Thursday, 19 March 2015

மெல்லினம்.


எங்கள் சென்னைக் காலம் நீண்ட ஒன்றில்லை. மூன்று வருடங்களுக்குச் சற்றுக் கூடுதல். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள். ஆனால், நிறைய மனிதருடன், நிறைய உயிர்ப்புடன், நிறையப் படைப்புகளுடன் வாழ்க்கை அடர்ந்து பரந்திருந்த, பறந்திருந்த பருவம் அது.

அறிவுமதி அவருடைய  ‘கடைசி மழைத் துளி’ தொகுப்புக்கு என்னையும் எழுதித் தரச் சொன்னார். நான் ‘மெல்லினம்’ என்ற வகையில் இந்த வரிகளை எழுதினேன். முதலில் எழுதி முடித்துக் கொடுத்ததை வாசித்த அறிவுமதி, ‘ அண்ணே நல்லா வந்திருக்கு ‘ண்ணே. ஆனால் கொஞ்சம் நம்பிக்கையோடு முடிகிற மாதிரி இருந்தா இன்னும்  நல்லா இருக்கும்’ என்று சொன்னார். அறிவுமதி சரியாகத்தான் எதையும் சொல்வார். ‘ஆனாலும்’ என்று துவங்கும் அந்தக் கடைசிப் பகுதியை மீண்டும் எழுதிக் கொடுத்தேன். இப்போது மொத்தமாக மீண்டும் வாசிக்கையில் அதனுடைய செறிவு முன்னிலும் கூடியிருந்தது.

நான் வழக்கம் போல, அந்த வரிகளைப் பத்திரப் படுத்தவில்லை. அல்லது பத்திரமாக இருக்கட்டும் என எங்கோ வைத்துவிட்டேன். பத்திரமாக  எங்கோ இருந்தாலும், வேண்டிய சமயத்தில் கிடைக்காதது, தொலைந்து போனவை பட்டியலில் தானே  வரும். இரண்டு வருடங்களுக்கு முன் ,  அகநி மு.முருகேஷ் அதன் ஒளியச்சு நகலை அனுப்பிவைத்தார். அதையும் எங்கோ வைத்துவிட்டேன். இப்போது சிவராஜ் அதை மீட்டெடுத்து அச்சாக்கி என்னிடம் தந்திருக்கிறார். இங்கே ஊருக்கு வந்ததும், அது நம்மாழ்வார் அய்யாவுக்கு சிவராஜால் வாசித்துக் காட்டப்பட்டது என்ற உணர்வு நிலையில், மீண்டும் வாசித்தேன். நான் எழுதியது தான். எனக்கே ரொம்பப் பிடித்தது இந்த முறை.

கடலூர் சுவாமிநாதன் ராஜாமணி  கேட்டுக்கொண்டு இருக்கிறார் இதைப் பதிவிடச் சொல்லி. கிட்டத் தட்ட, இரண்டு அல்லது மூன்று சொற்களே ஒரு வரியாக,  முன்னூறு வரிகளாவது இருக்கும்  இதை வாசிக்கும் அவகாசம் முகப் புத்தக ஓட்டத்தில் இருக்கும்  மிகச் சிலருக்கே வாய்க்கக் கூடும்.  ஆனால் சுவாமிநாதன் கேட்டார், நான் இசைந்தேன். இங்கே ‘சமவெளி’யில் பதிவிடுகிறேன்.  இதோ அவர் வாசிக்க நான் கேட்கத் துவங்குகிறேன். அல்லது  அவரை முன்வைத்து, நான் வாசிக்க நானே கேட்கிறேன்.

%


மிகப் பழைய கேள்விதான்
மிகப் புதிய கேள்வி.
சூரியன் பார்த்தது
சமீபத்தில் எப்போது?
*
பறவைகள் அடையும்
பெரு மரம் எங்கிருக்கிறது?
இருள் பரவு முன்
கேட்ட கடைசிக் குரல்
எந்தப் பறவையினுடையது?
*
தந்திக் கம்பிகளில்
தண்ணீர்ப் பாம்புத்தொங்கல்.
கொன்று எறிந்தது யார்
ஆட்கொண்டானா, வேலுவா,
சின்னச் சங்கரனா?
*
புளியங்குடிக்குப்
போகிறவழியில்
பூத்திருக்கிறது நாகதாளி.
*
மணல்வீடு கட்ட ஆற்றில்
மண் உண்டா இப்போது?
வண்டலை அறியுமா
உன் வாய்க்கால்?
*
நுங்குக் கண்ணில்
பெருவிரல் புதையல்.
எந்தச் சூளைக்கு
விறகாயிற்று உன்
தாத்தாவின் பனங்காடு?
*
தூண்டில் முள் வாங்கியது
பத்தமடை சாய்பு கடையில்.
பிடித்தது ராலின்ஸன் ஜோ,
பாலு மாமா, நீ.
ஜிலேபி மீன்களின் சந்ததி
இன்னும் இருக்குமா
பேட்டைக் குளத்தில்?
*
தச்சநல்லூர் ஓடையில்
தாழம்புதர் இருக்கிறதா இப்போது?
களக்காட்டு முந்திரித் தோப்புக்கு அப்புறம்
கண்ணுக்குத் தெரியுமா
தேங்காய் உருளி அருவி?
*
செப்பறைத் தேரிலும் படியும்
சிமெண்ட் ஆலைப் புழுதி.
*
விளிம்பு வரை
பூசணிப்பூவின் மஞ்சள் கிண்ணத்தில்
போக்குவரத்துப் புகை.
சியர்ஸ்.
*
கிளியுண்ணப் பழம் உண்டா ஆலில்?
பழமுண்ணக் கிளி உண்டா ஊரில்.?
*
நகரத்தில் தூக்கம் வராதவர்கள்
கீரிப் பிள்ளைகள் பார்க்கட்டும்.
கிராமத்தில் தூங்குகிறவர்களை
அணில் பிள்ளை எழுப்பட்டும்.
*
காற்றுக் காலம்
காத்துக்கொண்டு இரு.
தென்னந்தோப்பில்
கீற்றுச் சலார் என்று விழும்.
கேள்.
*
பார்வை இல்லாவிட்டால் கூடப்
பரவாயில்லை.
வாழையைத் தொட்டுப் பார்.
பக்கக் கன்றுகளிடம் படித்துக் கொள்.
கிழங்கில் இருந்து வழங்கு பரம்பரை.
*
மழைக் காலத்திலும்
இனப் படுகொலைகள்.
குப்புறக் கிடக்கிறது உடம்பு.
கொப்புளத்தின் நிறம் சிவப்பு.
*
வீட்டுக்குள் வந்து தவிக்கிறது
வெட்டுக் கிளி.
மரங்களில் நெளிகிறது
பச்சைப் பாம்பு.
சுவரோரம் இழுத்துச் செல்லப்படுவது
வண்ணத்துப் பூச்சியின் சிறகு.
*
கடலில் எண்ணெய்க் கசிவு.
ஆலாப் பறவைகளின்
வழுவழுத்த சடலங்கள்.
அநாகரிகத்தின் கடற்கரை.
*
ஆமை நீந்துகிறதா என்று
எட்டிப் பார்த்தேன்.
நகராட்சிப் பூங்காக் கிணற்றில்
தெளிந்த தண்ணீரில்
மிதந்துகொண்டு இருந்தது
நகரசுத்தித் தொழிலாளி வீட்டுப்
பெண் உடல்.
*
சாலக்குடி அருவி பார்க்க.
சண்பகா தேவி அருவி சாக.
*
பொதிகை மலையில்
யானைகள் திரிய.
புனலூர் கள்ளுக் கடையில்
மனிதர்கள் நிறைய.
*
காளான் நிழலில்
கழியுமா காலம்?
*
சிட்டுக் குருவிச்
சிறகையாவது
சேர்த்து வை.
*
விதையற்ற மாதுளை
விதையற்ற திராட்சை
விதையற்ற கொய்யா
விதையுள்ள மனிதன்.
*
குப்புற நட்டாலும்
நேராக வளர்.
*
காற்றால், நீரால்,
பறவையால் பரவுக.
*
ஊற்றைத் தோண்டத் தோண்ட,
காற்றைத் தீண்டத் தீண்ட.
*
நனைந்து செல்ல,
நினைத்துக் கொள்ள
ஒவ்வொருவருக்கும்
ஒருவொரு மழை.
*
உழவுக் காளைக்
கழுத்துப் புண்ணிலும்
உதிர்ந்து கிடக்கிறது
வேப்பம் பூ.
*
பாலை வனம் பார்.
பாறையுடன் இரு.
*
சோற்றுக் கற்றாழைக்குச்
சொந்தமா புகைவண்டி?
*
மூங்கில் புதரை வரைந்தவன்
முழுக் கலைஞன்.
*
யாளி இல்லாக்
கோயில் மண்டபம்
பாழ்.
*
பச்சைக் குளம்
கருப்பு மீன்கள்
வெள்ளைப் பொரி
கொள்ளைப் பசி.
*
ஊர்ந்து கொண்டே
மேகம் இருக்க,
தீர்ந்தும் தீராமல்
தாகம் எடுக்க.
*
ஒரே ஒரு இரவு
பார்த்த நட்சத்திரங்கள்
தூங்க விடவில்லை
நிறைய இரவுகள்.
*
தொட்டிச் செடி வளர்த்ததில்
துயரம் வளர்ந்தது.
நட்ட விதை வளர்கையில்
நானே வளர்ந்தேன்.
*
அவசரம் அவசரமாக
ஆயிரம் சிமெண்ட் பெஞ்சுகள்.
வந்துகொண்டு இருக்கிறார்கள்
வயோதிகத் தனிமையர்.
*
திருப்பாவைப் பாடல்களின்
கிழிந்த குரல்களை
கழிவுக் காகிதங்களுடன்
பொறுக்குகிறவளுக்கு
வயது பதிமூணு.
*
காட்டாமணக்குச் செடி மறைவில்
அமர்கிறார்கள் பெண்கள்.
தரை அதிர அதிர
ரயில் வருது, வருது.
*
அடி மாடுகள் பற்றி
அவன் எழுதிவிட்டான்
ஏற்கனவே.
*
மண்ணில் இருப்பவன்
வரங்கள் பெற்றவன்.
மாடியில் வசிப்பவன்
பிடுங்கப் பட்டவன்.
*
மின்மினிப் பூச்சி பிடி.
தும்பைப் பூ பறி.
மலையில் தீ அறி.
*
நத்தைக் கூடுகள்
நசுங்கி விடாமல்
இலந்தம் புதர் மேல் நடக்கும்
அகஸ்தியர்பட்டி வெயில்.
*
உதிர்ந்து கிடக்கிற
நாவல் பழங்களில்
ஒட்டிய மண்ணை
ஊதிவிட முடியுமா?
*
வேர், விழுது
ஊர் முழுதும்.
*
பண்ணைகள் வைப்பார்கள்
பறவைப் பண்ணைகள்.
விஞ்ஞானம் பிறப்பிக்கும்
வெள்ளைக் கிளி.
*
பச்சைக் கிளி பறக்கும்
பாலா மடை வயல் மீது.
*
முதலில் தெரியட்டும்
மண்ணில் மண் புழு.
அப்புறம் பார்க்கலாம்
வானம்.
*
மலைகளில் அலை.
வனங்களில் தொலைந்து போ.
சருகில் நட.
சந்திரோதயம் பார்.
*
கடைசி மூச்சிலாவது
காற்றின் வாசம்
தெரிந்தால் போதும்.
*
கடைசி மனிதன்,
கடைசி மழைத் துளி
நினைக்கவே பயங்கரம்.
*
ஆனாலும்
மறுபடி மறுபடி ஆறு பெருகும்.
மழை பேசும்.
கொத்துக் கொத்தாகப் பூக்கும்
வண்ணத்துப் பூச்சி.
புறாக்களின் சதவிகிதம் அதிகரிக்கும்.
புல் சிரிக்கும்.
ஆழமாகக் கடல் நிறையும்.
அகலமாக வானம் விரியும்.
சோளக் கொண்டைகள்
தினைக்குருவிகள் கனத்தில் அசையும்.
பதுங்கு குழியில் பிறந்த சிசுக்கள்
பௌர்ணமி வெளிச்சத்தில்
தாய்ப்பால் அருந்தும்.
எல்லா விதைகளையும் மண் தூண்டும்.
எல்லா மண்ணையும் விதை தூண்டும்.
வெள்ளிக் கொலுசுகள்
தொலையும், கிடைக்கும்.
வளையல்கள் வாயாடும்
கடைசி வரை.
நான் பாடுவேன்.
முதியோர் தூங்குவர்.
கண் தெரியாத இசைஞனின்
நசுங்காத புல்லாங் குழலில் வழியும்
துயரம் நிறைந்த மதுமதி சங்கீதம்.
பெண்ணே தன்னைப்
பெரிதாய்ச் செதுக்குவாள்.
ஏழு நாட்களும்
வாழ்வான் தமிழன்.
இருண்ட காடுகள் வகிர்ந்துகொண்டு
பிளந்து இறங்கும்
சூரிய ரேகைகள்.
ஒன்றாய்க் கூடி மேகம் திரளும்
ஊருக்கெல்லாம் பெய்யும் பெரு மழை.
மழையின் துளிகளில்
நனைந்த கவிதை
மறுநாள் வெயிலில்
வரிகளை உலர்த்தும்.
உலர்ந்து போகாத ஈரத்துடனே
உலகம் இருக்கும்.
மனிதர்கள் இருப்பர்.

%4 comments:

 1. படிக்க படிக்க
  பல படி ஏறி
  வனம் தொட்டு
  பாடல் காட்ட
  மேகம் கூட்டி
  மழையை அனுப்பி
  குளிரச் செய்தான்
  குற்ற சூட்டை
  வருணபகவான்
  கிளியின் நிறத்தில் ..
  கிழித்து கொண்டான்
  கவிதையை மட்டும்
  அவனக்கு வ்ணுமாம்
  விதையாய்.....

  ReplyDelete
 2. THIS POEM IS VERY GOOD,THANK YOU FOR RECORDING IN YOUR BLOG.
  B.AMBALAVANAN,SALEM.

  ReplyDelete
 3. dhandapani chinnathambi26 March 2015 at 05:03

  thank you very much for giving an opportunity to enjoy this poem to yourself and Swaminathan Rajamani

  ReplyDelete