ – தாத்தா கேட்கிறார். இரண்டு கைகளையும் பின்னால் வைத்துக்கொண்டு ‘வேண்டாம்’ என்று தலையை மட்டும் அசைக்கிறது.

’ஏன்? பிடிக்கலையா?’ – தாத்தா முகம் பட்டையில் கவிழ்கிறது.

‘தின்னு பாக்கவே இலலையே நீ’ – பதநீர் குடித்து முடித்தாயிற்று.

தாத்தா பட்டையை நெரித்துத் தூரப் போடுகிறார். அது அவர் எறிய நினைத்த தூரம் போகவில்லை. குனிந்து, ஒரு ஆதாரத்திற்கு சின்னப் பேத்தியின் தோளில் ‘பூப் போல’ கையை ஊன்றி, அதை எடுத்து மறுபடியும் சுவர் ஓரமாகப் போடுகிறார்.

‘அது என்ன, என்னமோ கையில வச்சிருக்கே?’ -  தாத்தா கேள்வி சிரிக்கிறது. இப்போதும் பதில் தலையாட்டல் மட்டும் தான்.
‘காட்டு’ – என்று கொஞ்சுகிறார். ’கையில என்னமோ வச்சிருக்கா, குட்டி’  என்று அதன் அக்காவிடம் சொல்கிறார். அக்காக்காரி, ‘ என்னது வச்சிருக்கே. காட்டு பாப்போம்’  என்று கையெட்டுகிறாள். சின்னது பிடிபடாமல் சற்றுப் பின்னால் நகர்கிறது.

அக்காவுக்கு, தாத்தாவுக்கு, எனக்கு, அங்கு பத்நீர் குடிக்க, நுங்கு வாங்க வந்த எல்லோர்க்கும், இந்த உலகத்துக்கே காட்டுகிற மாதிரி, ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னால் வைத்திருந்த கைகளை விலக்கி, வலது கையை மட்டும் நீட்டியது.

வலது கை விரல்களுக்கு இடையில், சற்று அளவில் பெரிய, ஒரு வண்ணத்துப் பூச்சி இருந்தது. கருப்பு நிறம். ஒரு வேளை சிவப்பு அல்லது மஞ்சள் புள்ளிகளும் உள்ளதாக இருக்கலாம்.

‘எங்க பிடிச்சே?’ என்ற அக்காவின் கேள்விக்கு அது பதில் சொல்லவில்லை. முகமே பதிலாக இருந்தது. உலகக் கோப்பையை உயர்த்திப் பிடிப்பது போல, கருப்பு வண்ணத்துப் பூச்சி அடங்கிய வலது கையை இன்னும் கொஞ்சம் உயர்த்தி அப்படியே நீட்டியிருந்தது.

அதனுடைய அக்காவை விட, தாத்தாவை விட, அதியரசன் வியாபாரம் செய்ய நிழல் தரும் அந்த வாகை மரத்தையும் விட, அந்தக் கை உயரத்தில் இருந்தது.

நான் இப்போதும் அந்த உயரத்திலேயே இருக்கிறேன்.


5 comments:

  1. //சொல்ல முடியாத அந்த ருசியின் முதல் சுவைப்பில் திளைக்கிற, தத்தளிக்கிற சிறுமியின் முகம் ஆரத்தியாகக் கங்கையில் விட்ட அகல் போல ஒளிர்கிறது.//
    அந்த உங்களின் நுண் கண்ணாடி வழி பார்வை..
    நீங்கள் அணிவது கண்ணாடியா? க(வி)தையாடியா?

    ReplyDelete
  2. "மனது அளவைமானியாகிவிடில்
    உப்புக் கல்லில்
    அலையோசை கேட்காமலா போகும்"
    "மீனைத் தொட்ட சிறுவனின்
    கை உதரலிலிருந்து
    செயின்ட் ஜோசப் தெருவில் தெறித்து விழும் கடல்"

    நீங்கள் இருக்கும் உயரம் எப்போதுமே எல்லாவற்றையும்விட அதிகம்தான்.

    ReplyDelete
  3. அய்யா! நீங்கள் பார்த்ததை நாங்கள் படிக்கும் போது நாங்கள் பார்க்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்கிற உண்மை புரிகிறது.உங்கள் பார்வைப் பட்ட அந்த வண்ணத்துப் பூச்சியும் அந்த கரமும் கொடுத்து வைததவைதான்

    ReplyDelete
  4. அருமையான எழுத்து...
    ரசனையுடன் வாசிக்க வைத்தது ஐயா...

    ReplyDelete
  5. நீங்கள் அணிவது கண்ணாடியா? க(வி)தையாடியா?

    ReplyDelete