Wednesday, 1 April 2015

போதும் என...

கடிகாரப் படி எதுவும் செய்வதில்லை. ஆனாலும் தினசரி அட்டவணைகளில் நாம் செய்கிற சில காரியங்கள் தானாகவே அதன் மணிக்கட்டில் ஒரு கடிகாரம் கட்டிக்கொள்கிறது.

அப்படித்தான் இதுவும். சாயுங்காலம் நடந்து, குறுக்கே தாண்டி, மைதானம் நோக்கிய அந்த நெடுந்தெருவுக்குப் போய், முதல் நான்கைந்து வீடுகள், அந்த  ‘வாதையின் கூடாரம்’ வசனம் எழுதிய சுவர், மரமல்லி மரம் பக்கத்தில் அம்பாசிடர் கார் துடைத்து நிற்கும், காலில் கட்டுப் போட்ட ஓட்டுநர், ‘இங்கே குப்பை கொட்டாதீர்’ அறிவிப்புப் பலகையை மூடி வளர்ந்திருக்கும் குப்பை மேடு, ‘ஜெபகனி’ என்று பெயர் எழுதின ஆட்டோ பக்கம் செல்வதற்குள் அந்தப் பெண் வந்துவிடுகிறார்.

எங்கள் மகள் போல் ‘வளத்தி’. வயது அவ்வளவு இருக்காது. திருத்தமான முகம். திருத்தமான தோற்றம்.இந்தப் பக்கம் அலுவலகம் எதுவும் கிடையாது. நர்சரிப் பள்ளிகளும் இல்லை.  தையல் வேலைக்குப் போகிறதாக இருந்தாலும் அது இன்னும் நான்கு தெருக்கள் அப்புறம் போகவேண்டும். ஒன்றோ இரண்டோ மருத்துவர் வீடுகள் உண்டு. செலிலியர் தோற்றமும் அல்ல. ஒருவேளை பாட்டுக் கற்றுக்கொடுக்கிற, அல்லது கற்றுவிட்டு வருகிற ஒருவராக இருக்கலாம்.

இந்தத் தெருவில் இதுவரை சங்கீதம் பயிலும்/பயிற்றுவிக்கும் ஒலியைக் கேட்டதே இல்லை. ஒரு கீ போர்ட், ஒரு கிதார், ஒரு வயோலின் என்று எந்த இசையின் சிற்றிறகும் காற்றில் மிதந்ததில்லை. உள்ளே ஏதோ ஒரு அறையில் வயலின் வாசிக்கும் வீட்டின் முன் நிற்கும் மரங்களின் பூ எப்படி இருக்கும் என நமக்கு அடையாளம் தெரியாதா?  கம்பிக் கதவுகள் வழியே குனிந்து வெளியேறும் பூனையின் சிரிப்பைப் பார்த்து, அந்த வீட்டின் பையன் ஒருவனின் விரல்களால் அதிரும் தந்திகள்  இருப்பதைத் தெரிய முடியாமலா, பூவரசம் பூ பூத்திருக்கும் இந்தத் தெருவில் இத்தனை காலம் நடக்கிறேன்?

ஆனாலும் இதோடு நான்கைந்து நாட்கள் ஆயிற்று. அந்தப் பெண் வருகிறதா என நானும், நான் வந்துவிட்டேனா என்று அந்தப் பெண்ணும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். எதிரெதிர்த்துக் கடக்கும் சிறு பொழுதில், அவரவர் மென்சிரிப்பை அவரவர் விழுங்கிக் கொள்கிறோம். பார்க்காதது போல பார்த்தபடி நேற்று நான் கைபேசியில் பேசிக்கொண்டு போனால், அந்தப் பெண்ணின் முறை அதற்கு முந்திய தினமாக இருந்திருக்கலாம். தனியாகத்தான் போகிறேன். தனியாகத்தான் வருகிறது. ‘பேச்சுக் கொடுப்பதற்கு’ ஒன்றும் நேரமாகிவிடாது. இது போன்று மிக அழகிய தருணங்களை உண்டாக்குவதற்குரிய ஒரு சிறிய கோடை மழை பெய்து நனைந்த வேப்பம் பூ வாசனையும் பரவியிருந்தது.

ஆனால் எனக்கு இதுவே பிடித்திருக்கிறது. யாரும் யாரென்று யாருக்கும் தெரியாமல் உலகத்தில் எத்தனை நிகழ்கின்றன. இதுவும் அதில் ஒன்றாக இருக்கட்டும். ஐந்து ஆறு நாட்களுக்கு முன்னால் இருந்த, யாரும் எதிர்வராத பாதையை, மீண்டும் உண்டாக்குவது போல அந்தப் பெண் காணாமல் போகும் எனினும் சரியே. இந்த தினங்களின் நீண்ட நிழல்கள் போதும். இரண்டாவது அல்லது மூன்றாம் நாளில், பொங்கிய பால் போதும். மண் உறிஞ்சிய மழை ஈரம் போதும். குறுக்கே பறந்து மறைந்த சிறகு விசிறல் போதும். நான் கேட்டதாக நினைத்துக்கொண்ட, கேட்காத சங்கீதம் போதும்.

போதும் போதும் என இத்தனை முறை திருப்பிச் சொல்வது, ஒருவேளை போதாது என்பதால் தானோ?


4 comments:

 1. எங்கள் மகள் போல் ‘வளத்தி’. வயது அவ்வளவு இருக்காது. திருத்தமான முகம். திருத்தமான தோற்றம்.இந்தப் பக்கம் அலுவலகம் எதுவும் கிடையாது. நர்சரிப் பள்ளிகளும் இல்லை. தையல் வேலைக்குப் போகிறதாக இருந்தாலும் அது இன்னும் நான்கு தெருக்கள் அப்புறம் போகவேண்டும். ஒன்றோ இரண்டோ மருத்துவர் வீடுகள் உண்டு. செலிலியர் தோற்றமும் அல்ல. ஒருவேளை பாட்டுக் கற்றுக்கொடுக்கிற, அல்லது கற்றுவிட்டு வருகிற ஒருவராக இருக்கலாம்.

  ReplyDelete
 2. அந்தப் பெண் காணாமல் போகும் எனினும் சரியே.
  இது போதும் எனக்கு இது போதுமே
  மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்

  ReplyDelete
 3. உள்ளே ஏதோ ஒரு அறையில் வயலின் வாசிக்கும் வீட்டின் முன் நிற்கும் மரங்களின் பூ எப்படி இருக்கும் என நமக்கு அடையாளம் தெரியாதா? //

  உங்க கூட உட்கார்ந்து தலையாட்டி தலையாட்டி ரசிக்கிற நிறைவைத் தரும் ...வரம் தரும் வரிகள்!


  யாரும் யாரென்று யாருக்கும் தெரியாமல் உலகத்தில் எத்தனை நிகழ்கின்றன.//

  சிறப்புச் சிகரம்!

  ReplyDelete
 4. போதும் என்பதும் நிறைவு என்பதும்
  வேறு தானே

  அப்படியென்றால் இந்தப் பதிவு எனக்கு
  நிறைவாக இருக்கிறது

  சில நேரம் போதாதோ என்று தோன்றுபவற்றைக் கூட இப்படி சிலரால் மட்டுமே
  எழுத்தால் நிறைவாக்கிவிட முடியும்.

  ReplyDelete